அரண்மனை குடும்பம் - 29



ஜல்லியின் காதுக்குள் ஒலித்த அந்தக் குரலைத் தொடர்ந்து ஜல்லி சேலம் செல்வதற்கான பஸ்ஸில் ஏறத் தயாரானான். கூடவே ஏறிய போதிமுத்து, “என்ன சல்லி... ஏதோ முணுமுணுன்னியே..?” என்று கேட்டான். “ஆங்காரன்ட பேசினேன். அவன் மலையவிட்டு முதல்ல இறங்குங்கறான். வா பஸ்ஸைப் பிடிப்போம்...”“நீ முணுமுணுத்தே... ஆனா, ஆங்காரன்னு சொன்னியே அதோட குரல் என் காதுல கேட்கலியே..?”“யார் தலைமேல டப்பி இருக்கோ அவங்க காதுக்குதான் கேக்கும்...”“அதான் எப்படின்னு கேக்கறேன்...”
“ஆங்காரன் ஒரு கர்ணயட்சிணி. காத்துக்குரல் யட்சிணிகளுக்கு... காதுக்குள்ள லகுவா அதுக சொல்லையில நமக்கும் அது யாரோ ரகசியம் சொல்ற மாதிரி கேக்கும்...”“சல்லி... சல்லி... அந்த டப்பியை என் தலை மேலயும் வெச்சு உடேன்... அது எப்படின்னு நானும் கேக்கேன்...”“அதுக்கு நீ ஆசான்கிட்ட தீட்ச வாங்கணும். அப்படியெல்லாம் இந்த விசயங்கள நெருங்கிட முடியாது...”பேசிக் கொண்டே இருவரும் நடந்து, காத்திருந்த சேலம் பஸ்ஸிலும் ஏறினர்.

இருவர் தோற்றத்தையும் கண்டக்டர் ஒருமாதிரி பார்த்தார். சற்றே தெனாவெட்டாக, “இங்க ஏறுனா சேலத்துலதான் நிக்கும். இடைல நிக்காது. சில்லரையை கைல சரியா வெச்சிருக்கணும். ஐநூறு ரூபா நோட்ட நீட்றது, இரண்டாயிரத்தை நீட்றதுங்கற சோலியே கூடாது. சில்ற இல்லாட்டி இறங்கிடு...” என்று எங்கோ பார்த்தபடியே சொன்னார்.

“சல்லி... என்னா சல்லி இப்படி சொல்றான்... இவனுக்கு நாம இந்த வண்டில ஏறி வர்றது புடிக்கலன்னு நினைக்கறேன்...”“சரியா சொன்னே போதி. உருவத்த வெச்சி எடை போட்றவன் இவன். இவனை இன்னிக்கு அலற உட்றேன் பாரு...”“எப்படி சல்லி..?”“பஞ்சவித்தைல ஒண்ணுதான் மனக்கட்டு!

இப்ப அதைக் காட்றேன் பார்...”“அது என்னா பண்ணும்..?”“வாயக்கட்டிடும். திமிரா இப்ப நம்பள பாத்து பேசினான்ல? அந்த பேச்சு அப்படியே போயிரும்...”“அது எப்புடி..?”“கூடதானே இருக்கே... வேடிக்கை பாரு...” என்று போதிமுத்துவிடம் சொல்லிவிட்டு தலைப்பாகைக்குள் ஒரு பாகத்தில் வைத்திருந்த பீடியை எடுத்து பற்றவைத்து புகையைக் கசிய விட்டான் ஜல்லி.

அதைப் பார்த்த வேகத்தில் வேகமாக வந்த கண்டக்டர் “எலே... அறிவில்ல உனக்கு! பஸ்சுக்குள்ள பீடிய பத்தவைக்கே? எறங்குய்யா கீழ...” என்று சிடுசிடு குரலில் அதட்டலாகச் சொல்ல, அடுத்த வினாடியே அந்த கண்டக்டர் முகத்தை, குறிப்பாக கண்களை ஜல்லி மிகக் கூர்மையாகப் பார்க்கத் தொடங்கினான்.“எலே... எறங்குங்கறேன்... என்னடா வெறிக்கே..?” என்று அடுத்த அதட்டலுக்கு கண்டக்டர் சென்றபோதிலும் ஜல்லியின் பார்வையில் ஒரு மாற்றமுமில்லை.

