என் ஒரிஜினல் ஃபேமிலி இதுதான்! அறிமுகப்படுத்துகிறார் கயல் சைத்ரா ரெட்டி
சென்னை வளசரவாக்கத்தின் பரபரப்பான ஷூட்டிங் ஹவுஸ் அது. அங்கே பிங்க் கலர் ஸ்கூட்டரில் அத்தனை வேகமாகவும் கோபத்துடனும் வந்திறங்கும் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார் சைத்ரா ரெட்டி. தமிழ் சீரியல் உலகில் நம்பர் ஒன் இடத்தைப் பெற்று தமிழர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள ‘கயல்’ தொடரின் நாயகி. சைத்ரா ரெட்டி என்பதைவிட ‘கயல்’ என்றால்தான் தமிழ் மக்களுக்குத் தெரிகிறது. அந்தளவுக்கு ஒவ்வொரு வீட்டினரின் மனங்களிலும் ஒன்றிவிட்டார் கயல்.

‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. ‘கயல்’ சீரியலுக்கு இவ்வளவு ஆதரவு இருக்கும்னு நான் எதிர்பார்க்கல. ‘சன் நட்சத்திர கொண்டாட்டம்’ நிகழ்ச்சிக்காக மதுரைக்கும், திருச்சிக்கும் போனப்பதான் தெரிஞ்சுகிட்டேன். இவ்வளவு பாசமும், அன்பும் கிடைக்க சத்தியமா ஏதோ ஒரு ஜென்மத்துல நான் புண்ணியம் பண்ணியிருக்கணும்...’’ என அழகு தமிழில் கண்கலங்கி நெகிழ்கிறார்.
‘‘நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் பெங்களூர்ல. அப்பா சந்திரரெட்டிக்கு பூர்வீகம் கோலார்கிட்ட இருக்கிற ஸ்ரீனிவாஸ்பூர். பெங்களூர் வந்து செட்டிலாகிட்டார். இங்க பொட்டிக் வச்சு நடத்தினார். அம்மா சாரதா ஹவுஸ் வொய்ஃப். எனக்கு ஒரு அக்கா இருக்காங்க. அவங்க பெயர் ஸ்ரீலதா. என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட்னு சொல்லணும். அவளுக்குத் திருமணமாகி லயா ராகானு ஒரு குழந்தை இருக்கு.

என் கணவருக்கு ஹைதராபாத். அவர் பெயர் ராகேஷ் நாராயண். ஒளிப்பதிவாளரா இருக்கார். இதுதான் என் அழகான குடும்பம். நான் சாதாரண ஒரு மிடில்கிளாஸ் ஃபேமிலியில் இருந்து வந்த பொண்ணு...’’ என ஒரு இன்ட்ரோவுடன் மெலிதாகச் சிரித்தவர், ‘இந்த ஷாட்டை முடிச்சிட்டு வந்து பேசுறேன்’ என்றபடி சில நிமிடங்கள் பிரேக் எடுத்தவர் அதன்படியே விட்ட இடத்திலிருந்து பேசத் தொடங்கினார். ‘‘நான் பெங்களூர் நேஷனல் காலேஜ்ல பிசிஏ படிச்சிருக்கேன்.
 படிக்கும்போதே இண்டஸ்ட்ரீக்கு வந்துட்டேன். சீரியலுக்கு வரணும்னு நினைக்கல. எனக்கு அதுல ஆர்வமும் இருக்கல. காலேஜ்ல ஒரு கல்ச்சுரல்ஸ் நடந்தது. அங்க என்னைப் பார்த்துட்டு ‘உங்களுக்கு விருப்பம் இருந்தால் சீரியல் ஆடிஷனுக்கு வாங்க’னு கூப்பிட்டாங்க. நானும் காலேஜை கட் அடிக்க ஒரு வாய்ப்புனு அங்க போயிட்டேன். விளையாட்டா போனது... இப்படி சீரியஸா மாறும்னு நானே எதிர்பார்க்கல. ஆனா, இப்ப சீரியஸா நடிக்கிறேன். என் கேரியர் ‘அவனு மத்ய ஷரவானி’ என்கிற கன்னட சீரியல்ல இருந்து ஆரம்பமாச்சு. இதுல ஹீரோயின் கேரக்டர். மூன்றரை ஆண்டுகள் போன இந்த சீரியலுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. இந்தத் தொடரை தமிழ்ல ‘கல்யாணம் முதல் காதல் வரை’னு ஆரம்பிச்சாங்க. அதுல பிரியா பவானி சங்கர் நடிச்சாங்க. பிறகு அந்தக் கேரக்டரை அவங்களுக்கு பதிலா தமிழ்ல பண்ற வாய்ப்பு எனக்கு வந்தது. அப்படியாக தமிழ்ல அறிமுகமானேன்.
