வாட்டர் பாட்டில்!



முகத்தில் சுளீர் என கதிரவன் அடித்ததும் எழுந்தான் அழகன். அவன் மனம் ஒரு நிலையின்றி அலைபாய்ந்தது. குழப்பத்துடன் திரிந்தான். என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் ஒரு காலில் சாக்ஸ் அணிந்தவன், மற்றொரு காலில் சாக்ஸ் அணியாமல் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தான்.பார்க்கிங்கில் பைக்கை அநிச்சையாக நிறுத்தியவன், சாவியை எடுக்க மறந்து ஆபீசுக்குள் நுழைந்தான். ‘‘அழகா... அழகா...’’ என திரு அவனை அழைத்தான். உயிர் நண்பன். அவன் முணுமுணுத்தால்கூட அழகன் செவியில் விழும்.
இன்று அவன் சப்தமிட்டு அழைத்தும் அழகன் செவியில் அது விழவேயில்லை.

தன் போக்கில் நடந்து கேபினுக்குள் சென்று அமர்ந்தான். சிந்தனைகள் அலைமோத இருப்புக் கொள்ளாமல் தன் கேபினில் இங்கும் அங்குமாக நடந்தான்.
இன்டர்காம் ஒலித்தது. எடுத்தான். ‘‘அழகா... கம் டு மை கேபின்...’’ஒலித்தது ஹெச்.ஆரின் குரல். அப்பொழுதுதான், தான் அலுவலகத்துக்கு வந்ததே அழகனுக்கு உரைத்தது. எதற்காக ஹெச்.ஆர். அழைக்கிறார்... குரலும் கடுமையாக இருக்கிறதே... அலறியடித்து ஹெச்.ஆர். கேபினை நோக்கிச் சென்றவன் எதிரில் வந்த திருவைப் பார்த்தான்.
‘‘ஹாய் திரு...’’‘‘என்னை உனக்கு நினைவுல இருக்கா..?’’ ஆச்சர்யத்துடன் திரு கேட்டான்.

‘‘என்னடா இப்படிக் கேட்கற..?’’

‘‘பின்னே... பார்க்கிங்குல இருந்து உன்னை கூப்பிடறேன்... கண்டுக்காம போன...’’
‘‘அது வந்து...’’ அழகன் தயங்கினான். ‘‘சாரி... இரு... வந்து சொல்றேன்...’’
ஹெச்.ஆரின் கேபின் கதவைத் தட்டிவிட்டு அழகன் நுழைந்தான். ‘‘மார்னிங் சார்...’’
‘‘ம்...’’ என்ற ஹெச்.ஆர்., அழகனை உற்றுப் பார்த்தார். ‘‘வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்..?’’
‘‘சார்...’’

‘‘உங்க போக்கே சரியில்லை... நானும் கவனிச்சுகிட்டே இருக்கேன்...’’
‘‘சார்...’’ தயங்கிய அழகன், தன் பிரச்னையைச் சொன்னான்.‘‘இதெல்லாம் ஒரு ப்ராப்ளமா..? லுக்; நமக்கு ஆயிரம் பிரச்னைகள் இருக்கும்... அதெல்லாம் வேலைல எதிரொலிக்கக் கூடாது... புரியுதா..?’’ ‘‘சாரி சார்...’’ அழகன் தன் கேபினுக்கு திரும்பினான். தன் அலைக்கழிப்பைத் தள்ளி வைத்துவிட்டு வேலை பார்க்கத் தொடங்கினான்.
மதியம் உணவருந்த திருவுடன் கேண்டீனுக்கு அழகன் வந்தான். ‘‘என்னடா பிரச்னை..?’’ சுற்றி வளைக்காமல் திரு கேட்டான்.

அழகன் நிமிர்ந்தான்.இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு நண்பரின் பிறந்தநாள் விழாவில் அழகன் கலந்து கொண்டான். அங்கு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
உணவுடன் சேர்ந்து தண்ணீர் பாட்டிலும் வைக்கப்பட்டது. உணவு அருந்திவிட்டு தண்ணீர் பாட்டிலைக் கொண்டுபோய் குப்பைத் தொட்டியில் போட்டான்.
அங்கே நின்றிருந்த சிறுவன், குப்பைத் தொட்டியில் இருந்த பாட்டில்களை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்.

