ஒட்டகப்பால் லிட்டர் ரூ. 600... கழுதைப்பால் லிட்டர் ரூ.4000...



கறந்த பாலை கறந்த சூட்டோடு விற்பனை செய்யும் பொறியியல் பட்டதாரி

பெரிய ஒட்டகம். அந்த ஒட்டகத்தின் கன்றை அவிழ்த்து விட்டதும் ஓடிப்போய் தாயின் மடியில் பால்குடிக்கிறது. அந்தக் கன்றும் கூட தாய் ஒட்டகத்தின் உயரத்திற்கே இருக்கிறது. தாய் ஒட்டகத்தின் மடியில் பால்சுரந்ததும் அதை இழுத்துப் பிடித்து ஓர் ஓரமாகக் கட்டி, பால் கறக்கிறான் ஒரு சிறுவன். அந்தச் சிறுவனுக்கு ஆறு வயது நிரம்பியிருக்குமா? சந்தேகம்தான். அதனுடன் அவ்வளவு சிநேகமாக இருக்கிறான்.

இதுபோலவே இரண்டு கழுதைக்குட்டிகள். அவை அவிழ்த்து விட்டவுடன் தாயின் மடிக்கு ஓடிப் போய் பால் அருந்துகின்றன. பால்சுரந்ததும் அந்தக் குட்டிகளைப் பிடித்து ஓரமாகக் கட்டிவிட்டு தாய்க்கழுதையின் மடியில் பால் கறக்கிறார் அந்தச் சிறுவனின் தந்தை.
ஒட்டகப்பால் ஒரு மிடறு ஓசியில் கிடைத்து விடுகிறது. ஆனால், கழுதைப் பாலை மருந்துக்குக்கூட கொடுக்க மறுக்கிறார் பால் கறப்பவர். ஏனென்றால் ஒட்டகப்பாலின் விலை ரூ.600/-. கழுதைப்பாலோ லிட்டர் ரூ. 4 ஆயிரம். அதை சேம்பிளுக்குக்கூட தர முடியாது என்கிறார்.

‘‘நானாவது இதை ரூ.4 ஆயிரம்தான் சொல்கிறேன். ஆனால், மார்க்கெட்டில் இதன் விலை ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரை விற்கிறது! அதுவும் அந்தப் பால் இப்படி கண்முன்னே கறந்து அதே சூட்டோடு, தண்ணி கலக்காமல் கொடுப்பாங்களான்னு சந்தேகம்தான்!’’ என்கிறார்அவர். இப்படியொரு காட்சி கோவை கொடீசியாவில் சமீபத்தில் நடந்த அக்ரி இன்டெக் 2022 என்ற விவசாயக் கண்காட்சியில் அரங்கேறிக் கொண்டிருந்தது. அங்கே அமைந்திருந்த பல்லாயிரக்கணக்கான ஸ்டால்களின் காட்சிப்படுத்துதலில் சிறப்பிடம் பெற்றது இந்த ஒட்டகங்களும் கழுதைகளும்தான்.

இங்கே கறக்கப்பட்ட ஆட்டுப்பால், ஒட்டகப்பால் கண்காட்சி கேண்டீனில் தனித்தனியாகவும், காபி, டீ வடிவிலும் விற்பனை ஆகிக் கொண்டிருந்தன.இந்த ஆடு, ஒட்டக, கழுதைப் பாலை விநியோகம் செய்தவரின் பெயர் மணிகண்டன். சங்கமித்ரா என்றொரு கால்நடைப் பண்ணையை கோவை குளத்தூரில் வைத்துள்ளார். அதில் ஆடுகள், ஒட்டகங்கள், குதிரைகள், கழுதைகளை மட்டுமல்ல, வாத்து, வான்கோழி, நாட்டுக்கோழி என பறவைகளையும் வைத்திருக்கிறார்.

