சுதந்திர போராட்ட தலைவர்களை தெரியும்... சுதந்திர போராட்ட வீரர்களை தெரியுமா..?ஆவணப்படுத்துகிறார் பேராசிரியர்



‘‘பொதுவாக, நாம் சுதந்திரத்திற்காக பாடுபட்ட முக்கிய தலைவர்களை மட்டுமே அறிந்திருப்போம். ஆனா, சுதந்திரத்திற்காக தலைவர்களுடன் போராடிய அல்லது தனியாக நின்று போராடிய பலர் நம் கவனத்திற்கு வரவேயில்ல. அப்படியானவங்க தமிழகத்துல நிறைய இருக்காங்க. இவங்க மத்திய, மாநில அரசுகளின் ஊக்கத்தொகையும் விருதுகளும் கூட வாங்கியிருக்காங்க. ஆனா, இவங்க சுதந்திரத்திற்காக பண்ணின விஷயங்கள் யாருக்கும் தெரியாது.

அந்த அறியப்படாத தியாகிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர்றதும், அவங்க போராட்டம் எப்படியானதாக இருந்ததுனு சொல்லவுமே இந்த ஆய்வை பண்ணினோம்...’’ அத்தனை ஆர்வமாகப் பேசுகிறார் பேராசிரியர் சுமதி.சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் சி.பி.ராமஸ்வாமி ஐயர் இண்டோலாஜிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றின ஆய்வை மேற்கொண்டு அத்தனை சிரத்தையாகச் செய்து முடித்திருக்கிறார்.  

‘‘முதல்ல என் ஆசிரியரும் இந்த இன்ஸ்டிடியூட்டின் இயக்குநருமான நந்திதா கிருஷ்ணன் மேடத்திற்குதான் நன்றி சொல்லணும். அவங்க தந்த நம்பிக்கையில்தான் இந்த ஆய்வை என்னால் சிறப்பாக செய்ய முடிஞ்சது. இதை மத்திய அரசின் கலாசாரத் துறைக்காக (http://amritmahotsav.nic.in/unsung-heroes.htm)செய்தோம். அவங்க அறியப்படாத சுதந்திரப் போராட்ட தியாகிகள் பற்றி தகவல் கேட்டிருந்தாங்க.

அதாவது, ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’னு 75வது சுதந்திர தினத்தையொட்டி நம் கலாசாரத்தைக் கொண்டாடும்விதமாகவும், தியாகிகளை நினைவுகூரும்விதமாகவும் இந்தத் தகவல்களை சேகரிக்கச் சொன்னாங்க. இதை ஓர் ஆய்வாக எடுத்து நாங்க செய்தோம். அப்ப நிறைய தகவல்கள் கிடைச்சது.என் கணவரின் நண்பர் மன்னார்குடியில் இருக்கார். அவங்க அப்பா ‘காக்காஜி’ ராமசாமி சுதந்திரப் போராட்ட வீரர். அதனால, அவர் பற்றின தகவலை முதல்ல சேகரிச்சேன். பிறகு ஒருவர் மூலமாக இன்னொருவர் தொடர்பு கிடைத்து, அடுத்தடுத்து நிறைய தகவல்கள் சேகரிச்சோம். இதுல பலரின் சுதந்திரப் போராட்ட அனுபவங்கள் மெய்சிலிர்க்க வைப்பவை.

அப்புறம் அவங்க வாங்கின சான்றிதழ், பிறந்ததேதி, ஜெயில்ல இருந்த சான்றிதழ், உறவினர்கள் சொன்ன தகவல்கள், செய்தித்தாள்களில் உள்ள செய்திகள்னு எல்லாவற்றையும் வச்சு நாங்களே ஒவ்வொருவருக்கும் ஒரு கட்டுரையைத் தயாரிச்சோம். இப்படியாக 408 அறியப்படாத தியாகிகள் பற்றின தகவல்களை சேகரிச்சிருக்கோம். இதுல சுமார் 160 பேர் பலரும் அறியப்படாத பெயர்கள். ஆனா, அவங்க சுதந்திரப் போராட்டத்துல பெரும்பங்கு வகிச்சிருக்காங்க...’’ என்கிறவர், சிலரின் சுதந்திரப் போராட்டப் பணிகளையும், அவர்களின் வீரசாகசங்களையும் நம்மிடம் பகிர்ந்தார்.

‘‘நான் முதல்முதலாக சந்திச்ச தியாகி ‘காக்காஜி’ ராமசாமியின் மகன் ராஜகோபாலன், தன் தந்தையைப் பற்றிச் சொன்ன தகவல்கள் ரொம்ப சுவாரஸ்யமானது.
‘காக்காஜி’ என்கிற அடைமொழி வந்ததே பெரிய கதை. இவர் பள்ளி நாட்கள்லயே காந்திஜியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டிருக்கார். காந்திஜி உப்பு சத்தியாக்கிரகம் பண்ணினபோது இவர் மன்னார்குடியில் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கார். அப்ப போலீஸ் அவரை கைது செய்றாங்க. அவருக்கு அப்ப வயசு 21.

