ஆடு, மாடு மேய்ச்சு யாருமே அறியாம இருந்தவளை இப்ப எல்லோருமே அறிஞ்சிருக்கே!



நெகிழ்கிறார் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது பெறும் அட்டப்பாடி நஞ்சம்மா

‘களகாத்தா சந்தனமேரம் வெகவேகா பூத்திருக்கு...’ கேரளாவின் ஹிட் பாடல் பாடியவர் அட்டப்பாடி நஞ்சம்மா. ‘அய்யப்பனும் கோஷியும்’ மலையாளப் படத்தில் வரும் இந்தப் பாடலைப் பாடியதற்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதினைப் பெறுகிறார் நஞ்சம்மா. இருளர் சமூக ஆதிவாசிப் பெண்.
கேரள மாநிலம் அட்டப்பாடி அகழியிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் இவரின் வீடு. முன்பெல்லாம் இரண்டாவது பெட்ரோல் பங்க் என்ற பெயருள்ள பஸ் நிறுத்தம் இப்போதெல்லாம் அட்டப்பாடி நஞ்சம்மா வீடு பஸ் ஸ்டாப் என்ற பெயராக மருவி நிற்கிறது. சின்ன வீடு. ஆடு, மாடு மேய்ப்புத் தொழில். நாம் போகும்போது கூட, தான் மேய்க்கும் செல்ல ஆடுகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.

வெள்ளந்திப் பேச்சு. வார்த்தைக்கு வார்த்தை கொள்ளை கொள்ளும் சிரிப்பு. இன்னமும் விருது பெற்றதற்கான தகவல் தில்லியிலிருந்து எழுத்துபூர்வமாக  இல்லம் வந்து சேரவில்லை. என்றாலும் இவரின் வீட்டில் அடுத்தடுத்து கூட்டம் நிரம்பி வழிகிறது.
மலையாள சேனல்கள் மாறி மாறி பேட்டிகளை எடுக்கின்றன. ஆதிவாசிப் பெண்கள், மகளிர் சங்கத்தவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். சால்வை போர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். மலையாளம் கொஞ்சம். தமிழ் இன்னமும் கொஞ்சம். மிகுதியாக ஆதிவாசிகளின் இருளர் மொழி. இதுதான் நஞ்சம்மாவின் அடையாளம்.

இந்த விருது பற்றி என்ன நினைக்கிறீங்க அம்மா?

அவார்டு நல்ல சந்தோஷம். எனக்கு மட்டுமில்ல. என் மக்களுக்கு. மக்கள் ஏற்படுத்தித் தந்த சந்தோஷமில்லே... அது அரசாங்கம் கொடுத்ததா நினைக்கலை. ராஜராஜ நம்ம மக்களு. வாரிக் கொடுத்துட்டது இல்லே. இந்த ஊரு, நாடு, உலகமே பாடின பாட்டில்லே அது... அதுதான் பெரிய சந்தோஷம். இப்ப கூடுதல் சந்தோஷம்.
இதை முன்கை எடுத்தவங்க, எனக்கு ஒத்துழைத்து சினிமாவுல அறிமுகப்படுத்துனவுங்க, அவங்களும் என்னைப் போல நம்ம ராஜ்ய மக்களு. எல்லோருக்கும் இந்த விருது போய்ச் சேரணும். நம்ம இருக்கிற வரைக்கும் நம்ம. நம்ம மரிச்சுப் போயிட்டா யாரு..? அதோட நம்ம காணாது போயிருவோம் இல்லியா? அது போல இல்லாம நான் இந்த பாட்டு மூலமா நஞ்சம்மா பாட்டுன்னு பாட வைப்பேன்ல... அது சந்தோஷம்.
 