குறிப்பாக இமைத்துடிப்பே இல்லாத அகண்ட விழி வெறிப்பு. சில வினாடிகள்தான். கண்டக்டரிடமும் ஒரு மெல்லிய மாற்றம். பதிலுக்கு சில வினாடிகள் பார்த்துவிட்டு ஏதோ சொல்ல வந்து பின் முடியாமல் போய் அப்படியே திரும்பிச் சென்று கடைசி வரிசையில் ஜன்னலை ஒட்டிய தன் சீட்டில் போய் உட்கார்ந்து கொண்டார்.போதிமுத்துவிடம் பலத்த ஆச்சரியம்.

“சல்லி... என்னா சல்லி எதுவும் பேசாம போய் ஒக்கான்ட்டான்...”“ஆமா... பதிலுக்கு நான் அவனை என் கையால மணிக்கட்டை சீண்டுறவரை இப்படியேதான் இருப்பான். இனி வாயே திறக்கமாட்டான் பார்...”“ஆத்தி... நெசமாவா..?”“பாரு... பாத்துகிட்டே இரு...”“அவன் பேசாட்டி பஸ்சு எப்படி நவுரும்... விசிலு ஊத வேணாமா..?”

“அதெல்லாம் கச்சிதமா நடக்கும்... பேச மட்டும்தான் மாட்டான். அதே மாதிரி நம்மகிட்டயும் டிக்கெட் எடுன்னு வந்து நிக்க மாட்டான்...”
“ஆத்தி... இது மகா பெரிய வித்தையால்ல இருக்கு?”“அதுக்கு பேர்தான் பஞ்சவித்தை... ‘கண்கட்டு, வாய்க் கட்டு, செவிக்கட்டு, கைகட்டு, கால்கட்டு’ன்னு அஞ்சு கட்டுல இப்ப நான் அவனுக்கு வாய்க்கட்டு போட்ருக்கேன். நானா அவுத்து உட்றவரை வாயே தொறக்க மாட்டான்...” “சல்லி... நீ என்னா இம்புட்டு பெரிய மாயக்காரனா இருக்கே. என்னால நம்பவேமுடியல...”
“எல்லாம் ஆசான் போட்ட பிச்சை...”“இப்படி எல்லாம்கூட வித்தை இருக்கறத நான் இப்பதான் சல்லி பாக்கேன்...”

போதுமுத்து ஆயாசப்பட, பஸ்ஸில் கூட்டம் ஏறி முழுவதுமாய் நிரம்பிவிட்ட நிலையில், கண்டக்டரும் விசில் கொடுக்க டிரைவர் பஸ்ஸைக் கிளப்பினார். கண்டக்டர் மௌனமாகவே டிக்கட் கொடுக்கத் தொடங்கினார்.மழைத்தவளையின் சலம்பல் கணக்காக சதா பேசியபடியே டிக்கெட் தரும் கண்டக்டரின் இறுக்கம் டிக்கெட் எடுத்த பலரையும் ஆச்சரியமாகப் பார்க்க வைத்தது.ஜல்லி சொன்னது போல் ஜல்லி, போதிமுத்துவிடம் மட்டும் டிக்கெட் வாங்கச் சொல்லவே இல்லை. அவர்கள் இருவரையும் பார்க்கக் கூட விரும்பவில்லை. போதிமுத்து தன் வாழ்வில் ஒரு விசித்திர அனுபவத்துக்கு ஆளாகி பிரமிப்பில் இருந்தான்.

