தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் இல்லை!



அழுத்தமாகச் சொல்கிறார் புத்தக சேகரிப்பாளர் ‘பழங்காசு’ சீனிவாசன்

பழமையான தமிழ்ப் புத்தகங்களுக்கு ஒரு சொர்க்கபுரியாகவும், அந்த பழமைக்கான ஆதாரமாக ஒரே புத்தகத்தின் பல மூல வடிவங்கள், பல பதிப்புகளின் புகலிடமாகவும் இருக்கிறது சீனிவாசனின் வீடு. சென்னை ஆவடியில் ‘பாரதி ஆய்வு நூலகம்’ எனும் இந்த மினி நூலகத்தில் மட்டுமே சுமார் 35 ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. இதில் 2000 புத்தகங்கள் ஒரிஜினல். அதாவது முதல் பதிப்புகள்.
இதிலும் பல புத்தகங்கள் 100 வருட பழமையானவை.முன்னோர்கள் விஜயநகரக் காலத்து ஆந்திரக்காரர்களாக இருக்க, சீனிவாசன் பிறந்தது தஞ்சை திருவிடைமருதூரில். அன்றைய எஸ்.எல்.சி (ப்ளஸ் ஒன்), ஐ.டி.ஐ ஃபிட்டர் படிப்பை முடித்துவிட்டு திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.

இக்காலத்தில் தன் தாய், சித்தப்பாவின் படிப்பு வாசம் சீனிவாசனுக்கும் தொற்றியது. அதற்கு ஏற்ப தொழிற்சாலை தொழிலாளர்களின் அவலங்களும் அவரைப் பாதிக்க... வாசிப்புப் பழக்கமும் கொஞ்சம் சிவப்பாக மாறத் தொடங்கியது. இந்தச் சூழ்நிலைதான் சீனிவாசனை கம்யூனிஸ்ட் கட்சி வேலைகளிலும் அதன் பல்வேறு அமைப்புகளிலும் களம் ஆட வைத்தது.

 கட்சியின் கல்வி பயிற்சி வகுப்புகளிலும் வாசிப்பு தூண்டிவிடப்பட இடதுசாரிகளின் ஆப்த வாக்கியமான வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனும் மந்திரச் சொல் சீனிவாசனையும் தொற்றிக்கொண்டது.

இதுதான் இந்தியாவைக் குறித்த பல்வேறு புத்தகங்களைத் தேடித்தேடி சீனிவாசனைப் படிக்க வைத்தது. இந்தப் படிப்பு தேடல்தான் இவ்வளவு புத்தகங்களை சீனிவாசனுக்கு அவரையும் அறியாமல் சேகரிக்க வைத்திருக்கிறது.

ஒருகாலத்தில் கல்வெட்டு ஆராய்ச்சிக்காக ‘பழங்காசு’ எனும் பெயரில் ஒரு காலாண்டிதழை நடத்தினார். இன்று அதுவே அவரது பெயரின் ஆரம்பமாகத் திகழ்கிறது. ‘பழங்காசு’ சீனிவாசன் என்றால்தான் இன்று அனைவருக்கும் தெரியும். ‘‘நான் ப்ளஸ் ஒன் படிப்பதற்குள் பல்வேறு பள்ளிக்கூடங்களில் படிக்கவேண்டிய நிலை. ஆனால், திருவாரூருக்கு பக்கத்தில் இருந்த அடியக்கமங்கலத்தில் படித்தபோது பக்கத்தில் இருந்த இன்னொரு ஊரான எரவாச்சேரி எனும் கிராமத்தின் போஸ்ட் மாஸ்டரான அப்துல் கஃபூர் வைத்திருந்த புத்தகங்கள் என்னை இன்னும் ஆச்சரியப்படுத்திக்கொண்டிருக்கிறது.

