தன்னம்பிக்கை



ஒற்றைக்கையில்  33 வருடங்களாக பழ வியாபாரம் செய்யும் தள்ளுவண்டிக்காரர்

நேந்திரம் பழம்... செவ்வாழைப்பழம்... கேரள ரஸ்தாளி..!’’
‘‘நேந்திரம் பழம்... செவ்வாழைப்பழம்... கேரள ரஸ்தாளி..!’’
சராசரியாக நாம் அன்றாடம் தெருவோரங்களில் காணும் பழவண்டிதான். அதில் ரெக்கார்டு செய்யப்பட்ட ஸ்பீக்கரிலிருந்துதான் அந்தக் குரல் தெருவெங்கும் எதிரொலிக்கிறது.  

அந்த பழவண்டியை வேகமாகத் தள்ளிக்கொண்டு நடக்கிறார் பழவியாபாரி.
சாதாரணமாகப் பார்த்தால் வழக்கமான தள்ளுவண்டிதான், ஒரு பழவியாபாரிதான் என்று கடந்துவிடுவோம்.கொஞ்சம் நுட்பமாகப் பார்த்தாலோ, அவரிடம் சென்று விலைகொடுத்து பழம் வாங்கினாலோ அவருக்குள் எப்படியான செய்தி இருக்கிறது, அதற்குள் எப்படியான தன்னம்பிக்கை மிளிர்கிறது என்று அதிர்ந்துவிடுவோம்.

ஏனென்றால் இந்தப் பழவியாபாரிக்கு இடக்கை சுத்தமாக இல்லை. வலதுபுறம் ஒற்றைக்கையை வைத்துக்கொண்டு வேகமாக வண்டி தள்ளுகிறார்.

வாடிக்கைகள் வந்தால் சடன் பிரேக் அடித்த மாதிரி வண்டியை நிறுத்துகிறார். வாழைக்குலைகளை ஒற்றைக்கையால் சீவி எடைமிஷினில் வைக்கிறார். பேப்பர் போட்டு கட்டுகிறார். வாடிக்கையிடம் பணத்தைப் பெற்று மீதி சில்லரையை கொடுக்கிறார்.

எல்லாமே ஒற்றைக் கையில் நடந்து முடிகிறது. அந்த செயலின் வேகம் பார்த்தால் ஆச்சர்யப்பட வைக்கிறது. இரண்டு கைகளும் உள்ளவர்கள் கூட இவ்வளவு ஸ்பீடாக செயல்படுவார்களா என்பது சந்தேகம்தான்.

அப்படியொரு ஸ்பீடு. ‘‘இது என்னங்க... காலையில வாழைக்காய் மண்டிக்கு வாங்க. எத்தனை வாழைத்தார்களை எத்தனை வண்டிக்கு அப்படியே தோள்ல தூக்கீட்டு வந்து ஏத்தறேன்னு பாருங்க! மத்தவங்க ஒரு தார் கொண்டு வர்றதுக்குள்ளே நான் நாலு தார் ஏற்றிடுவேன்!’’ என்று பெருமை பொங்க, இல்லையில்லை தன்னம்பிக்கை ஒளிர பேசுகிறார். தெருவோர வாழ்க்கையில் எத்தனையோ அதிசயங்கள். ஆச்சர்யங்கள். அங்கே உழைக்கும் மக்களின் செயல்பாட்டில்தான் மண்ணின் ஆன்மா குடியிருக்கிறது.

இந்த செய்யதுலிவி, கோவை போத்தனூர் குறிச்சியில் வசிக்கிறார். 1989ல் நடந்த விபத்தில் ஒரு கையை இழந்த அவர் ஒற்றைக் கையுடன் கோவை நகரின்
இதயப் பகுதியான ஆர்.எஸ்.புரம் தெருக்களில் தள்ளுவண்டியில் வைத்து வாழைப்பழ வியாபாரத்தை நடத்திவருகிறார்.

