அல்சூரு ஹப்பா திருவிழா!



கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு சர்வதேச தொழில் நுட்ப தலைநகரம் என அழைக்கப்படுகிறது. இத்தகைய பெங்களூருவில் தமிழ் பாரம்பரியத்துக்கு பங்கம் ஏற்படாத வகையில் பல வருடங்களாக அல்சூரு திருவிழா தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.பெங்களூருவின் மையப்பகுதியான அல்சூருவில் வசிக்கும் தமிழர்கள் தங்களின் குழந்தைகளுடன் ராட்டினம், ஆடல் பாடலுடன் தைத் திருநாளை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.  

அல்சூரு, ‘ஹப்பா’ என்ற பெயரில் நடக்கும் இத்திருவிழா தமிழர் மரபின்படி பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு நடைபெறும் இந்த விழாவின் போது ஹைடெக் சிட்டியான பெங்களூரு, பாரதிராஜா சினிமாவில் வருகிற கிராமம் போல் மாறிவிடுகிறது. இந்த வருடமும் அப்படித்தான்.
அல்சூரு நாலா சாலை முழுவதும் ராட்டினங்களும், ரயில்களும் சிறுவர்களால் நிரம்பிக் காணப்பட்டன. கைகளால் ராட்டினத்தை சுற்றும் போது அதில் பயணித்த குழந்தைகள் தங்களை மறந்து உற்சாகம் அடைந்தனர். அதன் காரணமாக சிறார்கள் எழுப்பிய ‘ஹோ...’, ‘ஆ...’ ஒலிகள் இது பெங்களூரு கிடையாது; தமிழ்நாட்டின் மிகச்சிறிய கிராமம் என்ற தோற்றத்தை உண்டாக்கியது.  

இதற்கு வலுசேர்ப்பது போல் அல்சூரு ஹப்பாவில் இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக கரகாட்டக் கலைஞர்கள் நடனம் ஆடினர். திருவிழா என்றால் கச்சேரி இல்லாமலா... நம்மூரில் நடப்பது போல் இன்னிசைக் கச்சேரியும் களை கட்டியது. எம்ஜிஆர் மற்றும் டாக்டர் ராஜ்குமார் போன்று வேடமிட்ட கலைஞர்கள் மேடையில் தோன்றிய போது மக்கள் கைதட்டி உற்சாகம் அடைந்தனர்.

‘‘அல்சூரு உள்ளிட்ட பகுதிகளில் வருடந்தோறும் இத்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் இந்த வருடம் பழைய உற்சாகத்துடன் கொண்டாடினோம்...’’ என்கிறார் பெங்களூரு தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன்.பெங்களூரு, அல்சூரு ஹப்பாவுக்கு உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில் எம்எல்ஏ ரிஸ்வாத் ஹர்சத் கலந்து கொண்டார். தமிழ் மரபுப்படி உடை அணிந்து தன் மனைவியுடன் பங்கேற்று தமிழ் மரபின்படி வாழை இலையில் அனைவருக்கும் உணவு பரிமாறினார்.

ஏரல் எஸ்.பட்டுராஜ்