ஒரு காலகட்டத்திலே ஆளறியாதே நாடறியாதே பேர் அறியாதே இருந்தவள். இந்த ஊர் அறியாம, இந்த வீதி, ரோடு முக்கு அறியாதே இருந்தவள். ஆடு மேய்ச்சு, மாடு மேய்ச்சு யாருமே அறியாம இருந்தவளை இப்ப எல்லோருமே அறிஞ்சிருக்கே! எல்லா மக்களும் சந்தோஷமாயி. அவங்க எல்லோரோட மனசுக்குள்ளேயும் இப்ப நானுண்டு. என்ட மனசுக்குள்ளே எல்லோரும் உண்டு.

வெளியில இறங்கும்போது இத்தனையை நான் விட்டுட்டுப் போகும்ன்னு யாரும் நினைக்கலை. இந்த மக்களைப் போய் கண்டு எத்தனும். அவர்கூட போய் சிரிக்கணும். அவரோட சந்தோஷப்படணும். அப்படியொரு மனசோடதான் நான் வெளியில இறங்கிப் போனது. இந்த ஊர்ல இருக்கிற பொண்ணுக என்னை சோதிக்கும். எனக்கு எந்தா மடி. இந்த நாடிண்ட மக்களுண்டு. அவர்களைக் கண்டுட்டு வரணும். அதுக்காகக் கார் ஏறிப் போனேன். அப்படி போனதால எனக்கொரு நல்ல வாக்கும் கிட்டியது. நாட்டு மக்களை எல்லோரும் அறியணும்னு பாக்கியம் கிடைத்தது.

இத்தனை ஆளுகளை ரெண்டு திவசமா கண்டு வருது. அது இன்னமும் என் கண்ணு நிறைஞ்சு மனசு நிறைஞ்சு கண்டு வரணும்ங்கிறது எனக்குக் கிடைச்ச வாக்காகும். அதுக்குத்தான் இந்த அவார்டுன்னு நான் நினைக்குது. (வானம் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுகிறார்) ‘அய்யப்பனும் கோஷியும்’ பாடல் பாடி நடிச்சு மூணு வருஷம் ஆகி விட்டதே... உங்களுக்கு வேற சினிமா வாய்ப்பு வரலையா?

ஓ... வந்ததே. ஒரே ஒரு படத்துக்குப் போனேன். நானும் பழனிச்சாமியும் (இவர் நஞ்சம்மாவை சினிமாவுக்கு அழைத்துப் போன துணை நடிகர்) மெட்ராஸிற்கு போயி தமிழிலே ஒரு பாட்டுக் கொடுத்தோம். பின்னே அய்யா விஜயன் சாருக்கு செக்கன்கிற படத்துக்குப் பாடியிருக்கேன். அப்புறம் குமாட்டிக நாதினே, ஸ்டேஷன் ஃபைவ்ல இப்படி சீன்லயும் இறங்கிப் பாட்டுலயும் இறங்கிக் கொடுத்திருக்கேன்.

இப்ப எல்லாம் வீட்ல இல்லே நானு. இரண்டு நாள் இருந்தாலே ஆச்சர்யம். அதுக்குள்ளே ஆளுக வந்து கூட்டீட்டுப் போயிடும். இதுவரைக்கும் ஆறு படங்களுக்கு நான் நடிச்சும் கொடுத்தாச்சு. பாட்டும் படிச்சாச்சு. இதுல பாட்டு இஷ்டம் போல கொடுத்திருக்கு.தமிழில் பாடியிருக்கீங்களே... அது எந்தப் படம்?

ம்... அது புதிய படம். இன்னமும் இறங்கீட்டில்லா (வெளியே வரவில்லை). அதனால வெளியே எறங்காத பாட்டை சொல்ல முடியாது! படத்தோட பேரு, டைரக்டர் பேரு... அதுவும் சொல்லக்கூடாதில்ல!இசை டைரக்டர் யாருன்னாவது சொல்லலாமே?