இத்தனைக்கும் மணிகண்டன் எம்.இ படித்தவர்! படிப்பு சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார். ‘‘கொரோனா காலம்தான் என்னை இப்படி ஆடு, ஒட்டகம், கழுதை வளர்க்கத் தூண்டியது. ஆடு, ஒட்டக, கழுதைப் பால் விநியோகத்தில் கூட எனக்கு விற்பனை நோக்கமல்ல. மக்களுக்கு ஆரோக்கிய உணவு கிடைக்க வேண்டும்; அது அவர்களுக்கு அறிமுகம் ஆகவேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான்...’’ புன்னகைக்கிறார் மணிகண்டன்.

‘‘கொரோனாவுக்குப் பிறகு உலகத்தில் மனிதர்களின் வாழ்க்கை முறையே மாறி விட்டது. எது நல்ல உணவு, எது நோய் தராதது, எது நோய் எதிர்ப்பு சக்தியை தரும் வல்லமை கொண்டது எனஉயர்படிப்பு படித்தவர்களும், உயர் பதவி வகிப்பவர்களும் கூட தேட ஆரம்பித்து விட்டார்கள். அப்படித்தான் நானும் கொரோனாவுக்கு மஞ்சள், இஞ்சி, நிலவேம்பு போன்ற மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைளைப் பயன்படுத்தி சூப், கஷாயம் எல்லாம் போட்டு குடித்தேன். மற்றவர்க்கும் கொடுத்துப் பார்த்தேன்.

குறிப்பாக ஒட்டகப்பால் குடித்தால் சர்க்கரை போய் விடும் என்றார்கள். அதற்காக ஒட்டகப்பால் வாங்கிக் குடித்தேன். நல்ல பலன் தந்தது. இதை ஏன் எல்லோருக்கும் தரக்கூடாது என்று என் பண்ணையில் ஒட்டகங்களை வாங்கிக் கட்டிவிட்டேன். இப்போது எங்கள் பண்ணையில் மட்டும் ஆறு ஒட்டகங்கள் உள்ளன. இங்கே முன்பே ஆடுகள் வைத்திருந்தேன். அதன் பால், அல்சருக்கு நல்லது. அதை லிட்டர் ரூ.600க்கு விற்பனை செய்து வந்தோம். அதே விலையில் ஒட்டகப்பாலையும் தர ஆரம்பித்தோம். நிறைய பேர் வாங்கிச் செல்ல ஆரம்பித்தார்கள்.

அதற்குப் பிறகுதான் இந்தக் கழுதைகளை வாங்க முடிவு செய்தேன். ஏனென்றால் கழுதைப் பால் இருப்பதிலேயே அபூர்வ மருத்துவ குணம் கொண்டது. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலைத்தவிர வேறு எதுவும் கொடுக்கக்கூடாது என்பது தொன்று தொட்டு இருந்து வரும் நியதி. பச்சைத் தண்ணி கூட பிறந்த குழந்தைக்குக் கொடுக்க மாட்டாங்க. ஆனால், இதில் கழுதைப் பால் மட்டும் விதிவிலக்கு. அதில் தாய்ப்பாலை விட அடர்த்தியான புரதச்சத்து உள்ளது. தவிர வைட்டமின் டி கண்டென்ட் நிறையவே உள்ளது. அதனால்தான் நம் முன்னோர்கள் பிறந்த குழந்தைக்கு கழுதைப்பால் கொடுத்து வந்துள்ளார்கள்.

மார்க்கெட்டில் விசாரித்துப் பார்த்தேன். ஒரு கழுதை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்கிறது. அது மூன்று மாதம் மட்டுமே பால்கறக்கும். கழுதையை யாரும் பாலுக்காக வளர்ப்பதில்லை. பொதி சுமக்கவும், வேறு உபயோகத்துக்குமே பயன்படுத்தி வந்தார்கள். எனவே, பாலுக்காக மட்டுமே நாம் பயன்படுத்துவது என்ற முடிவோடு இரண்டு கழுதைகளை வாங்கிக் கட்டினேன். அவை இரண்டு குட்டிகள் ஈன்றன.

