Must Watch



கோட்ஸே

ஒரு வித்தியாசமான அரசியல் திரில்லர் படமாக மிளிர்கிறது ‘கோட்ஸே’.  ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது இந்த தெலுங்குப் படம். லண்டனில் பெரிய பிசினஸ்மேன் கோட்ஸே. தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்களைச் சந்திப்பதற்காக இந்தியாவுக்கு வருகிறார் கோட்ஸே. அவருடன் படித்த நண்பர்கள் யாரும் நல்ல வேலையில் இல்லை. சரியான வேலை இல்லாமல் கோட்ஸேயின் நெருங்கிய நண்பன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரை வெகுவாகப் பாதிக்கிறது.

தன் நண்பர்களைப்போல படித்த படிப்புக்கு உகந்த  வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார் கோட்ஸே. அதனால் லண்டனில் உள்ள நிறுவனங்களை விற்றுவிட்டு, புதிதாக தொழில் தொடங்க இந்தியாவுக்கு வருகிறார். இந்தப் புதுத்தொழிலில் கல்லூரி நண்பர்களையும் சேர்த்துக் கொள்கிறார். நிறுவனம் அமைப்பதற்கான கட்டுமான வேலைகள் துரிதமாக நடக்கின்றன.

கோட்ஸேயின் பிசினஸுக்குள் புகுந்து லாபம் பார்க்க அரசியல்வாதிகள் முற்படுகின்றனர். அரசியல்வாதிகளுக்கு வளைந்து கொடுக்காததால் தன் மனைவியையும், நண்பர்களையும், பிசினஸையும் இழக்கிறார் கோட்ஸே. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கோட்ஸே என்னவிதமான எதிர்வினையாற்றுகிறார் என்பதே திரைக்கதை. படத்தின் இயக்குநர் கோபி கணேஷ்.

த  கிரே மேன்

சுமார் 1500 கோடி ரூபாய் பட்ஜெட், ‘அவெஞ்சர்ஸ்’ இயக்குநர்களின் படைப்பு, முக்கிய தோற்றத்தில் தனுஷ்... என பல எதிர்பார்ப்புகளுடன் ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கும் ஆங்கிலப்படம், ‘த கிரே மேன்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. கொலைக் குற்றத்துக்காக சிறையில் இருக்கிறான் நாயகன். அவனை விடுதலை செய்து ‘சியாரா’ என்ற புரோகிராமில் சேர்த்துக்கொள்கிறது சிஐஏ.  ஜேம்ஸ்பாண்ட் 007 போல, சியாரா சிக்ஸ் என விஸ்வரூபம் எடுக்கிறான் நாயகன்.

18 வருடங்கள் ஓடுகின்றன. நாட்டின் ரகசியங்களை விற்கப்போகும் ஒருவனைக் கொலை செய்யும் மிஷனில் இறங்குகிறான் சியாரா சிக்ஸ். அவன் நாட்டின் ரகசியங்களை விற்கவில்லை. சிஐஏவின் ஊழல் ரகசியங்கள் அவனிடம் இருக்கிறது. மட்டுமல்ல; அவனும் ஒரு காலத்தில் சியாரா புரோகிராமில் இருந்தவன்.

சிஐஏவின் உண்மை முகம் தெரியவர, உஷாராகிறான் சியாரா சிக்ஸ். உடனே சியாரா சிக்ஸை வீழ்த்த இன்னொரு கொலைகாரனை சிஐஏ நியமிக்க, அனல் பறக்கிறது திரைக்கதை. ஆக்‌ஷன் பிரியர்களுக்கு செம விருந்து படைத்திருக்கிறது இந்தப் படம். சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் மனதில் நிற்கிறார் தனுஷ். படத்தை ரூசோ சகோதரர்கள் இயக்கியிருக்கின்றனர்.

ஜோ அண்ட் ஜோ

‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகியிருக்கும் ஓர் அழகான மலையாளப்படம் ‘ஜோ அண்ட் ஜோ’. பேபி - லில்லி தம்பதியினரின் மூத்த மகள் ஜோமோள். இளைய மகன் ஜோமோன். இருவருமே எல்லோராலும் ஜோ என்றே அழைக்கப்படுகின்றனர். தம்பிக்கு ஒரு ஆண் என்பதால் தன்னைவிட வீட்டில் அவனுக்குத்தான் செல்லம் அதிகம். தான் ஒரு பெண் என்பதால் எல்லா வேலைகளையும் தன் தலையில் கட்டிவிடுகிறார்கள் என்று அக்கா ஜோ நினைக்கிறாள். தம்பியின் சின்னச் சின்ன தவறுகளைக் கண்டுபிடித்து சண்டை போடுகிறாள். தம்பியும் பதிலுக்கு எப்போதுமே அக்காவுடன் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறான்.  

இந்நிலையில் டியர் ஜோவுக்கு என்று ஒரு காதல் கடிதம் தம்பியின் கைக்குக் கிடைக்கிறது. அவன் தன் அக்காவுக்கு வந்த கடிதம் என்று நினைத்து அதை கசக்கி வீசிவிடுகிறான். அந்தக் கடிதம் அக்கா கைக்குக் கிடைக்க அவள் தம்பி யாரையோ காதலிக்கிறான் என்று நினைக்க, வெடிக்கிறது நகைச்சுவை திரைக்கதை. அக்காவாக நிகிலா விமலும், தம்பியாக மேத்யூ தாமஸும் கச்சிதம். இயக்கம் அருண் டி ஜோஸ்.

எஃப் 3

எழுபது கோடி பட்ஜெட்டில் உருவாகி, 134 கோடியை அள்ளிய தெலுங்குப் படம், ‘எஃப் 3’. இதன் முந்தைய பாகமும் வசூலைக் குவித்தது குறிப்பிடத்தக்கது. இப்போது தமிழ் டப்பிங்கில் ‘சோனி லிவ்’வில் காணக்கிடைக்கிறது ‘எஃப் 3’.  நடுத்தரக் குடும்பத்தின் மூத்த மகன் வெங்கி. ஆர்டிஓவில் வேலை செய்கிறான். அவனுடைய தம்பி, தங்கைகளுக்கு ஏகப்பட்ட கனவு. வெங்கிக்கும் பெரிய பணக்காரன் ஆகவேண்டும் என்று ஆசை. ஆனால், வெங்கிக்கு இரவானதும் சரியாக கண் தெரியாது. வெங்கியின் நண்பன் வருண். அவனுக்கென்று யாருமில்லை. எப்படியாவது பெரிய பணக்காரன் ஆக வேண்டும் என்பதுதான் வருணின் லட்சியமும் கூட.

இப்படி பணத்தைத் தேடிப்போகும்போது பணக்காரப் பெண் போல நடிக்கும் ஹனியைச் சந்திக்கிறான் வருண். அவளைத் திருமணம் செய்தால் பெரிய பணக்காரனாகிவிடலாம் என்று வெங்கியுடன் சேர்ந்து பிளான் போடுகிறான். ஹனியை காதல் வலையில் விழ்த்த வருணுக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. கடன் வாங்கியாவது உதவுகிறேன் என்கிறான் வெங்கி. வருண் மற்றும் வெங்கியின் திட்டம் வெற்றி பெற்றதா என்பதே கலகலப்பான திரைக்கதை. வெங்கியாகப் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் வெங்கடேஷ். படத்தின் இயக்குநர் அணில் ரவிபுடி.

தொகுப்பு: த.சக்திவேல்