சமூக அக்கறையா..? பிசினஸா..?



சினிமா என்றாலே வருடத்துக்கு ஒரு சீசன், வருடத்துக்கு ஒரு தீம் என இருப்பது எதார்த்தம்தான். ஒரு படம் மெகா ஹிட் கொடுத்து விட்டால் அதே பாணியில் அதேபோன்ற திரைக்கதையில் அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டுவது தவிர்க்க முடியாத விஷயம். அப்படித்தான் ‘காதலுக்கு மரியாதை’, ‘காதல் கோட்டை’ படங்கள் வெற்றி பெற்ற நேரம் தொடர்ந்து பல காதல் திரைப்படங்கள் வெளியாகின. போலவே விவசாயம், விவசாயம் சார்ந்த பிரச்னைகள் என ஒரு சில படங்கள் தேசிய விருது வரை சென்றதும் வரிசையாக அத்தனை படங்களும் விவசாயத்தைப் பாதுகாத்தன.

இதோ 2022ல் ‘கார்கி’ படம் விமர்சன ரீதியாகவும் கமர்சியல் ரீதியாகவும் நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றதன் விளைவு, எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் ஹீரோயினாக நடித்த திரைப்படங்கள் மற்றும் பாலியல் பிரச்னைகள், குழந்தைகளுக்கான பாலியல் துன்புறுத்தல் படங்கள், பெண் கல்வி குறித்த வெப் சீரிஸ்கள்... என எங்கும் சினிமா பெண்கள் பாதுகாப்புக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அதிலும் பெண் குழந்தைகளுக்கான பாலியல் பிரச்னைகள் சார்ந்த படங்களில் நேரடியாக அந்த குழந்தைகள் படும் வேதனை மற்றும் நடக்கும் சம்பவம் என அத்தனையும் காட்சியாக காண்பித்த விதத்தில் உண்மையாகவே இவர்கள் சமூகப் பிரச்னைகளுக்கான விழிப்புணர்வு படங்களாக எடுக்கிறார்களா அல்லது கமர்சியல் என்னும் நோக்கில் மக்களைப் பார்க்க வைக்க காட்சிகளின் வீரியத்தைக் கூட்டுகிறார்களா என்னும் சந்தேகமே எழுகிறது.

காலம் காலமாகவே பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், இந்த வருடம் தமிழ் சினிமாவில் ஏன் இவ்வளவு பெண்கள் சார்ந்த படங்கள், பெண்ணியம் சார்ந்த பிரச்னைகள்..? சினிமா சார்ந்த பிரமுகர்களும், நிபுணர்களும் என்ன சொல்கிறார்கள்..?

சிவி குமார் (தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்): இந்த படங்கள் எல்லாம் வருமானம் ஈட்டுகின்றனவா என்று கேட்டால் 50 - 50 வாய்ப்புதான். பொதுவாகவே ஹீரோயின்களுக்கான ஆக்‌ஷன் திரைப்படங்களும் அவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களும் ஏதோ ஒரு ஹீரோவுக்காக எழுதப்பட்ட கதைகளாகத்தான் இருக்கும். பல ஹீரோக்களிடம் கேட்டு நடைபெறாத பட்சத்தில் பட்ஜெட் கருதியும் கிடைக்கும் தயாரிப்பாளர்கள் பொருத்தும் கதையை ஹீரோயின்களுக்காக மாற்றிக் கொள்கிறார்கள்.

இதுதான் வெளியாகும் முக்கால்வாசி பெண் ஹீரோயின்கள் அடிப்படையிலான படங்களின் கதை. அதிலும் இப்பொழுது படம் தியேட்டரில் பெரிய அளவில் சம்பாதிக்கவில்லை என்றாலும் ஓடிடி தளங்கள் கூடுமானவரை நஷ்டம் ஏற்படுத்தாமல் ஒரு வருமானத்தை கொடுத்து விடுகின்றன. இதன் காரணமாகவே இப்போது அதிகமாகவே பெண்களும், பெண்கள் சார்ந்த படங்களும் வரத் தொடங்கியுள்ளன.

அதேபோல் எப்பொழுதுமே நம் மக்கள் மனதில் பெண்களுக்கு பிரச்னை அல்லது பெண் குழந்தைகளுக்கு பிரச்னை என்றாலே ஒரு பரிதாப மனநிலை, உணர்வு ரீதியாக அவர்களை தூண்டி படம் பார்க்க வைக்கும் மனநிலையை சுலபமாக உருவாக்கலாம். ஆனால், இந்தப் படங்கள் தியேட்டரில் ஒர்க் அவுட் ஆகுமா என்று கேட்டால் எல்லா படங்களும் பாக்ஸ் ஆபீஸில் சாதனை செய்வதில்லை. நல்ல படம் எடுத்து இருக்கிறோம் என்னும் பெயரை மட்டுமே தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் தேடிக் கொடுக்கும்.
 
