சிறுகதை - வசந்த விழா



மதிப்பனூர் வண்டிக்காக திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் வெகுநேரமாய் காத்துக்கிடக்கிற பாண்டியம்மாளுக்கு அச்சலத்தியாய் இருந்தது.பழைய பட்டுப்புடவை, கழுத்தில் கவரிங் செயின், ஒடிந்து விடுகிற மாதிரி உடம்பு. பேருந்துகளை வெறித்துக் கிடந்தவளுக்கு நாக்கு வறண்டுவிட்டது.டீக்கடையில் தண்ணீர் குடிக்கலாமென்று நகர்ந்தவளை ஏறுவெயில் ஏளனம் செய்தது. நெற்றி வியர்வையில் திருநீறும் அழிந்தது.

அண்ணன் வீட்டு விசேஷம், தவிர்க்க முடியாது. போகாமல் இருந்தால் செத்ததுக்கு சமம். கூடப் பொறந்த பொறப்பு. அஞ்சு வருசமாவே அண்ணன் மச்சக்காளை வீட்டுக்கும் தங்கச்சி பாண்டியம்மாள் வீட்டுக்கும் அன்னம் தண்ணி புழக்கமில்லை.ஆத்தா செத்த எழவுல வந்த ஏழரையால் பேச்சு வார்த்தை இல்லாமல் போய்விட்டது. அண்ணன்தான்
பத்திரிகை வைத்துவிட்டுப் போனான். அவன் ஒரு வெகுளி.

மதனிதான் மந்தாரை.பாம்... பாம்...அத்திப்பட்டி வண்டி உள்ளே வந்துவிட்டது. சித்திரைத் திருவிழாவில் அழகரைக் கண்டுவிட்டமாதிரி இருந்தது பாண்டியம்மாளுக்கு. மணிபர்சில் இருக்கிற பணம் பத்திரமாய் இருக்கிதா என்று சரிபார்த்து பஸ் டிக்கட்டுக்கான காசை மட்டும் கையில் இறுக்கிக்கொண்டு சன்னலோரம் உட்கார்ந்தாள்.புருஷன் ராஜாங்கம் குடித்துக் குடித்து குடல் வெந்து செத்தபிறகு நல்லது கெட்டதுக்கு வடக்க தெக்கப் போயி வறது பாண்டியம்மாளுக்கு என்னன்டோ இருந்தது.

பெத்ததும் ஊதாரியா சுத்திக் கிடந்தது. புருஷன் விட்டுப்போன டீக்கடைதான் சீவனம். ஆம்பளைப் பிள்ளை என்று அருமை பெருமையாய் வளர்த்தாள். அது மீசை முளைத்ததும் கோயில் காளையாகி ஊரை வலம் வந்தது.பஸ்சில் ஏறிய ஒரு திடகாத்திரமான பொம்பளையப் பார்த்தாள். மதனி அன்னக் கொடி ஞாபகம் வந்தது. அண்ணனோடு ஒட்ட விடாமல் செய்ததே அவள்தான்.பேச்செல்லாம் தேனொழுகும்.

உள்ளுக்குள் அம்புட்டும் நஞ்சு. வண்டி கிளம்பிவிட்டது.மணிக்கொருதரம்தான் பஸ் என்பதால் கூட்டம் அலைமோதிற்று.தலைமுடியை அரைகுறையாய் வெட்டி தாடியை செரைக்காத இளவட்டப் பயல்கள் படிக்கட்டில் தொங்கினார்கள். அஞ்சு வருஷம் அன்னந்தண்ணி புழக்கமில்லாப் போனாலும், செய்முறைய செய்யாம இருக்க முடியுமா? இல்லை மதனிக்காரிதான் போனாப் போவுதுன்னு விட்டுருவாளா? பத்து வருசத்துக்கு முந்தி பத்துக்குப்பத்து வீட்டைக் கட்டி பால்காச்சனப்ப அண்ணன் பத்தாயிரம் செய்முறை செஞ்சான்.

பத்து வருசம் ஓடிப் போச்சு.அண்ணனுக்கும் ஆளான பொட்டைப் புள்ளை இருக்கா.உறவு சொல்லி மவங்காரனுக்கு ஒட்டுப் போடலாம்.ஆனா,அது நடக்காது.‘உன் மவன் என்னா கவர்மெண்டு ஆபீசுல கணக்கெழுதுறானா? இல்லை, சிங்கப்பூர்ல சம்பாதிச்சி சேத்து வச்சிருக்கானா?’ன்னு மதனிக்காரி மயிரப் புடிச்சி ஆஞ்சிருவா. ஒத்தைப் புள்ளையும் உருப்படாமப் போச்சேன்னு மறுகாத நாளில்ல; உருகாத சாமியில்லபஸ் ஆலம்பட்டியைத் தாண்டிவிட்டது. பாண்டியம்மாள் பிறந்ததெல்லாம் மதிப்பனூரில்தான். வாக்கப்பட்டது சேடப்பட்டியில்.

