மீசை படுத்தும் பாடு!



அதே நிறம். அதே கண்கள். அதே மீசை. அதே உடல்வாகு. அநேகமாக வாலிப வயசு வீரப்பன்தான் திரும்ப உயிர்த்தெழுந்து வந்து விட்டாரோ என்று தோன்றுகிறது.

‘‘நீங்க மட்டுமில்ல.
பார்க்கறவங்க எல்லாம் கொஞ்ச நேரம் நின்னு உத்துப் பார்க்கறாங்க. சில பேர் தைரியமா நெருங்கி வந்து ‘நீங்க வீரப்பன் மகனா’ன்னு கேட்கிறாங்க. நான் இல்லைன்னு சொன்னா நம்பறதும் இல்லை!’’ என்று அவர் சொன்னபோது, உண்மையிலேயே ஆச்சர்யப்பட்டுத்தான் போனோம். நல்லவேளை அவரின் பேச்சு கொஞ்சம் கீச்சுக்குரலில் ஒலித்தது. நிச்சயம் வீரப்பன் இல்லை.

சேலம் மாவட்டம் மூலக்காடு கிராமம். இங்குள்ள சுடுகாட்டில்தான் வீரப்பன் 2004ம் ஆண்டு அடக்கம் செய்யப்பட்டார். இவர் அடக்கம் செய்யப்பட்ட பகுதியிலேயேதான் சமீபத்தில் சிறை ஆஸ்பத்திரியில் இறந்த அவர் அண்ணன் மாதையன் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அவர் மகன் வக்கீல் மணி, வீரப்பனுக்கு முன்பு இறந்தவர். அவரின் சமாதியும் இங்கேதான் உள்ளது.
அதைத்தவிர வீரப்பனின் அப்பா, தாத்தா என இவர்களின் மூதாதைகளும் இங்கேதான் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த சமாதி இப்போதெல்லாம் பிக்னிக் ஸ்பாட் போல் ஆகியிருக்கிறது. சேலம், குளத்தூர் பக்கம் வருகிறவர்கள் இந்த சமாதிக்கு வந்து வீரப்பன் சமாதி மண்ணை எடுத்து திருநீறு போல் இட்டுக் கொள்ளாமல் செல்வதில்லை. அதற்குக் காரணம் இங்கே இருக்கும் பாறையில் ‘வீரம் விதைக்கப்பட்டுள்ளது’ என பெயிண்டினால் எழுதப்பட்ட வாசகங்களாக இருக்கலாமோ என்னவோ தெரியவில்லை.

கடந்த அக்டோபர் 18 வீரப்பனின் நினைவு தினம். அன்றைய தினம் யாருமே எதிர்பாராத அளவு இங்கே நினைவஞ்சலி செலுத்த கட்டுக்கடங்காத கூட்டம். வீரப்பன் குடும்பத்தார் மட்டுமல்ல, சமூக நலம் விரும்பிகள், அரசியல்வாதிகள் மட்டுமல்ல, போலீஸ்காரர்கள் பலரும் கூட வந்து அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றுள்ளார்கள்.அப்படியென்ன இப்போது இதற்கு முக்கியத்துவம் என்று சமீபத்தில் இந்த சமாதியைப் பார்க்கச் சென்றிருந்தோம். நாம் சென்ற நேரத்திலும் நான்கைந்து பேர் வந்து கற்பூரம், ஊதுபத்தி கொளுத்தி வீரப்பனுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர்.

அதில் ரொம்பவும் உள்ளம் கவர்ந்தவர் வீரப்பன் சாயலில் பெரிய மீசை வைத்துக் கொண்டிருந்த இந்த இளைஞர். அவர் பெயர் செங்கோடய்யன். அந்தியூர் பக்கம் உள்ள புதுக்காடு, காந்தி
நகர் பகுதியைச் சேர்ந்தவர். ‘‘வீரப்பன் இறக்கும்போது எனக்கு 20 வயசு இருக்கும். அதுக்கு முந்தியே எங்க ஊர்ப் பக்கமுள்ள அன்புராஜ் என்பவர் வீரப்பனுடைய ராணுவத்தில்(?!) சேர்ந்து விட்டதாகச் சொல்லி பசங்க எல்லாம் பேசிக்குவோம்.