அதேநேரம் பிரிட்டிஷ் அரசின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து போஸ்டர் ஒட்டிய குற்றச்சாட்டிற்காக ஆறு மாசம் திருச்சி சிறையில் அடைக்கிறாங்க. அப்புறம், தனிப்பட்ட முறையில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டதால் நீடாமங்கலம் சிறையில் மூணு வாரங்கள் அடைக்கப்படுறார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் 1942ல் தொடங்கினபோது மன்னார்குடி கிராமமே வன்முறைக் களமாக மாறுது.

ரயில் நிலையம், தந்தி அலுவலகம் எல்லாம் வன்முறையால் தாக்கப்படுது. அப்ப மன்னார்குடியின் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராகவன், ‘ராமசாமிதான் இந்தக் கலவரத்திற்குக் காரணம்’னு நினைக்கிறார். அவரை சுட்டுப்பிடிக்க அரசாணை வாங்குறார். இதனால ராமசாமி மாறுவேடத்தில் திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பல ஊர்கள்ல தலைமறைவு வாழ்க்கை வாழ்றார். பவானி போலீஸ் அவரைக் கண்டுபிடிச்சு ரயில்ல மன்னார்குடிக்குக் கொண்டு வர்றாங்க.

ரயில்நிலையத்திலேயே இன்ஸ்பெக்டர் ராகவன், ராமசாமியை கடுமையாக அடிக்கிறார். அப்ப, ‘உன்னை இங்க தேடி அலையிறோம். நீ காக்கா மாதிரி பறந்து போயிட்ட’னு சொல்லிச் சொல்லி அடிச்சிருக்கார். அதைப் பார்த்த பொதுமக்கள் அவரை மரியாதைக்காக, ‘காக்காஜி’னு அழைக்க ஆரம்பிச்சிருக்காங்க. இவர் சுதந்திரத்திற்குப் பிறகு மன்னார்குடியில் 27 ஆண்டுகள் தொடர்ந்து கவுன்சிலராகவும், நகராட்சி துணைத் தலைவராகவும் இருந்திருக்கார். இவரை கௌரவிக்கும் பொருட்டு இந்திய அரசு 1972ம் ஆண்டு 25வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தாமிரப் பட்டயம் கொடுத்திருக்கு.

அடுத்து கடலூர் அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகாசலம் பிள்ளை. இவர் 18 வயதில் இந்திய தேசிய காங்கிரஸ்ல சேர்ந்து காந்திஜியின் சுதேசி இயக்கத்துல தீவிரமாக செயல்படுறார். பிறகு, 20வது வயதில் அரிஜன சேவா சங்க ஆஸ்ரமம் தொடங்கி அடிப்படைக் கல்வியுடன், இலவச உணவும் குழந்தைகளுக்கு வழங்கியிருக்கார்.

இந்த ஆஸ்ரமத்திற்கு நேதாஜி, வினோபா பாவே, சர்தார் வல்லபாய் பட்டேல், ராஜேந்திர பிரசாத், சரோஜினி நாயுடுனு பெரிய தலைவர்கள் எல்லாம் வந்திருக்காங்க. காந்திமதினு ஒரு பிரிண்டிங் பிரஸ் ஆரம்பிச்சு அதன்வழியா பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து கட்டுரைகள் எழுதியிருக்கார். இதனால் கைது செய்யப்படுறார். ஆறு ஆண்டுகள் அந்தமான், பெல்லாரி, திஹார் ஜெயில்னு மாறிமாறி அடைக்கப்படுறார்.

1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்துல இவர் கடலூர் கெடிலம் ஆற்றில் நின்று போராட்டம் நடத்துகிறார். போலீஸ் லத்தி சார்ஜ் பண்ணினதும் இவர் ஆற்றில் விழுந்துவிடுகிறார். மக்கள் அவரைக் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்க்கிறாங்க. அப்போதிலிருந்து அவரை, ‘தடியடிபட்ட’ தணிகாசலம்னு அழைக்கிறாங்க. இவரின் தியாகத்தை கௌரவிக்கும் பொருட்டு 1972ல் தாமிரப் பட்டயத்தை இந்திய அரசு வழங்கியிருக்கு.  

இதுல யாராலும் அறியப்படாத தியாகினு ஒருத்தர் இருக்கார். அவர் பெயர் கே.ஏ.நீலகண்ட ஐயர். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். இவர் கோலாலம்பூரில் இந்திய சுதந்திர லீக்கின் செயலாளராக இருந்தவர்.  இவர் மலேசியா ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்து பிரிட்டிஷை எதிர்க்கிறார்.

