ஆண் பெண் உறவு பற்றிதான் பேசியிருக்கோம்! ‘வட்டம்’ குறித்து சொல்கிறார் ‘மதுபானக் கடை’ கமலக்கண்ணன்
‘மதுபானக் கடை’ படத்தை தமிழ்த் திரையுலகம் அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாது. அந்தளவுக்கு தாக்கத்தை ஒயின்ஷாப் உள்ளேயும் படம் பார்த்தவர்கள் மத்தியிலும் ஏற்படுத்திய படம் இது.  எந்த அங்கீகாரத்தையும் சொந்தமாக்கிக் கொள்ளாமல் முதல் டிஜிட்டல் திரைப்படமாக வெளியாகி தமிழகத்தில் பல்வேறு விதமான அதிர்வலைகளை ஏற்படுத்திய அப்படத்தின் இயக்குநர் கமலக்கண்ணன், பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு வித்யாசமான கதைக்களத்துடன் வந்திருக்கிறார். அதுதான் ‘வட்டம்’.‘‘காசு செலவு செய்து படம் பார்க்க வர்ற மக்கள் அவங்க காசு வீணாச்சுன்னு நினைக்கக்கூடாது. அதனால்தான் பத்து வருஷம் கழிச்சு பொறுமையா அடுத்த கதை, அடுத்த படம்...’’ பக்குவமாகப் பேசுகிறார் கமலக்கண்ணன்.  எதனால் இந்தத் தலைப்பு?
ஒவ்வொரு மனுஷனும் தனக்குள்ள, தன்னைச் சுற்றி இப்படி ஏதாவது ஒரு வட்டத்தைப் போட்டுக்கிட்டுதான் வாழ்றான். எங்க சுத்தினாலும் நீ இங்க வந்துதான் ஆகணும்னு சொல்வோம் இல்லையா... அதுதான் கரு.
 அதனால் படத்துக்கு ‘வட்டம்’னு பெயர். கதைக்களம் எதை சார்ந்து பயணிக்கும்?ஓர் ஆணும் பெண்ணும் பார்க்கவே முடியாத காலகட்டத்திலே கூட நிறைய பேச்சுக்கள் இருந்துச்சு, நிறைய உணர்வுப் பகிர்தல் இருந்துச்சு. இன்னைக்கு டெக்னாலஜி வளர்ந்து ஒரு ஆணும் பெண்ணும் ரொம்ப சுலபமா பேசிக்கக்கூடிய எல்லா வாய்ப்புகளும் இருந்தும்கூட பேசிக்கறதே இல்லை.
பேசாத இந்தக் காரணத்தாலதான் இன்னைக்கு உறவுகளுடைய ஆழம் புரியாம எதுக்கெடுத்தாலும் பிரிவு, முறிவுன்னு ஆகிடுச்சு. அதை அழுத்தமா சொல்லக்கூடிய கதைதான் ‘வட்டம்’.
ஒரு படம் வெளியாகி சமூகத்தை முழுமையா திருத்திடும்னு சொல்ல முடியாது. ஆனால், நிச்சயம் தூண்டும். குறைஞ்ச பட்சம் இந்தப் படத்தைப் பார்த்துட்டு வீட்ல இருக்கும் குழந்தைகளாவது ‘அப்பா, அம்மா, ஏன் நீங்க பேசிக்கவே மாட்டேங்கறீங்க, போங்க உட்கார்ந்து பேசுங்க’னு சொல்லவாவது வைக்கும்னு நம்புறேன்.
ஊரையே திரும்பிப் பார்க்க வைப்பது போல் ஒரு படத்தைக் கொடுத்துட்டு எங்க போனீங்க..?
பத்து வருஷம் நான் கஷ்டப்பட்டேன்... ஒரு கதை எழுதி வச்சுட்டு தயாரிப்பதற்காக தேடிக்கிட்டு இருந்தேன்... இப்படி எல்லாம் சொல்ல விரும்பல. இடைல நாங்க குடும்பமா சேர்ந்து அடுத்த படம் முடிச்சிட்டோம். குழந்தைகள் சார்ந்த ‘குரங்கு பெடல்’ படம். அதுவும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள்ல இருக்கு.