இந்த சுற்றுவட்டாரத்தில் அவருக்கென்றே நிறைய வாடிக்கைகள். இவர் குரலைக் கேட்டாலே வீட்டுக்கு வெளியே வர ஆரம்பித்துவிடுகிறார்கள். யாரும் பேரம் பேசுவதில்லை. ‘இது நல்ல பழமா, புகைபோட்ட பழமா? கல்லு வச்சு பழுக்க வச்ச பழமா?’ போன்ற கேள்விகள் எதுவுமே இல்லை.

எது சிறந்தது என்று இவர் சொன்னால் அவர்கள் வாங்கிக் கொள்கிறார்கள். அப்படியொரு நம்பிக்கையை வாடிக்கையாளர்களிடம் பெற்றிருக்கிறார். ‘‘நான் ஆறு வயசில் என் அப்பா கூட வாழைக்காய் மண்டி வேலைக்கு வந்தவன். 63 வயசாச்சு. சொந்தமாக வீடு கட்டி, இரண்டு மகள்களுக்கு திருமணம் முடிச்சாச்சு. மூன்றாவது மகளுக்கு கல்யாணம் செய்யணும். அதுக்காகத்தான் இந்த உழைப்பு. அந்தப் பொண்ணு போலியோவில் பாதிக்கப்பட்ட பொண்ணு. நடக்க முடியாது. அதுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கணும்ல சார்!’’ என்று சொல்லும்போது கூட அவர் முகத்தில் துளி சோகம் இல்லை. சுறு,சுறு மகிழ்ச்சிதான்.  

‘‘எனக்கு கோயமுத்தூர் குறிச்சிப்பிரிவில் வீடு. அங்கிருந்து இந்த ஆர்எஸ்புரம் அஞ்சு கிலோமீட்டர். நாலு மணிக்கே எழுந்திடுவேன். இந்த ஒரே கையில்தான் சைக்கிள் ஓட்டிட்டு வருவேன். அஞ்சு மணிக்கு வாழைக்காய் மார்க்கெட் வந்துடுவேன். அஞ்சரை மணியிலிருந்து என் வேலைய ஆரம்பிச்சுடுவேன். எட்டரை மணியிலிருந்து தெருத்தெருவா வியாபாரத்தை தொடங்கிடுவேன். வெள்ளிக்கிழமை மட்டும் லீவு எடுத்துக்குவேன். பள்ளிவாசல் தொழுகைக்கு போவேன். அங்கே எனக்கு ஒரு கடமை இருக்கு.

அது ஒரு நன்மை. என்னன்னா இதயநோயாளி, சிறுநீரகபாதிப்பு, கல்லீரல் சிகிச்சைன்னு பாதிக்கப்பட்டவங்க பள்ளிவாசலில் உதவி கேட்டு லெட்டர் கொடுப்பாங்க. அவங்களுக்கு உதவறதுக்கு பள்ளிவாசலில் தொழுகைக்கு வர்றவங்ககிட்ட ஒரு பக்கெட் ஏந்திட்டு நிற்பேன். அவங்களும் விருப்பப்பட்டதை அதில் போடுவாங்க. அந்தப் பணம் சாயங்காலம்
ஆனதும் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் ஒப்படைச்சுடுவேன்.

அதில் சேர்ந்திருக்கிற தொகையை பிரிச்சு அந்த வாரம் சிகிச்சைக்கு உதவி கேட்டு வந்த நோயாளிகளுக்குக் கொடுத்துடுவாங்க.

எப்படியும் ஒவ்வொரு தடவையும் ஐயாயிரம், பத்தாயிரம் ரூபா சேரும். அதை என் முன்னாலயேதான் பள்ளிவாசல் தலைவர் பாதிக்கப்பட்டவங்களுக்குத் தருவார்!’’ என்று சொன்ன செய்யதுலிவி, தன் இடதுகை பறிபோனது குறித்து விவரித்தார்.