மலைத்தலத்தின் இருபது கொண்டை ஊசி வளைவுகளையும் கடந்து, அடிவாரமடைந்து, பின் மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்ச்சைக் கடந்து, ஜெயில் பகுதியைக் கடந்து அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் திரும்பி பஸ்ஸ்டாண்டு நோக்கி ஓடிக்கொண்டிருந்த பஸ்ஸில் சட்டென்று எழுந்துகொண்ட ஜல்லி பின்புற கண்டக்டர் சீட் நோக்கி நடந்திட போதியும் தொடர்ந்தான்.
அப்படியே படிகளில் இறங்கி இரண்டாவது படியில் நின்று கொண்டு, மௌனமாக அமர்ந்திருந்த கண்டக்டரின் மணிக்கட்டில் தன் இருவிரல்களால் சுரீர் என்று ஒரு சுண்டு சுண்டினான்.
அடுத்த நொடி மழைக்கோழி உடம்பை உதறிவிட்டுக்கொள்வது போல ஒரு உதறல் கண்டக்டரிடம்.

“வண்டிய கொஞ்சம் நிறுத்து... நாங்க எறங்கணும்...” என்று தன்மையாகச் சொல்ல, மறுப்பின்றி விசில் கொடுக்காமல் “ஹோல்டான்...” என்று கண்டக்டர் கத்த பஸ்சும் சற்று ஓடி தேய்ந்து நின்றது.“வாயிருக்குன்னு ரொம்ப பேசாதே. அப்புறம் நிரந்தரமா கட்டிப்புடுவேன்...” என்கிற ஒரு செல்ல எச்சரிக்கையோடு ஜல்லி இறங்கிட, போதிமுத்துவும் இறங்கிக் கொண்டான்.போதிமுத்துவுக்கு அந்த நொடிகளில் ஜல்லி ஒரு பெரும் சக்தியாகத்தான் தெரிந்தான்.

“சல்லி... சூப்பர் சல்லி... இம்புட்டு வித்தைய கைல வெச்சிக்கிட்டு நீ எப்படிதான் புளிய மரத்தடில செருப்பு தெச்சியோ தெரியல. நீதான் இனி என் சாமி...” என்று கண்கள் அகண்டு பொங்க பேசினான்.அப்போது போதிமுத்துவிடம் கண்கள் செருகிய நிலையில் ஏதோ முணுமுணுப்பு. இருவருமே சாலையோரம் ஒரு மரத்தடியில் நின்றபடி இருந்தனர். அப்போது ஜல்லியின் காதில் ஆங்காரன் என்கிற கர்ணயட்சிணியின் “காக்காயன் சுடுகாட்டுக்கு போ... ஜிப்பாகாரன் தெரிவான்... அவன்தான் கொலைக்கு சாவி கொடுத்தவன்...” என்ற குரல் ஒலித்து அடங்கியது.

அடுத்த நொடியே “எலேய்... நடவே சுடுகாட்டுக்கு. நாம தேட்றவன் இப்ப அங்கதான் இருக்கான்...” என்ற ஜல்லி வேகமாய் ஒரு பீடியைப் பற்றவைத்துக் கொண்டு, லுங்கியையும் மடித்துக் கட்டிக்கொண்டு நடக்கத் தொடங்கினான்.உடன் நடந்த போதிமுத்து “சுடுகாட்டுக்குன்னா எந்த சுடுகாட்டுக்கு சல்லி...?” என்று கேட்க, “காக்காயன் சுடுகாட்டுக்கு...” என்று ஜல்லியும் சொல்ல “ஐயோ ரொம்ப தொலவாச்சே..!” என்ற நொடியே எதிரில் ஒரு ஆட்டோ வரவும் கையை நீட்டினான் ஜல்லி. அதுவும் நின்றது. முதலில் அதில் போதிமுத்துவை ஏறச் சொன்ன ஜல்லி, பின், தான் ஏறிக்கொண்டு “காக்காயன் காட்டுக்கு போ...” என்றான்.ஆட்டோ டிரைவரிடமும் மறுபேச்சில்லை!

