பாவலர் பிரதர்ஸுடன் இணைந்து தாத்தா ஆர்மோனியம் வாசித்துள்ளார்!
இசை அமைப்பாளர் சாம் சி.எஸ். Open Talk
தமிழ் சினிமாவில் சமீபத்திய படங்களின் இசை உங்கள் கவனத்தை ஈர்த்திருந்தால் அதில் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்சின் பங்களிப்பு நிச்சயம் இருந்திருக்கும். இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்று பல தளங்களில் இயங்கிவரும் இவருடைய பங்களிப்பு தமிழ் சினிமாவில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
 ‘அம்புலி 3D’ படத்தில் ஆரம்பித்த இவருடைய இசைப் பயணத்தை ‘விக்ரம் வேதா’, ‘கைதி’, ‘ராக்கெட்ரி’ உட்பட ஏராளமான வெற்றிப் படங்கள் அலங்கரித்துள்ளன. சமீபத்தில் வெளியான ‘சூழல்’ வெப் சீரீஸ், ‘ராக்கெட்ரி’ போன்ற படங்களின் மறக்க முடியாத பின்னணி இசைக்காக அதிகம் கவனம் பெற்றார். தமிழ், தெலுங்கு, இந்தி என்று பிஸியாக இருக்கிறார்.  உங்களிடம் இசைஞானம் இருக்கிறது என்று முதன் முதலில் அடையாளம் கண்டவர் யார்? அம்மாதான். சர்ச் வாழ்க்கைதான் எனக்கு இசை மீதான ஆர்வத்தைத் தூண்டியது. சர்ச்சில் கோயர் என்ற பாடல் பாடும் குழு இருக்கும். சர்ச்சுக்கு வரும் பலருடைய கவனம் பாடகர் குழு மீதுதான் இருக்கும். அப்படி பார்த்தவர்களில் நானும் ஒருவன். மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க, கோயர்ல சேர்ந்தேன். தாத்தா ஆர்மோனியம் ப்ளேயர். தாத்தா மூணாறைச் சேர்ந்தவர் என்பதால் பாவலர் பிரதர்ஸுடன் இணைந்து பல கச்சேரிகளில் வாசித்துள்ளார். தாத்தாவின் ஆர்மோனியப் பெட்டியும் எனக்குள் இசை ஆர்வத்தைத் தூண்டியது என்று சொல்லலாம்.
 வீட்ல ஆள் இல்லாதபோது ஆர்மோனியம் எடுத்து வாசிக்க ஆரம்பித்துவிடுவேன். என்னுடைய அம்மா, தாத்தாவிடம் ‘எனக்கு எதாவது சொத்து தருவதாக இருந்தால் ஆர்மோனியம் பெட்டியை மட்டும் என் புள்ளைக்கு கொடுங்க’ என்று சொல்லி ஆர்மோனியப் பெட்டியை வாங்கிக் கொடுத்தார். கொஞ்ச நாளில் கீ போர்டு கத்துக்கிட்டேன். இதுவரை நான் எங்கும் இசை கற்கவில்லை. ஆனால், ராகம், தாளம் பற்றிய ஞானம் உண்டு. ஒவ்வொரு படமும் எனக்கு இசையைக் கற்றுத் தருகிறது.
ஒரு விபத்து மாதிரிதான் இசைத் துறைக்கு வந்தேன். நான் சென்னை வந்த புதிதில் எனக்கு அடையாளமே இருக்காது. அதனால் பல அசெளகரியங்களைச் சந்தித்தேன். அதுக்காகவே சாம் சி.எஸ். என்ற பெயருடன் ஒரு கடிதம் வந்தால் என்னை வந்து சேரவேண்டும் என்ற வெறியுடன் இசைத் துறைக்கு வந்தேன். இப்போ, கூகுளில் என் பெயரைத் தேடினால் உங்களுக்கு என்னைப் பற்றிய விவரங்கள் கிடைக்கும். இந்த நிலைமைக்குக் கொண்டுவந்த கடவுளுக்கு நன்றி.
சினிமாவில் என்னுடைய முதல் படம் ‘அம்புலி’. பிறகு ‘மெல்லிசை’ பண்ணினேன். அந்தப் படங்கள் பண்ணும்போது நான் செய்து வந்த ஐடி வேலையை விட்டுவிட்டேன். என்னுடைய ஆரம்பப் படங்களில் பேர் கிடைத்தது, பணம் கிடைக்கவில்லை. சர்வைவலுக்காக விளம்பரங்கள், தேர்தல் பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன்.
