அரசியல் மையமாக கோயில் இருந்தது! சொல்கிறார் கல்வெட்டு ஆய்வாளர் ஆ.பத்மாவதி



ஆண்கள் மட்டுமே கோலோச்சிய ஒரு துறையில் ஒரு பெண்ணாக கதவை உடைத்துத் திறந்து பல ஒளிகளைப்  பாய்ச்சி வருகிறார் பத்மாவதி. அந்தத் துறை கல்வெட்டு ஆய்வு.
நம் கோயில் சுவர்கள், அடர் காட்டுக்குள் இருக்கும் கற்பாறைகள் ஆகியவற்றில் பழமையான எழுத்துக்களில் நம் வரலாற்றைச் சொல்லும் ஆவணமாக இருக்கின்றன இந்தக் கல்வெட்டுகள். ஆனால், எல்லோராலும் இந்தக் கல்வெட்டுகளைப் படிக்க முடியாது. அதற்கு ஓர் ஆர்வமும் நிபுணத்துவமும் அவசியம். இந்த இரண்டும் பத்மாவதியிடம் இருக்கிறது. அதனால்தான் இதுவரை நம்மை ஒருகாலத்தில் ஆண்ட களப்பிரர் ஆட்சி ஒரு இருண்ட கால ஆட்சி அல்ல என்பதை இவரால் நிரூபிக்க முடிந்திருக்கிறது.

‘‘திருநெல்வேலியில் உள்ள வெள்ளங்குளி என்னும் கிராமத்தில்தான் பிறந்தேன். பள்ளிப் படிப்பை கல்லிடைக்குறிச்சியில் உள்ள திலகர் வித்யாலயாவிலும் கல்லூரிப் படிப்பை பாளையங்கோட்டையில் உள்ள சாரா டக்கர் கல்லூரியிலும் முடித்தேன். இளங்கலை, முதுகலை எல்லாமே தமிழ்தான். முதுகலையை 73ல் முடித்தேன்...’’ என்று சொல்லும் பத்மாவதிக்கு கல்வெட்டியலில் ஆர்வம் வந்தது தனிக்கதை.

‘‘எனக்கு கல்வெட்டியல் பற்றி எல்லாம் முதலில் தெரியாது. எம்ஏ முடித்ததும் தமிழ் தொடர்புடையை ஒரு துறையில் மேற்படிப்பைப் படிக்கலாம் என்று இருந்தேன். அந்த நேரத்தில்தான் கல்வெட்டியல் பற்றிய ஒரு டிப்ளோமா படிப்பு முதுகலைக்குப் பிறகு இருப்பதைக் குறித்த சென்னைப் பல்கலைக் கழகத்தின் விளம்பரத்தைப் பார்த்தேன்.

சென்னை எழும்பூரில் இருந்த அரசு தொல்லியல் துறையில் இந்த படிப்பு சொல்லிக் கொடுக்கப்பட்டு வந்தது. இந்தப் படிப்புக்கு தமிழ், சமஸ்கிருதம், வரலாறு, அகழ்வாராய்ச்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இருந்தது. அதில் சேர்ந்து படித்தபோதுதான் இந்தத் துறை பற்றிய ஆர்வம் எனக்கு மிகுந்தது...’’ என்று சொல்லும் பத்மாவதிக்கு இந்தப் படிப்பில் தேர்ச்சி பெற்றதுமே வேலை கிடைத்ததுதான் ஆச்சரியம்.
‘‘1975ல் படிப்பை முடித்தேன். உடனே தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வாணையமும் ‘இந்தத் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்’ என்று ஒரு விளம்பரம் செய்தது. நானும் அப்ளை செய்தேன். அப்போது எல்லாம் இந்தத் தேர்வுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. வாய்மொழித் தேர்வுதான். கலந்துகொண்டு வேலையும் கிடைத்தது. முதலில் என்னை தஞ்சாவூருக்குத்தான் போகச் சொன்னார்கள். கோயில் நகரம் அல்லவா... அதுவரை பல கல்வெட்டுகள் வெளியிடப்பட்டு வந்தாலும் படியெடுக்காத பல கல்வெட்டுகள் நம் தமிழ்நாட்டில் அப்போதும் ஏராளம் இருந்தன. எனவே என்னையும் இன்னும் சில பெண்களையும் இந்த வேலைக்கு அரசு அனுப்பியது.