அவரிடம்தான் நான் அந்த வயதில் முதல்முறையாக கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், ராகுல சாங்கிருத்தியாயன் போன்றவர்கள் எழுதிய புத்தகங்களைப் பார்த்தேன். பொதுவாக பள்ளிக்கூட காலத்தில் பலரிடம் ஓசி வாங்கி படிக்கும் பழக்கம்தான் இருந்தது. ஆனால், படித்து முடிப்பதற்கு முந்தியே பலர் கேட்டுவிடுவார்கள். இந்தப் பிரச்னையை நான் வேலைக்குச் சேர்ந்தபிறகுதான் தீர்க்கமுடிந்தது...’’ என்று சொல்லும் சீனிவாசன், திருச்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் விவரித்தார்.‘‘திருச்சியில் இருந்தபோது கம்யூனிஸ்ட் கட்சி, தொழிலாளர்கள் என்று பழக்கம் மாறிவிட்டது.

அப்போது என்.சி.பி.எச் புத்தக நிலையம் மிகப் பிரபலம். ஒருமுறை என்.சி.பி.எச்சை அணுகினேன். தாங்கள் விற்கும் புத்தகங்களை எனக்கு 25 சதவீத கழிவில் கொடுப்பதாகவும், அந்தப் புத்தகங்களை விற்று அதில் வரும் கழிவுத் தொகையை வைத்து நான் புத்தகங்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் சொன்னார்கள்.

இது எனக்கு  தோதான ஒரு திட்டமாக அமைந்தது. அதை உடனே அமல்படுத்தினேன். புத்தகங்களை பெல் தொழிலாளர்களுக்கே விற்க ஆரம்பித்தேன். அதேபோல கட்சிக் கூட்டங்களில் எல்லாம் புத்தகக்கடையை தரையில் விரிக்க ஆரம்பித்தேன்...’’ என்று சொல்லும் சீனிவாசன் தன் சேகரிப்பில் இருக்கும் புத்தகங்கள் பற்றி பேசினார்.‘‘இந்தியாவில் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் பற்றி பேசும் கட்சியின் கல்விக் கூட்டங்களில் அதற்கு உதாரணமாக இந்தியாவில் நிலவிய தாய்தெய்வ வழிபாட்டை எடுத்து பேசுவார்கள்; புத்தகங்களிலும் ஆராய்ந்திருப்பார்கள்.

இதற்கான ஆதாரமான புத்தகமாக ‘தேவிபாகவதம்’ இருக்கும். இதையெல்லாம் தொடர்புள்ள புத்தகங்களில் அடிக்குறிப்புகளாக குறிப்பிட்டிருப்பார்கள். அதனால் படிக்கும் புத்தகங்களை மட்டுமல்ல... அதில் அடிக்குறிப்புகளாக சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் புத்தகங்களையும் தேடத் தொடங்கினேன். 1812ல்தான் திருக்குறள் முதலில் அச்சாகியது.

இது என்னிடம் இல்லை. ஆனால், 1909ல் வை.மு.கோபாலாச்சாரியால் பதிப்பிக்கப்பட்ட பரிமேலழகர் உரை என்னிடம் உண்டு. திருக்குறளுக்கு சுமார் 10 முழுமையான உரைகள் உண்டு. ஆனால், இவற்றில் சிலதான் என்னிடம் உள்ளன. அதேநேரம் பெயர் தெரியாத 4 பழைய உரைகள் என்னிடம் உண்டு. திருக்குறளுக்குப் பிறகுதான் ஓலைச்சுவடிகளிலிருந்து அச்சுக்கு போகும் நூல்கள் அதிகமாகின.  

தமிழில் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் பைபிளாகத்தான் இருக்கும். இது 1723லேயே தொடங்கிவிட்டது. பைபிளின் மொழிபெயர்ப்பு வரலாறு தமிழில் சிறப்பாக பதியப்பட்டுள்ளது. சீகன்பால்க் புத்தகம், இரேனியஸ் ஐயர் மொழிபெயர்ப்பு, மோனகன் பதிப்பு ஆகியவை என்னிடம் இருக்கின்றன. ஆனால், குரானின் முதல் தமிழ் மொழிபெயர்ப்பு மிக அண்மையில்தான் - 1949ல்தான் நிகழ்கிறது. அதுவரை அரபி அல்லது அரபித் தழிழிலேதான் குரான் இருந்தது. தமிழ் குரானை வழிபாடுகளில் பயன்படுத்துவது குறைவு என்று நினைக்கிறேன். ஆனால், படிக்கக்கூடிய அளவு இப்போதைக்கு மொழிபெயர்த்திருப்பது சிறப்புதான்.