‘‘நான் 03.05.1989ல் கோவை தியாகி குமரன் வீதி மார்க்கெட்ல இருக்கற வாழைக்காய் மண்டியில் வாழைக்காய் சுமந்துட்டு இருந்தேன். அது முடிச்சுட்டு கரும்புக்கடை திருப்பத்தில் வீட்டுக்குப் போயிட்டிருந்தேன். அங்கே ஒரு லாரி அடிச்சிருச்சு. அதுல ஒரு கை அப்படியே கட் ஆகிப்போச்சு. அதுக்கப்புறம் சிகிச்சை மூணு மாசம். 13.07.89-ல் டிஸ்சார்ஜ் செஞ்சாங்க. என் குடும்பத்தில் ரொம்ப கஷ்டமா இருந்தது. மூணு பொண்ணுக. எல்லாமே சின்னஞ்சிறுசுக. மூணாவது குழந்தை பிறந்திருந்தப்பத்தான் எனக்கு ஆக்சிடெண்ட்டே நடந்தது.

அந்தக் கஷ்டத்தைப் பார்த்தவுடனே நமக்குத் தெரிஞ்சது இந்த வாழைக்காய்தான். இதே தொழில்ல இறங்குவோம்னு எறங்கிட்டேன். நான் ஆஸ்பத்திரியில் இருந்தப்ப என் பக்கத்துலயே இருந்தது என் அண்ணிதான். என் அண்ணன் ரொம்ப உதவி செஞ்சார்!’’ என்ற செய்யதுலிவியிடம் ‘இப்படி கைபோயிருச்சே. நம்ம இனி பழைய மாதிரி இயங்க முடியுமா? வியாபாரம் செஞ்சா சிக்கலாயிடுமேன்னு எல்லாம் நீங்க அப்ப யோசிக்கலையா?’ என்றோம்.

‘‘அப்ப மட்டுமில்ல. இப்ப வரைக்கும் அப்படி ஒரு எண்ணம் எனக்கு வந்ததேயில்லை. ஒரு கை போனா என்ன, இன்னொரு கை இருக்கு இல்லியா... இதுல ஆயிரம் வேலை செய்யலாம்ன்னுதான் நம்பினேன். இப்பவும் அந்த நம்பிக்கைதான் கைகொடுத்திருக்கு. ஆறு வயசுல இந்தத் தொழிலுக்கு என் அப்பா தன் தோள்ல சுமந்து என்னைக் கூட்டிட்டு வந்திருந்தாலும், இந்த ஆர்எஸ்புரத்துக்குள்ளே 15 வருஷமாகத்தான் வியாபாரம் செய்யறேன்.

அதுக்கு முன்னாடி எங்க வீட்டுக்குப் பக்கத்திலயே வியாபாரம் பண்ணிட்டிருந்தேன். அது சரியா வரலை. அதுதான் இங்கே வந்தேன். ரொம்ப முன்னேற்றம். இங்கே என் மேல மதிப்பும், மரியாதையும், அன்பும் வச்சிருக்காங்க!’’ என்றவர் இதுவரை தன் மனைவியையோ, குழந்தைகளையோ ஒரு நாள்கூட வேலைக்கு அனுப்பியதில்லையாம்.

தன் கையாலேயே பாடுபட்டு குழந்தைகளை, மனைவியை காப்பாற்ற வேண்டும் என்று வைராக்கியம் வைத்துள்ளாராம். இரண்டு பெண்களுக்கு திருமணம் சுலபமாக செய்து கொடுத்தவர் மூன்றாவது பெண்ணுக்குத்தான் மாப்பிள்ளை தேடுவதில் சிக்கல். ஏனென்றால் நாம் ஏற்கனவே சொன்னமாதிரி அந்தப் பெண்ணுக்குப் போலியோ அட்டாக். நடக்க முடியாது. ‘அதற்கு இப்போது மாப்பிள்ளை வந்தாலும் நான் திருமணம் செய்து வைத்துவிடுவேன்!’ என்கிற செய்யதுலிவி பள்ளிக்கூடத்திற்கே சென்றதில்லை.