அப்புறம், ‘யாரடி நீ மோகினி’யில் நெகட்டிவ் கேரக்டர் செய்தேன். இப்ப ‘கயல்’. இந்த ‘கயல்’ என் அடையாளமாவே ஆகிடுச்சு...’’ என்றவரிடம் அப்பா என்ன சொன்னார் என்றோம். ‘‘அப்பா ரொம்ப கண்டிப்பானவர். ஆனா, அன்பானவர். அக்காவை பொண்ணு மாதிரியும், என்னை பையன் மாதிரியும் வளர்த்தார். என் சின்ன வயசுல பையன் மாதிரியான ஹேர்கட்லதான் திரிவேன். பையன் மாதிரியே டிரஸ் போடுவேன். அந்தளவுக்கு அப்பா எனக்கு நிறைய தைரியம் சொல்லி வளர்த்தார். அம்மாவும் அப்படிதான். ரெண்டு பேரும் என்கரேஜ் பண்ணிட்டே இருப்பாங்க.
அம்மாவுக்கு இன்னும் நான் செல்லம். என்னைப் பத்தியே எப்பவும் நினைச்சிட்டே இருப்பாங்க. இப்பகூட ஒரு நாளைக்கு பத்துமுறை போன் பண்ணிடுவாங்க. ஆரம்பத்துல அவங்ககிட்ட ‘நடிக்கப் போறேன்’னு சொன்னதும் நம்பிக்கையா அனுப்பினாங்க. ஊக்கப்படுத்தினாங்க. ‘ராகேஷை காதலிக்கிறேன்’னு சொன்னப்பகூட எதுவும் சொல்லல. காரணம், என் மேல் இருந்த நம்பிக்கை. ராகேஷும் ரொம்ப சப்போர்ட்டிவ். நிறைய கேரிங் எடுத்துப்பார். அவர் விளம்பரம் மற்றும் வெப் சீரிஸ்ல ஒளிப்பதிவாளரா வொர்க் பண்ணிட்டு இருக்கார்.
ஒரு மியூசிக் ஆல்பத்திற்காக நாங்க போன்கால்ல மீட் பண்ணினோம். அப்படியே பேச ஆரம்பிச்சோம். ஆனா, அந்த ஆல்பம் டேக்ஆஃப் ஆகல. எங்க காதல் டேக்ஆஃப் ஆகிடுச்சு! வீட்டு சம்மதத்துடன் இருவீட்டார் முன்னிலையில் மாலை மாத்திக்கிட்டோம். 2019ல் மீட் பண்ணி 2020ல் திருமணம் நடந்தது. என் மாமனார் மத்திய அரசுல வேலை செய்து இப்ப ஓய்வு பெற்றுட்டாங்க. அத்தை ஹவுஸ் வொய்ஃப்.
எங்க வீட்டுல அக்காவின் திருமணமும் காதல் திருமணம்தான். அவளுக்கு கொஞ்சம் பிரச்னையாச்சு. ஆனா, எனக்கு எந்த பிரச்னையும் வரல. அப்பாதான் ‘இவ்வளவு சீக்கிரமா வேணுமா’னு கேட்டார். ஆனா, ராகேஷ் வீட்டுல, ‘உன் வேலையை கல்யாணம் பண்ணிட்டு தொடர்ந்து செய். எங்காச்சும் நீங்க வெளியே போனா யாரும் எதுவும் பேசக்கூடாதுல’னு சொன்னாங்க. அது சரினு தோணுச்சு. உடனே பண்ணிக்கிட்டோம்...’’ என்றவர் தொடர் ஷூட்டிங்கால் நிறைய விஷயங்களை மிஸ் பண்ணுவதாகச் சொல்கிறார்.
