100 நாடுகளின் உணவுகள்... 50 ஸ்டால்கள் அடங்கிய விருந்து… பிரமாண்டமாக நடந்த கல்யாணம்!



தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில், சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கியாரா அத்வானி. இப்போது தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படத்தின் நாயகியும் இவரே. இந்நிலையில் இவர் தனது காதலரும் பிரபல நடிகருமான சித்தார்த் மல்ஹோத்ராவை கரம் பிடித்துள்ளார்.

கியாரா அத்வானி...

முதல் படம் இந்தியில் ‘ஃபக்லி’. முதல் படமே ஹீரோயின். அடுத்த படம் தென்னிந்தியாவில் இவரை அதிகம் பிரபலமாக்கிய கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக் படமாக வெளியான ‘எம்.எஸ்.தோனி: த அன்டோல்ட் ஸ்டோரி’ படம்தான். சாக்ஷி கேரக்டரில் வாழ்ந்திருப்பார்.
‘எம்.எஸ்.தோனி’ படத்திலேயே நமக்கெல்லாம் தெரிவதற்கு முன் செம ஹாட் மச்சி என நெட்
பிளிக்ஸ் ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ படம் மூலம் படு ஃபேமஸ். அடுத்து நான்காவது படமே திடீர் டிரீட்டாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் நாயகியாக ‘பரத் அனே நேனு’ (தமிழ் டப்பிங்காக ‘பரத் எனும் நான்’) படத்தில் நடித்தார். பிறகென்ன, கியாராவின் மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் உச்சம் தொடத் தொடங்கியது.

கியாராவின் பயோடேட்டா ஆச்சர்யம் நிரம்பியது. 1990கள் வரை டாப்பில் இருந்த நடிகர் அசோக்குமாரின் பேத்தி, இவர்தான். தவிர பிரிட்டிஷ் - இந்திய நடிகர் சாயித் ஜாஃப்ரி இவருக்கு அங்கிள். இப்படி பேக்கிரவுண்ட் கொண்ட இவர், தொடர்ந்து ராம் சரணுடன் ‘வினய விதேய ராமா’, ‘அர்ஜுன் ரெட்டி’ இந்தி ரீமேக்கான ‘கபீர் சிங்’ படத்தில் ஷாகித் கபூருக்கு ஜோடி, அக்‌ஷய் குமாரின் ‘குட் நியூஸ்’ படத்தில் இன்னொரு நாயகி என ரவுண்ட் கட்டியவர், ராகவா லாரன்ஸ் இந்தியில் அக்‌ஷய்குமார் நடிப்பில் இயக்கிய ‘காஞ்சனா’ ரீமேக் ஆன ‘லட்சுமி’யின் நாயகி என கெத்து காட்டியவர், இப்போது மீண்டும் ராம் சரண் ஜோடியாக ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இடையில் அனில் கபூர், வருண் தவான் உடன் ‘ஜக் ஜக் ஜீயோ’, சித்தார்த் மல்ஹோத்ரா வுடன் ‘ஷேர்ஷா’... என லிஸ்ட் போட்டு நடித்தவருக்கு காதலையும் தேடிக் கொடுத்தது விஷ்ணு வர்தன் இயக்கத்தில் வெளியான ‘ஷேர்ஷா’. இந்தப் படத்தில் நடித்தபோதுதான் கியாராவுக்கும் சித்தார்த்துக்கும் காதல் தீ பற்றிக் கொண்டது.கியாராவின் உண்மையான பெயர் அலியா அத்வானி. மும்பை, மகாராஷ்டிராவிலே பிறப்பு. வயசு 29. நடிகை ஜூஹி சாவ்லா, கியாராவுக்கு அத்தை என்பது உபதகவல். ஏற்கனவே அலியா இருப்பதால் குழப்பம் வேண்டாம் என கியாரா ஆனார் இந்த மாஸ் கம்யூனிகேஷன் பட்டதாரி.

சித்தார்த் மல்ஹோத்ரா...

சுஷாந்த் சிங் மரணம் குறித்த மர்மங்கள், பிரச்னைகள் என செய்திகள் சுற்றியபோதுதான் சித்தார்த் மல்ஹோத்ராவின் பெயர் பாலிவுட் தாண்டி தென்னிந்தியாவிலும் பிரபலமானது. காரணம், சுஷாந்த் நடிக்க வேண்டிய பல படங்களில் ஒப்பந்தமானவர்களில் முக்கியஸ்தர் இந்த சித்தார்த் மஹோத்ராதான்.

அப்போது அவர் அலியா பட்டுடன் காதலில் இருந்தார். எனவே அலியா பட்டுடன் இணைந்து ஹீரோவாக சுஷாந்த் ஒப்பந்தமான பல படங்களை சித்தார்த் மஹோத்ராவிற்குப் பெற்றுத் தந்தார் அலியா பட்.

ஆரம்பத்தில் டிவி நடிகராக தனது பயணத்தைத் தொடங்கிய சித்தார்த் மல்ஹோத்ரா, தொடர்ந்து பல விளம்பரங்களிலும் தலை காட்டினார். கரண் ஜோஹர் இயக்கத்தில் 2010ம் ஆண்டில் வெளியான ‘மை நேம் இஸ் கான்’ படத்தில் சித்தார்த் முதலில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அடுத்து கரண் ஜோஹர் இயக்கிய ‘ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்’ படத்தில் நடிகராக அறிமுகமானார்.

தொடர்ந்து ‘ஹசீ தோ ஃபசீ’, ‘ஏக் வில்லன்’ என நடித்து வரும் சித்தார்த் மல்ஹோத்ராவிற்கு வயது 37. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ‘ஷேர்ஷா’ படம் இவருக்கு நல்ல பெயரையும் கொடுக்க சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர் மஜ்னு’ ஹிட்டாகி இந்தியா முழுக்க இவரை ஸ்டாராக்கியது. ‘ஷேர்ஷா’வில் இணைந்து நடித்த சித்தார்த் மல்ஹோத்ராவும் கியாராவும் நட்பாகி, பின் காதலிலும் விழுந்தனர். எங்கேயும் ஜோடியாக கையைக் கோர்த்துக் கொண்டு சுற்றி வந்தவர்கள், வெளியான கிசுகிசுக்கள், கேள்விகள் என அனைத்திற்கும் வெட்கத்தையும், சிரிப்பையுமே பதிலாகக் கொடுத்தனர்.

இந்நிலையில் இவர்கள் காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்த நிலையில் பிப்ரவரி 7ம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள சூர்யஹர் அரண்மனை ஹோட்டலில் திருமணம் செய்துகொண்டனர். இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் கரண் ஜோஹர், ஷாகித் கபூர், ஜூஹி சாவ்லா உட்பட பல பாலிவுட் திரையுலகினர் கலந்து கொண்டனர். விழாவில் இத்தாலி, சீனா, அமெரிக்கா, மெக்சிகன் உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளின் உணவு வகைகள் முறையே 50 ஸ்டால்களில் பரிமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் புதுமணத் தம்பதிக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கியாரா தனது திருமண புகைப்படங்களைப் பகிர்ந்து ‘எங்களின் புதிய பயணத்தில் உங்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் வேண்டுகிறோம்’ என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.   

ஷாலினி நியூட்டன்