MUST WATCH



ட்ரூ ஸ்பிரிட்

ஒரு நல்ல இன்ஸ்பிரேஷன் படம் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கிறது ‘ட்ரூ ஸ்பிரிட்’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது இந்த ஆங்கிலப்படம்.

மிக இளம் வயதில் கடல் வழியாக உலகைச் சுற்றி வந்த ஜெசிகா வாட்சனின் சாகசப் பயணம்தான் படத்தின் கதை. 2009ம் வருடம். 16 வயதான ஜெசிகா வாட்சன் படகு மூலமாக கடல் வழியில் உலகைச் சுற்றுவதற்காக தயாராகிறார். அந்தப் படகில் அவரைத் தவிர யாருமே இல்லை.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து புறப்படுகிறது அந்தப் படகு. கடலில் வீசும் பலத்த காற்று, புயல், காற்றே இல்லாத இடம், தனிமை, பெருமழை, ஏதாவது பிரச்னை என்றால் உதவ ஒருத்தர் கூட அருகில் இல்லாமை, இரண்டே நாளில் அந்தப் பெண் திரும்பி வந்துவிடுவாள் என்ற பத்திரிகையின் நெகட்டிவ் செய்தி... போன்ற பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜெசிகா எப்படி உலகைச் சுற்றி வருகிறார் என்பதே அசத்தலான திரைக்கதை. ஜெசிகாவுடன் நாமும் சேர்ந்து கடல் வழியாக உலகைச் சுற்றி வந்த ஓர் அனுபவத்தைக் கொடுக்கிறது இந்தப் படம்.

பியாலி

மனதை நெகிழ்விக்கும் அழகான ஒரு திரைப்படமாக வெளிவந்திருக்கிறது ‘பியாலி’. ‘அமேசான் ப்ரைமி’ல் பார்க்க கிடைக்கிறது இந்த மலையாளப்படம். காஷ்மீரைப் பூர்விகமாகக் கொண்ட ஜியாவும், பியாலியும் கேரளாவில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். 14 வயதான ஜியா சிக்னலில் பொருட்களை விற்று 5 வயதான பியாலியைக் காப்பாற்றி வருகிறான்.
அவன் வேலை செய்யும் இடத்தில் பிரச்னை ஏற்படுகிறது.

தங்கியிருந்த வீட்டை காலி செய்ய வேண்டிய நிலை. தங்க இடம் இல்லாத ஜியாவும், பியாலியும் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கின்றனர்... என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கின்றனர்... பிரச்னைகளிலிருந்து எப்படி மீள்கின்றனர்... என்பதே மனதை நெகிழ்விக்கும் திரைக்கதை.  

ஜியா மற்றும் பியாலியின் கதை வழியாக இந்தியாவில் கைவிடப்பட்ட அனாதைக் குழந்தைகளின் வாழ்க்கை நிலையைச் சொல்லியிருக்கிறது இந்தப் படம். அதே நேரத்தில் அண்ணன் - தங்கை கதையாகவும் மிளிர்கிறது ‘பியாலி’.  ஜியாவாகவும், பியாலியாகவும் நடித்த குழந்தைகள் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கின்றனர். படத்தின் இயக்குநர்கள் பபிதா மற்றும் ரின். இந்தப் படத்தை தயாரித்திருப்பவர் துல்கர் சல்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

லைல்,லைல், கொரக்கடைல்

அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் பெர்னார்ட் வேபர் எழுதிய புகழ்பெற்ற சிறுவர் புத்தகம், ‘லைல், லைல், கொரக்கடைல்’. 1965ல் வெளியான இப்புத்தகத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கிறது இந்த ஆங்கிலப்படம். ‘நெட்பிளிக்ஸி’ல் பார்க்கலாம். ஒரு காலத்தில் நியூயார்க் நகரிலேயே பெரிய மேஜிக் மேனாக இருந்தவர் ஹெக்டர்.

இப்போது சரியான வாய்ப்பு கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கிறார். அப்போது செல்லப் பிராணிகள் விற்கும் கடையில் பாடும் முதலைக்குட்டி ஒன்று அவருக்கு கிடைக்கிறது. அதை வாங்கி வந்து லைல் என்று பெயர் வைக்கிறார். லைல் வளர்ந்ததும் மேடையில் பாட வைத்து கோடிக்கணக்கில் பணத்தை அள்ளலாம் என்பது ஹெக்டரின் திட்டம்.

அவர் நினைத்தது போலவே லைலும் சீக்கிரம் வளர்கிறது. பாடும் லைலுக்காக பெரிய நிகழ்வை ஏற்பாடு செய்கிறார். டிக்கெட்டுகள் விற்றுத் தீர்கின்றன. லைலும் மேடை ஏறுகிறது. ஆனால், ஹெக்டர் நினைத்தது போல் நடக்கவில்லை. ஹெக்டருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட லைலை கைவிடுகிறார். யார் கைக்கு லைல் கிடைக்கிறது... லைலின் வாழ்க்கை என்னவாகிறது என்பதே மீதிக்கதை. இயக்கம், வில் ஸ்பெக் மற்றும் ஜோஸ் கோர்டோன்.

வத்

‘நெட்பிளிக்ஸின்’ டாப் டிரெண்டிங் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திப்படம், ‘வத்’. வயதான தம்பதியினரான சம்புநாத் மிஸ்ராவும், மஞ்சுவும் குவாலியரில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களது மகன் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறான். மகனின் கல்விக்காகவும், வெளிநாடு செல்லவும் லட்சக்கணக்கில் கடன் வாங்கியிருக்கிறார் சம்புநாத்.

நல்ல நிலைமைக்கு வந்த பிறகும் கூட மகன் சரியாக பணம் அனுப்புவதில்லை; அத்துடன் சரியாகப் பேசுவதில்லை. கடன் கொடுத்த பாண்டே என்பவன் அடிக்கடி சம்புநாத்தின் வீட்டுக்கு வந்து அராஜகம் பண்ணுகிறான். வட்டி வசூலிக்க வரும்போது சம்புநாத்தின் வீட்டிலேயே மது அருந்துகிறான்.

பாண்டே அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த சம்புநாத், பாண்டேவைக் கொன்றுவிட, சூடுபிடிக்கிறது திரில்லிங் திரைக்கதை. 

கடன் கொடுக்கும் நெருக்கடியையும், வயதானவர்களின் நிலையையும் அழுத்தமாகச் சித்தரித்திருக்கிறது இந்தப் படம். சம்புநாத்தாக சஞ்சய் மிஸ்ரா பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ஜேஸ்பால் சிங் சந்து மற்றும் ராஜீவ் பர்ன்வால் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர்.

தொகுப்பு: த.சக்திவேல்