நாங்க எல்லாம் விளையாட்டுல சேம்பியனா வரணும்ன்னு ஆசைப்பட்டவங்க. அப்ப எல்லாம் வீரப்பன் பேச்சும், அன்புராஜ் பேச்சும் வரும். அப்பவே அன்புராஜ் ஜெயிலில் இருந்தாரு. அதுல நாங்க எல்லாம் அவரைப் பார்க்காமலே அவர் ஃபேன் ஆகிட்டோம். இந்த நேரத்துலதான் வீரப்பன் கொல்லப்பட்டாரு.

 அதுல எங்களுக்கு எல்லாம் ஏதோ இழக்கக்கூடாத தளபதியை இழந்த மாதிரி ஆகிப் போச்சு. எனக்கு அவர்கிட்ட பிடிச்சதே அவர் மீசைதான். ஆனா, அதை போலீஸ் அவரைக் கொன்னபிறகு எடுத்துட்டாங்க. பொதுவா ஒரு மனுசன் செத்துப் போனா, அவங்க ஆசைப்பட்டதை செஞ்சு கொடுக்கணும். அப்படியே புதைக்கணுங்கிறதுதான் நம்ம தர்மமா இருந்துட்டு வருது. ஆனா, போலீஸ் அவர் மீசைய எடுத்துட்டது நாளாக நாளாக ஒரு மாதிரியா ஆயிடுச்சு.

பெரியவன் ஆனதும், அதாவது என் 36 வயசுல பெரிசா அவர் மாதிரி மீசை வச்சுக்கணும்ன்னு ஆசைப்பட்டேன். இப்ப இந்த மீசைய வச்சு நாலு வருஷம் ஆச்சு. அதுக்கு முன்னாடியே வீரப்பனார் இறந்தநாள், பிறந்தநாளுக்கெல்லாம் அவர் சமாதிக்கு வருவேன். அவரை மனசுல நினைச்சு கும்பிட்டு அஞ்சலி செலுத்திட்டுப் போவேன். இந்த வருஷம் அவர் நினைவு நாளன்னைக்கு வெளியூர் போயிட்டதால வர முடியலை. அதுதான் இப்ப வந்து அஞ்சலி செலுத்தறேன்!’’ என்றவர் மேலும் தனக்கான மீசை அனுபவங்களை சுவாரஸ்யம் மாறாமல் விவரித்தார்.
 
வீரப்பன் இறந்தபிறகு கிட்டத்தட்ட இந்தப் பகுதிகளில் மட்டும் 400க்கும் மேற்பட்டவர்கள் அவரைப் போலவே மீசை வளர்க்கிறார்களாம். அவர்களில் ஒரு பெரியவரை சில வருடங்கள் முன்பு பார்த்தபோது, அவர்தான், எப்படி மீசை வைக்க வேண்டும் என்றும், அதை எப்படி மெயின்டைன் பண்ண வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தாராம். அவர்களில் பிறந்தநாள், நினைவுநாளன்று குறைந்தபட்சம் 40 - 50 பேராவது வீரப்பன் சமாதிக்கு வந்து விடுகிறார்கள். அப்படி வந்தவர்களில் சுமார் 40 பேருடன் புகைப்படம் எடுத்து  வைத்திருக்கிறார். அவர்கள் யாருடைய மீசையும் இந்த அளவு இல்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் யாரும் வீரப்பன் சாயலிலும் இல்லை என்பதால் பெரும்பாலும் பொருந்தவில்லையாம். ‘‘எனக்குத் தெரிந்து ஏழு பேர் மட்டுமே வீரப்பனார் மீசைக்குப் பொருத்தமுள்ளவர்கள். அதில் நானும் ஒருவன்!’’ என்றும் பெருமிதம் பொங்கக் குறிப்பிட்டார்.

