சிறுகதை - ப(ட்)டு



இவ எங்க வந்தா...? காலையில் கடைக்குக் கிளம்பும்போதே அப்பா கண்ணில் பட்டுவிட்டது அது. ‘அது’தான். அது அப்பா பாஷை. அது அப்படித்தான். அந்த ஒரு வார்த்தையே போதும். அப்பா அந்த விஷயத்தை எப்படி மதிக்கிறார் என்று.
அப்பாவைப் பார்த்தால் அவர்களே ஒதுங்கிக் கொண்டு விடுவார்கள். அல்லது மறைந்து கொள்வார்கள். அப்படியான மனிதர்களை அவர்கள் தொந்தரவு செய்வதில்லை. மதிப்பாய் வைத்திருப்பார்கள். தங்களை மறைத்துக் கொள்வதன் மூலம் தங்கள் மரியாதையை மறைமுகமாகச் செலுத்துவார்கள்.  

விரும்பியும் விரும்பாமலும் கூட காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வார்கள். எதற்கு? என்பதுதான் கேள்வி. தன் இருப்பு தடங்கலில்லாமல் கழியவா? அல்லது ஏதேனும் பங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவா? அல்லது என் இருப்பைக் கண்டுகொள்ளாதீர்கள் என்றா?

ம்... ம்... இருக்கட்டும்... இருக்கட்டும்... என்று விலகிப் போய்விடுவார் அப்பா. அந்த வார்த்தைகளையும் விரும்பாமல்தான் சொல்வார். அவர்களின் முகம் பார்க்காமல்தான் முனகுவார்.
இதெல்லாம் எனக்கு அறவே பிடிக்காது என்பதுதான் அதன் பொருள். நாலு பேர் முன்னாடி இதைச் செய்வதிலேயே ஏதோ தப்பு அடங்கியிருக்கிறதே? என்று புரிபவர் அப்பா.
‘யார் கேட்டா உங்கிட்ட இதை? நீயா வலிய வந்து கால்ல விழுந்தேன்னா அதுக்கு நானா பொறுப்பு? எதுக்கு வேஷம் போடுறே? ஊருக்கு உன்னைக் காட்டிக்கிறியா?

நானே ஆசீர்வாதம் பண்றேன்னு உலகத்துக்கு உன்னைக் காட்டி மத்தவா வாயை மூடப் பார்க்கிறியா? அல்லது என்னை வச்சு உன்னை இங்கே நிலை நிறுத்திக்கப் பார்க்கிறியா? எல்லாம் உன் புருஷனோட போச்சு. அந்த நியாயஸ்தனுக்கு, அந்த நல்லவனுக்குப் பொண்டாட்டியா இருக்க உனக்குத் தகுதியில்லே! அதை என்னைக்காச்சும் மனசார உணர்ந்திருக்கியா நீ?

அவன் உயிரோட இருந்தபோது நீ முழுத் தகுதியோடதான் இருந்தே... இல்லேன்னு சொல்லல்லே... அப்போ அப்படி இருக்கவும் வேண்டாம்... இப்போ இப்படி ஆகவும் வேண்டாம்! என்ன ஆயிட்டேன்னு ஒண்ணும் புரியாத மாதிரி நீ நடிச்சிட்டுத் திரியறே..! உன் மனசுக்கு நீயே துரோகம் பண்ணிக்கிறே..! திடீர் திடீன்னு வெளியூருக்குப் போயிடறே... வெளியூர்தான்னு யார் கண்டா? அப்டித்தான் நினைச்சிக்க வேண்டியிருக்கு...

ரொம்ப அதி முக்கியமாப் பயணம் மேற்கொண்ட மாதிரி திடீர்னு ஊர்ல இருக்கே... எந்த வேளைல வந்து குதிச்சேன்னு யாருக்கேனும் தெரியுமா? ஒருத்தரோட... வேண்டாம்... நேரடியாவே சொல்றேன்... ஒருத்தியோட இருப்பும், மறைவும் இப்டியா ரகசியமா இருக்கிறது? நீ எங்க போறே, எங்க வர்றேன்னு எவன் கண்டான்? ஆனா, ஆசீர்வாதம் மட்டும் உனக்கு வேணுமாக்கும்... கால்ல சக்கரம் கட்டிண்டு அலையுற உனக்கு எதன்மேலதான் மதிப்பும் மரியாதையும்?