அது எர்ணாகுளம் சார். கூப்பிட்டது மாத்திரம் மெட்ராஸிற்கு. அங்கே அஞ்சு நாள் தங்கி இருந்து பாடிக் கொடுத்தேன். அவங்க கூப்பிட்டது பாட்டுக்கு மாத்திரம்தான். அங்கே போய் பாடியதும் அபிநயிக்க (நடிக்க) கேட்டாங்க. பாட்டும், அபிநயமும் (நடிப்பு) சேர்த்தே கொடுத்துட்டு வர்றேன். தமிழில் மட்டுமல்ல, நம்ம தேசத்துப் படங்களிலும் அப்படித்தான் பாட்டுக்குக் கூப்பிடுவாங்க. அபிநயிக்கவும் சொல்வாங்க. அதையும் செய்துட்டு வர்றேன்.பாட்டுக்கு மட்டும் கூப்பிடுறவங்க இந்தப்பெரிய சிரிப்புப் பார்த்து நடிக்கவும் சொல்லிடறாங்க.

அநேகமாக உங்களை சினிமா ஹீரோயின் ஆக்காம விடாது போல இருக்கு! முந்தறது தமிழா, மலையாளமா என்பதுதான் கேள்வி. இல்லீங்களா?!

இதே ‘அய்யப்பன் கோஷி’ எடுத்துட்டு சச்சி சாரு சொன்னாரு... ‘பாட்டு மாத்திரம் பத்தாது. படத்துல அபிநயிக்கணும்’னு. நானும் அபிநயிச்சேன். எனக்கு சில சீன்கள் தோணும். அதை நான் சொல்லுவேன். அதை நீங்க செய்யோணும். அது ஹிட் ஆகி வந்தாலும், தெட்டாகி வந்தாலும் அதை செமிக்கோணும். அப்படி அவர் சொன்னதுக்காக படத்துல இறங்கினவள் நான். அது இப்ப ஹிட் ஆகிப் போச்சு.

அந்தப்படத்துலயும் ஒரு பாட்டுப் படிக்கத்தான் கூப்பிட்டாரு. எம் பாட்டு மனசுல பதிஞ்சு அதுவே மூணு பாட்டா மாறிப் போச்சு. அதுல அம்மா கேரக்டர்னு கதையில இல்லவே இல்லை. எனக்காக ஒரு அம்மா கேரக்டரை உருவாக்கினாரு. அதேதான் இப்ப நான் போற படங்களில் எல்லாம் நடக்குது.

இப்படி இப்ப அடிக்கடி சினிமா ஷூட்டிங் என்று போயிடறீங்களே... உங்க ஆடு, மாடு எல்லாம் யார் பார்க்கறது..?

மருமகள் உண்டு. அவளுக்கு துணையா ஆள்காரங்க யார்கிட்டவாவது சொல்லிட்டுத்தான் போவேன். நான் போயிட்டு திரும்பி வர்றதுக்குள்ள இந்த ஆடு, மாடு எல்லாம் ஏங்கிப் போயிரும். அது எளச்சுப் போயிரும். அது தீவனத்துக்கு இல்ல. நான் பாட்டுப் பாடிட்டேதான் மேய்ப்பேன். நான் வந்து ரெண்டு பாட்டுப் பாடினாத்தான் அதுக சந்தோஷமா சாப்பிடும். பாட்டுப் பாடிட்டே பால் கறந்தாத்தான் மாடு பால் கொடுக்கும்!

நம்ம முதல்ல நம்மளதான் பார்க்கணும். உங்களை எல்லாம் பார்க்கறபோது எனக்கொரு சந்தோஷம். அதுபோல நம்மளு வளர்த்தின பசுவுகளானாலும், ஆடுகளானாலும், பட்டிக்குட்டிகள் ஆனாலும், கிர்ஷிக்குட்டிகள் ஆனாலும் நம்மளைப் பார்க்கும்போது அதுக்கொரு சந்தோஷம்.

இந்த விருதைக் கொடுக்கறவங்க யாருன்னாவது தெரியுமா? யாராவது சொன்னாங்களா?  

