பாதுகாப்பு படைகளில் வேலை வாய்ப்பு கொட்டிக் கிடக்கு! விழிப்புணர்வு தரும் இளைஞர்
காலை ஐந்து மணிக்கெல்லாம் சென்னை செயின்ட் தாமஸ் மவுண்டின் கீழுள்ள கேரிசன் சர்ச் பகுதி அத்தனை சுறுசுறுப்பாகி விடுகிறது. வாக்கிங், ஜாக்கிங், ரன்னிங் எனப் பலரும் தங்களுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள, சரியாக ஐந்தரை மணிக்கு சுரேந்திரனும், அவரின் பயிற்சியாளர்களும், அவர்களிடம் பயிற்சி பெறுகிற மாணவ - மாணவிகளும் அங்கே ஆஜராகிவிடுகின்றனர்.
 ‘‘இதுதான் எங்க பகுதி. இங்கிருந்து முப்படைக்கும் நிறைய பேர் தேர்வாகிப் போயிருக்காங்க. ‘கனவுகளைத் துரத்துங்கள்... வெற்றி உங்கள் காலடியில்...’னு சொல்வாங்க. அதுமாதிரி கனவுகளை நோக்கி இந்த மாணவ - மாணவிகளை ஓட வச்சிட்டு இருக்கோம்...’’ ஒரு மெல்லிய புன்னகையுடன் கமெண்ட் கொடுத்தபடியே பேசுகிறார் சுரேந்திரன்.  34 வயது இளைஞரான இவர், ராணுவம், கப்பல், விமானம் என முப்படை பணிகளுக்கும் தியரி பிளஸ் பிசிக்கல் பயிற்சி அளித்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் இவரின் சென்னை டிஃபன்ஸ் அகடமியில் பயிற்சியெடுத்த 66 பேர் வெவ்வேறு பிரிவுகளில் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இதுதவிர, 2017ல் தமிழக அரசு நடத்திய இளைஞர் திறன்மேம்பாட்டுத் திட்டம் வழியே 38 பேரை டிஃபன்ஸ் பணிக்கு அனுப்பியிருக்கிறார்.
 ‘‘முப்படைகள்ல உள்ள வேலைவாய்ப்புகள் பற்றி நம்மூர்ல பெரிசா யாருக்கும் விழிப்புணர்வு இல்ல. பொதுவா ராணுவம்னா சிப்பாய் பணினுதான் நினைக்கிறாங்க. ஆனா, ஆபீசர் பிரிவுல வாய்ப்புகள் இருப்பது தெரியாது. சென்னை கிண்டியில் ஆபீசர் ட்ரைனிங் அகடமினு ஒரு பயிற்சி நிறுவனமே செயல்படுது. ஆனா, இதுக்கு தமிழகத்துல இருந்து ஒவ்வொரு முறையும் வெறும் நான்கைந்து பேரே தேர்வாகுறாங்க.
 காரணம், ராணுவத்தின் பணி மற்றும் பயிற்சிகள் பார்த்து ஒருவித பயம். அதைப் பற்றி விழிப்புணர்வு கொடுத்து அந்த வேலைகளுக்குத் தயார்படுத்தும் பணியை செய்றதுதான் எங்க அகடமி யின் நோக்கம்...’’ என நம்பிக்கையாகப் பேசும் சுரேந்திரன் கோவையைச் சேர்ந்தவர். இந்த அகடமியை ஆரம்பிக்கவே அங்கிருந்து சென்னை வந்துள்ளார். ‘‘எனக்கு கோவை காந்திபுரம். அப்பா ஆறுமுகம் வேளாண் துறையில் கிளார்க்கா இருந்தார். அம்மா பழனியம்மாள் மாநகராட்சியில பணி செய்தாங்க. ரெண்டு பேருமே அதிகம் படிக்காதவங்க. அதனால எங்களை படிக்க வச்சாங்க. நான்தான் வீட்டுல முதல் தலைமுறை பட்டதாரி. எனக்கு ராணுவத்துல பைலட்டா சேரணும்னு ஆசை.
