ஃபின்லாந்தில் கல்விமுறை எப்படியிருக்கிறது..?



விவரிக்கிறார்கள் சென்னை கல்லூரி மாணவர்களும் பேராசிரியர்களும்

ஃபின்லாந்து நாட்டில் உள்ள ஹூமாக் பல்கலைக் கழகமும் (Humak University), லாரியா பல்கலைக் கழகமும் (Laurea University) அந்நாட்டின் உயர் கல்வித்துறை அமைச்சரோடு இணைந்து ஒரு காரியத்தைச் செய்துள்ளது.வேறொன்றுமில்லை. இந்தியாவிலுள்ள இரு கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து மாணவ பரிமாற்றங்களை அரங்கேற்றியுள்ளது.
அப்படி ஃபின்லாந்து தேர்வு செய்த இந்திய கல்வி நிறுவனங்களில் ஒன்று, சென்னையில் இருக்கும் லயோலா கல்லூரி. மற்றொன்று, ஒரிசா மாநிலத்தில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (KIIT).

இதன்படி ஃபின்லாந்திலிருந்து மாணவர்கள் சிலர் சென்னை லயோலா கல்லூரி வந்திருந்தார்கள். லயோலா கல்லூரி மாணவர்கள் சிலர் ஃபின்லாந்து சென்றிருந்தார்கள். அந்த மாணவர்களுடன் லயோலா கல்லூரியின் பேராசிரியர்கள் தீபக்நாதன், பிரான்சிஸ் மற்றும் அல்ஃபோன்ஸ் ரெத்னா மூவரும் இடம் பெற்றனர்.இணையதளம் மற்றும் டிஜிட்டல் பயன்பாட்டில் மாணவர்களை வழிகாட்டுதல் மற்றும் இளைஞர்களுக்கான இணையதள வேலைகளில் அவர்கள் உருவாக்கும் விஷயங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கும் எவ்வாறு வழிகாட்டுகிறது என்பதை அறிவதற்காகவே இந்த மாணவ பரிமாற்றம்.

‘‘அந்த வகையில் ஃபின்லாந்தில் இருந்து வந்த மாணவர்கள் ஆட்டிசம் குறைபாடு குறித்த விஷயங்களையும் அதற்கான வழிகாட்டு முறைகளையும் அறிந்து சென்றனர்.
இங்கிருந்து சென்ற நாங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான ஃபின்லாந்து நாட்டின் கட்டமைப்புகள், டிஜிட்டல் முறையில் அவர்களுக்கான செயல்பாடுகள் குறித்து அறிந்து வந்தோம்...’’ என பேச ஆரம்பித்தார்கள் லயோலா கல்லூரி எம்.எஸ்.டபிள்யூ மாணவர்களான அபர்ணாவும் ஜெர்ரியும்.

‘‘எம்.எஸ்.டபிள்யூவில் நாங்கள் ஹியூமன் ரைட்ஸ் ஸ்பெஷலைசேஷனை படிக்கிறோம். டிஜிட்டல் அக்ஸசபிளிட்டியில் ஃபின்லாந்து நாட்டின் செயல்பாடுகளையும், நமது நாட்டில் எப்படி உள்ளது என்பதையும் மேஜராக ஃபோகஸ் செய்தோம். இதில் எந்த அம்சங்களை நமது நாட்டில் உடனடியாக செயல்படுத்த முடியும் என்கிற விஷயத்தை ஸ்டடி செய்தோம்.
முதலில் நாங்கள் பார்த்தது வெப் அக்ஸசபிளிட்டி. அதாவது அக்சஸ் டு இன்ஃபர்மேஷன். இது மிக முக்கியமான விஷயம் என்பதால், குறிப்பாக அரசு வெப்சைட்டுகள் மாற்றுத் திறனாளிகளுக்கு எந்த அளவு பயன்பாட்டில் உள்ளது என்பது முக்கியமானதாக  இருக்கிறது.

ஃபின்லாந்தில் இதற்கு சால்வியா என்கிற ஸ்பெஷல் டூலை பயன்படுத்துகிறார்கள். டிஜிட்டல் யூத் வொர்க்கிலும், யூத் வித் டிசபிளிட்டிக்கு அவர்கள் என்ன இம்ப்ளிமெண்ட் செய்கிறார்கள் என்பதையும் அறிந்து கொண்டோம்.அதேபோல ஃபிஸிக்கல் அக்ஸசபிளிட்டிக்கும் அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

பொது இடங்களில் யுனிவர்சல் டிசைனுடன் கூடவே இன்குளூசிவ் டிசைனையும் செய்திருக்கிறார்கள். சில இடங்களில் தேவையானதை நாமே எடுத்து பயன்படுத்துகிற ரெட்ரோ அமைப்புகளும் இருக்கின்றன...’’ என்றவர்களைத் தொடர்ந்து மாணவர்களை வழிநடத்திய சமூகப்பணித்துறை துணைப் பேராசிரியர் தீபக்நாதன் பேச ஆரம்பித்தார். இவர் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி.