இந்த குரான் மொழிபெயர்ப்பு வரலாற்றை ஒரு சிறு புத்தகமாக அண்மையில் எழுதி இந்த விஷயத்தை புரிந்துகொள்ள முயற்சித்திருக்கிறேன்...’’ என்று சொல்லும் சீனிவாசன், தமிழின் முதல் நாவல் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாபமுதலியார் சரித்திரம் இல்லை என்கிறார்.‘‘பிரதாப முதலியார் சரித்திரத்துக்கு முன்பே, சுமார் 20 வருடங்களுக்கு முன் ‘மதினத்துந்து ஹாஸ்’ எனும் ஒரு உரைநடை நூல் வந்திருப்பதற்கான ஆதாரங்கள் உண்டு. அதை எழுதியவர் மாப்பிள்ளை லெப்பை ஆலிம்.

இந்த ‘மதினத்துந்து ஹாஸ்’ உரைநடை 1001 இரவுகள் அரேபியக் கதைகளில் வரும் சிட்டி ஆஃப் ப்ரான்ஸ் (City of Bronz) எனும் கதையை அடிப்படையாகக் கொண்டது. பித்தளையால் கட்டப்பட்ட ஒரு நகரத்தைத் தேடி ஒரு நாயகன் வீரதீரமாகச் செல்வதுதான் இதன் கதை ஓட்டம். இந்த ஒரிஜினல் புத்தகம் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், 1960ம் ஆண்டு வந்த  ஒரு இதழில் இந்த ‘மதினத்துந்து’ நூல்  ‘தாமிரப் பட்டணம்’ எனும் கதையாக நவீன தமிழ் நடையில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் என்னிடம் இருக்கிறது. இது சுமார் 200 பக்க அளவில் இருக்கும் ஒரு உரைநடைப் புத்தகம்...’’ என்று சொல்லும் சீனிவாசன் மேலும் சில புத்தகங்கள் பற்றி விளக்கினார்.

‘‘1919 வாக்கில் ஒரு புத்தகம் வெளியானது. அதன் பெயர் ‘சச்சிதானந்த சிவம்’. எழுதியவர் பாரதியின் நண்பர் சுப்ரமணிய சிவா. இந்தப் புத்தகத்தைப் பற்றி பலருக்குத் தெரியாது. உதாரணமாக, சிவா ஜெயிலில் இருக்கும்போது அவரது மனைவி தன் கணவனைப் பார்க்க ஜெயிலுக்குப் போகிறார். மனைவி கணவனிடம் ‘வீட்டில் சோற்றுக்கு வழியில்லை. என்ன போராட்டம், இந்திய சுதந்திரம்’ என்று கேட்கிறாள். சிவா அதற்கு இப்படிப்பட்ட ஒரு புத்தகத்தை எழுதி அதில் வரும் ராயல்டியை வைத்து ஜீவனத்தை நடத்திக்கொள் என்று சொல்வதுபோல இந்தப் புத்தகத்தின் வரலாறு பல புத்தகங்களில் விரவிக்கிடக்கிறது.

இந்தப் புத்தகத்தை அண்மையில் ஒரு பதிப்பகம் மூலம் மறுபதிப்பாக கொண்டுவந்திருக்கிறேன்...’’ என்று சொல்லும் சீனிவாசன், வெ.சாமிநாத சர்மா எழுதிய 80 புத்தகங்களும் தன்னிடம் இருப்பதாகச் சொல்கிறார்.

இத்தோடு இராமாயணத்தை எடுத்துக்கொண்டால் இராமாயணக் கும்மி, நலுங்கு இராமாயணம், இராமாயண வெண்பா, தக்கை இராமாயணம் முதல் வாலி எழுதிய அவதாரப் புருஷன் வரையில் தன்னிடம் இருப்பதாகக் கூறுகிறார். மொத்தத்தில் சீனிவாசனின் புத்தகச் சேகரிப்பு தமிழின் பொக்கிஷம் என்றே சொல்லவேண்டும்.

செய்தி: டி.ரஞ்சித்

படங்கள்: ஆர்.சந்திரசேகர்