ஐந்தடிக்கு குதிக்கும் வரகுக்கோழி; இறகை விரிக்கும் கவுதாரி...



ஆச்சர்யமூட்டும் புல்வெளிப் பறவைகளின் காதல்...

‘‘பெண் பறவையை ஈர்க்க வரகுக் கோழிகளில் ஆண் பறவைகள் ஐந்தடி, ஆறடி உயரத்திற்கு மேல் குதிக்கும். அதில் அதிக உயரம் சுறுசுறுப்பாகக் குதிக்கும் பறவை எதுவோ அதனுடனே இணை சேரும் பெண் பறவை. இதேபோல் கவுதாரி இனத்தில் ஆண்பறவை பெண் பறவையை ஈர்க்க தன் இறக்கையை நன்றாக விரித்துக் காட்டும். அதில் எது பெஸ்ட்டோ அதனுடன்தான் பெண் பறவை கலவி புரியும்!’’ இப்படி சுமார் 140 புல்வெளிப் பறவைகள் குறித்து ஆச்சர்யமூட்டும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் கோயமுத்தூர் புல்வெளிப் பறவைகள் (Coimbatore grassland Birds) என்ற தலைப்பிலான நூலை வெளியிட்டு பிரபலமானவர் பாலாஜி.

‘‘காடுகளில், நீர்நிலைகளில் வாழும் பறவைகள்  குறித்தெல்லாம் நிறைய பேசுகிறோம். ஆனால், புல்வெளிப் பறவைகள் குறித்து நாம் பேசுவதேயில்லை. அதைப்பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. புல்வெளிப்பறவைகள் 60 சதவீதம் அழிந்து விட்டன. இவை அழிவதால் நம் உணவுச்சங்கிலி அறுபட்டு பஞ்சத்திற்கே வித்திடுகிறது!’’ என்று எச்சரிக்கவும் செய்கிறார்.

1958ம் ஆண்டு சீன அதிபர் மாவோ, ‘சிட்டுக்குருவிகளால் நமக்கு பெரிய துன்பம். அவை தானியங்களை அழிக்கிறது!’ என்று சிட்டுக்குருவிகள், எலிகள், ஈக்கள் எல்லாவற்றையும் அழிக்க ஓர் உத்தரவு போட்டார். 1962ம் ஆண்டு வரை நான்கே ஆண்டுகளில் ஒரு பில்லியன் சிட்டுக் குருவிகள் கொல்லப்பட்டன. பிறகு அந்த உத்தரவு விலக்கப்பட்டது. காரணம், சிட்டுக் குருவிகள் அழிந்ததால் அவை பிடித்துச் சாப்பிடும் வெட்டுக்கிளிகள் பில்லியன் டிரில்லியன் கணக்கில் பெருகி விட்டன. இதனால் உணவுப் பயிர்கள் மொத்தமும் நாசமானது. இதனால் 15 - 36 மில்லியன் மக்கள் உணவு இல்லாமல் இறந்தார்கள்.

‘‘இந்த விபத்து மறுபடி நடக்காமல் இருக்கணும்ன்னா நாம இந்தப்புல்வெளிப் பறவைகளைக் காப்பாற்றியாகணும். அதற்கென சரணாலயம் நிறுவ வேண்டும். இதற்கு அரசு அக்கறை செலுத்த வேண்டும்!’’ என்று கோரிக்கை வைக்கிறார் பாலாஜி.‘‘புல்வெளிப் பறவைகள் குறித்த ஆராய்ச்சியை சில ஆண்டுகள் முன்பு என் சொந்த ஊர் கோவை சூலூர் கலங்கல் கிராமத்தில் ஆரம்பித்தேன். எங்கள் விவசாய பூமி இரண்டு ஏக்கர்.