அது ஒரு நாளைக்கு 300 மிலி முதல் 400 மிலி வரையே பால் கறக்கிறது. இதுவும் 3 மாதங்கள்தான் கறக்கும். அப்புறம் சினையாகி விடும். பால் வற்றிவிடும். ஆகவேதான் இதற்கு மட்டும் இந்த விலை!’’ என்றவரிடம், இப்படி ஒட்டகம், கழுதை, குதிரை, ஆடு என்று பராமரிக்க நிறைய செலவாகுமே என்றால் சிரித்தபடி ‘அப்படியெல்லாம் எதுவும் இல்லை’ என்கிறார்.

‘‘மரங்களின் இலை தழைகளைத்தான் ஒட்டகம் நல்லா விரும்பிச் சாப்பிடும். அவ்வளவுதான். அது குட்டி போட்டவுடன் மூன்றுவேளை கறக்கும். ஒரு வேளைக்கு ஒன்று, ஒன்றரை லிட்டர் கறக்கும். எங்களிடம் இருக்கும் குட்டிக்கு வயது ஒன்று. அதனால் இரண்டு வேளைதான் கறக்கிறோம். மூன்று லிட்டர் பால் தருது.

எல்லா பாலையும் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களே வாங்குகிறார்கள். கழுதைக்கும் பெரிதாக பராமரிப்பு செலவு இல்லை. அது காய்ந்த புல், பூண்டு, சருகுகளை, இலை தழைகளை எல்லாமே சாப்பிடும். இதன் பால் வேண்டுமென்றால் அட்வான்ஸ் புக்கிங் செய்ய வேண்டும். அப்படித்தான் எல்லோரும் வாங்கிச் செல்கிறார்கள்!

‘என்னைப் பார் யோகம் வரும்’ என கழுதைப் படத்தை வைத்து வாக்கியங்கள் எழுதியதைப் பார்த்திருப்போம். உண்மையைச் சொன்னால் கழுதையை வளர்த்தாலே யோகம்தான். கோடீஸ்வரர் ஆகலாம் என்பதுதான் இன்றைய ட்ரெண்ட். முன்பு கழுதை சர்வசாதாரணமாக தெருவில் திரிந்து கொண்டிருந்தது. இப்பொழுது அப்படிப் பார்ப்பது அரிது. தேடிப் பிடிக்க வேண்டியதிருக்குது. அதுவும் பால் கறக்கும் கழுதைக்கு இங்கே வாய்ப்பே இல்லை. அவை எல்லாம் பொதி சுமந்தே பழகி விட்டதால் பால் கறக்க நிற்காது. உதைத்து விடும்.

பால் கறக்கும் கழுதைகள் ஆந்திராவில் கிடைக்கின்றன. அதுவும் குறிப்பிட்ட இடங்களில்தான். அதுவே குஜராத்தில் கழுதைக்கான ப்ரீடிங் சென்டர் (இனவிருத்தி மையம்) இயங்கி வருகிறது. அங்கே போனால் வாங்கலாம். அப்படி தேவையென்றால் ஆறு மாதங்கள் முன்பே புக்கிங் செய்திருக்க வேண்டும். முதலிலேயே ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும். ஆனால், அங்கே ஒரு கழுதையின் விலை ரூ.80 ஆயிரம் வரை வருகிறது!’’ என்று சொல்லும் மணிகண்டன், அடுத்து ஒரு கழுதைப் பண்ணை உருவாக்கும் திட்டம் வைத்துள்ளார்.

‘‘அது கொஞ்சம் காஸ்ட்லியாக இருக்கும். இருந்தாலும் நம் மக்கள் நல்ல உணவு சாப்பிட வேண்டும். ஒரு முட்டையாக இருந்தாலும் அது நாட்டுக் கோழி வைத்ததாக இருக்க வேண்டும். பிராய்லர் கோழி முட்டையை சாயம் போட்டுக் கொண்டு வந்து நாட்டுக் கோழி முட்டை என்று விற்று விடக்கூடாது. அதுபோலத்தான் ஆட்டுப்பால், ஒட்டகப்பால், கழுதைப்பால் எல்லாம் ஒரிஜினலாகவே இருக்க வேண்டும். அதற்காகத்தான் இதை உருவாக்கி நடத்தி வருகிறேன். அதுவே என் நோக்கம்!’’ என்கிறார் மணிகண்டன்.

கா.சு.வேலாயுதம்