பாரதிதாசனார் பல்கலைக் கழகத்தில் ‘சிறந்த பாடகர்’ என்ற அங்கீகாரம் பெற்றுள்ளேன். இங்கு ஒரு ரிக்கார்டிங்கில் மியூசிக் நாலெட்ஜ் சுத்தமா இல்லை என்று ரிஜெக்ட் பண்ணிவிட்டார்கள். ஒருமுறை வாய்ப்பு கொடுத்துவிட்டு அதில் சிறு தவறு நடக்கும்போது மட்டம் தட்டி அனுப்பிவிடுகிறார்கள். எனக்கு நேர்ந்த இந்த நிலை பிறருக்கு வரக்கூடாது என்பதற்காக என்னுடைய சிங்கர்ஸ் தவறு செய்தாலும் என்கரேஜ் பண்ணி பாட வைக்கிறேன்.
ரீமேக் - ரீமிக்ஸ் படங்களுக்கு வேலை செய்வது பிடிக்குமா?
‘பகலும் பாதிராவும்’ என்ற மலையாளப் படம் பண்ணுகிறேன். அந்தப் படம் தெலுங்கு, கன்னடத்திலும் வந்துள்ளது. ‘டெம்பர்’ என்ற படத்தின் ரீமேக் ‘அயோக்யா’ வாக வந்தது. இந்தப் படங்கள் பண்ணும்போது ஒரிஜினல் பார்க்கமாட்டேன். ‘விக்ரம் வேதா’, ‘கைதி’ இந்திக்கு ரீமேக்காகியுள்ளது. இந்தப் படங்களுக்கு ஒரிஜினல் இசை நான்தான் என்பதால் அதைத் தவிர்க்காமல் அந்தப் படங்களுக்கு இசை அமைக்க முடியாது. அந்த வகையில் ரீமேக் பண்ணும்போது சுயாதீனமாக பண்ணுவேன். ரீமிக்ஸ் பாடல்களில் எனக்கு உடன்பாடு கிடையாது.
ஒரு மியூசிக் டைரக்டரின் முக்கிய வேலை, முக்கிய நோக்கம், அது எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மதிப்பீடு செய்ய முடியுமா?
என்னைப் பொறுத்தவரை நூறு சதவீதம் உணர்ந்து வேலை செய்வேன். மியூசிக்ல எது சேலன்ஜ் என்றால் அடிதடி, அழுகை போன்ற டெம்ப்ளேட்டில் வேலை செய்வது அல்ல. தேவை எங்கு வரும் என்றால் ஒரு புலனாய்வுக் கதையில் ஒரு கொலை நடக்கும். ஆடியன்ஸ் இவர்தான் கொலைகாரன் என்று காட்சிவழியாக யூகித்துவிடுவார்கள்.
இசை வழியாக நான் எப்படி கன்வே பண்ணுவேன் என்றால் வில்லனுக்கு, வில்லன் மியூசிக்தான் கொடுத்திருப்பேன். வடிவேல் அழும்போது ரசிகர்கள் சிரிப்பார்கள். அதே வடிவேலு க்ளைமாக்ஸில் ஹீரோவுடன் சேர்ந்து அழும்போது ரசிகர்களும் சேர்ந்து அழுவார்கள். மியூசிக் அந்த வேலையைச் செய்திருக்கும். ஒரு பாடலுக்கு இசை அமைப்பதைவிட இதை அதிகமாக வேல்யூ பண்ணுவேன்.
ஒரு படத்துக்கான இசை அது உருவான படத்துடன் இணைந்திருக்க வேண்டுமா அல்லது படங்களுக்கு வெளியே ஒரு உணர்வுபூர்வமாக இருக்க வேண்டுமா?
கதை, கதை மாந்தர்கள்தான் உணர்வுகளை ஃபிக்ஸ் பண்ணுவார்கள். ஏனெனில், ‘கைதி’ படத்தில் ஜெயிலில் இருந்து வரும் ஹீரோ, மகளைச் சந்திக்கப் போவார். ஆனா, அதற்கு நான் மாஸ் மியூசிக் பண்ணியிருப்பேன். அது தேவையா என்று கேட்கலாம். ஆனா, ஆடியன்ஸ் ஒரு அதிர்வை எதிர்பார்ப்பார்கள். சில கதைகளுக்கு சைலன்ஸ்தான் சிறப்பாக இருக்கும். இதை ராஜா சார் படங்களில் கவனிக்கலாம். விஜய், அஜித் சார் படங்களுக்கு தேவை இருக்கிறதோ, இல்லையோ அதிரடி மியூசிக் பண்ணுவதைத் தவிர்க்க முடியாது.
மியூசிக் என்பது கேக் மீது வைக்கும் செர்ரி பழம் போல் இருக்கும். கேக் என்பது ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகள். என்னுடைய படங்களில் இசை படத்தை உயரத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. சினிமா கிரியேட்டிவ் ஃபீல்ட். என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். ‘விக்ரம் வேதா’வில் வேதாவை போலீஸ் துரத்தும். வேதா மொட்டை மாடியிலிருந்து தப்பித்துச் செல்வார். அந்த இடத்தில் ஜாலியான மியூசிக் பண்ணியிருப்பேன்.