நல்ல வேளை உனக்கு ஒரு குழந்தை இல்லே. இருந்ததுன்னா நீ இப்டி இருக்கமாட்டே...இப்டி ஆயிருக்க மாட்டே... அதனாலதான் லம்பாடியா இப்டிச் சுத்தறே..! வயிறு நிறைஞ்சா போதும்னா அதுக்கு இதுவா வழி? நாலு வீட்ல பத்துப் பாத்திரம் தேய்க்கிறது? தேயேன்... தேய்ஞ்சா போவே? அப்டிப் போனாத்தான் என்ன? உழைச்சு உழைச்சுத்தானே தேயறே? இப்டி உடம்பால தேயலையே?

பஜனை சுத்தி வர்றா... ஸ்வாமி கைங்கர்யம் அது... தெருவுல அவா பாட்டுப் பாடிண்டு வர்ற போது... பயபக்தியா சுத்தி வந்து, நமஸ்கரிச்சு... செம்புல அரிசியும் போட்டு... அட்சதையும் தலைல வாங்கிக்கிறே... எந்தப் பாவத்தப் போக்க இது?பாவத்தப் போக்கவா... மேற்கொண்டு பாவத்தச் சேர்க்காம இருக்கிறதுக்கா? அல்லது இனிமே இப்படித்தான்னு ஊருக்குக் காட்டுறியா?    

எல்லாம் உன் மனசுக்குத்தான் தெரியும். மனுஷாளுக்குத் துரோகம் செய்றியோ இல்லையோ மனசுக்குத் துரோகம் செய்ற பாரு... அது மாதிரி தப்பு வேறே எதுவுமில்லே. உன் மனசை நீயே ஏமாத்திக்கிறே. உனக்கு நீயே சமாதானம் சொல்லிண்டு... திரும்பவும் அதே தப்பைச் செய்றே! கேட்டா அவாளா வர்றாளே... நா என்ன செய்யட்டும்னு புலம்பறே! இது ஒரு பதிலா?

இனிமே இங்க என்னத் தேடிண்டு வராதீங்கோன்னு ஒரு வார்த்தை சொல்ல உனக்குத் துப்பில்லே? ஏன் வாய் வரமாட்டேங்கிறது? காசு... காசு... அவா தர்ற துட்டு... உழைக்காமக் கிடைக்கிறதே..? உடல் நோவ உழைச்சு வர்ற காசுதான் உடம்புல ஒட்டும். இதுவும் உடல் நோவத்தான்னு நீ சொன்னாலும் சொல்லுவே. ஆனா, அந்தக் காசு உன் உடம்புல ஒட்
டுமா? பாவம் செய்து வர்ற பணம்... கோயில் உண்டியல்ல போட்டாலும் பலன் கிட்டாமப் போயிடுமாக்கும்...

இந்தத் தெருவுல நீ போயிண்டு வந்திண்டு இருக்கேங்கிறதுக்காக நீ நல்லவ... சரியானவன்னு எல்லாரும் ஒத்துண்டுட்டான்னு அர்த்தமா? அல்லது சரியாயிட்டேன்னு உனக்கு நீயே நினைச்சிப்பியா? இருக்கிறவா நல்லவா... அவாளுக்கு உன்னை நினைக்க நேரமில்லே... அவா அவாளுக்கு ஒரு குடும்பம், குழந்தை குட்டின்னு இருக்காக்கும்... அதப் பாதுகாக்குறதுல கண்ணும் கருத்துமா இருக்கா... இடைல கிடைக்கிற நேரத்துல கிருஷ்ணா, ராமான்னு கோயில்ல போய் புண்ணியம் சேர்ப்பாளே தவிர, உன்னைப் பத்தியா நினைச்சி நேரத்தப் போக்குவா?

