பன்றி இறைச்சி பிசினஸில் உலகின் நம்பர் ஒன் இவர்தான்!



உலகம் முழுவதும் பன்றி இறைச்சிக்குத் தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் கூட்டம் இருக்கிறது. முக்கியமாக சீனாவிலும், மத்திய ஐரோப்பாவிலும் பன்றி இறைச்சி விற்பனை
அதிகம். மட்டுமல்ல; ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பே உணவுக்காக பன்றிகள் வளர்க்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. இன்று வேளாண்மைத் துறையில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது பன்றி வளர்ப்புத் தொழில். இத்தொழிலில் ஈடுபடுபவர்களும் விவசாயிகளாகவே கருதப்படுகின்றனர்.

இப்படியான பன்றி வளர்ப்புத் தொழிலிலும் பில்லியன் கணக்கான பணத்தை ஈட்ட முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஜின் யிங்ளின். உலகின் நம்பர் ஒன் பணக்கார விவசாயி இவர்தான். பன்றி வளர்ப்பின் மூலம் உலகின் முதல் 100 கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம்பிடித்தவரும் இவரே. ஜின் யிங்ளினின் ‘முயுவான் ஃபுட்ஸ்டஃப்’ எனும் நிறுவனம் உலகிலேயே மிகப்பெரிய பன்றிப்பண்ணையாகத் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் பன்றி இறைச்சியை சமைக்காத ஒரு வீடு கூட சீனாவில் இல்லை.

மிகச்சிறிய அளவில் ஆரம்பித்து, மாபெரும் சிகரத்தைத் தொட்ட ஜின்னின் வாழ்க்கைக் கதை புதிதாக தொழில் தொடங்கும் ஒவ்வொருவருக்கும் உத்வேகமும், நம்பிக்கையும் அளிக்கக்
கூடியது.  சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் அமைந்துள்ளது ஹெக்ஸி எனும் கிராமம். அங்கே வசித்து வந்த ஓர் ஏழ்மையான குடும்பத்தில் 1965ம் வருடம் பிறந்தார் ஜின் யிங்ளின்.
அன்றைய நாட்களில் ஜின்னின் குடும்பம் மட்டுமல்லாமல், சீனாவே ஏழ்மையில் வாடிக்கொண்டிருந்தது. இப்போது சீனா அடைந்திருக்கும் வளர்ச்சியில் ஒரு சிறு துளி கூட அப்போது இல்லை. அதனால் குடும்பத்தில் உள்ள அனைவருமே ஏதாவது ஒரு வேலையைப் பார்த்தாக வேண்டிய நிலை.

ஜின்னும் பள்ளியில் படித்துக்கொண்டே, சின்னச்சின்ன வேலைகளைப் பார்த்து குடும்பத்தின் பொருளாதாரத்துக்கு உதவியாக இருந்தார். எண்பதுகளில் ஹெக்ஸி கிராமத்தில் பன்றி வளர்ப்புத் தொழில் சூடுபிடித்தது. தெருவுக்கு ஒரு குடும்பம் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டது. ஜின்னுடைய தந்தையும் இந்த பிசினஸில் இறங்கினார். 1982ம் வருடம், தான் சேர்த்து வைத்திருந்த பணத்திலிருந்து 20 பன்றிக்குட்டிகளை வாங்கினார் ஜின்னின் தந்தை. பன்றிகளை வளர்த்து குடும்பப் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம் என்று திட்டமிட்டிருந்தார். இதற்காக வீட்டுக்கு அருகில் சிறிய அளவில் ஒரு பன்றிப்பண்ணையை நிறுவினார். ஆனால், நடந்ததோ வேறு.

