COFFEE TABLE



வெள்ளி வென்ற நீரஜ்

உலக தடகள சாம்பியன்ஷிப்ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று மற்றொரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா. அமெரிக்காவிலுள்ள ஓரிகானில் நடந்த இந்தப் போட்டியில் 88.13 மீட்டர் தூரம் வீசி இந்தப் பதக்கத்தை வசப்படுத்தினார். 2003ல் அஞ்சு பாபி ஜார்ஜ் நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அதுவே உலக தடகளத்தில் இந்தியா வென்ற முதல் பதக்கம். இதன்பிறகு பதக்கம் வெல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் பெற்றுள்ளார். இதில் வெஸ்ட்இண்டீஸ் தீவுகளில் ஒன்றான கிரெனடாவைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.54 மீட்டர் எறிந்து சோப்ராவை முந்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.

சமந்தாவுடனான விவாகரத்து குறித்து மனம் திறந்த நாகசைதன்யா

நாகார்ஜுனாவின் மகனும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் 2017ம் ஆண்டு திருமணமானது. காதலித்து இவர்கள் மணம் புரிந்ததால் கோலிவுட்டும் டோலிவுட்டும் இவர்களை உச்சி முகர்ந்தது.யார் கண் பட்டதோ... இருவரும் நான்கு வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிவை அறிவித்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் பாலிவுட் ரியாலிட்டி ஷோ ஒன்றில் சமந்தாவும் இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் பங்கேற்றனர். அந்நிகழ்ச்சியில் சமந்தாவிடம் விவாகரத்து குறித்து கேட்கப்பட்டபோது ‘எங்கள் இருவரையும் ஒரே அறையில் விட்டால், கூர்மையான பொருட்கள் அந்த அறையில் இருக்கக்கூடாது!’ என்று தெரிவித்தார்.

சமந்தாவின் இக்கூற்று சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் அவரது முன்னாள் கணவரான நாகசைதன்யாவை தொடர்பு கொண்டு செய்தியாளர்கள் சமந்தாவுடனான விவாகரத்து குறித்து கேட்டனர். இதற்கு பொதுப்படையாக நாகசைதன்யா அளித்த பதில், இப்பொழுது பேசுபொருளாகியுள்ளது.

‘நான் ஒரு மனிதனாக நிறைய மாறிவிட்டேன்... இப்போது பல விஷயங்கள் குறித்து மனம் திறக்க ஆரம்பித்துள்ளேன். முன்பைவிட அதிகமாக குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒன்றியுள்ளேன்... ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், என்னை நானே இப்போது ஒரு புதிய மனிதனாக பார்க்கிறேன்... இது நன்றாக இருக்கிறது...’ என்று தெரிவித்துள்ளார்.
இதன் பொருள் என்ன என்பது கேட்ட அச்செய்தியாளருக்கும் தெரியவில்லை; படிக்கும் நமக்கும் விளங்கவில்லை. அதனால் என்ன... ‘சமந்தாவுடனான விவாகரத்து குறித்து மனம் திறந்த நாகசைதன்யா’ என தலைப்பு வைத்து இதையே செய்தியாக வெளியிட வேண்டியதுதான்!

டிரெண்டாகும் நிர்வாண போஸ்

சமீபத்தில் இந்தி நடிகர் ரன்வீர்சிங் ஒரு பத்திரிகைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்து இந்தியத் திரையுலகையே ஆச்சரியப்பட வைத்தார். அதற்கு பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து எதிர்வினை ஆற்றிக் கொண்டிருக்கும்போதே, அதற்கான எபெக்ட்டாக நம்மூர் நடிகர் விஷ்ணுவின் அரை நிர்வாண போஸை அவரது மனைவி ஜுவாலா கட்டா எடுத்து டுவிட்டரில், ‘வெல்... டிரெண்டில் சேர்ந்தாச்சு’ என கேப்ஷனுடன் வெளியிட செம வைரலானது.

இதேநேரம் அமெரிக்க பாடகியும், நடிகையுமான ஜெனிபர் லோபஸ் தன் 53வது பிறந்தநாளில் நிர்வாண போஸ் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களைக் கிறங்கடித்தார்.
‘இப்படியே பலரும் எபெக்ட் என கிளம்பி நிர்வாணப் படங்களை வைரலாக்கினால் சமூக வலைத்தளங்கள் என்னாவது’ எனச் சிரிக்கின்றனர் நெட்டிசன்கள்.  

இந்திர தேவனுக்கு எதிராக மனு!

ஆமாம்... தேவர்களின் தலைவனாக இந்து மதத்தில் கொண்டாடப்படும் இந்திரனுக்கு எதிராகத்தான் ஒருவர் புகார் கொடுத்திருக்கிறார்! கொடுத்திருப்பவர் உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜாலா கிராமத்தில் வசிக்கும் சுமித்குமார் யாதவ் என்ற விவசாயி!உலகிலுள்ள அனைத்து மதங்கள் - சமயங்களிலும் உணவுக்கு ஒரு கடவுள், காற்றுக்கு ஒரு கடவுள், சுப நலன்களை அள்ளிக் கொடுக்க ஒரு கடவுள், மழைக்கு ஒரு கடவுள்... என பல கடவுள்கள் உண்டு.