(யோசிக்கிறார்) நம்மண்ட ராஜக்கா ராஜக்கா மாதிரி இருக்கன சேலத்துல ராஜக்காமாரானு கொடுப்பாங்க. நம்மண்ட லாஸ்ட் நாடு. தெல்லி ராஜாவானு அவரு. பெரியவங்க. மந்திரிமாருக. ஏது கொடுத்தாலும் நான் வாங்கி எடுத்துட்டு வாரேன்.நீங்க சினிமாவுக்குப் போயாச்சு... பாட்டுப் படிச்சாச்சு... நடிக்கவும் செஞ்சாச்சு. ஐந்தாறு பட வாய்ப்புகளும் வந்துடுச்சு. இந்தியாவிலயே பெரிய விருதும் வந்தாச்சு. இன்னமும் இந்த பழைய சின்ன வீட்டுலயே இருக்கீங்களே? பணம் நிறைய சம்பாதிக்கலையோ?

அய்யோடா. அது இருபதாயிரம் ரூபாய் தந்தா அது வீட்டு செலவே செய்யும். குட்டிகளுக்கு ஏதாச்சும் வாங்கிக் கொடுக்கும். படிக்க வைக்கும். அவங்களோட ஜோலிக்குக் கொடுக்கும். நம்ம வெறும் இருபதாயிரம் ரூபாயை வச்சுகிட்டு வீடு கட்ட முடியுமா? அந்த வீடு நான் இரண்டரை லட்சத்துக்கு கவர்மெண்ட்ல லோன் வாங்கிக் கட்டிய வீடாகும்!
இனி நம்ம குறைச்சுக் குறைச்சு ஏதாச்சும் கிட்டினா அதை வச்சு குறைச்சுக் குறைச்சு வீடு ரிப்பேரை சரியாக்கும்.

அவ்வளவுதான். நம்மளுக்குத் தோணினா மாதிரி நம்மளுக்கு செய்யும். நம்மள வீடு அது இல்லை. அங்கே இருக்கறதுதான். நம்ம வீடு கீழே இருக்கு. நம்ம எத்தனை சம்பாதிச்சாலும், எத்தனை உயரம் போனாலும், எத்தனை பேர் கொண்டாடினாலும், ஏது வீடு கட்டினாலும், ஏது உண்டாக்கினாலும் நம்ம கடைசியில போய் சேர்றது இதுலயானு. (நிலத்தடியைக் காட்டுகிறார்) நம்ம சொந்த வீடு இல்லே.

உங்க வீட்ல எத்தனை பேர் இருக்காங்க?

பொம்பளைப் புள்ளை ஒண்ணு. பையன் ஒண்ணு. பையன் சின்ன ஜோலி கிடைச்சு அகழியில ஐடிபில இருக்கு. பொண்ணு கட்டிக் கொடுத்துடுச்சு. எங்க அண்ணன் பையனுக்கு புள்ளையக் கொடுத்தது. அவ அங்கே வாழறதில்லை. மருமகனும், புள்ளையும், குழந்தையும் இங்கேதான் இருக்கு. ரொம்ப காலம் கழிச்சுக் கிட்டின குழந்தை. நான் எங்கியும் விடறதில்லை. என் கண்ணுலயே வச்சுப் பார்த்துக்கறேன்.

உங்க இருளர் சமூக மக்கள் உங்களுக்கான விருது பற்றி என்ன நினைக்கிறார்கள்?

எல்லாருக்கும் சந்தோஷம்தான். ஒரு காலத்துல இந்த அட்டப்பாடிய யாருக்கும் தெரியாது. எங்க ஜனங்களை அறியில்லா. ‘அய்யப்பன் கோஷி’ வந்ததும் எல்லா லோகத்துக்கும் தெரிஞ்சுடுச்சு. இப்ப சினிமா ஷூட்டிங்கிற்கு, பாட்டிற்கு, ஆட்டத்துக்கு எதை எடுக்கவும் அட்டப்பாடிக்குத்தான் எல்லோரும் வர்றாங்க. அவங்களுக்கும் சந்தோஷம். நம்ம மக்களுக்கும் வலிய சந்தோஷம். எல்லோரும் வரட்டும்!

கா.சு.வேலாயுதன்