பயோடேட்டா- தனியார் பள்ளிகள்
பெயர் : தனியார் பள்ளி.
முதல் பள்ளி : இங்கிலாந்தில் உள்ள கேன்டர்பரி எனும் இடத்தில் 597ம் வருடம் உதயமான ‘த கிங்ஸ் ஸ்கூல்’தான் உலகின் முதல் தனியார் பள்ளியாகக் கருதப்படுகிறது. பிற்காலத்தில் பள்ளி என்ற அமைப்பு உருவாக மூல காரணம் இந்தப் பள்ளிதான். காலமாற்றத்துக்கு ஏற்ப தன்னை நவீனப்படுத்திக் கொண்டதால், இன்றும் இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பழமையான பள்ளி என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
 இந்தியா: ஆங்கிலேயேர்கள் இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்தபோது, 1715ம் வருடம் சென்னையில் செயின்ட் ஜார்ஜ் பள்ளியை உருவாக்கினார்கள். இதுதான் இந்தியாவின் முதல் தனியார் மற்றும் ஆங்கில மீடியம் பள்ளி. தவிர, ஆசியாவின் பழமையான ஆங்கில மீடியம் பள்ளி மற்றும் உலகின் பழமையான பள்ளிகளில் ஒன்று இது. இப்போது இந்தியா முழுவதும் உள்ள குழந்தைகளில் 29 சதவீதம் பேர் தனியார் பள்ளிகளில்தான் படிக்கின்றனர். இதில் நகர்ப்புறத்தைச் சேர்ந்த குழந்தைகளில் 50 சதவீதம் பேரும், கிராமப்புறங்களைச் சேர்ந்த குழந்தைகளில் 20 சதவீதம் பேரும் அடங்குவர்.
 குறிப்பாக நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்கள்தான் தங்களின் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளுக்கு அதிகமாக அனுப்புகின்றனர்.நல்ல உள்கட்டமைப்பு, நூலக வசதி, விளையாட்டு மைதானம், அதிகமான ஆசிரியர்கள், கல்வியைத் தாண்டி குழந்தைகளுக்கான பல நிகழ்வுகள், அரசுப் பள்ளியுடன் ஒப்பிடும்போது நல்ல ரிசல்ட்... போன்ற காரணங்களால்தான் இந்திய மக்கள் தனியார் பள்ளிகளை நாடுகின்றனர். அரசுப் பள்ளி இலவசம் என்றாலும்கூட, ஏழ்மையில் வாடுபவர்கள் கடன் வாங்கியாவது தங்களின் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பவே விரும்புகின்றனர் என்கிறது ஓர் ஆய்வு.
 இதற்கு உதாரணமாக ஹைதராபாத்தின் குடிசைப்பகுதிகளில் வாழும் குழந்தைகளில் 65 சதவீதம் பேர் தனியார் பள்ளிகளில் படிப்பதாகக் குறிப்பிடுகிறது அந்த ஆய்வு. அரசுப் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சரியான பயிற்சி இல்லாதவர்கள், அனுபவமற்றவர்கள் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.
 எண்ணிக்கை : 2018 -19ம் கல்வியாண்டின்படி 3,25,760 ஆக இருந்த தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 2020 - 21ம் கல்வியாண்டில் 3,40,753 ஆக உயர்ந்திருக்கிறது. அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. 2018 - 19ம் கல்வியாண்டில் 10,83,678 ஆக இருந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 2020 - 21ம் கல்வியாண்டில் 10,32,049 ஆகக் குறைந்திருக்கிறது. சுமார் 51 ஆயிரம் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்ட பள்ளிகளில் பெரும்பாலானவை ஆரம்ப நிலைப் பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 2020 - 21ம் கல்விஆண்டின்படி இந்தியாவில் மொத்தமாக 15.1 லட்சம் பள்ளிகள் உள்ளன.
இதில் அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சர்வதேசப் பள்ளிகள் என அனைத்து வகையான பள்ளிகளும் அடங்கும். இந்தியாவில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, 26.44 கோடி. ஆசிரியர்களின் எண்ணிக்கை, 96.96 லட்சம். தவிர, இந்தியாவில் 410 சர்வதேசப் பள்ளிகள் உள்ளன.
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் : 2019 - 20ம் கல்வி ஆண்டின்படி மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் 84,362 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இத்தகைய பள்ளிகளில் பெரும்பாலானவை தொண்டு நிறுவனங்கள் அல்லது கல்வி சார்ந்த அமைப்புகளால் நடத்தப்படுகின்றன. சுதந்திரப் போராட்ட வீரரான லாலா லஜபதி ராயால் 1886ல் ‘டி.ஏ.வி காலேஜ் மேனேஜிங் கமிட்டி’ எனும் கல்வி சார்ந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு அரசின் உதவியுடன் இந்தியா மற்றும் அயல்நாடுகளில் 900 பள்ளிகளை நடத்தி வருகிறது. இந்தியாவில் அரசின் உதவியுடன் அதிக பள்ளிகளை நிர்வகித்து வரும் அமைப்பும் இதுவே.
வசதி : தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 75.62 சதவீத பள்ளிகளில் இணைய வசதி உள்ளது. ஆனால், 18 சதவீத அரசுப் பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி உள்ளது. இதுபோல அரசுப் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது தனியார் பள்ளிகளில் விளையாட்டு மைதான வசதிகள் அதிகம். சென்னை போன்ற மாநகரங்களில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் 50 சதவீதத்துக்கு அதிகமான பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இல்லை என்று ஓர் ஆய்வு சொல்கிறது. தவிர, மின்சாரம், தண்ணீர், கட்டுமானம், இருக்கை போன்ற அடிப்படை வசதிகளும், ஆசிரியர் விகிதமும் தனியார் பள்ளிகளில்தான் அதிகம்.
தமிழ்நாடு : கல்வித்துறையில் வேகமாக முன்னேறி வரும் மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது தமிழ்நாடு. 1841ம் வருடமே சென்னையில் முதல் உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது, 1849ல் பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளி திறக்கப்பட்டது, 1911ம் வருடம் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடத்தப்பட்டது போன்ற ஏராளமான முன்னெடுப்புகளை எடுத்துள்ளது தமிழ்நாட்டுக் கல்வித்துறை.
சமீபத்தில்கூட இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுபோக தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலைத்திறன் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்த தரமான திரைப்படங்களைத் திரையிடும் திட்டத்தையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் முதல் தனியார் பள்ளியான செயின்ட் ஜார்ஜ் பள்ளி தமிழ்நாட்டில்தான் திறக்கப்பட்டது. இங்கே 37,211க்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் சுமார் 54.71 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
தவிர, தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை, 8403 ஆக உள்ளன. இதில் 28.44 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதாவது, ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் 147 மாணவர்களும், ஒவ்வொரு அரசு உதவி பெறும் பள்ளியிலும் 338 மாணவர்களும் பயில்கின்றனர். இதுபோக சுமார் 11,335 தனியார் பள்ளிகள் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. இதில் மெட்ரிகுலேசன், நர்சரி, சிபிஎஸ்இ பள்ளிகளும் அடங்கும். (படங்களில் இருக்கும் மாணவர்கள் மாடல்களே...)
த.சக்திவேல்
|