இவர் மட்டுமல்ல, குடும்பத்திலும் யாருமே பள்ளிக்கூடம் மிதித்ததில்லை. இவர் பெண்கள்தான் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்கள். இவர் அண்ணன் குடும்பத்தில் பிள்ளைகள் படிக்கிறார்களாம். இவர் பள்ளி வாசலில் வெள்ளிக்கிழமைதோறும் சேவையும் இன்று நேற்று தொடங்கியதில்லையாம். ஆறேழு வயதிலிருந்தே தொடங்கி விட்டதாம்.
இவர் தள்ளு வண்டியின் மேல்பாகத்தில் அசோகச்சக்கரத்துடன் கூடிய தேசியக்கொடி வண்ணம். அங்கே ‘நம் தேசம்; நம் இந்தியா’ என்ற வாசகம். இந்த அளவுக்கு தேசபக்தியா என்று கேட்டால் அதற்கும் சின்ன லெக்சர் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

‘‘எனக்கு சின்ன வயசிலிருந்தே நம் தேசத்தின் மீது உசிருங்க. எத்தனையோ பேர் சுதந்திரத்திற்காக தியாகம் செஞ்ச பூமி. டூவீலர், ஃபோர் வீலர்ல எல்லாம் பல பேர் தேசியக்கொடி வச்சிருக்கிறதைப் பார்த்தேன். அதை நிறையபேர் காலடியில் வச்சிருந்தாங்க. அப்படி இருக்கக்கூடாது. நம் தேசமும், தேசியக்கொடியும் தலைக்கு மேலதான் இருக்கணும். அப்படி எண்ணத்துல நானாக ஐந்து வருஷத்துக்கு முன்னாடி இப்படி வரைஞ்சது!’’ என்றார்.

நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே வாடிக்கைகளுக்கு பழ வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அதில் ஒருவர் இவர் ஒற்றைக்கையில்  பொட்டலம் கட்டுவதைப் பார்த்து அனுதாபப்பட்டோ என்னவோ, ‘அதெல்லாம் வேண்டாம். கொடுங்க. நானே கட்டிக்கொள்கிறேன்!’ என்று கேட்கிறார். இவரோ, உடனே மறுதலித்து, ‘இல்லீங்க, பொறுங்க சார். நான் செய்யற வேலையை செஞ்சு தந்துடறேன்!’ என்று சொல்லி, தானே அதை ஒழுங்காகக் கட்டிக் கொடுக்கிறார்.

‘இந்த மாதிரி யாராவது சிலர் அனுதாபப்பட்டு பேசும்போது உங்க மனநிலை எப்படியிருக்கு?’ எனக்கேட்டோம். ‘‘அதுல என்னங்க சார் இருக்கு. நான் கஷ்டப்படறதைப் பார்த்து அவுங்க கேட்கிறாங்க. நான் அவங்க கட்டினா அது சரியா வராது. பேப்பர் கிழிஞ்சு போகும். அது நீட்டாவும் இருக்காது. நல்ல பொருள், அதனால நானே பக்குவமா கட்டித் தர்றேன்னு சொல்றேன்.

அவ்வளவுதான்!’’ ஒன்றைச் செய்வது சரியாகச் செய்வதில்தான் அடங்கியிருக்கிறது. அதில் விதைக்கப்படுவது ஒரு கையோ இரு கையோ அல்ல; தன்னம்பிக்கைதானே? அதற்கு நல்ல உதாரணம் நம் செய்யதுலிவி. ‘‘நேந்திரம் பழம்.. செவ்வாழைப்பழம்... கேரள ரஸ்தாளி..!’’‘‘நேந்திரம் பழம், செவ்வாழைப்பழம், கேரள ரஸ்தாளி..!’’ ஸ்பீக்கரில் குரல் சீராக ஒலிக்கிறது.

கா.சு.வேலாயுதன்