‘‘முதல்ல அம்மா சாப்பாட்டை ரொம்ப மிஸ் பண்றேன். கன்னட சீரியல் பண்ணினப்ப அம்மா மூணு வேளையும் சாப்பாடு பண்ணி அனுப்பிடுவாங்க. ஸ்நாக்ஸ்கூட செய்து கொடுப்பாங்க. எனக்கு வீட்டுச் சாப்பாடுதான் ரொம்பப் பிடிக்கும். வெளியில் சாப்பிட மாட்டேன். அதுவும் வெஜ் விரும்பிச் சாப்பிடுவேன்.
அம்மா சாப்பாட்டுல எனக்கு களி ரொம்பப் பிடிக்கும். அதுக்கு சாம்பார் வைப்பாங்க. அந்த ரெண்டையும் மிக்ஸ் பண்ணி சாப்பிடுறது டிவைன்னு சொல்லலாம். கர்நாடகாவுல ஃபேமஸ் ஃபுட் அது. அந்த சாம்பாரை கன்னடத்துல ‘பாஷ்சரு’னு சொல்வாங்க. அல்லது ‘உப்சரு’னு ஒரு டிஷ் இருக்கு. இந்த ரெண்டுல ஒண்ணை களியுடன் சேர்த்து சாப்பிடணும்.
அங்க எல்லா குழம்பையும் சாம்பார்னுதான் சொல்வோம். இங்கதான் காரக்குழம்பு, வத்தக்குழம்புனு தனித்தனி பெயர் வச்சிருக்காங்க. ஆரம்பத்துல எனக்கு குழப்பமா இருந்தது. இப்ப அப்படியில்ல. இங்க நானே சமைச்சு சாப்பிடுறேன்.
காலையில் ராகி கூழ், வெஜிடபிள் சாப்பிடுவேன். மதியம் ஷூட்டிங்ல சப்பாத்தி மாதிரியான உணவுகளை எடுத்துப்பேன். நான் சாப்பாட்டுப் பிரியை கிடையாது. நீங்க என் முன்னாடி சூப்பரான உணவு செய்திட்டு வந்து வச்சாலும் நான் அளவோடதான் சாப்பிடுவேன். சின்ன வயசுல இருந்தே அப்படிப் பழகிடுச்சு. அடுத்து என் குடும்பத்தை மிஸ் பண்றேன். எனக்கு என்ன நடந்தாலும் உடனே அக்காகிட்டதான் ஷேர் பண்ணுவேன். எந்தப் பிரச்னையா இருந்தாலும் முதல்ல எனக்கு ஞாபகம் வர்றது அவதான். அவ சாஃப்ட்வேர்ல வொர்க் பண்றா. இங்க ரெண்டு வருஷம் இருந்தா. இப்ப பெங்களூர்ல வேலை. அப்பாவையும், அம்மாவையும் அவளே பார்த்துக்கிறா. எனக்கு பிரேக் கிடைக்கிறப்ப நான் பெங்களூருக்கும் ஹைதராபாத்துக்கும் போறேன். இல்லனா அவங்க இங்க வந்திடுவாங்க.
எனக்கு 15 நாட்கள் வேலை செய்திட்டு 15 நாட்கள் டிராவல் பண்ணணும்னு ரொம்ப நாட்களா ஆசை. ஷூட்டிங் தொடர்ந்து போயிட்டே இருக்கிறதால அதுவும் நடக்கமாட்டேங்குது...’’ என சோகமாக அவரின் முகம் மாறினாலும் அடுத்த நொடியே கண்சிமிட்டி சிரித்துவிடுகிறார். ‘‘நடிப்புக்கும் நான் பயிற்சியெல்லாம் எடுத்துக்கல. போகப் போக கத்துக்கிட்டதுதான். எனக்கு சின்ன வயசுலயே ஒரு வேலையை செஞ்சா பெர்ஃபெக்ட்டா செய்யணும்னு என் அம்மா சொல்லிக் கொடுத்தாங்க. அது அப்படியே பழகிடுச்சு. அதனாலதான் ‘வலிமை’ பட வாய்ப்பு அமைஞ்சது.
