வைரல் சுட்டி... பாட்டுக் குட்டி!



ஸ்டேஜ்ல நான் பாடும்போது சூப்பரா டான்ஸும் ஆடுவேன்!

புகைப்படங்களைப்  பார்த்ததும் ‘அட! இவர் குட்டி தேவதை மேக்னா சுமேஷ்தானே...’ என்பவர்களுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்!யெஸ். இன்றைய வைரல் சிறுமி இவர்தான்.தனுஷ் நடிப்பில் வரவிருக்கும் ‘வாத்தி’ படத்தில் இடம்பெற்ற ‘ஒருதல காதல தந்த... இந்த தறுதல மனசுக்குள் வந்த... காதலிக்க கைடு இல்ல சொல்லித்தர வா வாத்தி...’ என்ற பாடலை தன் க்யூட் வாய்ஸில் பாடிப் பதிவேற்றி மேக்னா சுமேஷ் வெளியிட்ட வீடியோ, சோஷியல் மீடியாக்களில் வைரல்.

மேக்னாவின் இந்த வீடியோவை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தனுஷுக்கு டேக் செய்ய, பதிலுக்கு நடிகர் தனுஷ் ‘this is how the angel sound’ என கமெண்ட் செய்திருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷுடன் பெயரிடப்படாத படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் மேக்னா.‘‘இயக்குநர் மகேஸ் அங்கிள்தான் இந்த மூவியோட டைரக்டர். அவர்தான் என்னை ஜிவி அங்கிளோடு நடிக்க வச்சுருக்காரு!

நான் மலையாள சேனல் ஒன்றில் ‘டாப் சிங்கர்’ போட்டில ரெண்டு வருஷம் டிராவல் பண்ணிருக்கேன்! அப்ப மலையாளத்தின் டாப் சிங்கர்ஸ் பலரோட பாட்டையெல்லாம் கேட்டிருக்கேன்.
சுஜா அம்மைக்கும் அவரோட பொண்ணு ஸ்வேதா சேச்சிக்கும் ஸ்வீட் ஹனி வாய்ஸ். மெலடியா பாடுவாங்க. ஜானகி அம்மைல பாதியும் சுசிலா அம்மைல பாதியுமா சித்ராம்மா மிக்ஸ்டு. தாஸ் ஏட்டன் பாடுறது ஒரு ஹெவன் மாதிரி இருக்கும். அவரோடது பேஸ் வாய்ஸ். கடலுக்குள் போயி முத்து எடுக்குற மாதிரி...’’ மலையாளம் கலந்து மழலை மாறாமல் மேக்னா பேசும் தமிழை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

‘‘ஸ்டேஜ்ல நான் பாடும்போது சூப்பரா டான்ஸும் ஆடுவேன்! எனக்கு அம்மாதான் டான்ஸ் டீச்சர். மியூசிக் டைரக்டர்ஸ்ல ஏ.ஆர்.ரஹ்மான் சார் பிடிக்கும். அப்புறம் வித்யாசாகர் அங்கிள் ரொம்ப ரொம்ப சூப்பர். அவர் மியூசிக் கேட்டா அப்படியே எனக்கு ப்ளட் உறஞ்சுரும்! மலையாளத்தில் ஷ்யாம் அங்கிளும், தேவராஜன் மாஸ்டரும் என் ஃபேவரைட்...’’ என்ற மேக்னா, ஜி.வி.பிரகாஷுடன் நடிக்கும் படத்தில் என்ன கேரக்டர் என்பதைச் சொல்ல மறுத்துவிட்டார்.

‘‘அது சஸ்பென்ஸ்! ஆனா, ஜி.வி. அங்கிளும் நானும் இப்ப ஃப்ரெண்ட்ஸாகிட்டோம். ஒருநாள் அவர்கிட்ட ‘வாத்தி’ படப் பாட்டையும், ‘அசுரன்’ல ‘எள்ளுவய பூக்கலையே...’ பாட்டையும் பாடிக் காமிச்சேன். அங்கிள் ரொம்ப ஹேப்பியாயிட்டாரு...’’ என்ற மேக்னாவுக்கு ‘ரா... ரா... சரசுக்கு ரா ரா...’ பாடல் புகழ் பின்னி கிருஷ்ணகுமார்தான் பாட்டு சொல்லித் தரும் குருவாம். மேக்னாவுக்கு மலையாளம், தமிழ் தவிர இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கில மொழிகளிலும் பாடல்கள் பாடத் தெரியுமாம்.

தன் மகள் மேக்னாவை மகிழ்ச்சி  பொங்க பார்த்தபடியே பேசத் தொடங்கினார் சுமேஷ். ‘‘கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிப்பெரியார்தான் எங்களுக்கு சொந்த ஊர். என் மனைவி தர்ஷனா ஐடில வேலை பார்க்கறாங்க. நான் வங்கில. வேலைக்காக பெங்களூர்ல வசித்தோம். எங்களுக்கு மேக்னா தவிர மிஹாரா என்கிற ஒரு வயது பெண் குழந்தையும் உண்டு. இப்ப மேக்னாவுக்காக என் மனைவி தர்ஷனா வேலையை விட்டுட்டாங்க.
 