அதில் காகம், சிட்டுக்குருவி, மைனா, மயில் இப்படி ஒரு சில பறவைகளையே அங்கே பார்த்து அறிந்திருந்தேன். ஆய்வு என்று இறங்கினதும்தான் அதே நிலத்தில் 150க்கும் மேற்பட்ட பறவைகள் வந்து போவதை அறிந்தேன். அந்தப் பறவைகள் அனைத்துமே இயற்கைக்கும், நம் விவசாயத்திற்கும் எப்படியெல்லாம் துணைபுரிகின்றன என்பதை ஆய்வில் வெளிப்படுத்தினேன்.  

நம் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு புல்வெளிகள்தான். சவானா கிராஸ்லேண்ட்ஸ், சோலா கிராஸ்லேண்ட்ஸ் பற்றி அடிக்கடி பேசுகிறோம். நம் மொத்த நிலப்பரப்பில் 31- 42 சதவீதம் இருக்கக்கூடிய புல்வெளிகள் பற்றிப் பேசுவதில்லை. பாலைவனங்களில் 300 மிமீ மழை மட்டுமே ஆண்டில் பெய்கிறது. புல்வெளிகளில் 500 முதல் 900 மிமீ மழை பெய்கிறது. அதுவே காடுகளில் 2000 மிமீ மழை பெய்கிறது. எனவேதான் காடுகளில் மரங்கள் செழித்து வளர்கின்றன. அதற்கேற்ப பறவைகளும், விலங்குகளும் உயிர் வாழ்கின்றன. அவற்றிற்கான உணவுச்சங்கிலியும் மண்ணை ஒட்டியே பின்னப்படுகிறது.

ஆனால், பிரிட்டிஷார் இந்தப் புல்வெளிகளின் தன்மையைப் புரிந்துகொள்ளாமல் எல்லாவற்றையுமே வேஸ்ட் லேண்ட் - அதாவது தரிசு நிலங்கள் என வகைப்படுத்தி விட்டார்கள். இதில் என்ன பிரச்னைன்னா நீங்க விவசாயம் பண்ணிட்டு இருந்தாலும், வியாபாரம் பண்ணிட்டு இருந்தாலும் வரி போடலாம். இந்த புல்வெளிப்பகுதிகளான மேய்ச்சல் நிலத்தில் இருக்கக்கூடிய கோனார், இடையர், குரும்பர் போன்ற மக்கள் எல்லாம் ஒரே இடத்தில் தங்க மாட்டார்கள். இடம் விட்டு இடம் நகர்ந்துகொண்டே இருந்தார்கள். அதனால் அவர்கள் மீது வரி போட முடியவில்லை. அதனால் அவர்கள் சார்ந்திருந்த நிலத்தை வேஸ்ட் லேண்ட்- தரிசு நிலங்கள் -உபயோகமற்ற நிலங்கள் என்று டிக்ளேர் பண்ணிட்டாங்க.

வெள்ளைக்காரனுக்கு வரி வருவாயில்லை என்று போடப்பட்டதுதான் இந்த வேஸ்ட் லேண்ட். ஆனால், நம் மக்கள் அதை சுத்தமாக உபயோகமற்ற நிலம் என்று தவறாகப் புரிந்து கொண்டார்கள். நம் ஆட்சியாளர்களும் அதை வேஸ்ட் லேண்டாகவே பார்க்கிறார்கள். இந்த அறிவிப்பால் இந்த நிலம் சமூகக்காடுகள்,  வீட்டு மனைகள், தொழிற்சாலைகள், வாய்க்கால்கள் மூலம் விவசாயம் செய்வது என வேறு வேறு பயன்பாட்டிற்கு மாறிக் கொண்டே இருக்கின்றன.