தொடர்ந்து அடுத்த படம் செய்ய என்கிட்ட கதை இல்ல. ‘மதுபானக் கடை’னு ஒரு கான்செப்ட் கிடைச்சது. அந்தப் படமும் என்னுடைய கதை கிடையாது. ‘குரங்கு பெடல்’ படமும் அப்படித்தான். இப்ப ‘வட்டம்’ படத்தின் கதையையும் னிவாசன் கவிநயம்தான் எழுதியிருக்கார். நான் படமாக்கிட்டேன்.
பொதுவா எனக்கு கதை எழுதுவதில் ஆர்வம் கிடையாது. நானே கதை எழுதி நானே படம் செய்யும்போது எனக்குனு ஒரு டெம்ப்ளேட் உருவாகி நான் இப்படித்தான் படம் செய்வேன்னு ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள வர வாய்ப்பிருக்கு. அப்படி என்னை நானே நிறுத்திக்க விரும்பல.
கதைகளை வாங்கி படம் செய்யும்போது அதுல ரெண்டு மூணு பேருடைய எண்ணங்கள் ஒன்று சேரும், புது விஷயங்களும் உருவாகும். ‘வட்டம்’, இப்ப இந்தக் காலகட்டத்திலே சொல்ல வேண்டிய கதையா தோணுச்சு. இந்தக் கதையை எடுத்துகிட்டு நாங்க எங்கயும் அலையவே இல்ல. ரெண்டு புரொடியூசர்கிட்ட கொடுத்தேன். ரெண்டு பேருமே தயாரிக்க முன்வந்தாங்க. அதிலே ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்ஆர் பிரகாஷ் பாபுவும் எஸ்ஆர் பிரபுவும் இப்ப இந்தப் படத்தை தயாரிச்சிருக்காங்க. ‘மதுபானக்கடை’ முதன் முதலில் வெளியான டிஜிட்டல் திரைப்படம். ஆனா, அதிகாரபூர்வமா எந்த அங்கீகாரமும் வாங்கிக்கல. அதன்மூலமா கிடைக்கிற புகழ் மேல பெரிய ஆர்வம் இல்ல. படம் எடுத்தாச்சு... கொடுத்தாச்சு... அந்தப் படம் என்ன வேலை செய்யணுமோ அதையும் இப்ப வரைக்கும் செய்திட்டு இருக்கு. அந்தப் படம் பேசப்பட்டதால்தான் இப்ப நீங்க என்னை வந்து சந்திச்சிருக்கீங்க. அதுதானே ஒரு இயக்குநருக்கு தேவை!
உங்களைப் பற்றி சொல்லுங்க..?
நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே ஈரோட்டுல. அப்பா ஈரோட்டில் தாசில்தார், அம்மா தலைமையாசிரியை. குடும்பமே சினிமா குடும்பம். தம்பி கதையாசிரியர் நலன் சார்கிட்ட இருந்தான். அண்ணன் ‘மதுபானக் கடை’, ‘குரங்கு பெடல்’ படத்தின் சினிமாட்டோகிராபர். பள்ளி வாழ்க்கை முழுக்கவே ஈரோடு... காலேஜ் வாழ்க்கை முழுக்க கோயம்புத்தூர். விஸ்காம் முடிச்சிட்டு விளம்பரப் படங்கள் எடுத்துட்டு இருந்தேன். சரியான பருவ காலத்துல கோயம்புத்தூர் வந்து சேர்ந்ததால் இப்ப வரைக்கும் நான் ஒரு கோவையனாதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்.