உனக்குத்தான் வேறே சோலியில்லே... மத்தவாளுக்கும் அப்டியா? ஆளில்லேன்னா... ஆத்து சோலியில்லேன்னா வாசப்படில வந்து உட்கார்ந்துண்டுடறே... சடைய முன்னாடி இழுத்து விட்டிண்டு அதுல சரமா மல்லிப்பூவத் தொங்கவிட்டிண்டு... காத்துல மணக்க மணக்க வீதில போறவா வர்றவாளப் பார்த்தமேனிக்கு இருக்கே... அடக்க ஒடுக்கமா வாசக் கதவைப் பூட்டிண்டு வீட்டுக்குள்ள இருக்க வேண்டியதுதானே! வீதிக்கு வந்து ஏன் வாசனையைப் பறக்க விடுறே?

மத்தவா கட்டு செட்டா இருக்கிறது பிடிக்கலையா அல்லது பொறாமையா? யாரக் கெடுக்கப் பார்க்கிறே? யாரக் கொண்டு போகப் பார்க்கிறே? யார இழுத்து மடில போடப் பிளான் பண்றே? எல்லாராத்துக்காராளும் அவா அவா ஆத்துக்காராளை அடக்கி ஒடுக்கித்தான் வச்சிண்டிருக்காளாக்கும்... உன்னை மாதிரி தத்தாரியா யாரையும்  அலைய விடலை... நேமம், நிஷ்டைன்னு அவா அவாளுக்கு ஆயிரம் காரியங்கள் இருக்காக்கும்... அதையெல்லாம் தாண்டி உன்னண்ட வந்து ஈஈஈன்னு இளிச்சிண்டு நிப்பான்னு நினைச்சியா?

அநியாயமா எந்தம்பிய எப்டியோ வளைச்சிப் போட்டுட்டே... குடும்பத்துக்கு அடவா இருந்தவன் மனசை அலையவிட்டுட்டே... இனிமே இந்த வீட்டு வாசப்
படியே மிதிக்கப்படாதுன்னு அவனை என் வாயாலேயே விரட்டியடிக்கும்படியாப் பண்ணிட்டே... இந்தப் பாவம் உன்னைச் சும்மா விடுமா? என் வீட்டு வாசப்படி ஏறி எம் பொண்டாட்டி கூட ஸ்நேகமாயிண்டே... அவளோ பாவம்...உன் சங்கதி அறியாதவ... தெரிஞ்சா உன்னை வாசப்படி மிதிக்க விடுவாளா?

நீ அழகா இருக்கே... சிரிச்சா பார்க்கிறதுக்கு  நன்னாயிருக்குன்னு என்கிட்டயே சொல்றா அவ... போதாக்குறைக்கு ஃபோட்டோ ஸ்டுடியோவுக்கு அழைச்சிண்டு போயி அவளோட சேர்ந்து படம் எடுத்திண்டிருக்கே! ஒரு குடும்பப் பொண்ணைப் பேர் கெடுக்கிறதுக்கு உனக்கு எப்டி மனசு வந்தது? அவகூட நின்னு நீ ஃபோட்டோ எடுத்துண்டுட்டா நீ நல்லவளாயிடுவியா? இல்ல அவதான் கெட்டவ ஆயிடுவாளா?

ஒரு மாசம் அவகூட முகம் குடுத்துப் பேசலையாக்கும் நானு... என்னைக் கேட்காம எதுக்கு அவளோட ஸ்டுடியோவுக்குப் போனேன்னு நான் அவளை அடிச்சு மிதிச்ச கதை உனக்குத் தெரியுமா? நியாயமாப் பார்த்தா அந்த அடி உனக்கு விழுந்திருக்கணும்... அதோட இந்த ஊரை விட்டே நீ தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓடியிருக்கணும்.