காட்சிகளின் வீரியத்தை ஓரளவுக்கு நாசுக்காக சொல்லும் இயக்குநர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அப்படி காண்பிக்கப்பட்ட படங்கள் பாக்ஸ் ஆபீஸில் வருமானம் ஈட்டிக் கொடுப்பதில்லை. காட்சிகளை அமைக்கும் பொழுது குறைந்தபட்சம் நாம் ஒரு படத்தை விழிப்புணர்வுக்காக கொடுக்கிறோமா அல்லது மக்களை பயமுறுத்துகிறோமா என்ற தெளிவு படைப்பாளிகளிடம் இருந்தால் நல்லது.

ஆனால், ஓடிடி தளங்களிலிருக்கும் மற்ற மொழிப் பெண்கள் பிரச்னைக்கான படங்கள் இதைக் காட்டிலும் நேரடியான விஷுவல்களில் இருப்பதால் அந்தப் படங்களுக்கு போட்டியாக ஓரளவேனும் காட்சிகள் அமைக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளதும் இதற்கு ஒரு காரணம்.

எஸ்.ஆர்.பிரபு (தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்):

பெரிய படங்களின் வெளியீடுகள் குறைந்ததன் அல்லது இரண்டு மூன்று பெரிய படங்களுக்கு இடையே விழும் பெரிய இடைவெளிதான் நிறைய சின்ன படங்கள் ஆக்கிரமிக்க காரணம். அதிலும் ஓடிடி பிசினஸ் அதிகரித்த பின் சாதாரணமாக எடுக்கும் சின்ன பட்ஜெட் படங்களை விட பெண்கள், பெண் பிரச்னைகள் பற்றி பேசும் படங்களுக்கு அங்கே வரவேற்பு அதிகமாக இருப்பதால் இப்படி எடுக்க வேண்டிய நிலை.

காட்சியின் வீரியம் மற்றும் நேரடியாக காட்சியாக காட்டப்படுவதன் வீரியம் ஆகியவற்றில் தயாரிப்பாளர்களின் தலையீட்டைத் தாண்டி சம்பந்தப்பட்ட இயக்குநர் மற்றும் சென்சார் தரப்புதான் இறுதி முடிவை எடுக்கும். அதேபோல் திரையரங்கில் கமர்சியல் ரீதியாக பிளாக்பஸ்டர் மெகா ஹிட் வேண்டும் என நினைத்து விட்டால் அங்கே கருத்து, விழிப்புணர்வு... என இதையெல்லாம் நாம் கையில் எடுக்கவே முடியாது. சமூகத்திற்கு நல்ல கருத்து சொல்லும் படங்கள் அரிதாகவே பாக்ஸ் ஆபீஸில் கலெக்‌ஷன் அள்ளும். இப்போது பெண் மற்றும் பெண் சார்ந்த படங்கள் அதிகமாக வருவதற்கு ஓடிடி தளங்கள்தான் காரணம்.  

‘பொம்மை நாயகி’ இயக்குநர் ஷான்:

‘பொம்மை நாயகி’ கதையை நான் எழுதி நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்தப் படத்தைப் பார்த்தவர்கள், ‘பெண் குழந்தைகளுக்கான பாலியல் பிரச்னை, அது சார்ந்த சம்பவத்தை நீங்கள் நாசுக்காகவும் மறைமுகமாகவும் காட்சிப்படுத்தி இருந்தீர்கள். காட்சியின் வீரியம் நேரடியாக மக்களின் உணர்வுகளைத் தாக்காமல் அல்லது பயமுறுத்தாமல் எடுத்திருந்தீர்கள்’ எனப் பாராட்டினார்கள்.

பெண்கள் சார்ந்த பிரச்னைகள், பெண் குழந்தைகள் சார்ந்த சம்பவங்கள் காலம் காலமாக நடந்து வந்தாலும் அதை காட்சிகளாகக் காட்டும்போது புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் முன்பைக் காட்டிலும் இப்போது கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. ஓடிடி தளங்கள் அதிகரித்திருப்பதால் மற்ற மொழி திரைப்படங்களையும், உலகத் திரைப்படங்களையும் பார்க்கும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. எனவே நம் மொழியில், நாம் இருக்கும் இருப்பிடத்தில் நிகழும் பிரச்னைகளை சொன்னால் மக்கள் புரிந்து கொள்வார்கள் என்னும் நம்பிக்கை இயக்குநர்களுக்கு வந்திருக்கிறது. இதன் வெளிப்பாடுதான் பெண்கள் பாதுகாப்பு குறித்த படங்கள் அதிகரித்ததற்கான காரணம் என நினைக்கிறேன்.