ஆம்; பன்றிக்காய்ச்சலால் 19 பன்றிக்குட்டிகள் இறந்துவிட்டன. ஒன்று மட்டுமே பிழைத்தது. இந்த துயரச் சம்பவம் ஜின்னுடைய தந்தையை மட்டுமல்லாமல், ஜின்னையும் வெகுவாகப் பாதித்தது. ‘‘இனிமேல் இப்படி நடக்கக்கூடாது. இதற்காக ஏதாவது செய்ய வேண்டும்...’’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டே இருந்தார் ஜின். இதன் பொருட்டு தனது கனவுகளை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, பன்றி வளர்ப்பவர்களுக்கு உதவுவதற்காகவும், நோயினால் பன்றிகள் இறந்துபோவதைத் தடுப்பதற்காகவும், பன்றிகளைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்ளவும் ஹெனான் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த பட்டப்படிப்பில் சேர்ந்தார் ஜின். அவருடைய கிராமத்தில் ஏதாவது ஒரு நோக்கத்துக்காக கால்நடை வளர்ப்பு படிப்பில் சேர்ந்தது ஜின்னாகத்தான் இருக்க முடியும்.

படிப்பை முடித்தவுடன் ஜின்னுக்கு நான்யாங் உணவு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இந்நிறுவனத்தில் வேலை கிடைத்தால் ஆயுளுக்கும் கவலையில்லை. இங்கேதான் தனது வருங்கால மனைவியான யிங்கைச் சந்தித்தார் ஜின். கால்நடை அறிவியல் படித்தவர் யிங். மூன்று வருடங்களுக்குப் பிறகு தங்களது வசதியான வேலையைத் துறந்துவிட்டு, பிசினஸில் இறங்கினார்கள் ஜின்னும், யிங்கும். அதுவும் பன்றிப்பண்ணை பிசினஸ். சுற்றியிருந்தவர்கள் அவர்களைக் கேலி செய்தனர். ஒருவர் கூட இந்த பிசினஸுக்கு ஆதரவுக் கரம் நீட்டவில்லை.

எல்லாவற்றையும் மீறி பன்றி இறைச்சிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று நம்பினார் ஜின். அத்துடன் தொண்ணூறுகளில் சீனாவும் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்தது. மக்கள் தொகைப் பெருக்கம் உணவுத்தேவையை அதிகரித்தது. அத்துடன் புதுப்புது நவீன உணவகங்கள் தோன்றின. அவற்றுக்கு பன்றி இறைச்சி அவசியமாக இருந்தது. தவிர, ஐரோப்பாவில் பன்றி இறைச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் பிசினஸை ஆரம்பித்தார் ஜின்.

ஜின்னும், யிங்கும் சேர்ந்து, 1992ம் வருடம் ஜின்னுடைய ஊரில், 22 பன்றிக்குட்டிகளுடன் ஒரு பன்றிப்பண்ணையை ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் கணவன் மனைவியும் சேர்ந்து பன்றி வளர்ப்பு முதல் பிசினஸ் வரை எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டனர். கால்நடை வளர்ப்பு குறித்த கல்வியறிவையும், உணவு நிறுவனத்தில் வேலை செய்தபோது கிடைத்த அனுபவங்களையும் பிசினஸில் இணைத்தனர். அத்துடன் தங்களைச் சுற்றி பன்றி வளர்ப்பு பிசினஸில் ஈடுபட்டவர்களுக்கு வழிகாட்டியாகவும், உதவியாகவும் இருந்தனர்.

அதனால் அடுத்த இரண்டு வருடங்களில் ஜின்னின் பண்ணையில் உள்ள பன்றிகளின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்ந்தது. பண்ணையைப் பராமரிக்கவும், பிசினஸை விரிவாக்கவும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இறைச்சிக் கடைகளுக்கும், உணவகங்களுக்கும் நேரடியாக பன்றிகள் சப்ளை செய்யப்பட்டன. நாளுக்கு நாள் பன்றி இறைச்சிக்கான ஆர்டர்கள் அதிகரித்துக்கொண்டே போனது. 1997ல் பன்றிகளின் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்ந்தது. ஜின்னின் வளர்ச்சியைப் பாராட்டி சீனாவின் அசாதாரணமான ‘இளம் விவசாயி’ என்ற விருது தேடி வந்தது.