என் மனைவி சவிதா கல்லூரிக் காலத் தோழி. நிறைய பேசியிருக்கோம்; இப்ப வரைக்கும் பேசிக்கிட்டு இருக்கோம். அப்ப அவங்க தோழியாதான் இருந்தாங்க. எனக்கும் வேறு ஒரு ரிலேஷன்ஷிப் எல்லாம் இருந்துச்சு. காலேஜ் எல்லாம் முடிஞ்சு என்கூட அவங்க ப்ரொஃபஷனலா பயணிக்க ஆரம்பிச்சாங்க.
ஒரு கட்டத்தில் எனக்கும் பிரேக்கப். அடுத்து வேலை, சவிதாவின் நட்பு. எங்களுடைய நட்பு கொஞ்சம் கொஞ்சமா நெருக்கமாக ஆரம்பிச்சது. அப்புறமா ஏன் லிவ்வின்ல இருக்கக் கூடாதுனு தோணுச்சு. ரொம்ப நாள் ரொம்ப காலங்கள் நாங்க லிவின் ரிலேஷன்ஷிப்ல இருந்தோம். அப்புறம் வீட்ல இருக்கவங்க எல்லாரும் சேர்ந்து இதுக்கு மேலயும் நீங்க கல்யாணம் பண்ணிக்காம சேர்ந்து வாழக்கூடாதுனு சொன்னாங்க. சமூகத்துக்காகவும் குடும்பத்துக்காகவும் 2010ல் திருமணம் ஆச்சு.
நாங்க ரெண்டு பேரும் நிறைய பேசிக்கிட்ட காரணம்தான் இத்தனை வருட காலங்களும் எங்களுக்குள்ள அந்த பேச்சு நிக்கலைன்னு தோணுது. என் மனைவி சவிதா எனக்கு முதல்ல ஒரு நல்ல தோழி, நல்ல வொர்க்கிங் பார்ட்னர், அப்புறம்தான் காதலி, மனைவி. மான்டேஜ் புரொடக்ஷன் மீடியா மூலமா பல விளம்பரப் படங்கள், கோயம்புத்தூரில் ஃபிலிம் அசோசியேஷன், மற்றும் ‘மதுபானக் கடை’ படம் வரை தயாரிப்பு சவிதாதான்.
‘வட்டம்’ படத்திற்குள் சிபிராஜ் வந்தது எப்படி..?
சத்யராஜ் சார்கிட்ட ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான வில்லத்தனம் பார்க்கலாம். ஆனால், எல்லாத்துலயும் கோவை குறும்பும் சேர்ந்து மிக்ஸ் ஆகி வித்யாசமா வெளிப்படும். அதனுடைய இந்தக்கால வெர்ஷனாதான் சிபியைப் பார்த்தேன். இந்தப் படத்தில் ஹீரோ கோவையைச் சேர்ந்தவர்.
கூடவே எதைப் பற்றியும் கவலைப்படாம தனக்கென ஒரு வாழ்க்கை வாழும் ஒரு ஆள். யாருடைய உணர்வுகளையும் பெரிதா சட்டை செய்யாத ஒரு கேரக்டர். அந்த பாத்திரத்திற்கு ரொம்ப அற்புதமாகப் பொருந்தினார். குறிப்பா அந்த கேரக்டர். அவருக்கு ஹீரோ... மத்தவங்களுக்கு வில்லனிக் கேரக்டர். அந்த ஷேடுக்குள்ள ரொம்ப அழகா சிபிராஜ் செட்டானார். ஆண்ட்ரியா, அதுல்யா... ரெண்டு ஹீரோயின்கள்ல யார் சிபிக்கு ஜோடி?
அது சஸ்பென்ஸ். ஆண்ட்ரியா ஒரு நல்ல கேரக்டர் செய்திருக்காங்க. எப்படி சிபி கிட்ட ஹீரோ + வில்லன் கிடைச்சதோ, அதேபோல ஹீரோயின் + வில்லி காம்பினேஷன் ஆண்ட்ரியாகிட்ட ஈசியா கிடைக்கும். அப்படியான ஒரு தனித்துவமான கேரக்டரில்தான் ஆண்ட்ரியா நடிச்சிருக்காங்க. அதுல்யா ரவிக்கு படத்தின் ரொமாண்டிக் போர்ஷனைக் கொடுத்தாச்சு.