‘பாவம்... இந்தப் பையனுக்கு யாருமில்ல போல... பேப்பர் கடைல இந்த பாட்டிலைப் போட்டு பணம் வாங்கிப்பான் போல...’  என்று நினைத்த அழகன் பெருமூச்சுடன் நகர்ந்தான்.
‘‘இதுக்காகவா ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க..?’’ தோளைக் குலுக்கியபடி திரு கேட்டான்.‘‘இன்னும் முடியலை... இரு...’’ அழகன் தொடர்ந்தான்.பிறந்தநாள் விழா முடிந்த மறுநாள் இரவு வழக்கம் போல் ஆபீஸிலிருந்து அழகன் திரும்பி வரும்போது அதே சிறுவனையும் சந்தித்தான். அவனிடம் இருந்த அந்த தண்ணீர் பாட்டிலையும் பார்த்தான். பார்த்த
வுடன் அதிர்ந்து போனான். காரணம், தெருவோரத்தில் இருக்கும் குழாயில் இருந்து தண்ணீரைப் பிடித்துப் பிடித்து அட்டைப் பெட்டியில் அந்த சிறுவன் வைத்துக் கொண்டிருந்தான். அதை மற்றொருவர் வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார்.

அழகனுக்கு ஒன்றும் புரியவில்லை. மறைவாக நின்றபடி அவர்களைக் கவனித்தான். அவர்கள் புறப்பட்டனர். பின்தொடர்ந்தான்.சிறுவனுடன் இருந்தவர் அட்டைப் பெட்டியில் இருந்த தண்ணீர் பாட்டில்களை ஒவ்வொரு கடையிலும் கொடுத்துக் கொண்டிருந்தார். ‘‘இதை யோசிச்சுதான் குழம்பித் தவிக்கறியா... உன்னை எல்லாம் திருத்தவே முடியாது...’’ அலுத்தபடி திரு நகர்ந்தான்.
அழகன் ஒன்றும் சொல்லவில்லை. உணவருந்திவிட்டு தன் கேபின் வந்தவன் வேலையில் கவனம் செலுத்தினான்.

நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் அழகனும் திருவும் மதியம் உணவருந்த அலுவலகத்துக்கு அருகிலிருந்த உணவகத்துக்குச் சென்றனர். சாப்பிட்டுவிட்டு சாலையைக் கடக்கும்போது அந்தக் காட்சி அவர்கள் கண்களில் பட்டது.நடந்து வந்து கொண்டிருந்த ஒரு முதியவர் திடீரென மயங்கி விழுந்தார்.யாருமே அந்த முதியவரைப் பொருட்படுத்தவில்லை. பதறிய அழகனும் திருவும் ஆட்டோவை நிறுத்தி அவரை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.‘‘சுகாதாரமற்ற குடிநீரைக் குடிச்சிருக்கார்... அதான்...’’ என்றார் முதியவரைப் பரிசோதித்த மருத்துவர்.
அழகனும் திருவும் ஒருவரைஒருவர் பார்த்துக்கொண்டனர்.

‘‘ஆக்சுவலா இன்னிக்கி மட்டுமே இது பனிரெண்டாவது கேஸ்... எல்லாமே தண்ணீர் பிரச்னைதான். அதனால வாந்தி, பேதி, மயக்கம்... சிகிச்சைக்கு வந்தவங்கள்ல பெரும்பாலானவங்க ஸ்கூல்ல படிக்கிற சின்னப் பசங்க... அதே குடிநீரை தொடர்ந்து பருகினாங்கனா உயிருக்கே ஆபத்தா முடியும்... அரசு முதல் டாக்டர்ஸ் வரை தொடர்ந்து குடிநீர் தொடர்பா பிரசாரம் பண்றோம்... மக்கள் கேட்டாதானே..?’’ டாக்டர் சொல்லச் சொல்ல திருவின் கரங்களை அழுத்தமாக அழகன் பற்றினான்.

