கூகுள் ஏன் இவரை வேலையை விட்டு நீக்கியது..?



Chatgpt பிரபலமாகிவிட்டது; ஆனால், சாட் ஜிபிடி முதல் கூகுள் பார்ட் (BARD) வரை ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மென்பொருட்களின் சிக்கல்கள், அதன் ஆபத்துகளைப் பேசிய டிம்னிட் கெபுரு (Timnit Gebru) எனும் AI Ethics ஆய்வாளரை கூகுள் நிறுவனம் வேலையை விட்டு நீக்கியது. இது பழைய கதை.
ஆனால், இதைத்தான் முதலில் பேச வேண்டும். கூகுள் நிறுவனத்தில் பணியாளர், ஆய்வாளர், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ஆய்வு பிரிவில் எத்திக்ஸ் (ஆய்வு அறம்) ஆய்வராக பணிபுரிந்து வந்தார், டிம்னிட் கெபுரு. இவரது வேலை வருங்காலத்தில் கூகுள் நிறுவனத்தில் AI தொடர்பான ஆய்வுகளில் கடைப்பிடிக்கப்படும் நேர்மை, அறம், நம்பகத்தன்மையை மேற்பார்வையிட வேண்டும். அது தொடர்பான ஆய்வறிக்கைகளை வெளியிட வேண்டும்.

2020ல் OpenAi எனும் நிறுவனம் chatgpt எனும் மென்பொருளை உருவாக்கி வந்த நேரம், கூகுள் நிறுவனமும்  தங்கள் தேடுபொறியில் AI வசதியுடன் கூடிய அல்காரிதம்களை மேம்படுத்த பல ஆய்வுகள் மேற்கொண்டு வந்தது. இதன் அடிப்படை குறிக்கோள் சாட் வடிவில் பயனாளர்கள் உள்ளிடும் கேள்விகளுக்குத் தகுந்த பதிலைத் தர வேண்டும் என்பதுதான்.இதன் இயக்கும் விதத்தை வைத்து இதை Transformers என்று அழைப்பார்கள். இதை முதலில் அறிமுகப்படுத்தியது கூகுள்தான். இவை LLM என்றைழைக்கப்படும். LLM என்றால் Large Language Models.
LLM என்பது Artificial neural network எனும் ANN அடிப்படையில் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய கட்டமைப்பு அல்காரிதமான deep learning உதவியுடன் இயங்கும்.

இது எப்படி இயங்குகிறது என்றால், இண்டர்நெட்டில் இருக்கும் தகவல்களைப் பெற்று அதைப் பிரித்து ஒழுங்கமைக்கும். அதை லேபிள் செய்து அதன் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யும். இதன் மூலம் சில பேராமீட்டர்களை ஒப்பிட்டு கற்றுக்கொள்ளும். கற்றதைச் சரிபார்க்கும். சரிபார்க்க feedbackகளைப் பெறும், தன் கற்றலை மேம்படுத்திக்கொள்ளும்.
ஆனால், இதன் கற்றல் என்பது புரிந்துகொள்வதல்ல, தரம் பிரிப்பது. மனிதர்களைப் போல இவை கற்றுக்கொள்வதில்லை. மாறாக தரம் பிரிப்பதைத்தான் கற்றல் என இவர்கள் பெயரிட்டு அழைக்கிறார்கள்.  

இப்போது கெபுருவுக்கு வருவோம். கெபுரு தன் நண்பருடன் இணைந்து ஆய்வு அறிக்கை ஒன்றை அறிவியல் இதழில் பிரசுரிக்க முயன்றார். இது கூகுள் நிறுவனம் உருவாக்கி வரும் AI chat மென்பொருட்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது.முதலில் அவர்கள் எச்சரிப்பது மின்சாரச் செலவை. மிகப்பெரும் இணையத்தின் தகவல் அடிப்படையில் இந்த LLM இயங்க வேண்டும் என்றால் மிகப்பெரிய டேட்டா செண்டர்கள் வேண்டும். அவ்வளவு பெரிய டேட்டா சென்டர்களை இயக்க பல கிலோவாட் மின்சாரம் தேவைப்படும். அவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யும்போது வெளியாகும் கார்பன்டை ஆக்சைட் அளவு ஓசோனில் ஓட்டை துளையிடும்.

உலகம் முழுவதும் க்ளைமேட் சேன்ஜ்  குறித்து பேசி வரும் சூழலில் இவ்வளவு மின்சாரத்தைச் செலவழிப்பது என்பது கொஞ்சமும் சரியல்ல என வாதாடுகிறார்கள்.அடுத்து ஒருபக்கச் சார்புத் தன்மையை குறிப்பிடுகிறார்கள். இந்த மென்பொருட்கள், நாம் உள்ளிடும் தகவல்களின் அடிப்படையில்தான் கற்றுக்கொள்ளும். இதற்கு வரும் உள்ளீடு தகவல் என்பது இணையத்தில் இருந்து என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் பொய்யான தகவல் அதிகம் இருந்து அவை மீண்டும் மீண்டும் இந்த மென்பொருளுக்கு தரப்பட்டால் அதை உண்மையென அவை நம்பிவிட வாய்ப்புகள் அதிகம்.

இங்குதான் நாம் இதன் அடிப்படையை புரிந்துகொள்ள வேண்டும். இவை முழுக்க முழுக்க தகவலுக்குள் ஒற்றுமைகளைக் கண்டுபிடிக்குமே தவிர மனிதர்களைப் போல அதைப் புரிந்துகொள்ளாது.மக்கள் மிக எளிதாகத் தவறான தகவல்களை நம்பிவிட வாய்ப்புகள் அதிகம். ஒருமுறை ஃபேஸ்புக்கில் பாலஸ்தீனியர் ஒருவர் அரபு மொழியில் காலை வணக்கம் என போஸ்ட் போட்டார். அதை ஃபேஸ்புக் மென்பொருள் தவறாக ‘அவர்களைத் தாக்குங்கள்’ என ஹீப்ரு மொழியில் மொழிபெயர்த்துவிட்டது.விளைவு... காலை வணக்கம் போட்டவருக்கு காலை நல்லதாக விடியவில்லை. கைது செய்யப்பட்டார்.

இவை அனைத்தையும் சுட்டிக்காட்டிய கெபுரு, இது போன்ற AI சாட் மென்பொருட்களை உருவாக்கவும், பயன்பாட்டுக்கு விடவும் நிதானம் தேவை; நிறைய ஆய்வுகளுக்குப் பிறகே செயல்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.ஆனால், கூகுள் நிறுவனமோ விடுமுறையில் இருந்த கெபுருவை அப்படியே வேலையை விட்டு நீக்கிவிட்டது.
கெபுரு இன்று வரை போராடிக்கொண்டிருக்கிறார். இந்த மென்பொருட்களின் சாதக பாதகங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.  

வினோத் ஆறுமுகம்