நாங்கள்  மூன்று பெண்கள். மூவரும் ஒரு கிராமத்தில் வாடகை சைக்கிளை வாங்கிக்கொண்டு ஊர் ஊராகச் சென்று கோயில் குளங்களில் உள்ள கல்வெட்டுகளைப் படி எடுத்து அவற்றில் உள்ள செய்திகளை அந்தக் கல்வெட்டு கிடைத்த ஊர் மக்களிடையே சொல்லும்போது எங்களுக்கு அவர்கள் கொடுத்த மரியாதையும், அன்பும் இப்பொழுது வரை நிழலாடுகிறது...’’ என்ற பத்மாவதி, கல்வெட்டுகளைப் படி எடுப்பது... அதை வெளியிடுவது குறித்து விவரித்தார்.

‘‘ஒரு வகையான மையை கல்வெட்டில் ஊற்றி ஒரு வெள்ளை பேப்பரை அந்த மை ஊற்றிய கல்வெட்டில் வைத்து ஒத்தி முதலில் எடுப்போம். தாள் பிரதியில் இருக்கும் எழுத்து அந்தக் காலத்திய எழுத்தாக இருக்கும். இந்தப் பழைய எழுத்தை புதிய தமிழில் மொழிபெயர்த்து எழுதுவோம். அதுவும் சுருக்கமாகத்தான் எழுதுவோம். பிறகு சுருக்கத்துக்கு அடியில் அந்தக் கல்வெட்டு கிடைத்த இடத்தின் வரலாறு, அதில் கிடைக்கும் செய்திகளின் அர்த்தங்கள் போன்றவற்றை எல்லாம் எழுதுவோம்.

இப்படியாக இதுவரை நான் எழுதி அரசு வெளியிட்டிருக்கும் கல்வெட்டு தொகுப்புகள் மட்டும் 22 இருக்கும்!’’ என்றவரிடம், தஞ்சையை ஆண்ட பொன்னியின் செல்வர்கள் பற்றி அவர் கண்டடைந்த சில சுவாரசியமான தகவல்கள் குறித்து கேட்டோம்.‘‘தஞ்சையை ஆண்ட சோழர்கள் பற்றியும் இராஜராஜன் பற்றியும் விமர்சனம் செய்யலாம். ஆனால், எங்கள் வேலை ஒரு கல்வெட்டு என்ன சொல்கிறது என்பதை வெளிப்படுத்துவது மட்டுமே. அந்த வகையில் இராஜ ராஜன் காலத்தில் எழுந்த கோயில்களில் இருக்கும் பல கல்வெட்டுகள் இராஜராஜனை ஒரு சிறந்த நிர்வாகியாகவே படம்பிடித்துக் காட்டுகின்றன.

ஒரு கோயில் என்பது ஆன்மீகத்தையும் தாண்டி எப்படி அது ஓர் அரசியல், சமூகம், பொருளாதார மையமாகத் திகழ்கிறது என்று படம்பிடித்து பல கல்வெட்டுகள் சொல்கின்றன.
உதாரணமாக ஒரு கோயில் என்றால் நில மேலாண்மை, நீர் மேலாண்மை, சிவனடியார்கள், யோகிகள், தத்துவ ஆச்சார்யர்கள், கொல்லர், தச்சர் போன்ற சேவைப் பிரிவினர், சமையற்கட்டு போன்றவற்றை உள்ளடக்கியதுதான். இவற்றில் ஓர் ஒழுங்கு இருந்திருக்கிறது. கோயில்தான் ஒரு ஊரின் வேலைகளைப் பகிர்ந்தளிக்கும் ஒரு மையமாகத் திகழ்ந்திருக்கிறது.