‘‘நான் பத்தாவது படிச்சேன். அதுக்குப் பிறகு பசங்களோட சேர்ந்து ஹான்ஸ் போடறது, தண்ணி அடிக்கிறது, சிகரெட் பிடிக்கிறதுனு அப்பப்ப செய்வேன். ஆனா, நாலு வருஷமா மீசை வச்ச பிறகு அதை சுத்தமா விட்டுட்டேன். ஏன்னா பார்க்கறவங்க எல்லாம் ‘நீ அச்சு அசலா வீரப்பனாட்டமே இருக்கே. அவர் ரொம்ப நல்ல மனுசன். தண்ணி அடிக்க மாட்டார். பீடி, சிகரெட் தொடமாட்டார். போதைப் பொருட்கள் அவருக்குப் பிடிக்காது. இதெல்லாம் அவர்கிட்ட இருந்த நல்ல விஷயம். அதை முடிஞ்ச வரைக்கும் எடுத்துட்டுப் போய் மக்கள்கிட்ட சொல்லு’ன்னு சொல்லுவாங்க.

அதைக் கேட்டுட்டு முதல்ல நம்ம திருந்தணும்ல. அதனால பீடி, சிகரெட் வாங்கறதையே நிறுத்திட்டேன். ஏன்னா நான் போய் பீடி சிகரெட் வாங்கறேன்னு வச்சுக்குங்க. ‘பாரு வீரப்பனைப் போல மீசைதான் வச்சிருக்கான். ஆனா, அவர் உருவத்துல வந்து பீடி, சிகரெட் வாங்கிட்டுப் போறான் பாரு’ன்னு சொல்லுவாங்க இல்லீங்களா? அந்த சொல்லு கூட வீரப்பன் உருவத்துல எனக்கு வரக்கூடாதுன்னு பார்த்துக்கிட்டேன்!’’செங்ககோடய்யன் மட்டுமல்ல, வீரப்பன் மீசைக்காரர்கள், வீரப்பன் அனுதாபிகள் பலரும் சேர்ந்து வீரப்பன் சோல்ஜர்ஸ் என்ற ஓர் அமைப்பை நிறுவியிருக்கிறார்கள். அதற்கென ஒரு யூனிபார்மும், லோகோவும் உருவாக்கியிருக்கிறார்கள். அதன் மூலம் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ - மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்குகிறார்கள்.

வீரப்பனுடன் வாழ்ந்து சிறைவாசம் அனுபவித்து வெளியே வந்து பழங்குடி மக்களுக்கு சமூக சேவை ஆற்றி வரும் அன்புராஜுடன் இணைந்து பல்வேறு கிராமங்களுக்கும் செல்கிறார்கள். அங்குள்ள மக்கள் பிரச்னையைத் தீர்க்க தங்களாலியன்ற உதவிகளைச் செய்கிறார்கள். இதில் பாப்புலர் ஆனதால் செங்கோடய்யனுக்கு வீரப்பன் பிறந்தநாள், வேறு விசேஷ நாட்களில் எல்லாம் வெவ்வேறு ஊர்களிலிருந்தெல்லாம் அழைப்புகள் வருகிறது. அங்கெல்லாம் சென்றால் நல்ல வரவேற்பு. நிகழ்ச்சிக்கு கேக் வெட்டச் சொல்லுவதிலிருந்து, கொடி அசைத்து துவக்கி வைப்பதிலிருந்து இவரையே முன்னிறுத்துகிறார்களாம்.