‘‘ஃபின்லாந்து நாட்டில் ஃபின்னிஷ், ஸ்வீடிஷ் மற்றும் ஆங்கில மொழிகள் மக்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அங்கிருந்த ஒவ்வொரு நாளுமே பல்வேறு பிரமிப்பான விஷயங்களை  சந்தித்துக் கொண்டே இருந்தோம். அதிலும் என்னைப்போன்ற மாற்றுத் திறனாளிகள் எங்கு செல்வதென்றாலும் ரிலாக்ஸ்டாக பார்க் சென்று டீ குடித்துவிட்டு திரும்புவதுபோன்ற ஒரு உணர்வே இருந்தது.

நாம் மட்டும் வாழ்ந்தால் போதும் என்கிற மனநிலை அந்த நாட்டில் சுத்தமாக இல்லை. பொது சமூகமாகவே குழந்தைகளையும், முதியவர்களையும், மாற்றுத் திறனாளிகளையும் பார்க்கிறார்கள். சின்னச் சின்ன விஷயங்களைக்கூட அனைவரின் பயன்பாட்டுக்காகவும் உருவாக்கி வைத்துள்ளார்கள்.

அங்கு எந்தவொரு இடத்துக்கும் செல்ல முடியாமல் நான் தவித்ததேயில்லை. அவர்களின் கட்டமைப்புகளைப் பார்க்கும்போதும், யோசிக்கும்போதும் பிரமிப்பும் மலைப்புமே ஏற்படுகின்றன. 

ஒரு கட்டடத்தில் நான்கு படிகள் இருந்தால்கூட அருகில் ஒரு லிஃப்ட் வசதி இருக்கிறது. ரயிலில் இருந்து வெளியேறும் வழியில் ஒரு பட்டன் இருக்கும். அதை அழுத்தினால் ரயிலுக்கும் நடைமேடைக்கும் உள்ள இடைவெளியை இணைக்கும் தகடு வெளியே வருகிறது. அதைப் பயன்படுத்தி வீல்சேரில் அமர்ந்தே எளிதாக வெளியில் வந்துவிடலாம்.

கழிவறை பயன்பாட்டையும் சக்கர நாற்காலியில் இருப்பவனின் நிலையில் இருந்து யோசித்து வசதியாக செய்து வைத்திருக்கிறார்கள். படிக்கட்டுகள் இருக்கும் ஒருசில இடங்களில் அதற்கென பயன்படும் ஸ்லைடிங் மாதிரியான தனி வீல்சேர்கள் இருந்தன. அதில் அமர்ந்தால் மேலே நம்மை ஏற்றவும் இறக்கவும் உதவி ஆட்களும் அங்கேயே இருக்கிறார்கள்.டிக்கெட் கவுண்டர் அக்சஸ் கூட உயரம் குறைந்தவர்கள், வீல்சேர் பயன்பாட்டாளர், சைகை மொழி பேசுபவர்கள், ப்ரெய்லி பயன்பாட்டாளர்கள் என எல்லோருக்குமானதாக இருக்கிறது.

தவழ்ந்து செல்லும் நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் கழிவறைக்குள் தங்கள் உடையை கழற்றி வைத்துவிட்டே பயன்படுத்தும் நிலை என்பதால், அவர்கள் வசதியாக அமர்ந்து உடைமாற்ற கழிவறைக்குள் தனி அறையே உள்ளது. இந்த வசதிகளும் கட்டமைப்புகளும் எப்போது நமது நாட்டுக்கு வரும் என்ற உணர்வே அங்கிருந்த நாட்களில் எனக்கு ஏற்பட்டது...’’ என்ற தீபக்நாதனைத் தொடர்ந்தார் பேராசிரியர் ஃபிரான்சிஸ்.

‘‘நமது நாட்டில் குழந்தைகளை கைகளில் எடுத்துச் செல்வதுபோல ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளை கைகளில் எடுத்துச் செல்ல முடியாது. இதற்கென அந்த நாடுகளில் தனி சட்டமே இருக்கிறது. குழந்தைகளுக்கான ஸ்ட்ராலரில் (stroller) வைத்தே தள்ளிக்கொண்டு செல்ல வேண்டும். குழந்தையோடு வருபவர்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் பயணிக்க அனைத்து இடத்திலும் டிராம் வசதிகள் வீட்டுக்கு அருகாமையிலேயே இருக்கின்றன.