அரண்மனை பங்களா! உள்ளே நுழைந்து நின்ற காரில் இருந்து இறங்கிய கணேசன், கூல் கிளாசைக் கழற்றி சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டே நடந்திட, எதிரில் சிலர் கணேசனின் அப்பா கைலாசராஜாவைப் பார்த்துப் பேசிவிட்டு விடைபெற்றவர்களாய் வந்துகொண்டிருந்தனர். கணேசனைப் பார்க்கவும் மெத்த பணிவாகக் கைகூப்பி வணக்கம் சொன்னபடியே
மெல்லச் சிரித்தபடி கடந்தனர்.கையில் ஒரு கால்குலேட்டரோடும், டக் செய்த பேண்ட் சட்டையோடும் ஏதோ கணக்கு போட்டபடி இருந்த மூர்த்தி என்கிற அக்கௌண்ட்ஸ் கிளார்க், கணேசனைப் பார்க்கவும் “குட்மார்னிங் சார்...” என்றான் உடம்பில் ஒடுக்கமாய்.

கணேசன் முகத்தில் இறுக்கம். அதோடு குட்மார்னிங் சொன்ன மூர்த்தியிடம் “மாமா இருக்காரா மூர்த்தி...” என்று கேட்டான்.“இப்பதான் சார் கார்ல வெளிய புறப்பட்டு போனார்...”“அப்பா இருக்கார்ல..?”“பஜார்ல இருந்து வியாபாரிங்க பாக்க வந்திருந்தாங்க... அவங்களோட பேசி முடிச்சிட்டு இப்பதான் படுக்கப் போனார்...”“நீ சாப்ட்டியா?”“இல்ல சார்... இனிமேதான்...”“சரி போ... போய் சாப்டு...” என்று உள்ளே விஸ்தாரமான ஹாலில் உள்ள சோபாக்களைக் கடந்து நடந்து, மாடிக்குச் செல்லும் வளைவான படிகளில் ஏறி, தென்மேற்கில் கன்னிமூலையில் இருக்கும் தனக்கும் ரத்திக்குமான அறை நோக்கி அவன் செல்வதை மாமா குலசேகரராஜாவின் மனைவியும், தன்அத்தையுமான சுந்தரவல்லி தன் அறை வாசலில் திரைச்சீலை பின்னால் இருந்து பார்த்தபடியே இருந்தாள்.

கணேசன் அவனுக்கான அறைக்குள் நுழைந்து விடவும், தன் கைவசம் இருந்த செல்போனில் அவள் கணவர் குலசேகர ராஜாவை பத்து இலக்க எண்வழியே பிடித்தபோது குலசேகர ராஜாவின் கார் காக்காயன் சுடுகாட்டுப் பாதை வளைவில் திரும்பிக் கொண்டிருந்தது.“என்னங்க...”“சொல்லு சுந்தரம்...”“கணேசன் வந்துட்டான்... கொஞ்சம் இறுக்கமாதான் தெரியறான்...”“உன்கிட்ட பேசினானா..?”“நான் மறைவா இருந்தேன்... எதிர்ல போகவே பயமா இருந்துச்சு...”“அதை எல்லாம் தூக்கி தூரப்போடு.

நான் எல்லாத்தையும் சரி செய்துட்டேன். நீ போய் சகஜமா பேசு. அந்த குட்டிப் பிசாசையும் கொஞ்சு...”“அது தாத்தா தாத்தான்னு பெரியவர் கிட்டயே இருந்துச்சு. அவரும் தூக்கி வெச்சிகிட்டு ஒரே கொஞ்சல். உங்க அக்கா முகத்துலயும் ஒரே சந்தோசம்... ரத்தியும் ஏற்காட்ல யாரோ ஒரு சாமியாரைப் பாத்ததாவும் அவர்தான் அந்த குட்டிப்பிசாசு குணமாகவும் காரணம்னு சொல்லிக்கிட்டிருந்தா. உங்கக்கா உடனே நாமளும் போய் பாக்கணும்னு ஆரம்பிச்சிட்டாங்க...”“நான்கூட அந்த சாமியார் பத்தி கேள்விப்பட்டேன். இன்னிக்கு இந்த நாட்டுல அவங்களுக்கா பஞ்சம்? அதை விடு... நான் சொன்னபடி செய். இனி நீ, நான், நம்ம மஞ்சு நடந்துக்கறதுலதான் எல்லாம் இருக்கு... போய்.. போய் பேசு.