ராஜாங்கம் முறுக்கு போடுவதில் கெட்டிக்காரன். வடக்கே முறுக்கு போடப்போன மதிப்பனூர் குடும்பங்களில் பாண்டியம்மாள் குடும்பமும் ஒன்று. மதிப்பனூரில் விவசாயம் அப்படியொன்றும் பெரிசாய் இல்லை.மழை பேஞ்சா பருத்தியோ சோளமோ துவரையோ வெள்ளாமை நடக்கும். முக்கிய தொழிலே முறுக்கு போடுறதுதான். ஆந்திராவில் முறுக்குபோட்டு திருமங்கலத்தில் இடம் வாங்கினார்கள். டைல்ஸ் பதித்து வீடுகட்டினார்கள். அனலில் கிடந்து பிள்ளைகளை ஆளாக்கினார்கள்.

பஸ் நாகையாபுரம் வந்துவிட்டது. அத்திப்பட்டி வண்டி என்பதால் மதிப்பனூரில் அண்ணன் வீட்டு முன்னுக்கவே எறங்கிக்கலாம். வேற வண்டியா இருந்தா நாகையாபுரத்தில் இறங்கி நடக்கவேண்டும். திருப்பரங்குன்றத்தில் வாங்கி வைத்த மல்லிப்பூவும், ஆப்பிள் பழங்களும் பிஸ்கட் பாக்கெட்டும் பையில் இருந்தன. இல்லனா ‘வெறுங்கைய வீசிக்கிட்டு வந்துட்டா வெறும்பய தங்கச்சி’ன்னு அண்ணனுக்கு வசவு நாறிப்போகும்.

அண்ணன் வைத்திருப்பது மொய் விருந்துதான். பேரென்னவோ ‘வசந்த விழா’. செய்த மொய்யைத் திரும்ப வாங்க, நொடித்த குடும்பங்கள் மீண்டெழ மொய் விருந்துகள் செருத்து நடக்கும் அந்தப் பகுதிகளில்.அடிக்கிற பத்திரிகைகளில், ‘குறிப்பு: 2010க்குப் பிறகு 2020ல் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி’ என்று கட்டம் கட்டிவிடுவார்கள். செஞ்ச செய்முறைய வட்டியோட எடுத்து வைக்கணும். இல்லைன்னா வீட்டுக்கே வந்து விடுவார்கள். மானம் மரியாதை கெட்டுப்போகும். அதுக்கு பயந்தே ரொம்பப் பேரு கடன் கப்பிய வாங்கி, வீட்டை அடமானம் வச்சி, நகை நட்ட வித்து செய்முறைய செஞ்சிருவாக.

பாண்டியம்மாளும் தவணைக் காரனிடம் பத்தாயிரம் கடன் வாங்கிக் கொண்டுதான் வந்திருந்தாள். வருசம் பத்தாச்சி, சேத்துதான் செய்யணும். வழியில்லை. இதைப் பெரட்டவே போதும் போதுமென்றாகிவிட்டது.  ஏற்கனவே டீக்கடை தவணையில்தான் உருண்டது, ஓட்டமில்லை. வடை சுட்டு விற்பதால் வண்டி ஓடியது.ஒரு தவணை முடிந்தால் அடுத்த தவணை. நல்லது கெட்டது, நோய் நொடி, கஷ்டம், நஷ்டம், பிள்ளையால் பிரயோசனமும் இல்லை. பாவம் பொட்டச்சி  மாடா ஒழச்சி என்னத்தக் கண்டா? பாண்டியம்மா மாதிரி எத்தனையோ பொம்பளைக மதுரை ஜில்லாவுல.விசேஷ வீடு களை கட்டியது. மதனியின் அண்ணன் மிலிட்ரிக்காரன் சீர் கொண்டு வருகிறான்.  

‘மானூத்து மந்தையில
மாங்குட்டிப் பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு
பொலிகாட்டில் கூவும் குயிலே...’
குழாய் ரேடியோ பனை
மரத்தில் உட்கார்ந்துகொண்டு ஊரைக் கூப்பிட்டது.

வடக்கம்பட்டி வேட்டு பொரிந்தது. வாடிப்பட்டிக் கொட்டுக்காரன் உச்ச போதையில் இருந்தான்.

ரங்... ரங்...
ரங்... ரங்...
ரங்கண... ரங்கண...
ரங்... ரங்... ரங்கண... ரங்கண...
கிடா மீசைப் பெரியாம்பளை குவாட்டர் பாட்டிலை கையில் வைத்துக் கொண்டே அடிக்கேத்தவாறு ஆட்டம் போட்டார். அன்னக்கொடி உசிலம்பட்டிக்காரி. வசதியான குடும்பம். அண்ணன் மிலிட்ரியில் இருந்தான். அன்னக்கொடி போட்டிருந்த சங்கிலியே பத்துபவுன் தேறும்.  இன்னும் காசு மாலை, வளையலு, நெக்லசு... மதுரை ஜில்லா நகைக்கடை பொம்மை மாதிரி அம்புட்டு நகையும் அவ போட்டுருந்தா.