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடியான தமிழகத்திலும் சங்க கால திணை வழக்கப்படி வயலும் வயல் சார்ந்த இடமுமான மருத நிலத்தின் கடவுள் இந்திரன்தான். அப்படிப்பட்ட இந்திரனுக்கு எதிராக ஜாலா கிராமத்தைச் சேர்ந்த சுமித் குமார் யாதவ், தன் கிராமத்தை நிர்வகிக்கும் தாசில்தாரிடம் புகாரைக் கொடுத்திருக்கிறார்.
தாசில்தார் அலுவலகம் அப்புகாரை மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக ‘டி என் ஏ’ பத்திரிகை செய்தி வெளியிட... அரசுத் தரப்பு இதை மறுத்துள்ளது. ஆனால், சுமித்குமார் யாதவ் புகார் கொடுத்திருப்பது மட்டும் உண்மை.

தன் கிராமத்தில் போதிய அளவுக்கு மழை பொழியாததால் மிகக் கடுமையான வறட்சி நிலவுவதாகவும், அதற்கு இந்திர தேவர்தான் காரணம் என்றும் அப்புகாரில் தெரிவித்துள்ளார்!
தன் கிராம மக்கள் வறட்சியால் படும் துயரத்தை உயர் அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு செல்லவே இப்படி ஒரு புகாரை அளித்திருப்பதாக சுமித்குமார் சொல்கிறார்.
என்றாலும் அவரது புகார் இணையத்தில் வைரலாகி உள்ளது.

சாதித்த தமிழ் சினிமா!

68வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு தேர்வான படங்கள் மற்றும் கலைஞர்களின் பட்டியலை இந்திய அரசு கடந்த வாரம் வெளியிட்டது. இதில் சிறந்த நடிகர்களாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகர் சூர்யா ஆகியோரும்; சிறந்த நடிகையாக அபர்ணா முரளியும் தேர்வாகியுள்ளனர்.

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ படத்துக்கு ஐந்து விருதுகள், இயக்குநர் வஸந்த் சாய் டைரக்‌ஷனில் உருவான ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற படத்துக்காக மூன்று விருதுகள் மற்றும் அறிமுக இயக்குநர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் வெளிவந்த ‘மண்டேலா’ படத்துக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. வாழ்த்துகள் கோலிவுட்!

எலான் மஸ்க் மீது வழக்குத் தொடுக்கும் டுவிட்டர்

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்ற நிறுவனங்களை நடத்திவரும் எலான் மஸ்க், சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கப் போவதாக அறிவித்திருந்தார்.
சுமார் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரின் முழுப் பங்கை எலான் மஸ்க் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், தனது ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக எலான் மஸ்க் நிறுத்தி வைத்தார். போலிக் கணக்குகள் மற்றும் ஸ்பேம் குறித்த முழுமையான கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் அளிக்க வேண்டும். தவறினால் அந்நிறுவனத்தை வாங்கும் முடிவைக் கைவிடுவேன் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் கேட்டுக் கொண்ட தகவலை டுவிட்டர் நிறுவனம் தராததால் அல்லது கொடுத்த விவரங்கள் போதுமானதாக இல்லை என எலான் மஸ்க் கருதியதால், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை இப்போது அவர் கைவிட்டுள்ளார்.

இந்த முடிவை எதிர்த்து டுவிட்டரின் தலைவர் பிரெட் டெய்லர், எலான் மஸ்க்கிற்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக இப்போது அறிவித்திருக்கிறார்.
‘டெலாவேர் கோர்ட் ஆஃப் சான்சரிக்கு (Delaware Court of Chancery) இந்த வழக்கைக் கொண்டு சென்று, அங்கே நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம்...’ என அவர் தெரிவித்திருக்
கிறார்.

பாஸ்போர்ட்டின் பாஸ் மார்க்

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் தரவரிசையானது கோவிட் 19 பாதிப்புக்குப் பிறகு பல மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது.குடியேற்ற ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸின் சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் மதிப்பீட்டின்படி, ஒரு ஜப்பானிய பாஸ்போர்ட் 193 நாடுகளுக்குள் தொந்தரவு இல்லாமல் நுழைய முடியும். சிங்கப்பூர் மற்றும் தென் கொரியாவின் பாஸ்போர்ட்களைப் பயன்படுத்தி 192 நாடுகளுக்குள் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் செல்ல
முடியும்.

50வது இடத்தில் இருக்கும் ரஷ்யாவின் பாஸ்போர்ட்டை வைத்து 119 நாடுகளுக்கு எளிதாகச் செல்லலாம். 80 நாடுகளுக்கான எளிய அணுகலுடன் சீனா 69வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வரிசையில், இந்தியாவின் பாஸ்போர்ட்டுக்கு 87வது இடமே கிடைத்திருக்கிறது.இவற்றில், ஆப்கானிஸ்தானின் பாஸ்போர்ட்தான் மிகவும் குறைந்த நாடுகளுக்கான அனுமதியைப் பெற்றுள்ளது. வெறும் 27 நாடுகளில் மட்டுமே ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

தொகுப்பு: குங்குமம் டீம்