எடுத்துக்காட்டாக ஒரு மன்றாடிக்கு 96 ஆடுகள் கொடுக்கப்படுவதாக ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்த இடையரான மன்றாடியின் வேலை அந்த ஆடுகள் மூலம் வரும் பாலை நெய்யாக மாற்றி கோயிலுக்குக் கொடுப்பது. அதேபோல் நில மேலாண்மையில் நிலத்தின் தரத்துக்கு ஏற்ப எப்படி வரி வசூல் செய்வது என்பது பற்றிய விவரம் இருக்கும். இதுபோல் கொல்லர், தச்சர், சமையற்காரர், நந்தவன வேலையாட்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட வேலையை ஒரு கோயில் பகிந்தளித்திருக்கிறது.

பிராமணருக்கு என்று ஒரு சேரி, வணிகர்களுக்கு என்று ஒரு சேரி, விவசாயிகளுக்கு என்று ஒரு சேரி... என்று ஒரு ஊர் தனித்தனியான ஒரு இடமாக இருந்ததால் ஒரு தன்னிறைவான வாழ்வை அந்த சோழர் கால மக்கள் வாழ்ந்தார்கள் என்பதை தஞ்சை கல்வெட்டுகளின் பல செய்திகள் சொல்கின்றன. கோயிலில் மடம் இருக்கும். இந்த மடத்தில்தான் பள்ளி இருக்கும், நூலகம் இருக்கும், மருத்துவமனை என்று சொல்லும் ஆதுலர் சாலை இருக்கும்...’’ என்று சொல்லும் பத்மாவதி, களப்பிரர் காலம் பற்றியும் அவர் கண்டடைந்த கல்வெட்டு பற்றியும் நம்மிடையே பகிர்ந்தார்.

‘‘கி.பி 3 முதல் 6ம் நூற்றாண்டு வரை களப்பிரர்கள் நம்மை ஆண்டார்கள் என்று வரலாறு சொல்லும். இந்த நூற்றாண்டுகள் பற்றி வரலாற்றுச் செய்திகள் இல்லாததால் பலரும் இந்தக் காலகட்டத்தை இருண்ட காலமாகவே வர்ணித்து வந்தார்கள். இந்த இருண்ட காலத்தோடு இணைந்து இந்தக் காலத்தை ஒரு கொடுங்கோல் ஆட்சிக் காலம் என்றும் பலரும் ஒருகாலத்தில் எழுதி வந்தார்கள்.

ஆனால், இந்தக் கருத்தை கொஞ்சம் அசைத்துப் பார்த்தவர் முதுபெரும் தமிழ் அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமிதான். அவருக்குப் பின் இந்தக் காலம் பற்றி பெரிதாக ஆதாரம் கிடைக்கவில்லை. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பக்கத்தில் உள்ள ஒரு கிராமமான பூலாங்குறிச்சிக்குப் பக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு கல்வெட்டைக்  கண்டுபிடித்தேன். இந்தக் கல்வெட்டுதான் களப்பிரர்கள் பற்றிய முதலும் இறுதியுமான கல்வெட்டாகத் திகழ்கிறது.  

அப்போது பத்திரிகைகளில் இந்தச் செய்தி வெளியானது. இந்தக் கல்வெட்டில், இந்தக் களப்பிரர் மன்னன் பல இடங்களில் கோயில் கட்டியதாக செய்தி இருக்கிறது. அத்தோடு பெரிய கப்பற்படையை வைத்து ஆட்சி செய்ததாகவும் செய்தி இருக்கிறது.

உண்மையில் இந்தக் களப்பிரர்கள் அன்னியப் பிரதேசத்தினர் அல்ல. தமிழர்கள்தான். சங்க காலத்தில் இருந்த பல சிற்றரசர்கள் எல்லாம் சேர்ந்து ஆட்சி செய்ததைத்தான் இந்தக் கல்வெட்டு சொல்கிறது...’’ என்று சொல்லும் பத்மாவதி அடுத்து எடுத்துக்கொண்டிருக்கும் களம்  சிலப்பதிகாரம்!

செய்தி: டி.ரஞ்சித்

படங்கள்: ஆர்.சந்திரசேகர்