அண்ணா... மன்னியை அடிக்காதீங்கோ... எல்லாம் என் தப்புதான்... நான்தான் ஸ்டுடியோவுக்குக் கூட்டிண்டு போனேன்... மன்னி விகல்பமில்லாதவா... கல்மிஷம் இல்லாதவா... அந்த ஃபோட்டோவ இப்பவே கிழிச்சுப் போட்டுடறேன்... அந்த ஃபிலிமை ஸ்டுடியோவுலர்ந்து வாங்கி உங்ககிட்டே கொடுத்திடுறேன்... தெரியாம, கூறுகெட்ட தனமாப் பண்ணிட்டேன்... மன்னிக்காக என்னை இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்கோ... என் கண் முன்னாடி மன்னியை அடிக்காதீங்கோ... என்னால பொறுக்க முடியலை... அவ என் தாயாருக்கு சமானம்... அவாளை விட்டிடுங்கோ...

என் தம்பி கேட்டுண்டானோ பொழைச்சாளோ... இல்லன்னா என்னவளை அடிச்சே கொன்னிருப்பேனாக்கும். எங்கிட்டயா வந்து உன் வாலை ஆட்டறே..? ஏதோ இந்தத் தெருவுல எல்லாரும் உன்னைப் பொறுத்துண்டிருக்காளேன்னு நானும் பேசாம இருக்கேனாக்கும்... இருக்கிற இடம் தெரியாம இருக்கணுமாக்கும்.

அப்டித்தான் இருக்கே நீ... உன் பிழைப்பே அதானே..? மத்தவாளுக்குத் தெரியாமச் செய்ற காரியம்னா அதுல ஏதோ தப்பு இருக்குன்னுதானே அர்த்தமாகும்? அது சரின்னு ஆயிடுமா? உன் வண்டவாளம் எல்லாருக்கும் தெரியும்... இருந்தாலும் ஏதோ பொறுத்துண்டிருக்கான்னா அந்த இரக்கத்த தப்பா அர்த்தம் பண்ணிக்குவியா?

எல்லார்க்கும் வேண்டிருக்குன்னு நீ நினைச்சிண்டிருக்கே... அதானே! என்னிக்காவது யாராவது உன்னைத் தேடிண்டு வரத்தான் செய்வான்னு நாக்கத் தீட்டிண்டு காத்துண்டிருக்கே... அப்டித்தானே? சபலம் பிடிச்சவா எங்கதான் இல்லே... மத்தவாளுக்குத் தெரியாத வரைக்கும் எல்லாரும் நேர்மையானவாதான். எந்த ஆத்துக்குள்ளே யார் யார் போறா... வர்றான்னு யார்தான் கவனிக்கல்லே... எல்லார் கண்ணும் அடுத்தவா என்ன செய்றான்னுதான் கொள்ளிக்கண்ணா கவனிச்சிண்டிருக்கு.

கோயில் பிராகாரம் சுத்தி வரச்சே என்ன நடக்கிறதுன்னு யார்தான் கண்டா? எல்லா எடமும் தப்பு நடக்கத்தான் செய்றது? அது அடுத்தவா கண்ணுக்குப் படுறவரைக்கும்தான் பாதுகாப்பு. பட்டுடுத்தோ சிரிப்பாச் சிரிச்சுப் போகும்.  அந்தச் சிரிப்போ உனக்கு என்னைக்கும் இல்லே. நீதான் தெருவுல ஹாயா நடமாடிண்டிருக்கியே..? திண்ணைல உட்கார்ந்து தரையைத் தேய்ச்சிண்டிருக்கிறவா உன்னைப் பார்த்துப் பார்த்து ஏங்கறாளோன்னு எனக்கானா சந்தேகம் தோணிண்டே இருக்கு.