‘‘அது எல்லாமே வீரப்பன் அய்யாவுக்கு கிடைக்கும் மரியாதை. வீரப்பனார் போலவே வேடமிட்டு நான் நாடகங்களிலும் நடிக்கிறேன். ஒருமுறை வீரப்பனார் மனைவி முத்துலட்சுமியை அவர் வீடு சென்று பார்த்தேன். அங்கிருக்கும் வீரப்பனார் சிலைக்கு அஞ்சலி செலுத்தினேன். முத்துலட்சுமி அக்காவும், ‘நீ அவரைப் போலவே இருக்கறே கண்ணு. ஜனங்களுக்கு நல்லது பண்ணு. நல்லதே நினை’ன்னு சொல்லிவிட்டாங்க. அதிலிருந்து கொஞ்சமும் பிசகாமல் அப்படியே  நடந்துட்டு வர்றேன்.

முந்தியெல்லாம் என்னை யாருக்கும் தெரியாது. நான் ஊருக்குள்ளேயே யார் கூடவும் அவ்வளவு சுலபமாப் பேசவும் மாட்டேன். ஆனா, என் அம்மாவை ‘வீரப்பனோட அம்மா’, என் மனைவியை ‘நம்ம ஊரு வீரப்பனோட மனைவி’, என் பிள்ளைகளை ‘வீரப்பனோட பிள்ளைகள்’ன்னே சொல்றாங்க. இன்னும் சொல்லப்போனால் யாராவது வெளியூர்க்காரங்க வீடு அடையாளம் கேட்டு வந்தா ‘வீரப்பன் வீடா’ என்றே கேட்கிறார்கள். எங்க பக்கத்து வீட்டுக்காரங்களை அடையாளம் சொல்லும்போது கூட‘ வீரப்பன் வீட்டுக்கு நாலாவது வீடு, மூணாவது வீடு’ன்னே சொல்றாங்க.

இது எல்லாமே எனக்குப் பெருமையா இருக்கு!’’ என்ற செங்கோடய்யன், வீரப்பன் போலவே மீசை வைத்திருப்பதால் போலீசாரின் சோதனைக்கும் சிக்கியிருக்கிறார்.பார்க்கும் போலீசார் எல்லாம் ஒரு காலத்தில் தடுத்து நிறுத்தி, ‘இது என்ன மீசை, நீ என்ன வீரப்பன் ஆளா, முதலில் மீசைய எடு’ என்றும் சொல்லியிருக்கிறார்களாம். ‘‘எனக்கு இப்படி மீசை வச்சிருக்கிறது பிடிச்சிருக்கு. உங்களுக்குப் பிடிச்ச மாதிரி மீசைய நான் வைக்கணுமா?’’ என்று கேட்டதோடு, ரொம்ப கறாராகப் பேசியவர்களிடம், ‘‘அதனாலென்ன சார்... மீசைதானே எடுத்துட்டாப் போச்சு...’’ என்றே சொல்லி வந்திருக்கிறார். ஆனால், இதுவரை மீசையை மட்டும் மழித்ததேயில்லை.

ஒரு முறை கர்நாடகாவில் வீரப்பன் வழிபாடு செய்யும் மாதேஸ்வரன் மலைக்கு சென்றிருக்கிறார். அடிவாரத்திலேயே இவரை கர்நாடக போலீசார் பிடித்து வைத்துக்கொண்டு  வயிற்றை எல்லாம் நசுக்கிப் பார்த்தனராம். மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை செய்தனராம். மற்றவர்களை பெயரளவில் பார்த்து அனுப்பியவர்கள் இவரை மட்டும் நான்கு மணி நேரம் அங்கேயே அமரச் சொல்லி விட்டனராம். அதற்குப் பிறகுதான் விட்டனராம். இதற்கு முன்பு வரை வீரப்பன் சோல்ஜர்ஸ் சிம்பளோடு பைக்கில் முத்திரைச் சின்னம் வரைந்திருந்திருக்கிறார். அதற்குப்பிறகு அதை அகற்றிவிட்டார். மீசையை மட்டும் அப்படியே வளர்க்கிறார்!

கா.சு.வேலாயுதன்