Must Watch



பார்பேரியன்

பட்ஜெட்டை விட பத்து மடங்கு அதிகமாக வசூலை அள்ளிய ஆங்கிலப்படம், ‘பார்பேரியன்’. ‘ஹாட் ஸ்டாரி’ல் காணக்கிடைக்கிறது. ஒரு இன்டர்வியூவுக்காக நகரத்துக்கு வருகிறாள் டெஸ். இரவில் தங்குவதற்காக ஆன்லைனில் ஒரு வீட்டை புக்கிங் செய்திருக்கிறாள். அந்த வீட்டின் முன்பு சிறிய ஒரு பெட்டி இருக்கும். அந்தப் பெட்டிக்குள்தான் வீட்டின் சாவி உள்ளது.
பெட்டியைத் திறப்பதற்கான பாஸ்வேர்டை பதிவு செய்து பெட்டியைத் திறந்தால் சாவி இல்லை. மன உளைச்சலடைந்த டெஸ் எங்கு செல்வதென்று தெரியாமல் இருக்கும்போது அந்த வீட்டில் கீத் என்பவர் இருப்பது தெரிய வருகிறது.

எல்லாமே மர்மமாக இருக்க நிலைகுலைந்து போகிறாள் டெஸ். டெஸ் புக்கிங் செய்த வீட்டில் கீத் எப்படி உள்ளே நுழைந்தான்? நடு இரவில் எங்கேயும் செல்ல முடியாத டெஸ் என்ன செய்தாள்? அந்த வீட்டுக்குள் உள்ள மர்மங்கள் என்ன... போன்ற கேள்விகளுக்கு
திகிலாக பதில் தருகிறது இந்தப் படம். திகில் படப் பிரியர்களுக்கு செம விருந்து வைத்திருக்கும் இந்தப் படத்தை இயக்கியவர் ஜாக் கிரெக்கர். l

ஆ அம்மாயி குறிஞ்சி மீகு செப்பலி

திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற தெலுங்குப் படம் , ‘ஆ அம்மாயி குறிஞ்சி மீகு செப்பலி’. ‘அமேசான் ப்ரைமி’ல் பார்க்கக் கிடைக்கிறது. தொடர்ந்து ஆறு படங்கள் ஹிட் கொடுத்த பரவசத்தில் இருக்கிறார் இயக்குநர் நவீன். அடுத்ததாக ஒரு இளவரசியை மையமாக வைத்து படம் எடுக்க நினைக்கிறார். இளவரசி ரோலில் நடிக்க புதுமுகத்தை தேடி காரில் செல்கிறார். அப்போது ஒரு குப்பை வண்டியில் இருக்கும் குப்பைகள் அவரது காரின் முன்பாகத்தில் விழுகிறது.   

அந்தக் குப்பைகளை அகற்றும்போது ஒரு ஃபிலிம் ரீல் கிடைக்கிறது. அந்த ரீலை ஹார்டு டிஸ்க்காக மாற்றி பார்க்கிறார் நவீன். அதில் உள்ள வீடியோவில் வருகின்ற பெண் நவீனை அப்படியே மயக்கிவிடுகிறாள். இவள்தான் இளவரசி என்று நவீன் அந்தப் பெண்ணைத் தேடிப்போகும் பயணமும், அதை ஒட்டி நடக்கும் சம்பவங்களும்தான் திரைக்கதை.
வார இறுதியில் படம் பார்க்க விரும்புபவர்களுக்கு நல்ல சாய்ஸ் இந்தப் படம். இதன் இயக்குநர் மோகன கிருஷ்ணா இந்திரா காந்தி.