2000ல் பன்றிப்பண்ணைக்கு ‘முயுவான் ஃபார்மிங்’ என்று பெயரிட்டார் ஜின். இந்தப் பெயர்தான் நாளடைவில் ‘முயுவான் ஃபுட்ஸ்டஃப்’ என்று பரிணமித்தது. பன்றி வளர்ப்பு மட்டுமல்லாமல் பன்றி இறைச்சியையும் நேரடியாக விற்பனை செய்ய ஆரம்பித்தது ‘முயுவான்’. 2007லிருந்து, தான் படித்த பல்கலைக்கழகத்தில் பகுதி நேரப் பேராசிரியராகப் பணிபுரிய ஆரம்பித்தார் ஜின். 2010ம் வருடம் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ‘முயுவானை’ விரிவாக்க கடன் கொடுத்தது; முதலீடும் செய்தது. ஆப்பிரிக்காவிலிருந்து பன்றிகளை இறக்குமதி செய்து வளர்த்தார் ஜின். பல ஏக்கர் பரப்பளவில் பண்ணையும் பெரிதானது.

2013ல் சீனாவிலேயே கிளைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒரு கிளையில் 10 லட்சம் பன்றிகள் வரை வளர்க்கப்பட்டன. 2014ல் பங்கு வெளியிடும் ஒரு நிறுவனமாக உயர்ந்தது ‘முயுவான்’.
2019ல் சீனாவின் இரண்டாவது பெரிய பன்றி இறைச்சி உற்பத்தியாளர் என்ற பெருமையைத் தன்வசப்படுத்தியது ‘முயுவான்’. அந்த வருடத்தில் சீனாவில் ஏற்பட்ட பன்றிக்காய்ச்சலால், ஜின்னுக்குப் போட்டியாக இருந்த நிறுவனங்களில் வளர்க்கப்பட்ட பன்றிகளில் 50 சதவீதம் அழிந்துவிட்டன. அதனால் பன்றி இறைச்சியின் விலை 160 சதவீதம் அதிகரித்தது. ‘முயுவான் ஃபுட்ஸி’ன் பங்கு விலை 200 சதவீதம் உயர்ந்தது.

முக்கியமாக இந்தப் பன்றிக் காய்ச்சலால் ஜின்னின் பண்ணையில் இருந்த பன்றிகளுக்குப் பெரிதாக எந்தப் பாதிப்பும் இல்லை. ஜின்னின் கால்நடை வளர்ப்பு குறித்த படிப்பு பன்றிக் காயச்சலிலிருந்து ‘முயுவானை’க் காப்பாற்றியது. ஜின்னின் கல்லாவும் நிரம்பியது. பன்றிகளை நோய்கள் தாக்காமல் இருப்பதற்காக நவீனமான பயோ செக்யூரிட்டியுடன், அதீத சுகாதாரமும் ‘முயுவானி’ல் கடைப்பிடிக்கப்படுகின்றன. குட்டிகளுக்குத் தனியான இடம், வளர்ந்த பன்றிகள், ஆண்கள், பெண்களுக்குத் தனியான இடம், பன்றியை வெட்ட தனியான இடம் என பல தளங்களை அமைத்து பன்றிகளைப் பாதுகாப்பாக வளர்க்கிறார் ஜின்.

2020ல் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலாலும், கொரோனாவின் பாதிப்பாலும் பன்றி இறைச்சியின் விலை அதிகரிக்க, ஜின்னின் காட்டில் பண மழை பொழிந்தது. 2021ல் உலகின் மிகப்பெரிய பன்றிப் பண்ணையாக உயர்ந்தது ‘முயுவான்’. நான்யாங் நகருக்கு அருகிலிருக்கும் இந்தப் பண்ணையில் வருடந்தோறும் இறைச்சிக்காக சுமார் 5 கோடி பன்றிகள் வெட்டப்படுகின்றன.
இன்று சீனாவில் பன்றி இறைச்சி கிலோ என்ன விலை என்று நிர்ணயிப்பது ஜின்தான். அவரது சொத்து மதிப்பு சுமார் 1.72 லட்சம் கோடி ரூபாய்.

த.சக்திவேல்