டிராம், பஸ், டிரெயின் மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்து பயன்பாட்டை தனித் தனியாக அங்கு ஸ்டடி செய்தோம். இதில் நார்மலில் தொடங்கி, முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், வளர்ப்புப் பிராணிகளோடு (dog) வருபவர்கள், சைக்கிளில் வந்து ரயிலில் ஏறி பயணிப்பவர்கள், குழந்தையுடன் வருபவர்கள் என அனைவருக்கும் போக்குவரத்து அமைப்புகள் ஏற்றதாகவே இருக்கிறது. வீல்சேர் பயன்பாட்டில் உள்ளவர்கள் தங்கள் வீல்சேருடன் பாதுகாப்பாக கம்பிகளைப் பிடித்துக் கொண்டு உட்கார தனி இடம் பெரிய அளவில் வசதியாக இருந்தது.

குழந்தைகளை ஸ்ட்ராலரோடு வைக்க தனி இடம், சைக்கிள் பார்க் செய்ய தனி இடம், வளர்ப்புப் பிராணி உள்ளவருக்கு தனி இடம் என்றே ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் பாதுகாப்பாக இறங்குவதையும், ஏறுவதையும் மானிட்டரிங் செய்தே போக்குவரத்தை இயக்குகிறார்கள்...’’ என்கிறார் ஃபிரான்சிஸ். இவர்களோடு கல்விப் பயணத்தில் இணைந்த மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க் துணைப் பேராசிரியர் அல்ஃபோன்ஸ் ரெத்னா, உற்சாகத்துடன் தன் பயணத்தை அசைபோடுகிறார்.

‘‘அந்த நாட்டில் செயல்படும் ஊடி நூலகம் (Oodi Central Library) பிரமிப்பை ஏற்படுத்தியது. நூலகம் என்றால் புத்தகங்கள் மட்டுமே நினைவுக்கு வரும். புத்தகங்களைத் தேடி வாசிப்பவர்கள் மட்டுமே நூலகத்துக்கு செல்பவர்களாகவும் இருப்பார்கள். ஆனால், ஃபின்லாந்து நாட்டில் இருந்த ஊடி லைப்ரரி எல்லோருக்குமானதாக இருந்தது. அந்த நாட்டில் செயல்முறை கல்விக்குத்தான் முன்னுரிமை. ‘எனக்கு சமையல் கலை நன்றாக வரும். நான் குறிப்பிட்ட ஒரு ரெசிபியை கற்றுத்தர நினைக்கிறேன்’ என்றால், அதற்கும் அந்த லைப்ரரியில் இடமுண்டு.
அதுகுறித்த அறிவிப்பை லைப்ரரி நிர்வாகமே பொறுப்பேற்று செய்துவிடும். ரெசிபி கற்க விருப்பம் இருப்பவர்கள் குறிப்பிட்ட அறையில் குறிப்பிட்ட நேரத்தில் இணையலாம்.

அதேபோல் கிராஃப்ட் வொர்க் குறித்த கற்றல், தையல் கலை குறித்த கற்றல், குழந்தை வளர்ப்பு குறித்த கலந்தாய்வு கூட்டங்கள், அதற்கான பயிற்சிகள் (குழந்தை வளர்ப்பு பயிற்சியில் ஆண்களும் இணைகிறார்கள்), நண்பர்களின் கூடுகை, விரும்பிய திரைப்படத்தை வெளியிட்டு திரைவிமர்சனம் செய்ய கலந்தாய்வு கூட்டம் நடத்தும் தியேட்டர் ஹால், இசை குறித்த தேடல் உள்ளவர்களுக்கு மியூசிக் கம்போஸிங் ஸ்டூடியோ, தியேட்டர் ஆர்ட்ஸ் என்னும் நடிப்பு பயிற்சிக்கான இடம், நடனப் பயிற்சிக்கான கோரியோகிராஃபி ஸ்டூடியோ, விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இன்டோர் விளையாட்டுகளுக்கான அரங்கம், வயதானவர்கள் இணைந்து பொழுதைக் கழிப்பதற்கான இடம்... என அனைத்துக்கும் ஊடி லைப்ரரிக்குள் தனித்தனியாக வசதி இருக்கிறது.

இதைத் தாண்டி புத்தகப் பிரியர்களுக்கும் புத்தகங்கள் அனைத்துப் பிரிவுகளிலும் நிறைந்துள்ளன. மொத்தமாக இந்த நூலகத்தைப் பார்க்கும்போது பிரமிப்பே மிஞ்சியது...’’ என்கிறார் அல்ஃபோன்ஸ் ரெத்னா.

மகேஸ்வரி நாகராஜன்