எல்லாக் குழந்தைகள் மாதிரி மேக்னாவும் இரண்டு வயதில் கார்ட்டூன் சேனல்தான் பார்க்க ஆரம்பிச்சா. நான் எதாவது ஒரு பாடலை ஹம் பண்ணினா விளையாடிக்கிட்டே மேக்னா அதைக் கவனிச்சுப் பாட ட்ரை பண்ணுவா.கொஞ்ச நாள்ல கார்ட்டூனில் வருகிற ரைம்ஸ், மியூசிக் எல்லாத்தையும் அப்சர்வ் செய்து அப்படியே ஹம் பண்ண ஆரம்பிச்சா.

உடனே பாட்டு கத்துக்க வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு கர்நாட்டிக் மியூசிக் டீச்சரிடம் அனுப்பினோம். நான்கு மாதம் சங்கீதம் கத்துக்கிட்டா. அப்ப பெங்களூர்ல நாங்க வசிச்ச ஃப்ளாட்ல இருந்த மலையாளி அசோஸியேஷன்ல ஸ்டேஜ் ஷோ நடத்தினாங்க. அவ்வளவு பெரிய கூட்டத்துக்கு முன்னாடி மேக்னா பாடினா. கொஞ்சம் கூட ஸ்டேஜ் ஃபியர் இல்ல. அவளோட இந்த ஆர்வத்தை ஊக்குவிக்க முடிவு செய்தோம்.

அப்ப மேக்னாவுக்கு நாலு வயசு. ரியாலிட்டி ஷோல பங்கேற்க ஆறு வயசாவது ஆகியிருக்கணும். ஆனாலும் சும்மா போய் பார்க்கலாம்னு கேரள தனியார் சேனல் நடத்தின சிங்கர் ஷோ ஆடிஷனுக்கு போனோம்.ப்ரோக்ராம் நடக்கவிருந்த மேடைல மைக் டெஸ்ட்டிங், கேமரா பொசிஷன் எல்லாம் சரியா இருக்கானு செக் பண்ணிட்டு இருந்தாங்க. அப்ப ஒரு குழந்தையை வைச்சு பரிசோதிக்கலாம்னு பார்த்தப்ப அவங்க கண்ல மேக்னா தட்டுப்பட்டா.

மேக்னா கொஞ்சம் கூட தயங்காம பொசிஷன் சரியா வர்ற வரைக்கும் திரும்பத் திரும்ப பயமே இல்லாம அவங்க ஓகே சொல்ற வரைக்கும் கேஷுவலா பாடினா. ஆக்சுவலா அப்ப கேமரா ஓடிட்டிருந்தது. ஷோவின் இயக்குநர் மேக்னாவின் க்யூட்னஸ் பார்த்து உடனே செலக்ட் பண்ணினார்.  அந்த ரியாலிட்டி ஷோல மேக்னா பாடினா. டாப் சிங்கர் சீசன்-2வில் மேக்னா நுழைந்தது இப்படித்தான் எனச் சிரித்தவர் அந்த நிகழ்ச்சியின் யங்கஸ்ட் கன்டென்டர் மேக்னாதான் என புன்னகைக்கிறார்.

‘‘மேக்னாவுக்காக இப்ப நாங்க கோவைக்கு ஷிஃப்ட் ஆகிட்டோம். அவளுக்காக எங்க நேரத்தை அதிகமா செலவிடறோம். கோவை ஸ்கூல்ல மேக்னா 2ம் வகுப்பு படிக்கிறா.
மலையாள டாப் சிங்கர் ஷோவுக்கு ஜட்ஜ் ஆக வந்த கேரளாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரான தீபக்டேவும் டைரக்டர் தரணியும் மேக்னாவின் திறமையைப் பார்த்து
ஆச்சர்யப்பட்டாங்க.

அவங்க வழியா டைரக்டர் மகேஸ் சாருக்கு தகவல் போய் அவர் மேக்னாவைப் பார்த்து உடனே தன் படத்துல நடிக்க ஒப்பந்தம் செய்தார். மேக்னா படிப்பு பாதிக்காத நாட்கள்ல சென்னைல ஷூட் நடத்தறார். மேக்னா படிப்புலயும் படு சுட்டி. கோவை டூ சென்னை பயண நேரத்துல ஹோம் ஒர்க் செய்யறா. டீச்சர்ஸ் ஃபுல் சப்போர்ட்டா இருக்காங்க...’’ பெருமையாகச் சொல்கிறார் சுமேஷ்.

மகேஸ்வரி நாகராஜன்