எவ்வளவு தூரம் நடிக்க முடியுமோ நடி... இங்க சுடுகாடு வந்துடிச்சி. சதீஷ் பாடிய ஒரு பார்வை பாத்துட்டு அவன் பொண்டாட்டி கைல செக்க கொடுத்துட்டு வந்துட்றேன்...”
என்று குலசேகர ராஜா பேசி முடித்திட, அந்த நவீன மின் மயான தோட்டச் சாலைக்குள் புகுந்த அவரது பிஎம்டபிள்யூ கார் தேங்கி நிற்க, அதிலிருந்து வேட்டி ஜிப்பாவில் சோகமாய் இறங்கினார் குலசேகர ராஜா.

பின்னாலேயே ஒரு நூறு அடி தூரத்தில் உதறிக் கொண்டு வந்த ஆட்டோவில் இருந்து ஜல்லியும், போதிமுத்துவும் இறங்கிய நிலையில் ஜல்லியின் பார்வை கர்ணயட்சிணி வேட்டி ஜிப்பா என்கிற அடையாளமிட்டுச் சொன்ன குலசேகர ராஜாவைத்தான் முதலில் பார்த்தது!

(தொடரும்)  

அசோகமித்திரன் அந்த லிங்கத்தைப் பார்க்கவும் அதிர்ந்தார். தான், கனவில் பார்த்த அதே லிங்கம்... அதே மரத்தடி! அவரது 52 வருட வாழ்வில் முதல் முறையாக ஒரு பலத்த அதிர்வை எதிர்கொண்டது அவர் மனம். இதற்குமுன் ஒரு தடவைகூட வந்திராத ஒரு இடம் அந்த இடம்..! ஓவியமாகவோ, புகைப்படமாகவோகூட அந்த லிங்கத்தையோ, மரத்தையோ பார்த்ததில்லை.
அப்படி இருக்க எப்படி அப்படி ஒரு கனவு தனக்கு வரமுடியும்?கேள்வியில் விழுந்தது மனது. பார்வையோ நாலாப் புறமும் பார்த்தது.

சிலுசிலுவென்ற வயற்காற்று... அங்கும் இங்குமாய் சலம்பும் பட்சிகளின் அலகுச்சப்தம்... மற்றபடி யாருமே யின்றி அந்த தென்னந்தோப்பு விச்ராந்தியாகக் காட்சியளித்தது.
ஆங்காங்கே விழுந்து கிடந்த மட்டைகள் மெல்ல நடக்கையில் காலை இடறின. தென்னபிஞ்சுக் குடுவைகள் மரநாய்களால் கொறிக்கப்பட்டு கொறிப்பு தடயத்தோடு கீழே கிடந்தன.
இனம் தெரியாத தாவரங்கள் ஆங்காங்கே வளர்ந்திருந்தன. சில இடங்களில் பாம்புச்சட்டைகள் உரிந்து கிடந்து லேசாய் அச்சமூட்டின.

எவ்வளவு நேரம்தான் இப்படி இந்தச் சூழலையே பார்த்தபடி நிற்பது?
பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து, தான் குருவாய் கருதும் மணிமொழியன் என்கிற உளவியல் ஆய்வாளரை அழைத்தார். அவரும் அகப்பட்டார்.
“காலை வணக்கம் ஐயா... நான் அசோகமித்ரன் பேசறேன்...” “வணக்கம் வணக்கம்... என்ன மித்ரன் இந்த காலை வேளைல... ரொம்ப ஆச்சர்யமா இருக்கே..?”
“உங்களுக்கு நான் இப்ப அழைச்சதுதான் ஆச்சரியம்... எனக்கோ இந்த நொடில பலப்பல ஆச்சரியங்கள். எப்பவும் இல்லாதபடி கொஞ்சம் குழப்பமும்கூட... உங்ககூட பேசினா தெளிவு கிடைக்கும்னுதான் உங்கள அழைச்சேன். உங்களுக்கு இப்ப இடையூறு ஏதும் இல்லையே..?”