1980லிருந்து 2010 வரைக்கும் 27 மில்லியன் ஹெக்டேர் காடுகளை நாம் இந்தியாவில் இழந்திருக்கிறோம். இந்த செய்தி மீடியாக்களில் வெளியானவுடனே பொதுமக்கள் மத்தியில் பெரும் கூப்பாடு. காடுகள் அழிப்பு வேலைகளை நிறுத்தணும்; மரங்களைக் காக்கணும்; பல்லுயிர் பெருக்கத்தை பேணிக் காக்கணும் என்று இயற்கை ஆர்வலர்கள் கொதித்தார்கள். கோர்ட்டும் அதில் தலையிட்டு கருத்துக்களை சொல்கிறது. இதே சமயத்தில்தான் 20 மில்லியன் ஹெக்டேர் புல்வெளிப் பகுதிகள் வேறு பயன்பாட்டிற்கு சென்றிருக்கிறது. அதைப் பற்றி யாரும் பேசுவதேயில்லை. இது எப்படிப்பட்ட ஆபத்து என்பதை ஆராய்ந்து பார்த்தால்தான் புரியும்.
 
ஆடு, மாடு மேய்ப்பு என்பது இந்தப் புல்வெளிகளை நம்பியே உள்ளன. இந்த நிலங்கள் அளவு குறையக் குறைய இடையர், கோனார், குரும்பர் என இந்தத் தொழில் செய்பவர்கள் உள் நாட்டிலேயே தொழில் இல்லாமல் அகதிகளாக்கப்படுகிறார்கள். புல்வெளிப் பகுதியில் புற்களை முயல்களும், முயல்களை நரிகளும், புற்களின் விதைகளை எலிகளும், எலிகளை ஆந்தைகளும், புற்களை வெட்டுக்கிளிகளும், வெட்டுக்கிளிகளை பறவைகளும் சாப்பிடுது. கார்பன்டைஆக்சைடு சுழற்சியிலும் மாறுபாடு அதிகரிக்கிறது!’’ என்றவர் இந்தப் புல்வெளிக்காடுகளில் காணப்பட்ட / காணப்படும் அதிசயப்பறவைகள் குறித்து விரிவாக விளக்கினார்.

‘‘நெட்டைக்காலிகள், பாடிஃபீல்டு பிப்பிட், நீலகிரி பிப்பிட்... கடல் மட்டத்திற்கு மேல் 900 மீட்டர் உயரத்தில் உள்ள காடுகளில்தான் நீலகிரி பிப்பிட்டைக் காண முடியும். பூமி வெப்பமயமாவதால் இந்தப் பறவை சூடு தாங்காமல் உயர, உயரப் போயிட்டிருக்கு. அதனால் அதோட வசிப்பிட நிலப்பரப்பு குறைஞ்சுட்டே வருது. இந்தப் பறவையைக் காப்பாற்றணும்னா நம்ம சோலைக் காடுகளில் உள்ள சோலைப் புல்வெளிகளைக் காப்பாற்றணும்.

பண்டிங்ஸ், ட்ரஸ்ட்டட் பண்டிங், கிரானைட் பண்டிங், ட்ரஸ்ட்டட்... சாதாரணமா நம்ம நிலத்தில் பார்க்கக்கூடிய குருவி வகைதான். தூக்கணாங்குருவிகளும் புல்வெளிகளை சார்ந்திருக்கும் பறவைகள். புற்களை வச்சுத்தான் அது தன்னோட கூடே கட்டும். அது எல்லாமே பிரவுன் கலர்ல ஒரே மாதிரி இருக்கும். அதை ஐடன்டிஃபை பண்றது கஷ்டம். புல்வெளிப் பறவைகள் உடலமைப்புல ஒருசில அடாப்டேஷன்கள் இருக்கும். அந்த அடாப்டேஷன்கள் என்னென்ன... கமாஃபிலாஜ் - உருமறைத்தோற்றம்ன்னு தமிழ்ல சொல்லுவாங்க, அந்த பறவை இருப்பதே தெரியாது. அது இருக்கிற இடத்தோட பேக்ரவுண்டோடு மெர்ஜ் ஆயிடும்.