 ஆனா, அதுபத்தின விஷயங்கள் எதுவும் அப்ப தெரியாது. பள்ளிப்படிப்பு முடிச்சதும் பி.எஸ்சி எலக்ட்ரானிக்ஸ்ல சேர்ந்தேன். ராணுவ ஆசையால் காலேஜ்ல ஏர்ஃபோர்ஸ் என்சிசி விங்கில் சார்ஜென்ட்டா இருந்தேன். அங்க பயிற்சியெல்லாம் முடிச்சபிறகு வாயு சைனிக்னு தேசிய அளவு கேம்புக்கு வாய்ப்பு கிடைச்சது. அதாவது ஏர்கிராப்ட் ஓட்டுகிற பயிற்சி.
அப்புறம், தேசிய அளவுல துப்பாக்கி சுடும் கேம்புக்கும் வாய்ப்பு கிடைச்சது. என்சிசியில் இருக்கும்போது இப்படி நிறைய பயிற்சிகள். அப்புறம் எம்.ஏ மாஸ் கம்யூனிகேஷன் படிச்சேன். இதுக்கிடையில்தான் ஐந்து முறை மிலிட்டரியில் சேரணும்னு முயற்சி செய்தேன். ஆனா, கிடைக்கல. எப்படி சேரணும்னு சொல்ல ஆட்களும் இல்ல. அதனால நம்மால்தான் சேரமுடியல, மத்தவங்களுக்காவது விழிப்புணர்வு கொடுக்கலாம்னு தோணுச்சு.
கோவையில் 2004ல் இருந்தே டிஃபன்ஸ் அகடமியை ஓய்வுபெற்ற ராணுவ வீரர் லெப்டினன்ட் கர்னல் ஜெயவேல் நடத்திட்டு வந்தார். அவர்கிட்ட நான் ஆரம்பத்துல பயிற்சி எடுத்தேன். 2012ல் எம்.ஏ முடிச்சதும் அவருடன் இணைந்து பள்ளிகளுக்குப் போய் ராணுவப் பணிகள் பற்றி இலவச விழிப்புணர்வு கொடுக்க ஆரம்பிச்சேன். இப்பவும் அதை செய்திட்டு இருக்கோம். அதன் வழியா மாணவர்கள் வருவாங்க. அவங்களுக்கு பயிற்சி அளிப்போம்.
2004ல் இருந்து இதுவரை 486 பேர் எங்க அகடமி வழியா மூன்று பாதுகாப்புப் படைகளுக்கும் ஆபீசர் பிரிவுக்குப் போயிருக்காங்க. தவிர சோல்ஜர், போலீஸ்னு போனவங்க நிறைய. இப்படியிருக்க, 2015ல் நிறைய பேர் கேட்டதால் சென்னையில் டிஃபன்ஸ் அகடமியைத் தொடங்கினோம்...’’ என்கிறவர், நிதானமாகத் தொடர்ந்தார்.‘‘சென்னையில் 2015ல் ஆரம்பிச்ச நேரம் பெரும் வெள்ளம். அதனால பயிற்சி நடக்கல. அப்புறம், 2016 ஏப்ரல் மாசம் பிளஸ் டூ முடிகிற நேரம் அழைப்பு விடுத்தோம். பிளஸ் டூ பசங்க வந்து சேர்ந்தாங்க. அப்ப எட்டுபேர் தேர்வானாங்க. ரொம்ப நம்பிக்கை கிடைச்சது.
இங்கேயும் பள்ளிகளுக்குப் போய் அனுமதி பெற்று டிஃபன்ஸ் வேலைகள் பற்றி பேசினேன். அப்ப விருப்பப்படுகிற மாணவர்கள் வந்து சேர்ந்தாங்க...’’ என்கிறவர் வேலை வாய்ப்புகள் பற்றி பேசினார். ‘‘பத்தாவது மற்றும் பனிரெண்டாவது முடித்திருந்தால் ராணுவத்துல இப்ப அக்னிபாத்ல சேரலாம். இதுக்கு முன்னாடி சோல்ஜர்னு சொல்வாங்க. இப்ப அக்னிவீர் திட்டம்னு மாத்தியிருக்காங்க. அதேமாதிரி சிஆர்பிஎஃப், கடலோரக் காவல்படை, மத்திய காவல்படை, எல்லை பாதுகாப்புப் படை இதுக்கெல்லாம் பத்தாவது அல்ல, பனிரெண்டாவது முடிச்சிருந்தால் போதும்.