வீட்டுக்குப் பின்புறம் பெரிய அண்டாவில் ஆட்டுக்கறி கொதித்துக் கிடந்தது. மறுபுறம் அண்டாவில் கோழிக்கறி, ஒரு புறம் வெள்ளைச் சோறு, மறுபுறம் பிரியாணி.பந்தி ஆரம்பித்து ஓடிக் கொண்டிருந்தது. வந்தவளை வா எனக்கூட கூப்பிடவில்லை மதனி. பகுமானம். பந்தியிலிருந்த அண்ணன்தான் எதேச்சையாய் பார்த்து விட்டு ‘‘வாத்தா... வந்து சாப்டுத்தா...’’ என்றான்.‘‘இல்லண்ணே... பெறகு சாப்டுறேன்...’’ என்றவளை விடாப்புடியாய் அழைத்துக்கொண்டு போய் பந்தியில் அமர்த்தினான். ஊர்க்காரர்கள், உறவுக்காரர்கள் வலிய வந்து பேசினார்கள்.

எல்லோருக்கும் பதிலாக அவளிடம் புன்னகை மட்டுமே இருந்ததுஅன்னக்கொடி மொய் எழுதும் இடத்திலே நின்று கொண்டு அவள் சாதி சனமாய் பார்த்துப்பார்த்து விசாரித்தாள்.
அன்னக்கொடியின் தம்பி மாயிதான் மொய் எழுதிக் கொண்டிருந்தான். மஞ்சள் துணியால் வாய் மூடிய அண்டாவில் பணம் நிரம்பிக் கொண்டிருந்தது.

யாரு, யாரு வந்தா?
யாரு, யாரு வரலை?
வந்தவுக செஞ்ச தொகை எவ்வளவு?
நம்ம செஞ்சது எவ்வளவு?
கணக்குப் போட்டபடியே இருந்தாள் அன்னக்கொடி.
சாப்பிட்டுவிட்டு மொய்
எழுதவந்த பாண்டியம்மாளை இப்போதுதான் பார்த்தமாதிரி ‘‘வா... மதினி... எப்ப வந்த? மரு
மயன் வரல..? சாப்புடு மதினி...’’ என்று நாடகம் போட்டாள்.  

ரா.பாண்டியம்மாள் -
ரூ. 10,000/-
மொய்யைப் பார்த்ததுமே பத்திக்கொண்டு வந்தது அன்னக் கொடிக்கு. ‘‘வருசத்துக்கு ஒரு பைசா வட்டி போட்டாலும் பத்து வருசத்துக்கு எம்புட்டு செய்யணும். பத்து வருசத்துக்கு முந்தி பாத்தாயிரம்ன்னா பத்து வருசம் பிந்தி இருபதாயிரம்ண்டு வந்தாத்தான பணத்துக்கு மருவாதி...’’ முகம் கடுகடுத்தது.வட்டியில் வயிறு வளர்த்தவள். மனுசர் தரம் தெரியாது. பணத்தால் மட்டுமே இவ்வுலகத்தை விலைக்கு வாங்கிவிடலாம் என நினைப்பவள்.ஏதோ சோலிக்கு வீட்டுக்குள் வந்த மச்சக்காளையை மறித்த அன்னக்கொடி ஆவேசமாய் பேசினாள்.

மச்சக்காளை, ‘‘சரிம்மா...  சரிம்மா... விடும்மா...  விடும்மா...’’ இந்த பதிலையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான்.வெற்றிலை பாக்கு தீர்ந்து போக அதை எடுக்க வீட்டுக்குள் வந்த பாண்டியம்மாளுக்கு அரசல் புரசலாய் ஏதோ காதில் கேட்டது. கேட்ட வார்த்தைகள் கருவமுள்ளாய் நறுக்கென தைத்தது.

யதார்த்தமாய் வீட்டுக்குப் பின்புறம் வந்தவள் பருத்திக் காட்டு வழியே நாகையாபுரம் பஸ் ஸ்டாப்புக்கு விட்டேத்தியாய் நடந்தாள். எதிரில் எந்த உருவமும் தெரியவில்லை.
கண்களில் நீர். தொண்டைக்குழியில் பாறை. பின்புறம் வந்ததால் முன்புறம் கழட்டிவிட்ட செருப்பையும் விட்டுவிட்டு வந்துவிட்டாள்.பாதம் கொதித்தது. மனசு அதைவிட கொதித்தது. அந்த வார்த்தைகள் மட்டும் காதுக்குள் திரும்பத்திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தது.

‘‘உன் தொங்கச்சி பஸ் ஏறிவந்து பத்தாயிரம் ரூவா செஞ்சிருக்கா... வருசம் என்னாச்சு? பத்து வருசம் முந்தி பத்தாயிரம் ரூவாய்க்கி ஆட்டுக்குட்டிய வாங்கி விட்ருந்தாலும் அது குட்டி மேல குட்டி போட்ருக்கும். செஞ்ச செய்முறைக்கு வட்டி மேல வட்டி போட்டு வக்கணையா செஞ்சாத்தான மக்க மனுசருக்கு மரியாதை... தெறங்கெட்ட நாயி...’’
சாப்பிட்ட கறிச்சோறு குமட்டிக்கொண்டு வந்தது பாண்டியம்மாளுக்கு.

-  ஸ்ரீதர் பாரதி