91 வயதில் பூத்த காதல்!



செவியை தடவிப் பார்க்காதீர்கள். பூ சுற்றவில்லை. ஐ.எஸ்.ஓ. முத்திரை குத்தப்பட்ட, அதுவும் கலப்படமற்ற நிஜம்!படத்தில் இருக்கிறாரே... இவர் பெயர் குஷால் பால் சிங். வயது அதிகமில்லை... ஜஸ்ட் 91தான். இவர் இப்போது காதலில் விழுந்திருக்கிறார். அதனாலேயே பேசு பொருளாகியிருக்கிறார். ஒட்டுமொத்த இந்தியாவையும் இச்செய்தி வழியே அதிர வைத்திருக்கிறார். தன் மனைவி மறைந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்தக் காதல் இவருக்கு வாய்த்திருக்கிறது; பூத்திருக்கிறது.

“இப்போது என் வாழ்க்கையில் இருக்கும் சிறந்த பெண் இவள்தான். பெயர் ஷீனா. பேராற்றல் மிக்கவள். நான் எப்போதெல்லாம் சோர்ந்து போகிறேனோ அப்போதெல்லாம் என்னை ஊக்குவிக்கிறாள். பலவீனமாக உணரும்போதெல்லாம் என்னை தூக்கி நிறுத்துகிறாள். என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டாள்...” என்று தன் காதலியைப் பற்றி 91 வயதில் பேசுகிறார் இந்த மனதளவு இளைஞர். பூரிப்புடன் பேசினாலும், ஷீனாவின் புகைப்படத்தை இன்னமும் பொதுவில் இவர் விடவில்லை.

குஷால் பால் சிங்கின் மனைவி இந்திரா 2018ம் ஆண்டு கான்சர் நோயினால் இறந்துவிட்டார். அதன்பிறகு கடந்த ஐந்து வருடங்களாக தனிமை வாழ்க்கை. வாழ்ந்த காலத்தில் மனைவி மேல் அதிகம் பிரியம் வைத்திருந்தவர் குஷால் பால் சிங். இதை அவரது நண்பர்கள், சுற்றத்தார், உறவினர்கள்... என சகலரும் ஒப்புக்கொள்கிறார்கள். இவரது திருமண வாழ்க்கை 65 வருடங்கள் நீண்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

“என் மனைவி இந்திராதான் என் வாழ்க்கையின் எல்லாமுமாக இருந்தாள். எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் இருந்தது. பேரன்பு இருந்தது. அவளைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றோம். ஆனால், முடியவில்லை. சில நேரங்களில் வாழ்க்கையில் இப்படித்தான் நடந்துவிடுகிறது.

நாம் தனிமையில் விடப்படுகிறோம்...” என்று மனைவியின் இழப்பைப் பற்றி குறிப்பிடுகிறார் குஷால் பால் சிங்.‘‘65 வருடங்கள் ஒன்றாகப் பயணித்துவிட்டு திடீரென்று நமது இணையை இழந்துவிட்டால் நம்மால் பழைய நிலையில் வாழ இயலாது. நான் என் வாழ்க்கையை மாற்றியமைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

நமக்கு மிகவும் நெருக்கமானவரை இழக்கும்போது நமது வாழ்க்கையின் வேகம் குறைந்துவிடுகிறது. நம்மால் முன்பு போல் இயல்பாக இருக்க முடிவதில்லை...” என்று சொல்லும் குஷால், மனைவியின் மறைவுக்குப் பிறகு தனது தொழில் பொறுப்புகளிலிருந்து ஒதுங்கிவிட்டார்.“இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன் என் மனைவி சொன்ன வார்த்தைகள் இன்னும் என் மனதில் ஒலித்தபடி இருக்கிறது.

‘வாழ்க்கையை விட்டு விடாதீர்கள். இந்த வாழ்க்கையை நாம் திரும்பப் பெற முடியாது...’ என்றாள். அந்த வார்த்தைகள் என் மனதில் கல்வெட்டாக பதிந்திருக்கிறது...’’ என்று குறிப்பிடுகிறார் குஷால் பால் சிங்.

மனைவி ‘வாழ்க்கையை விட்டுவிடாதீர்கள்...’ என மரணத் தருவாயில் கேட்டுக் கொண்டதாலோ என்னவோ தன் வாழ்க்கையை விட்டுவிட விரும்பவில்லை என்கிறார் குஷால்.

இந்த இன்ட்ரோ எல்லாம் இருக்கட்டும்... யார் இந்த குஷால் பால் சிங்..?
சாமானிய மனிதர் அல்ல. இந்தியாவிலேயே மிகப் பெரிய கட்டுமான நிறுவனமான டிஎல்எஃப்பின் உரிமையாளர்! இந்தியாவின் மிக முக்கிய நகரமான குர்கானை உருவாக்கியதில் இவரது நிறுவனத்தின் பங்கு அதிகம். இப்போது நிறுவனத்தை மகன் விஜய் கவனித்துக் கொள்கிறார். சிங்கின் இப்போதைய சொத்து மதிப்பு 66 ஆயிரம் கோடி ரூபாய்.l

என்.ஆனந்தி