இதே கேட்டகிரியில் அதாவது நேவியில் செய்லர், ஏர்ஃபோர்ஸ்ல ஏர்மேன்னு சொல்லப்படுற பதவியில் சேரணும்னா ஒரு மாணவர் பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியல், கணிதம் எடுத்து படிச்சிருக்கணும். அடுத்து முப்படையிலும் உள்ள ஆபீசர்ஸ் கேட்டகிரியில் சேர பிளஸ் டூ படிச்சிருந்தாலே போதும். பிறகு, என்டிஏவில் சேரத் தேர்வு எழுதலாம். அதாவது, நேஷனல் டிஃபன்ஸ் அகடமினு புனேவில் இருக்கு. அதுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆறுமாசத்திற்கு ஒருமுறைனு ரெண்டு தடவை தேர்வு நடக்கும். ஒருதடவை நானூறு சீட்னு மொத்தம் 800 சீட்கள். இதுக்கு தேர்வாகிட்டால் மூணு ஆண்டுகள் பயிற்சியுடன் டிகிரி படிக்கலாம்.
இதுல இந்திய ராணுவத்துக்குப் போறவங்க பிளஸ் டூவுல எந்த குரூப்பும் படிச்சிருக்கலாம். ஆனா, கப்பல் மற்றும் விமானப்படைக்கு இயற்பியலும், கணிதமும் அவசியம். அதை விண்ணப்பிக்கும்போதே தெரியப்படுத்தணும். இதுல ராணுவத்திற்கே அதிக சீட்கள். அப்புறம், ஓராண்டு பயிற்சி இந்திய ராணுவ அகடமி அளிக்கும். அதுக்கு 56 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை கொடுப்பாங்க.
இதேமாதிரி மற்ற படைகளும் பயிற்சி அளிச்சு ஆபீசர் ரேங்க்ல அப்பாயின்ட்மென்ட் பண்ணுவாங்க. அடுத்தடுத்து நல்ல போஸ்டிங் போய், லட்சங்கள்ல சம்பளம் பெறலாம். ஆனா, இதைப் பத்தி இங்க நிறைய பேருக்கு தெரியாது. இப்ப இந்த என்டிஏவில் மாணவிகளும் சேரலாம். கடந்த ரெண்டு ஆண்டுகளாதான் மாணவிகளைத் தேர்வு செய்றாங்க. அதுக்கு முன்னாடி மாணவர்கள் மட்டுமே படிக்கும்படி இருந்தது. இதுக்கும் ஓடிஏக்கும் என்ன வித்தியாசம்னா ஓடிஏவுக்கு டிகிரி முடிச்சிட்டு யுபிஎஸ்சி நடத்துற கம்பைண்ட் டிஃபன்ஸ் சர்வீஸ் எக்ஸாம் எழுதணும். இங்க டிகிரி அவங்களே படிக்க வைச்சு எடுத்துப்பாங்க. ஓடிஏவைவிட சம்பளமும் கொஞ்சம் அதிகம்.
ஓடிஏ மாதிரியே நேவிக்கு இந்தியன் நேவி நுழைவுத் தேர்வுனு இருக்கு. ஏர்ஃபோர்ஸ்ல காமன் அட்மிஷன் டெஸ்ட்னு சொல்வாங்க. இதுவும் டிகிரி முடிச்சிட்டு எழுதுற ஆபீசர்ஸ் லெவல் தேர்வுகள். நாங்க இது எல்லாத்துக்குமே பயிற்சி கொடுக்குறோம். காலையில் ஆறு மணி முதல் எட்டு மணி வரை பிசிக்கல் ட்ரைனிங்கை என் பயிற்சியாளர்கள் நடராஜனும், விக்னேஷும் தருவாங்க. அப்புறம், மாலையில் 2 மணி முதல் 4 மணி வரை தியரி வகுப்புகள் நடக்கும்.