செஸ்ட்டட் பிரில்லியன் சேனுகுரோஸ்ங்கிற பறவையைப் பார்த்தா ஏதோ ஒரு கல்லு மாதிரிதான் இருக்கும். அது நகர்ந்தால் ஒழிய அது பறவைன்னு நமக்குத் தெரியாது.
அதே மாதிரிதான் கவுதாரியும். அது  இயற்கையான அமைப்புல இருக்கும்போது பின்னாடி போய் பேக்ரவண்ட் கலரோட மெர்ஜ் ஆயிடும். அங்கே என்ன பறவை இருக்குங்கிறதே தெரியாது. புல்வெளிப் பறவைகளோட முக்கியமான அம்சம் இந்த உருமறைத் தோற்றம்.

இந்தப் பறவைகள் கோர்ட் ஷிப் டிஸ்பிளேவும் ரொம்ப பெக்குளியராக இருக்கும். ஒண்ணு சிஸ்ட்டண்ட் பெட்டிட்ஸ் சேன்ட்குரோஸ். இதுல இந்த ஆண் பறவை அதோட இறக்கையை ஓப்பன் பண்ணி காட்டும். பல ஆண்பறவைகள் ஒன்றாகச் சேர்ந்துகொள்ளும். அவையும் தம் இறகை ஓப்பன் பண்ணிக் காட்டும். அதில் பெண்  பறவை ஈர்க்கப்படும்.

அதே மாதிரிதான் வரகுக்கோழியும். இதில் ஆண் பறவை ஓரிடத்தில் நின்னுகிட்டு குதிக்கும். அஞ்சடி, ஆறடி உயரத்துக்கும் கூட குதிக்கும். பறவையோட சைஸ் நம்ம கோழியை விட சின்னதாகத்தான் இருக்கும். ஒரே இடத்தில் பல ஆண்பறவைகள் சேர்ந்து இப்படி குதிக்கும். பெண் பறவை இதில் எது உயரமாகக்குதிக்குது, எது வலிமையாக இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு அது கூடப் போய் இணை சேரும். இதுல முக்கியமான அம்சம், இந்தப் புல்வெளியில் கொண்டு போய் மரங்களை நட்டால் இந்த கோர்ட்ஷிப் டிஸ்பிளே தடைபட்டுப் போகும்.

வரகுக்கோழி நம் தமிழ்நாட்டுல பார்க்க முடியாமப் போனதுக்கு இதுவும் ஒரு காரணம். ஏன்னா புல்வெளிப்பகுதிகளில் ஏதாவது மரங்களைக் கொண்டு வந்து நட்டிருப்போம். மழை குறைவாக இருக்கிற பகுதிகள் என்பதால் வாய்க்கால் வெட்டி தண்ணி கொண்டு போய் விவசாயம் செய்திருப்போம். அங்கே எல்லாம் இந்த வரகுக்கோழி இயல்பாய் வாழ முடியாது.

வானம்பாடி, நெட்டைக்காலிகள், ஆள்காட்டிக்குருவிகள் எல்லாமே தரையில் முட்டை வைப்பவை. பறவை உட்கார்ந்திருப்பதை வைத்துத்தான் அங்கே ஒரு கூடு இருப்பதையே கண்டுபிடிக்க முடியும். முட்டைகள் பார்க்க சின்ன கல்லுமாதிரிதான் இருக்கும். கலங்கல் என்கிற பகுதியில் நான் பார்த்திருக்கேன். அங்கே மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, சிவப்பு மூக்கு ஆள்காட்டி முட்டை வைக்கும். பறவை உட்கார்ந்திருக்கும். ஆள் பார்த்தா எழுந்திருச்சுப் போயிடும். அங்கே போனா கூட்டை கண்டுபிடிக்கவே முடியாது. ஆனா  கூடு இருக்கும். முட்டையும் இருக்கும். இதை விவசாய, மேய்ச்சல் நிலமாக மாற்றும்போது இவை எல்லாம் அழிஞ்சிடும்.

