பெண்கள் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்... இந்திய அணியின் கனவு நனவாகுமா?



ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் தொடங்கியிருக்கின்றன. முதல்கட்டமாக குரூப் போட்டிகளும், குரூப்களில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதியிலும், பிறகு நவம்பர் 26ம் தேதி இறுதிப்போட்டியும் நடக்கவுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2009ம் ஆண்டில் இருந்து பெண்களுக்கான டி20 உலகக் கோப்பையை நடத்தி வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தப் போட்டியில் இந்திய பெண்கள் அணி ஒருமுறை கூட உலகக் கோப்பையை வெல்லவில்லை என்பது சோகம். இந்த சோகம் ஒருநாள் உலகக் கோப்பை
போட்டிகளிலும் தொடர்கின்றன.

இதுவரை நடந்த ஏழு உலகக் கோப்பை டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா ஐந்து முறையும், இங்கிலாந்து ஒருமுறையும், மேற்கிந்தியத் தீவுகள் ஒருமுறையும் கோப்பையை வென்றிருக்கின்றன. ஆனால், இந்திய அணிக்கு அந்தக் கனவு இதுவரை கைகூடவில்லை. ஆனால், இந்தமுறை நிச்சயம் கோப்பையை வெல்லும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி.

காரணம், பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் இந்திய அணியினர் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர் என்பதுதான். இப்போது இந்திய அணியில் ஆல்ரவுண்டராக விளங்கும் தீப்தி சர்மா, இடதுகை சுழலில் மாயாஜாலம் காட்டும் ராதா யாதவ், வேகப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்படும் ரேணுகா சிங் இவர்களுடன் பேட்டிங்கில் அசத்தும் கேப்டன் ஹர்மன்
ப்ரீத் கவுரும், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, முதல்நிலை வீராங்கனை ஜெமிமா ஆகியோரின் அதிரடி ஆட்டமும் இந்திய அணியின் கோப்பைக் கனவை நனவாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

இதுதவிர, கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 முத்தரப்பு தொடரில் தென்னாப்பிரிக்காவையும், மேற்கிந்தியத் தீவுகள் அணியையும் இந்திய அணி வெற்றி கொண்டது. இதனால், தென்னாப்பிரிக்காவின் சூழலும், மைதானமும் பழக்கமாகி இருப்பதால் இந்திய அணிக்கு அது கைகொடுக்கும் என்கிற நம்பிக்கையும் சேர்ந்திருக்கிறது.

ஆனாலும், இந்தியாவின் இறுதிப்போட்டி தோல்வி தொடர்வதுதான் இப்போது வருத்தம் அளிக்கும் செய்தி. கடந்த 2020ல் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் தோற்றது. இவ்வளவுக்கும் குரூப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை, இந்திய அணி வெற்றி கொண்டிருந்தது.

இதேபோல 2017ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை ஒருநாள் தொடரிலும் இறுதிப்போட்டியில் தோற்றது ஏமாற்றமளித்தது. மட்டுமல்ல, சமீபத்திய தென்னாப்பிரிக்கா தொடரில்கூட அனைத்து போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் தோற்றுப்போனது. அதனால், இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து அதை கவனமுடன் கையாண்டால் மட்டுமே உலகக் கோப்பை வசப்படும் என்கின்றனர் கிரிக்கெட் ஆர்வலர்கள்.

பாகிஸ்தானுடன் முதல் வெற்றி

இந்த உலகக் கோப்பையின் முதல்போட்டியிலேயே பாகிஸ்தானுடன் ஆட்டத்தில் சேஸிங் செய்து சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது இந்திய அணி. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா காயம் காரணமாக விலகியிருந்தபோதும் கூட ஜெமிமா பொறுப்பாக அரைசதம் அடித்து இந்திய அணியை 151 ரன் சேஸிங் செய்து உதவினார். இது டி20 பெண்கள் உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச வெற்றிகரமான ரன் சேஸிங் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

பி.கே