உலக சாம்பியன்ஷிப்தான் என் கனவு!



சொல்கிறார் வுமன் கிராண்ட்மாஸ்டர் பி.வி.நந்திதா

தில்லியில் நடந்த ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார் பி.வி.நந்திதா. ஏற்கனவே, 2019ல் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று அசத்தியவர். மாமல்லபுரத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் வெற்றிகள் குவித்து நம் கவனத்தை ஈர்த்தவர். ‘‘பிறந்து வளர்ந்ததெல்லாம் சேலம் மாவட்டம் சங்ககிரிதான். அங்க அப்பா வெங்கடாசலம் விவசாயம் பண்றார். அம்மா சுமதி வங்கியில் வேலை செய்றாங்க. என் கணவர் நவீன்குமார் ராணுவத்துல மேஜராக பணி செய்றார்.

2006ல்தான் செஸ் விளையாட ஆரம்பிச்சேன். அப்ப எனக்கு பத்து வயசு. எங்க வீட்டுல உள்ளவங்க எல்லாரும் எப்பவும் பரமபதம் விளையாடிட்டு இருப்பாங்க. அதைப் பார்த்து பரமபதத்துல ஆர்வம் வந்தது.  அப்ப, என்கிட்ட சொந்தமா பரமபத போர்டு இல்ல. அம்மாவிடம் கேட்டேன். அவங்க மாற்றி செஸ் போர்டை வாங்கிட்டு வந்துட்டாங்க. அதை வீட்டுல யாரும் பயன்படுத்தல.

அந்நேரம், நாமக்கல்ல டோர்னமெண்ட் நடப்பதை பேப்பர்ல அப்பா  பார்த்திட்டு கலந்துக்க சொன்னாங்க. எங்க வீட்டில யாருக்கும் செஸ் விளையாடத் தெரியாது. ஊர்லயும் செஸ் பத்தி தெரியல. சிலர்கிட்ட கேட்டு படிச்சேன். அந்த டோர்னமெண்ட்ல கலந்துக்கிட்டு ஜெயிச்சேன். அப்ப, குட்டி கப் பரிசா கிடைச்சது. அதை நிறைய பேரிடம் சொல்லிச் சொல்லி
மகிழ்ந்தேன். அங்கிருந்து என் செஸ் ஜர்னி தொடங்குச்சு...’’ என்கிற நந்திதா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எஞ்சினியரிங் பட்டம் பெற்றவர்.

‘‘அப்புறம், சேலத்திலுள்ள கோச் ஜாகீர் சார்கிட்ட ஒன்றரை ஆண்டுகள் செஸ் கத்துக்கிட்டேன். பிறகு அண்டர் லெவனில் வெற்றிபெற்றேன். தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகள்ல வெற்றிகள் குவிச்சேன். தேசிய அளவு போட்டிகள்ல கலந்துகிட்டு தங்கம் வென்றேன். பயிற்சியாளர்கள் ஆர்.பி.ரமேஷ், தீபன் சக்கரவர்த்திகிட்ட மேலும் பயிற்சி எடுத்தேன். இப்ப ஸ்யாம் சுந்தர் அண்ணா பயிற்சியாளராக இருக்காங்க.

எனக்கு 2019ல் வுமன் கிராண்ட்மாஸ்டர் பட்டம் மேலும் ஒரு மைல்கல்லா அமைஞ்சது. என் கனவு நிறைவேறிய அற்புத நாள் அது. அப்புறம், 2020ல் ஆன்லைன்ல நடந்த ஆசிய போட்டியில் தங்கம் வென்றேன்.இந்த ஆண்டு நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் சென்னையில் விளையாடியது மறக்கமுடியாத தருணம். முதல்ல நம்ம தமிழக முதல்வருக்குத்தான் நன்றி சொல்லணும். அவ்வளவு பெரிய ஈவென்ட்டை மிகச் சிறப்பாக நடத்தினாங்க. அதை இன்னைக்கு உலகம் முழுவதும் பாராட்டுறாங்க. மறக்கமுடியாத ஒலிம்பியாடா மாத்திட்டாங்க. ஒரு வீராங்கனையா எனக்கு அருமையான அனுபவம் கிடைச்சது. இப்ப ஏசியன் சாம்பியன்ஷிப்ல தங்கம் வென்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு...’’ என்கிறவர் சிரித்தபடி தொடர்ந்தார்.

‘‘பொதுவா, போட்டி தினத்தில் எப்படி செயல்படுறோம், ஆட்டத்தை எந்த வகையில் ஆழமாகக் கொண்டு செல்றோம் என்பதைப் பொறுத்துதான் வெற்றி அமையும். அதை நான் இதுவரை சிறப்பாகவே செய்திட்டு வந்திருக்கேன். இனியும் சிறப்பாகவே செய்வேன்னு நம்பிக்கையிருக்கு. இப்ப ஒருநாளைக்கு குறைஞ்சது  எட்டுமணிநேரம் பயிற்சி செய்றேன். அதுதான் என்னை இந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கு.   

எஞ்சினியரிங் படிக்கிறப்ப வேர்ல்ட் ஜூனியர்ல சில்வர் மெடல் ஜெயிச்சேன். அதை அப்ப பெரிய வெற்றினு நினைச்சேன். அடுத்தடுத்து வெற்றிகள் கிடைச்சப்ப இன்னும் போக வேண்டிய தூரம் இருக்குதுனு தோணுச்சு. இப்ப அடுத்த ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் நடக்க இருக்கு. அதுக்காக பயிற்சி எடுத்திட்டு வர்றேன். அதுல வெற்றி பெறணும் என்பதே என் இப்போதைய கனவா இருக்கு.

ஆரம்பத்துல இருந்து இப்பவரை என் அப்பாவும், அம்மாவும் நிறைய சப்போர்ட் செய்திட்டு இருக்காங்க. இப்ப கணவரும் பெரிய சப்போர்ட்டா இருக்கார். நிச்சயம் வருகிற உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பேன்...’’ என கண்களில் நம்பிக்கை மிளிர சொல்கிறார் பி.வி.நந்திதா.

ஆர்.சந்திரசேகர்