அஜீத் சாரை முதல்முறையா செட்ல பார்த்தது கனவு மாதிரி இருக்குது. அந்தப் படத்துல நடிச்சது பெரிய அனுபவம். இப்ப பெயர் அறிவிக்கப்படாத ஒரு படத்துல நடிச்சிட்டு இருக்கேன்...’’ என்கிறவர், ‘‘என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல மனிதனா, மனிதநேயத்துடன் இருக்கணும்னு ஆசைப்படுறேன். செட்ல இருக்கும்போதும் சரி இல்லாதபோதும் சரி, ‘அந்தப் பொண்ணு நல்லா வேலை செய்யும்ப்பா’னு பலரும் சொல்லணும். என்னை எல்லோருக்கும் ஒரு நல்ல மனுஷியா ஞாபகம் இருந்தால்போதும்.
அப்புறம், எனக்கு கிடைக்கிற வாய்ப்பை நல்லபடியா பயன்படுத்தணும்னு நினைக்கிறேன். இதுதான் ஆகணும்னு எந்த குறிக்கோளும் இல்ல. கடவுள் நமக்குனு ஒரு வழியை கண்டிப்பா காட்டுவார். அந்த வழியில் போயிட்டே இருக்க வேண்டியதுதான்...’’ தத்துவார்த்தமாகச் சொல்கிறார் ‘கயல்’ சைத்ரா ரெட்டி.
கயலுக்குப் பிடிச்சது...
ஊர்: இப்ப சென்னை. ஏன்னா, எனக்குனு ஒரு அடையாளம் முழுசா கிடைச்சது சென்னையில்தான். இங்க மெரினா பீச் ரொம்பப் பிடிக்கும். அப்புறம், கிளைமேட்டிற்கு பெங்களூர் ரொம்பப் பிடிக்கும். அதைத்தாண்டி அங்க அப்பாவும், அம்மாவும் இருக்காங்க. கடவுள்: நான் ரொம்ப சாமி கும்பிடுவேன். சாய்பாபாவும், திருப்பதி பாலாஜியும் என் இஷ்ட தெய்வங்கள்.
நடிகர், நடிகை: எனக்கு ரஜினி சாரை ரொம்பப் பிடிக்கும். அவரின் மிகப்பெரிய ரசிகை நான். நடிகைகள்ல அனுஷ்கா மேடம். அப்புறம், நயன்தாரா மேமை ரொம்ப பிடிக்கும். சீரியல்: நான் கயல் தவிர்த்து நேரம் கிடைக்கிறப்ப சுந்தரி சீரியல் விரும்பிப் பார்ப்பேன். ஏன்னா, சுந்தரியா வர்ற கேப்ரில்லாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
‘கேப்பித்’தை பார்த்தாலே வசீகரமா தோணும். ரொம்ப நல்ல பொண்ணு. நல்லா பேசுவா. அந்த பெர்சனாலிட்டியாலே எனக்கு அந்த சீரியல் பிடிக்கும். உணவு: இப்ப சென்னையில் வேர்க்கடலை வத்தக்குழம்பு மட்டும்தான் ரொம்பப் பிடிக்குது. உடை: சேலைதான். வீட்டுல எந்த நிகழ்ச்சி நடந்தாலும் சேலைதான் அணிவேன்.
விளையாட்டு: விளையாட்டுல பெரிசா ஆர்வம் கிடையாது. நேரம் கிடைக்கிறப்ப கிரிக்கெட் பார்ப்பேன். நான் ‘தல’ தோனி ரசிகை. ஃபேவரைட் சினிமா: ‘நடிகையர் திலகம்’ ரொம்ப பிடிச்சிருந்தது. முணுமுணுக்கிற பாடல்: அன்னைக்கு காலையில் ரேடியோவில் என்ன பாடல் கேட்கிறனோ அதைத்தான் முழுநாளும் பாடிட்டே இருப்பேன்.
செய்தி: பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்
|