 பிறகு இவர் டோக்கியோவில் 1942ல் நடந்த விமான விபத்தில் இறக்கிறார். ஆனால் இன்றுவரை அரசு மற்றும் ராணுவ சலுகைகள் எதுவும் இவரின்குடும்பத்திற்கு கிைடக்கல. 1941ல் இரண்டாவது உலகப் போரின்போது தன் மனைவியையும், ஆறு குழந்தைகளையும் இந்தியாவிற்கு அனுப்பிவிடுறார். இந்தத் தகவலை அவரின் மகன் நாதன் என்னிடம் சொன்னார். இவர் ஐஎன்ஏவில் இருந்தார் என்பதை மாதவன் பிள்ளை என்பவரும் உறுதிப்படுத்தினார்.

இந்த மாதவன் பிள்ளைக்கு இப்ப 98 வயசாகுது. இவர் நேதாஜியின் ஐஎன்ஏ படையில் இருந்தவர். இவரும் முதல்ல இந்திய சுதந்திர லீக்கில் இருந்திட்டு பிறகு நேதாஜியுடன் இணைந்தார். இவர் கதையும் முக்கியமானது. இவர் சிவகங்கையைச் சேர்ந்தவர். பர்மாவிலிருந்து ஐஎன்ஏக்கு ஆட்களை சேர்ப்பதிலும் நிதி திரட்டுவதிலும் முக்கிய பங்கு வகித்தவர்.

அப்போது எப்படியெல்லாம் இருந்தோம், எப்படியெல்லாம் போர் செய்தோம், என்ன மாதிரியான தண்டனைகளை ரங்கூன் ஜெயில்ல தந்தாங்க என்கிற பல  விஷயங்களைப் பகிர்ந்தார். அவ்வளவும் ஆச்சரியமான தகவல்கள்...’’ என வியப்புடன் சொல்கிறவர், இந்த அறியப்படாத தியாகிகளில் பெண்களும் உள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

‘‘இதுல பாதிப்பேர் பெண்களும் இருக்காங்க. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு அற்புதமானது. அஞ்சலைனு ஒரு அம்மா. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவப் படைப் பிரிவுல கமாண்டன்ட்டா இருந்திருக்காங்க. வீட்டை எதிர்த்திட்டு 1943ல் இந்திய சுதந்திரத்திற்காக ஆர்மியில சேர்ந்திருக்காங்க.

அப்ப அவங்களுக்கு வயசு 21தான். இவங்க முதல்ல சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டு, அங்க அடிப்படை ராணுவப் பயிற்சியை எடுத்திருக்காங்க. பிறகு, பர்மாவுக்கு வந்து அங்க ஜான்சி ராணி ரெஜிமென்ட்ல இணைந்து நாட்டிற்காக போரில் ஈடுபட்டிருக்காங்க.
 
இவங்களபோல ராமநாதபுரத்தைச் சேர்ந்த காந்திமதி ராமசாமி அம்மாவின் கதையும் வீரதீரம் கொண்டது. இவங்க அப்பா ரங்கூன்ல மீன் சந்தை வச்சு நடத்துறார். இவங்களுக்கு 12 வயசாக இருக்கும்போதே நேதாஜியின் ஜான்சி ராணி ரெஜிமென்ட்ல சேர்ந்திடுறாங்க. ராணுவத்துல சேர அவங்க வீட்டுல பலத்த எதிர்ப்பு. குறிப்பாக, அவங்க அப்பா கடுமையாக எதிர்த்திருக்கார். ஆனாலும் தைரியமாக போய்ச் சேர்ந்திடுறாங்க.

இவங்க உறுதியைக் கண்டு வியந்த நேதாஜி அவங்கள ‘Boy’னுதான் அழைச்சிருக்கார். கேப்டன் விஜயலட்சுமியின் கீழ் பணிபுரியிறாங்க. துப்பாக்கியை கையாள்வதில் தேர்ந்தவராக விளங்கியிருக்காங்க.முருகக்கடவுள் போல வேஷம் போட்டு வீதிவீதியாகச் சென்று நிதி வசூலிச்சு அதை ஐஎன்ஏவிற்கு அளிச்சிருக்காங்க. சுதந்திரத்திற்குப் பிறகு அவங்க கணவர் ராமசாமியுடன் இந்தியாவுக்கு வந்திடுறாங்க. இதையெல்லாம் கேட்டப்ப ரொம்ப உணர்வுபூர்வமா இருந்தது. எந்தளவுக்கு பெண்கள் சுதந்திரப் போராட்டத்தில் துணிச்சலாக பங்கு பெற்றிருக்காங்கனு அறிய முடிஞ்சது...’’ என்கிறவர், இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார்.

‘‘இந்தத் தகவல்களை எல்லாம் இப்ப இந்திய அரசின் கலாச்சாரத்துறையிடம் கொடுத்திட்டோம்.அப்புறம், இதை நாங்க எதிர்காலத்துல ஒரு ஆய்வுக் கட்டுரையாக வெளியிட இருக்கோம். அப்பதான் அறியப்படாத இந்த சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய வரலாறு பொதுமக்களிடம் சென்றடையும்’’ என நம்பிக்கை
யுடன் சொல்கிறார் பேராசிரியர் சுமதி.

பேராச்சி கண்ணன்