நக்சலைட் சசி ஐடி ப்ரொஃபஷன்ல வேலை செய்யற ஒரு முக்கியமான ரோல். வம்சி கிருஷ்ணாவை இதுவரைக்கும் வில்லன் ரோல்லதான் பார்த்திருக்கோம். இந்தப் படத்தில் ரொம்ப சர்ப்ரைஸா ஒரு கேரக்டர் செய்திருக்கிறார்.
படத்தின் டெக்னீஷியன்களா யாரெல்லாம் வேலை செய்திருக்காங்க?
படத்தின் கதை ‘சூது கவ்வும்’ புகழ் ஸ்ரீனிவாசன் கவிநயம். பிரபாகரன் ரொம்ப நாட்களுக்குப் பிறகு கொங்கு தமிழ்ல நக்கல் நையாண்டி சூழ வசனம் எழுதி யிருக்கார். மியூசிக் நிவாஸ் கே. பிரசன்னா. படத்துல அஞ்சு பாட்டு. அஞ்சு பாடல்களும் அஞ்சு தன்மைகளோடு இருக்கும். கோவையின் இரவு முகத்தை ரொம்ப அற்புதமா பி.வி.ஷங்கருடைய கேமரா காட்டியிருக்கு. யாருக்காக போடப்பட்டது இந்த வட்டம் ?
நமக்காக, நம்மைச் சுத்தி இருக்கற நண்பர்கள், உறவுகளுக்காக, இக்கால சூழலுக்காக இந்த ‘வட்டம்’. படம் முடிஞ்சு வரும் ஒவ்வொருத்தரும் பார்த்து மகிழ்ச்சியா பேச வைக்கறதுக்காக போடப்பட்ட ‘வட்டம். என் நட்பு வட்டத்திலேயே பெரும்பாலான தம்பதிகள் ஒரு டயலாக்கை மட்டும் விடாம சொல்றாங்க - ‘நாங்க ரெண்டு பேரும் குழந்தைக்காகத்தான் / குழந்தைகளுக்காகத்தான் சேர்ந்து இருக்கோம்...’னு. இதுக்கு காரணம் பரஸ்பரம் அவங்க பேசாம இருப்பது. என்ன பிரச்னை... எதை சரி செய்யணும், வேண்டாம்னா ஓகே வேண்டாம்... இப்படி பேசி புரிஞ்சுகிட்டு பிரிஞ்சாகூட அதிலே ஒரு நிம்மதி இருக்குமே!
இப்படியே போனா எதிர்காலத்திலே ஆண் - பெண் உறவுக்கான முக்கியத்துவமே இல்லாமப்போயிடும். அதாவது முன்னாடி பெண்கள் கேள்வி கேட்கலை. அப்ப ஆண் ஆணாக இருந்தான். இப்ப பெண் கேள்வி கேட்க ஆரம்பிக்கவும் ஆண் இன்னமும் அழுத்தமான ஆணா இறுக்கமானவனா மாறிக்கிட்டு இருக்கான். அதை உடைக்கணும். அதுக்கு பேசணும். அதைத்தான் ‘வட்டம்’ பேசும்.
எல்லா கதையையும் நாம பெரிய திரைல சொல்லணும்னு அவசியம் இல்ல. ‘வட்டம்’ தியேட்டரா, ஓடிடியான்னு கேட்டா நானே ஓடிடினுதான் செலக்ட் செய்திருப்பேன். நான் நினைச்ச மாதிரியே ஓடிடியில் ரிலீஸ். ‘வட்டம்’ மாதிரியான கதை கிட்டத்தட்ட ஒருத்தரை உட்கார வெச்சு பக்கத்திலே இருந்து இப்படிச் செய்ப்பான்னு சொல்லக் கூடிய கதை. அதை டிவி மூலமா சொல்லும் போது நிறைய மக்கள்கிட்ட சொல்ல முடியும்.
ஷாலினி நியூட்டன்
|