பெரும்பாலும் இங்க வர்றவங்க பள்ளி மாணவர்கள். அவங்களால் தினமும் தியரி கிளாஸ் வரமுடியாது. அதனால அவங்களுக்காக சனி, ஞாயிறுகள்ல காலை 10 டூ 12 வரை தியரி வகுப்புகள் நடத்துறோம். இதுல கணிதம், அறிவியல், கம்ப்யூட்டர், பொதுஅறிவு இதுதான் தேர்வுக்குக் கேள்விகளாக வரும். இதுல எப்படி ஸ்கோர் பண்றது... எப்படி எழுதணும்னு சொல்லிக் கொடுப்போம். இதுக்கென அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை நியமிச்சிருக்கோம். அவங்ககிட்ட இதுதான் சிலபஸ். இந்தப் பேட்டன்ல நடத்துங்கனு சொல்லிடுவோம்.
அதன்படி வகுப்புகள் போகும். தேர்வுகளுக்குப் பிறகு ஆபீசர் லெவலுக்கு இன்டர்வியூ உண்டு. அதை எப்படி எதிர்கொள்ளணும் என்பதை ஜெயவேல் சார் வந்து எடுப்பார். இங்க நிறைய பேர் ஆபீசர் லெவல் போகணும்னுதான் வர்றாங்க. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்சினு தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து படிக்கிறாங்க...’’ என்கிற சுரேந்திரன், பயிற்சி மாணவர்கள் மூன்று பேரை அழைத்து அறிமுகப்படுத்தினார்.
‘‘என் பெயர் அப்துல் ரஹீம். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலிருந்து வந்து பயிற்சி எடுக்குறேன். என்டிஏ போக பயிற்சி எடுக்குறேன். என்னுடைய தாத்தாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவர் 25 ஆண்டுகளா ராணுவத்துல இருந்தார். அவரைப் பார்த்து எனக்கு ஆசை. நான் இந்தியன் ஏர்ஃபோர்ஸ்ல ஒரு ஆபீசரா போகணும்னு கனவுகளுடன் இருக்கேன்...’’ என்கிறவரைத் தொடர்ந்தார் ஹரிணி.
‘‘நான் கோவூர்ல இருந்து வர்றேன். இந்தியன் ஆர்மியில் சேரணும்னு ரொம்ப ஆசை. காரணம் என் அப்பா. எங்க தாத்தாவுக்கு ராணுவத்துல சேரணும்னு ஆசை. அவரால் முடியல. அவர் சின்ன வயசுலயே இறந்திட்டார். தாத்தா சின்ன வயசுல இறந்ததால அப்பாவால் பெரிசா படிக்க முடியல. அதனால அவராலும் போகமுடியல. அவரின் கனவை நான் நனவாக்கணும்னு ஆசைப்படுறேன். என்டிஏவில் சேர்றதே என் இலக்கு...’’ என்கிறார்.
‘‘நாங்க எங்க அகடமிக்கு தேர்வு வச்சுதான் செலக்ட் பண்றோம். உயரம், கண் பார்வை எல்லாம் பரிசோதிப்போம். ஏன்னா, நாங்க பயிற்சி கொடுத்திட்டு தேர்வெழுதி பாஸான பிறகு மெடிக்கல்ல போயிடுச்சுனா அவங்க கனவு நொறுங்கிடும். எங்களுக்குக் கொடுத்த பணமும் வீணாகிடும்.
அதனால, பாதுகாப்புப் படையில் என்ன வழிமுறை கொடுத்திருக்காங்களோ அதைப் பின்பற்றியே பயிற்சிக்குத் தேர்வு செய்றோம். சில மாணவர்கள் பச்சை குத்தியிருப்பாங்க. அவங்கள மூன்று துறைகளும் எடுக்கமாட்டாங்க. அதனால நாங்களே இங்க ரிஜெக்ட் பண்ணிடுவோம்...’’ என்கிற சுரேந்திரன், ‘‘என்னுடைய நோக்கமெல்லாம் தமிழநாட்டுல இருந்து பாதுகாப்புப் படைகளுக்குப் போகிறவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கணும்.
அந்தக் குறிக்கோளுடன்தான் செயல்பட்டுட்டு இருக்கேன். அப்புறம், தமிழகம் முழுவதும் இந்த அகடமியை எடுத்திட்டு போகணும்னு ஆசைப்படுறேன். அதன்வழியா நிறைய பேர் பயன்பெறணும்...’’ நம்பிக்கை மிளிரச் சொல்கிறார் சுரேந்திரன்.
செய்தி: பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|