பெண்களுக்கு நடக்கும் பிரச்னை, பெண் குழந்தைகள் சார்ந்த பிரச்னைகள், வழக்கு - அதில் இருக்கும் நியாய தர்மங்கள்... ஆகியவற்றை சொல்லும் நிலை இப்பொழுது ஏற்பட்டிருப்பது நல்லவிஷயம்தானே..? இப்போது கூட பேசவில்லை எனில் வேறு எப்போது பேசுவது..?

எஸ்.வந்தனா ( உளவியல் நிபுணர்- clinical psychologist):  

பொதுவாகவே ஒரு சம்பவத்தை கேட்பதாலும் பார்ப்பதாலும் நிகழும் மனநிலை மாற்றங்களைக் காட்டிலும் விஷுவல் ஆக பார்க்கும்பொழுது அது ஏற்படுத்தும் தாக்கம் நிச்சயம் அதிகமாகவே இருக்கும். உதாரணத்திற்கு ‘சாமி’ படம் வந்த வேளையில் நிறைய இளைஞர்கள் இட்லியில் பீர் ஊற்றி சாப்பிடும் பழக்கத்தை சர்வ சாதாரணமாக செய்யத் தொடங்கியிருந்தார்கள். இதை நான் கண்கூடாகவே ஒரு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்றபோது அறிந்தேன். சினிமா மட்டுமல்ல, டிவி சேனல்கள், மொபைல் வீடியோக்கள் எல்லாமே இதில் அடங்கும்.

அதேபோல் சினிமாக்களில் காட்டப்படும் ஒவ்வொரு காட்சியையும் சாதாரணமான உங்களைப் போன்ற என்னைப் போன்ற மக்களும் பார்ப்பார்கள். அதே சமயம் ஏற்கனவே தவறு செய்து கொண்டிருக்கும் குற்றவாளிகளும் அல்லது தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்போரும் கூட பார்ப்பார்கள். அவர்களுக்கு பரிதாபத்தையோ அல்லது இது தவறு என்ற மனநிலையையோ உண்டாக்காது. மாறாக அவர்கள் அந்தக் காட்சியில் நிகழும் சம்பவத்தைப் பார்த்து சந்தோஷப்படும் அல்லது தூண்டப்படும் மனநிலையையே உண்டாக்கும்.

விஷுவல் மீடியம் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும் இதே வேளையில் மொபைல்களில் எதைக் கொடுத்தால், காண்பித்தால் மக்களை அடிமையாக்க முடியும் என ஒரு கூட்டமே வேலை செய்து கொண்டிருக்கிறது. அதை யோசிக்கும் பொழுது சினிமாவில் காட்டப்படும் காட்சிகளின் வீரியம் அந்த அளவிற்கு ஆபத்தானதாக இல்லை.

ஒரு சிலருக்கு ஆழ்மனதில் அல்லது இன்னமும் தனக்கு இப்படி ஒரு பிரச்னை இருக்கிறது என தெரியாமலே கூட வாழ்ந்து கொண்டிருப்பார்கள். பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் துவங்கி பீடோஃபைல் என்னும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் ஆர்வம், பாலியல் இச்சையில் பேதமின்றி மனம் மாறுவது... போன்ற பிரச்னை நமக்கு இருக்கிறது என்றே தெரியாமல் கூட இருப்பார்கள். அப்படி இருக்கும் மனிதர்களையும் சில காட்சிகள் தூண்டிவிடும் ஆபத்துகளும் உள்ளன.

பெண்ணியம், ஹீரோயின்கள் அடிப்படையிலான கதைகள், பெண் கல்வி உள்ளிட்ட பிரச்னைகளை மையப்படுத்தி வருவது நல்லதுதான். அதே சமயம் பெண்கள் / பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் சார்ந்த பிரச்னைகளைப் பற்றிப் பேசும்பொழுது படைப்பாளிகள் காட்சிப்படுத்தும் விதத்தில் இன்னும் கவனம் செலுத்தினால் நல்லது.

வருமானம், கமர்சியல் எல்லாம் ஒருபுறம் இருப்பினும் எத்தனையோ போராட்டங்கள், பிரச்னைகளைக் கடந்து இந்த பத்து - இருபது வருடங்களாகத்தான் பெண்கள் கல்வி, வேலை, தங்களுக்கான உரிமைகள் எனப் பெறத் துவங்கி இருக்கிறார்கள். மீண்டும் இப்படியான படங்கள் தொடர்ந்து வரும் பொழுது விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பதிலாக பெண்களை வெளியே அனுப்பினால் எங்கே அவ(ர்க)ளுக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்னும் பயத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. இந்தப் பொறுப்பு படைப்பாளிகள் கையிலும் தணிக்கை தரப்பு கையிலும்தான் இப்போதைக்கு இருக்கிறது.


ஷாலினி நியூட்டன்