உன்னை எல்லாருக்கும் வேணும்னும் சொல்ல முடியலை... வேண்டாம்னும் ஒதுக்க முடியலை... அதுவே ஒரு பலவீனம்தானே? எல்லாரும் உன்னை உன் புருஷனோட  கண்ணாரக் கண்டவா... அவரோட நீ கோயிலுக்குப் போறதும் வர்றதும்... சினிமாவுக்குப் போயிட்டு வர்றதும்... காணக் கண்கொள்ளாக் காட்சியாத்தான் இருந்தது.

அந்த மனுஷனுக்குத்தான் எவ்வளவு நல்ல மனசு? என் மனையாள் மாதிரி அழகு சொட்டற பொம்மனாட்டியை நீங்க யாராவது வச்சிருக்கேளான்னு கேட்காமக் கேட்குற மாதிரியில்லையோ அந்த மனுஷன் அழைச்சவா வீட்டுக்கெல்லாம் தயங்காம உன்னைக் கூட இழுத்துண்டு போனார்? எல்லாரும் உங்க ரெண்டு பேருக்கும் விழுந்து விழுந்து விருந்து வச்சாளே..? அதுக்கு பதில் மரியாதையா இப்போ நீ... எதுடா சான்சுன்னு காத்திண்டிருக்கே...

யாருக்கு விருந்து வைச்சியோ இல்லையோ... என் தம்பியை மடக்கிப் போட்டுட்டே! அவன் கல்யாணம் ஆகாதவன்னு தெரிஞ்சே உன் வலையை விரிச்சிருக்கே... பெரியகுளத்துல உன் புருஷனோட வேலை பார்த்தவன்னு அறிஞ்சே இப்போ அவனைக் கண் வச்சிருக்கே... நீங்க மூணுபேரும் சேர்ந்து ஒரே சைக்கிள்ல கும்பக்கரை போனேளாமே... வௌங்கினாப்லதான்...
மனுஷனுக்கு தம் பொண்டாட்டியை விட அடுத்தவா சம்சாரத்து மேலேதான் கண்ணிருக்கும்பா... எந்தம்பியோ அவன் ஃப்ரெண்ட் பொண்டாட்டின்னு தெரிஞ்சும் உன்கிட்ட விழுந்துட்டானே... அவன் உசிரோட இருக்கிறபோதே இவனுக்கு வலை விரிச்சிட்ட போல்ருக்கு...

இல்லன்னாத்தான் உனக்கு உன் புருஷன் போன வருத்தம் இருந்திருக்குமே... அவன் போனா என்ன இவன்தான் இருக்கானேன்னு திமிர்ல அலையுறியாக்கும்? பிச்சுப்புடுவேன் பிச்சு... எந்தம்பி கல்யாணம் ஆகாதவன். ஒரு நல்ல வாழ்க்கை அவனுக்கு அமைச்சுக் கொடுக்கணும்னு பிளான் பண்ணிண்டிருக்கேன் நான். அதைக் கெடுக்கப் பார்க்கிறியா..? திமிசுக் கட்டை மாதிரி இருந்திண்டு, எவனடா இழுத்திட்டு ஓடுவோம்னு காத்திருக்கியாக்கும்?

வேணும்னா சொல்லு யாரு அலையறான்னு நா சொல்றேன்... எந்தம்பியையோ... என் பொண்டாட்டியையோ கெடுக்கப் பார்த்தே... நடக்குற கதையே வேறே...
என்ன... நா சொல்றது புரியுதா? ஜாக்கிரதை... செய்றதை கவனமாச் செய்யணும்... எதச் செய்தா பாதுகாப்புன்னு உணர்ந்து செய்யணும்... எதைச் செய்தா யாருக்கும் பாதகம் ஏற்படாதுன்னு அறிஞ்சு செய்யணும். புரிஞ்சிதா?

இதுக்கு மேலே உனக்குச் சொல்ல வேண்டாம்னு நினைக்கிறேன்... புரிஞ்சி நடந்துக்கோ... நாளைக்கு சொல்றேன் ஜொள்ளு விடறவா யாருன்னு! வெட்கங்கெட்டவளே! சும்மாவா வச்சாங்க உனக்கு பட்டுன்னு பேரு!

 - உஷாதீபன்