“நிச்சயமாக இல்லை. பல்விளக்கிட்டு குடல் பாரத்தையும் இறக்கிட்டு இன்றைய தமிழ் தினசரியை வாசிப்பதற்காக திறந்தேன். நீங்க கூப்பிட்டிருக்கீங்க... ஆமா அப்படி என்ன ஆச்சரியம்..? அப்படி என்ன குழப்பம்..?”“நான் சொல்லப் போறத கேட்டுட்டு நீங்க உங்களுக்கு எதுக்கு இந்த ஆராய்ச்சியெல்லாம்னு கேட்டுடக் கூடாது...”“இப்படி அடிக்கோடு போட்டாலே கொஞ்சம் வில்லங்கம்தான். பரவால்ல சொல்லுங்க...”“இந்து தெய்வ வழிபாட்டுல சிறுதெய்வம், பெருதெய்வம், காவல் தெய்வம், அப்புறம் விலங்குக் கலப்பான தெய்வங்கள்ங்கற ஒரு நீட்சியில சர்ப்பங்கள் எனப்படுகிற பாம்புகளுக்கும் வழிபாடு நடத்தப்படுவது எனக்கொரு கேள்வியை உருவாக்கிச்சு.

அதோட எல்லா தெய்வங்களோடயும் பாம்புகள் ஒரு ஆபரணம் போல சேர்ந்தே இருக்கு. அது ஒரு விஷப்பூச்சி... கையோ, காலோ, காதோ இல்லாத ஒரு புழு ஜாதி அது!
ஆனா, அதுக்கு எப்படி இப்படி ஒரு வழிபாட்டு அந்தஸ்து கிடைச்சதுன்னு ஒரு கேள்வி எனக்குள்ள எழுந்தது.

ஆராய்ச்சிலயும் இறங்கினேன்...” என்று மணிமொழியனிடம் பேசத் தொடங்கியவர், அதன்பின் சந்திரமௌலீஸ்வர கனபாடிகளை சந்தித்தது, பிறகு நாகேந்திர நல்லூர் வந்தது என்று சகலத்தையும் கூறியவர் இறுதியாக, தான் கண்ட கனவைக் கூறி, கனவில் கண்ட இடம் நிஜத்திலும் இருப்பதைச் சொல்லி, “இப்படி ஒரு கனவு எனக்கு எப்படி வந்ததுங்கறதுதான்யா பெரிய வியப்பா இருக்கு...” என்று முடித்தார்.

மறுமுனையில் மணிமொழியனாரிடம் சற்றே மௌனம். “ஐயா... இணைப்புல இருக்கீங்களா..?”“இருக்கேன்.. இருக்கேன்... நீங்க சொன்னதை யோசிச்சிக்கிட்டும் இருக்கேன். இதை ஒரு தற்செயலாதான் என்னால நினைக்க முடியுது. தற்செயல் சம்பவங்கள் வாழ்க்கைல நடப்பதுபோல உங்க கனவுலயும் நடந்துருக்கு... அதைக் கடந்து பெருசா இதுக்குப் பின்னால ஒண்ணு இருக்கறதா எனக்குத் தெரியல...”“அப்படி கடக்க என்னால முடியல... அதான் உங்களக் கேட்டேன்...”

“கனவுங்கறதே மன எண்ணங்களோட கசிவுதானே? சிக்மண்ட் ஃப்ராய்ட் புத்தகங்களை வாசிச்சிருக்கீங்களா..?”“அவர் பற்றின சில கட்டுரைகளை வாசிச்சிருக்கேன். அவர் எழுதின நூலை வாசிச்சதில்ல... ஒருமுறை முயற்சி செய்தேன். ரொம்ப கடினமான மொழியா எனக்குத் தெரிஞ்சது.

விட்டுட்டேன்...”“அவர் நூல்ல மனதோட மயக்க நிலைகள் பற்றியும், தூக்க நிலைகள் பற்றியும் ரொம்பவே சிந்திச்சு எழுதியிருக்காரு. ரொம்ப பொறுமையா படிக்கணும்.
அவருக்குப் பிறகு அவரோட அடியை ஒற்றி யாரும் பெருசா வந்து எதுவும் எழுதிடலை. அவர் இறுதிவரை கனவுகளை Rem எனப்படுகிற ‘ராபிட் ஐ மூவ்மென்டா’தான் சொல்றார்.
அதிகாலைல, மூளைல அதிக ரத்த ஓட்டம் பாயற தருணத்துல ஆழ்மன அலைகள் பிம்பமா மாறி நடமாடுவதைத்தான் நாம கனவா உணருகிறோம்.