இருவரது மனக்கண்ணிலும் வாட்டர் பாட்டிலில் குழாய் நீரை நிரப்பிய சிறுவன் வந்து போனான்.மயக்கம் தெளிந்த முதியவர் இருவருக்கும் நன்றி சொன்னார்.
‘‘காய்ச்சிய குடிநீரை குடிங்க...’’ அழகன் அவரை ஆட்டோவில் அனுப்பினான்.‘‘அழகா... இப்ப எனக்கு சீரியஸ்னெஸ் புரியுது...’’ திரு சொன்னான். ‘‘உடனே இதை அரசின் கவனத்துக்கு கொண்டு போகணும்...’’‘‘அதைவிட மக்களை விழிப்படைய வைக்கணும்...’’ ‘‘அரசு விளம்பரப்படுத்தியும் திருந்தாத மக்களை எப்படி விழிப்படைய வைக்கப் போற..?’’
‘‘என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு. இது சக்சஸ் ஆகும்னு நினைக்கறேன்...’’‘‘ஐடியாவை சொல்லு அழகா...’’

‘‘எல்லா ஃபங்ஷன்லயும் மக்கள் இப்ப உணவோட வாட்டர் பாட்டிலை வைக்கிறாங்க இல்லையா..?’’
‘‘ஆமா...’’‘‘அப்ப வாட்டர் பாட்டிலின் ஆரம்பப் புள்ளி ஃபங்ஷன்தான் இல்லையா..?’’‘‘ம்...’’ திரு தலையசைத்தான்.‘‘ஸோ, எல்லா ரெசார்ட், ரெஸ்டாரண்ட், மேரேஜ் ஹாலுக்கு போய் ஃபங்ஷன் நடக்கும்போது ஃப்ரீயா ஒரு கேம் ஷோ நடத்த அனுமதி கேட்கலாம்...’’‘‘கேம் ஷோவா... என்ன சொல்ற அழகா..?’’‘‘பொறுமையா கேளு...’’அழகன் சொல்லச் சொல்ல திருவின் முகம் மலர்ந்தது.

‘‘இதுதான் கேம்... ஓகேவா..?’’
ஒரு திருமண மண்டபத்தின் சாப்பாட்டு ஹாலில் நின்றபடி அழகன் சொன்னான். ‘‘யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லையே... கேமை ஆரம்பிக்கலாமா..?’’ திரு கேட்டான்.பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் உற்சாகத்துடன் தலையசைத்தார்கள்.‘‘வாட்டர் பாட்டிலை திறந்து தண்ணீர் குடிங்க... குடிச்சு முடிச்சுட்டு அந்த மூடியை நசுக்கி வாட்டர் பாட்டிலுக்குள்ளயே போடுங்க. யார் அதிகமான மூடியை நசுக்கி பயன்பட முடியாதபடி செய்யறாங்களோ அவங்களுக்கு பரிசு காத்திருக்கு...’’ அழகன் விளக்கினான்.பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் உற்சாகத்துடன் இந்த விளையாட்டில் பங்கேற்றனர்.

‘‘பிரமாதமான ஐடியா அழகா... மூடியை நசுக்கறதால வாட்டர் பாட்டிலை அப்படியே யூஸ் பண்ண முடியாது. ரீசைக்கிள்தான் செய்யணும்... சூப்பர் டா...’’ திரு காதைக் கடித்தான்.
அழகன் புன்னகைத்தான்.மெல்ல மெல்ல திருமண மண்படங்கள், ரெஸ்டாரெண்டுகள், ரிசார்ட்டுகள்... என அனைத்து இடங்களிலும் இந்த கேம் ஷோ பரவியது.
இதைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் உற்சாகத்துடன் அழகனுடன் கைகோர்த்தார்கள்.

‘‘வாழ்த்துகள் அழகா...’’ திரு ஓடிவந்து அழகனைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டான்.
‘‘என்ன திரு...’’
‘‘இங்க பாரு...’’
டிவியை ஆன் செய்தான் திரு. செய்தி சேனலில் அந்த ஆண்டுக்கான சிறந்த இளைஞர் விருதை அழகனும் திருவும் பெறுவதாக அரசு வெளியிட்ட அறிவிப்பு, பிரேக்கிங் நியூஸாக கண்சிமிட்டியது!

- ஆர்.மோகனா