ஏர் கண்டிஷண்ட் பாலைவனம்!



டெக்னாலஜி பாஸ்... டெக்னாலஜி! வேறெப்படி சொல்ல..?

2022 கால்பந்து உலகக் கோப்பை கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது... என்று இந்த மேட்டரை ஆரம்பித்தால் இருந்த இடத்திலிருந்தே கல் எறிவீர்கள்!இதெல்லாம் பிறந்த சிசுவும் அறிந்த விஷயங்கள்தான்.ஆனால், வளைகுடா நாடுகள் என்றாலே வெப்பம் தகிக்குமே... அப்படி வளைகுடாவில் இருக்கும் குட்டி நாடான கத்தார், பாலைவனங்கள் நிரம்பிய பகுதியாயிற்றே... எப்படி அங்கு உலக கால்பந்து போட்டிகளை நடத்த முடியும்... என்ற கேள்விகள் இருக்கிறதே... அது முக்கியம். அதுதான் மேட்டர்.

கத்தாரில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். கால்பந்து ஆட்ட நேரமோ 90 நிமிடங்கள். எனில், இந்த வெப்பநிலையில் வீரர்கள் ஓடி விளையாடுவது சாத்தியமா..? சன் ஸ்ட்ரோக் ஏற்படாதா... சுருண்டு விழ மாட்டார்களா..? கேலரியில் அமர்ந்து போட்டியைப் பார்க்கும் பார்வையாளர்களின் நிலை பரிதாபமாக மாறிவிடாதா..?

இல்லை. இது எதுவுமே நடக்காது என்பதுதான் ஹைலைட். என்னதான் வெப்பமான நாடாக இருந்தாலும் சிறிதும் விளையாட்டு வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என கற்பூரம் அடித்து கத்தார் சத்தியம் செய்திருக்கிறது. காரணம், முழுக்க முழுக்க லேட்டஸ்ட் டெக்னாலஜியை அந்த நாடு பயன்படுத்தியிருப்பதுதான். அனைத்துக்கும் மேலாக குளிர்காலத்தில் உலக கால்பந்து போட்டிகளை அந்த நாடு நடத்துகிறது என்பது இன்னொரு ப்ளஸ்.

மொத்தம் எட்டு மைதானங்களில் உலக கால்பந்து போட்டிகளை கத்தார் நடத்துகிறது. இந்த எட்டு மைதானங்களும் ஹைடெக் டெக்னாலஜியுடன் ஜொலிக்கின்றன.
எப்படி..?

ஒரு சோறு பதமாக காட்சியளிக்கிறது முக்கியமான மைதானமான அல் ஜனோப்.கத்தாரின் வெப்பநிலைக்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்று கடலில் இருந்து வரும் வெப்பக்காற்று. இதனைத் தடுக்க அல் ஜனோப் மைதானத்தின் மேற்கூரை காற்று பாய்ந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சூரிய வெப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் இதன் மேற்கூரைக்கு வெள்ளை நிறம் கொடுக்கப்பட்டிருக்கிறது.சரி... அரங்கின் வெளிப்புறத்தில் மட்டுமல்லாது உட்புறத்திலிருந்தும் வெப்பம் எழுமே... போட்டி நடைபெறும் நாளில் 40 ஆயிரம் மக்கள் வரை கூடுவார்களே... இவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் வெப்பம் வெளிப்படுமே...

ஆம். வெளிப்படும். இதற்காகவே பார்வையாளர் ஒவ்வொருவருக்கும் குளிர்ச்சியை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு காரியத்தை கத்தார் அரசாங்கம் செய்துள்ளது.
அதாவது பார்வையாளர்கள் அமர்ந்துள்ள ஒவ்வொரு இருக்கையின் கீழும் துவாரங்கள் அமைக்கப்பட்டு அதன் வழியாக குளிர்ந்த காற்று வீசும்படி செய்திருக்கிறார்கள்.
இதனால் பார்வையாளர்கள் அதிக வெப்பத்தை உணரமாட்டார்கள்.

ஓகே. அகண்ட மைதானத்தில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் வீரர்கள் அதிக வெப்பத்தால் சோர்வடைய மாட்டார்களா..? சாதாரணமாக கால்பந்து போட்டியில் ஒரு வீரர் 10 கிலோமீட்டர் வரை ஓடுகிறார்...  இதனால் 3 லிட்டர் வரை வியர்வை வெளிப்படும்... வீரர்கள் குளிர்ச்சியுடனும்  நீர்ச்சத்தை இழக்காமலும் இருக்க என்ன செய்திருக்கிறார்கள்..?
அட்டகாசமான வழிமுறையைத்தான்!

மைதானத்தில் குளிர்ச்சியை ஏற்படுத்த பெரிய துவாரங்களின் வழியாக குளிர்ந்த காற்று அனுப்பப்படுகிறது. இந்த காற்று வீரர்கள் நேரடியாக காற்று வீசுவதை உணராத விதமாக குறிப்பிட்ட கோணத்தில் வீசும்படி அமைக்கப்பட்டிருக்கிறது.இந்த காற்று இயல்பாக சூடாகும். சூடான காற்று மீண்டும் உறிஞ்சப்பட்டு ஏர்கண்டிஷனர்கள் மூலம் குளிர்விக்கப்பட்டு குளிர்ந்த காற்றாக மைதானத்தை வந்தடைகிறது. இந்த ஏர்கண்டிஷனர்கள் செயல்படுவதற்காக தோஹாவிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மொத்த அமைப்பையும் ஏர்கண்டிஷனிங் நிபுணரான டாக்டர் சௌத் அப்துல் கானி உருவாக்கியுள்ளார். 2019ம் ஆண்டு தோஹாவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் அனுபவப் பகிர்வுகள் தங்களுக்கு உதவியதாக அவர் குறிப்பிடுகிறார்.இப்படி பாலைவனத்தையே ஏற்கண்டிஷனாக தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாற்றியிருப்பதை உலகமே வியந்து பாராட்டுகிறது.

அதேநேரம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதைக் கண்டிக்கவும் செய்கின்றனர். என்னதான் சூரிய மின்சக்தியை கத்தார் பயன்படுத்தினாலும் ஏர்கண்டிஷனிங்கின்போது தீங்கிழைக்கும் வாயுக்கள் வெளியேறுவதை தடுக்க முடியாதே... என கேள்வி எழுப்புகிறார்கள்.இதற்கான மாற்றுத் திட்டத்தையும் அமல்படுத்தியிருக்கிறோம் என கத்தார் தெரிவித்துள்ளது. அதேநேரம் அந்த மாற்றுத் திட்டம் என்ன என்பதை கத்தார் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் உலகக்கோப்பை அரங்குக்கான கட்டடப் பணியின்போது 2021ம் ஆண்டில் மட்டும் 50 தொழிலாளர்கள் இறந்துள்ளனர்; 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு சேகரித்த தரவுகள் கூறுகின்றன. மேலும் 30 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றிய திட்டத்தில் பலரது பாஸ்போர்ட்களை வாங்கி வைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகளையும் கத்தார் மறுத்துள்ளது. எது எப்படியிருந்தாலும், மனிதனின் முயற்சியால் மேம்படும் தொழில்நுட்பங்கள் அசாதாரணமானவற்றையும் சாதாரணமாக மாற்றி வருகிறது என்பது மட்டும் உண்மை.

என்.ஆனந்தி