இப்ப இது சார்ந்த படிப்பே கூட வந்துடிச்சி. ஒனிராலஜிங்கறது அந்த படிப்போட பேர்! இந்த விஷயத்துல கல்கத்தால சட்டர்ஜினு ஒருத்தர் இருக்கார். என்னவிட அவராலதான் உங்களுக்கு தெளிவா பதில் கூற முடியும். அவர் எண் தரேன். சட்டர்ஜி ஒனிராலஜில மாஸ்டர்ஸ் முடிச்சவர். கனவுகளை வெச்சு புத்தகமே எழுதினவர்...”“ரொம்ப மகிழ்ச்சி... நான் அவசியம் அவர்கூட பேசறேன். கைபேசி எண்ணை எஸ்எம்எஸ் பண்ணிடுங்க. அதே சமயம் உங்கவரைல இது தற்செயலான ஒண்ணுதான்... அப்படித் தானே..?”“நிச்சயமா... அதேசமயம் அமானுஷ்யமும் ஒரு ஆராய்ச்சிக்குரிய விஷயம்னு நான் இப்ப நினைக்க ஆரம்பிச்சிருக்கேன்.

என் வாலிபப் பிராயத்துல அமானுஷ்யத்தை நான் ஒரு தங்கக் கற்பனைன்னு வர்ணிச்சிருக்கேன். நடக்க முடியாததை கற்பனை செய்து பாக்கறது எப்பவும் மனதோட இயல்பு.
கற்பனையைத் தூண்ட, ஒரு மரம் வெட்டியோட கோடாரி ஒண்ணு குளத்துல விழுந்துடிச்சு... அப்ப ஒரு தேவதை வந்தது... அது முதல்ல தங்கக் கோடாரிய எடுத்து ‘இதுவா’ன்னு கேட்டதுன்னு ஒரு சிறுவர்களுக்கான கதை இருக்கே, அது போதும்...

அப்படி சொல்லப்பட்ற கதைகள் உள்ள விதையா விழுந்து அதுதான் அமானுட கற்பனைகள் ஆகும்! அந்த கற்பனைகள்ல ஒரு பெரிய சுகம் இருக்கு. கற்பனை செய்யறதுலயும் சுகம், அதை எழுதி படிக்கறதுலயும் ஒரு சுகம் இருக்கு.

ஆனா அந்த சுகம் ஒரு மாயை. இப்படிதான் நான் அப்ப நினைச்சேன். ஆனா, இப்ப எண்பது வயசுல வாழ்க்கையை பரந்துபட்டு பார்த்ததில் என்கிட்டேயும் நிறைய மனமாற்றங்கள்.
இந்த உலகத்துல எல்லாத்தையும் விஞ்ஞானப் படுத்திட முடியாதுங்கறது இப்ப என் கருத்து. பகல்னா இரவுன்னு ஒண்ணு இருக்கற மாதிரி, இனிப்புன்னா கசப்புன்னு ஒண்ணு இருக்கற மாதிரி விஞ்ஞானத்துக்கு நிகராவோ இல்ல மேலாவோ ஒண்ணு நிச்சயம் இருக்கு.

விஞ்ஞானத்தை நாம் நம்பிக்கை வைத்து ஏற்கத் தேவையே இல்லை. ஏன்னா அது புலன்களுக்கான நிதர்சனம். அதே சமயம் நம்பிக்கை வெச்சு ஏற்கவேண்டிய சிலதும் இருக்குன்னு நான் இப்ப உணர்றேன். நீங்க சொன்ன கனவு அப்படி ஒண்ணோ என்னவோ...”
மணிமொழியனார் அப்படிச் சொன்னபோது அசோகமித்திரனின் கனவில் வந்த அந்த சாமியார் எதிரே வந்தபடி இருந்தார்!

இந்திரா செளந்தர்ராஜன்

ஓவியம்: வெங்கி