பறவைகள் மட்டுமல்ல, குஞ்சுகளும் புத்திசாலிகளாக இருக்கும். எதிரி விலங்குகள், பருந்துகள் வருதுன்னா தாய்ப்பறவை ஒருவிதமான சத்தம் கொடுக்கும். உடனே இந்தக்குஞ்சுகள் அப்படியே அசையாம உறைந்து போய் தரையோட தரையாக உட்கார்ந்துக்கும். மண்ணின் நிறத்திலேயே அதுவும், கூடும் இருக்கும். நாய், நரி தங்களை வேட்டையாடும் என்று இவை கவனமாக இருக்கும்.
சில பறவைகள் தன் இறக்கை உடைஞ்ச மாதிரி நடிக்கும். நரியோ, நாயோ சுலபமாக பிடித்து விடலாம்ங்கிறபோது தத்தித் தத்தி ஓடும். எதிரி கிட்ட நெருங்கினதும் பறந்துடும்.  

வேட்டையாடும் பறவைகளான பூனைப்பருந்துகள் போன்றவையும் சில ஸ்ட்ரேட்டஜிகள் வைத்திருக்கு. இந்தப் பறவைகள் எல்லாமே தரையில், பெரிய மரங்களில் உட்காரவே செய்யும். ரொம்பத் தாழ்வான கிளைகளில் அல்லது கற்கள், பாறைகள் மீது உட்கார்ந்திருந்தால்தான் உண்டு. தரையில் மட்டுமே தூங்கக்கூடிய பறவை. சின்னப்பறவையை அபூர்வமாகத்தான் வேட்டையாடும். வெட்டுக்கிளிகளைத்தான் இவை பிடித்து உண்ணும். புல்வெளிப்பகுதிகளில் உள்ள விலங்குகள் முயல், கீரி, நரி, எலி.

புற்களை எலி, முயல் சாப்பிடுது. எலியை பாம்புகளும், ஆந்தைகளும் சாப்பிடுது. பாம்புகளை வேட்டையாட கீரிகள் இருக்கு. இந்த சங்கிலி அறுந்தால் உணவுச்சங்கிலியே தடைபட்டு விடும்...’’ விரிவாக விளக்குகிறார் பாலாஜி. ‘‘இதற்கு குறைந்தபட்சம் ஒன்றிரண்டு சரணாலயங்கள் உருவாக்கப்படணும்.  அப்பதான் இருக்கறதை கொஞ்சமாச்சும் பாதுகாக்கலாம். முதுமலை முக்குருத்தி நேஷனல் பார்க், வால்பாறை அக்காமலை கிராஸ் லேண்ட்ஸ்... இரண்டுமே சோலா புல்வெளிக்கான காப்பிடங்கள்.

தமிழக சமவெளிகளில் இருக்கும் புல்வெளிகளுக்கு காப்பிடங்கள் இல்லை. ஆந்திராவில் ரோலாபூரான்னு ஒண்ணு இருக்கு. கர்நாடகத்தில் ராணி பெண்ணூர், பிளாக்பெக் சேன்க்ச்சுவரி ஒண்ணு இருக்கு. இதில் சோன்கலியா என்கிற இடத்திற்கு நாங்க போய் பார்க்கும்போது 200 ஏக்கரில் விவசாயிகள் இந்தப் பறவைகளின் முக்கியத்துவம் தெரிஞ்சுட்டு விவசாயம் பண்ணாம சும்மாவே வச்சிருக்காங்க. அந்தப் புல்வெளிப் பகுதிகளில் பார்த்தால் மரங்களே இல்லை. எனவே, அங்கே புல்வெளிப்பறவைகளை நிறைய பார்க்க முடிந்தது. அந்த விழிப்புணர்வு நம் மண்ணுக்கும் வரணும்!’’ என்கிறார் பாலாஜி.

கா.சு.வேலாயுதன்