வேலைக்குப் போகும் பெண்களில் தமிழ்நாடு முதலிடம்!



இந்தியாவிலேயே தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக இருப்பது சர்வநிச்சயமாக தமிழ்நாட்டில்தான். ஆம். தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் தொழில் நிறுவனங்களில் வேலைக்குச் செல்கிறார்கள்.
இந்திய அளவில் மொத்தம் 16 லட்சம்  பெண்கள் தொழிற்சாலைகளில் வேலைக்குப் போவதாகவும், இந்த எண்ணிக்கையில் தமிழகத்தில் இருந்து மட்டும் 43 சதவீதம் பெண்கள் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பதாகவும் ‘அசோகா யூனிவர்சிட்டிஸ் சென்டர் ஃபார் எகனாமிக் டேட்டா அண்ட் அனாலிசஸ்’ (CEDA) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 - 20ம் ஆண்டில் எடுக்கப்பட்ட Annual Survey of Industries (ASI)யின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு அசோகா பல்கலைக்கழகம் இந்த தரவுகளை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. 4 ஆண்களுக்கு ஒரு பெண் என்ற சதவீதத்தில்தான் தொழிற்சாலைகளில் பெண்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளில் உற்பத்தி பிரிவில் நேரடியாக பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை இது. நிர்வாகம், விற்பனை, மேற்பார்வை போன்ற பிற பிரிவுகளில் பணியாற்றும் பெண்கள் இதில் சேர்க்கப்படவில்லை.பெண் தொழிலாளர்களைப் பற்றி மேலும் பல தகவல்களையும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 16 லட்சம் பெண்கள்தான் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கிறார்கள். இதில் 6.8 லட்சம் பெண்கள் தமிழகத்தில் பணியாற்றுகிறார்கள். ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் இது 43 சதவீதம். நம் நாட்டில் தென் இந்தியாவில்தான் அதிகபட்சமான (72 சதவீதம்) பெண்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றுகிறார்கள்.

ஒட்டுமொத்த தொழிலாளர்களில் ஆண்களுக்கு நிகராக அதிக அளவிலான பெண்களும் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் மாநிலமாக மணிப்பூர் உள்ளது. அங்கு 49.2 சதவீதம் ஆண்களும், 50.8 சதவீத பெண்களும் தொழிற்சாலைகளில் உற்பத்தி பிரிவில் வேலை பார்க்கிறார்கள். கேரளாவில் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பெண்களின் விகிதாச்சாரம் 45.5 சதவீதமாகவும், கர்நாடகாவில் 41.8 சதவீதமாகவும் இருக்கிறது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே மிகக் குறைந்த அளவாக சட்டீஸ்கர் மாநிலத்தில்தான் 2.9 சதவீதம் பெண்கள் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கிறார்கள். இதற்கு அடுத்ததாக டில்லியில் 4.7 சதவீதம் பெண்களே தொழிற்சாலைகளில் வேலை பார்க்கிறார்கள்.இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் புகையிலை சார்ந்த தொழிற்சாலைகளில் மட்டுமே ஆண்களை விட பெண்கள் அதிகமாக பணியாற்றுகிறார்கள். இதற்கு அடுத்தபடியாக ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பணியாற்றுகிறார்கள். உணவு உற்பத்தி தொழிற்சாலைகளில் மிகக் குறைந்த அளவாக 16 சதவீதம் பெண்களே பணியாற்றுகிறார்கள்.

2019 - 20 ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி தொழிற்சாலைகளில் பெண்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் ஆண்களின் ஊதியத்தைவிட குறைவாக உள்ளது. ஆண்களின் சராசரி ஊதியம் 439 ரூபாயாகவும், பெண்களின் சராசரி ஊதியம் 382 ரூபாயாகவும் உள்ளது.

ஜான்சி