‘வஞ்சகர் உலகம்’ படத்தில் ஒரு கொலைக் காட்சியில் ஜாலியான மியூசிக் பண்ணியிருப்பேன். பழி தீர்க்க காத்திருக்கும் ஒருவர் தன்னுடைய எதிரியை வீழ்த்தும்போது சந்தோஷப்படுவார். சிச்சுவேஷனுக்கு பண்ணுவதாக இருந்தால் ஃபாஸ்ட் பீட்ல பண்ணணும். கேரக்டருடைய மனநிலைக்கு பண்ணுவதாக இருந்தால் ஜாலியாக பண்ணணும். இந்த அப்ரோச்தான் என்னுடைய ஸ்டைல். இசைக்கான யோசனைகள் எங்கிருந்து வரும்; நீங்கள் எங்கிருந்து தொடங்குவீர்கள்... உங்கள் யோசனைகளை எப்படி வடிவமைப்பீர்கள்?
இசை என்பது உணர்வுபூர்வமானது. என்னுடைய வாழ்க்கையில் பசி, பட்டினி, உயிர் இழப்புகளைப் பார்த்துள்ளேன். தாய்ப் பாசம் என்றால் என்ன, வறுமையில் இருப்பவரின் வேதனை என்ன என்று தெரியும். சினிமா என்பது எங்கேயோ யாருக்கோ நடந்ததாக இருக்கும். அதை நான் கடந்து வந்திருப்பேன். அப்போது நான் என்ன மனநிலையில் இருந்தேன் என்பதை நினைவுக்குக் கொண்டு வந்து வேலை செய்வேன். ஹீரோ கோட் சூட் அணிந்திருப்பவர் என்றால் கிடார், ஆடு, மாடு மேய்ப்பவர் என்றால் புல்லாங்குழல் யூஸ் பண்ணுவேன். கருவிகள் மாறுமே தவிர எமோஷன் மாறாது.
பீட்டர் ஹெயின் இயக்கிய வியட்நாம் படம் பண்ணினேன். படம் பேர் ‘சாம்ஹோய்’. சீனாவிலும் வெளிவந்தது. அப்பா - மகள் கதை. நம்மூர் ராஜ்கிரண் நடித்தால் எப்படி இருக்குமோ அது மாதிரி இருக்கும். நடிகர்களின் தோற்றம் மாறுமே தவிர எமோஷன் ஒன்றுதான்.
மியூசிக் டைரக்டருக்கு சுதந்திரம் இருக்கிறதா..?
முதலில் டைரக்டரை திருப்திப்படுத்த வேண்டும். தயாரிப்பாளரை திருப்திப்படுத்த பெரிய முயற்சி எடுக்க வேண்டும். இப்போது 15 - 25 வரை உள்ளவர்கள்தான் மியூசிக் கேட்கிறார்கள். மற்றவர்களுக்கு ஃபோன் பில், ஈ.எம்.ஐ., வாடகை என்று ஃபேமிலி கமிட்மென்ட் இருக்கிறது. பொதுவாக, யூத் ஆடியன்ஸை திருப்திப்படுத்த இசையமைக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம். வெற்றி கொடுத்தவர்களுக்கு சுதந்திரம் அதிகமாக இருக்கும்.
புஷ்கர் - காயத்ரி, லோகேஷ் கனகராஜ் என்று பல இயக்குநர்களுடன் வேலை செய்துள்ளீர்கள். எந்த இடத்தில் அவர்களுக்குள் ஒற்றுமை இருக்கும்; எந்த இடத்தில் அவர்களுக்குள் வித்தியாசம் இருக்கும்?ஒவ்வொருவருக்கும் தனித்துவம் உண்டு. அவரவர் தாட்ஸ் வேறு. புஷ்கர்- காயத்ரிக்கு குத்துப் பாடல் அறவே பிடிக்காது. ஆனால், தேவை இருந்ததால் ‘டஸக்கு... டஸக்கு...’ பாடலை வைத்தோம். லோகேஷ் கனகராஜ் பாடலே வேண்டாம் என்று சொல்வார். தேவை இருந்தால் மட்டுமே பாடல் வைப்பார். அந்த வகையில் யாரையும் ஒப்பிட்டுப் பார்க்கமாட்டேன்.
சாம்.சி.எஸ். என்றால் பின்னணிதான் ஞாபகம் வருகிறது. ஹிட் பாடல்கள் அதிகம் வருவதில்லையே?
என்ன பண்ணுவது... கொலை, கொள்ளை, கற்பழிப்பு கதைகள்தான் வருகிறது. இங்கு கன்னா பின்னாவென்று புரியாத மொழியில், ஆபாச வார்த்தைகள் கொண்ட பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்தால்தான் பெரிய மியூசிக் டைரக்டர் என்று சொல்கிறார்கள். சின்ஸியராக வேலை பார்க்கிறவர்களைக் கண்டு கொள்வதில்லை. ஹிட் என்பது பாடல்கள் மட்டுமோ அல்லது அதிகம் பேர் பார்த்துள்ளார்கள் என்பதோ இல்லை.
செய்தி: எஸ்.ராஜா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|