ஹீரோயின் கிடையாது... ஆக்‌ஷன்... ஆக்‌ஷன்... ஆக்‌ஷன் மட்டும்தான்!



கேட்டவுடனேயே கேரக்டர் எப்படி என சொல்லுமளவிற்கு அமைவதுதான் சில பெயர்களின் சிறப்பு. அப்படித்தான் நம்மை ஈர்த்திருக்கிறது ‘ராக்கி’. ‘காலம் ஒரு துரோகி’ என்ற வசனத்துடன் ஆரம்பிக்கும் டிரெய்லர் மேலும் நம்மை ஈர்க்க, இயக்குநர் அருண் மாதேஸ்வரனை சந்தித்தோம்.‘‘படத்துல ஹீரோயின் கிடையாது... ரொமான்ஸ், டூயட் இப்படி எதுவும் கிடையாது... முழுக்க முழுக்க ஆக்‌ஷன்...’’ புன்னகையுடன் எடுத்ததுமே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.

‘ராக்கி’, ‘சாணி காயிதம்’னு எடுத்ததுமே இரண்டு படங்களுடன் களமிறங்கி இருக்கீங்களே..?

சென்னைதான் சொந்த ஊரு. தனியார் கல்லூரில பி காம். அப்பா மாதேஸ்வரன், அம்மா சுந்தரி. அப்பா நைஜீரியால வேலை செய்துட்டு இருந்தாரு. என்னுடைய குழந்தைப்பருவம் முழுக்கவே நைஜீரியாலதான். சினிமா பின்னணி எதுவும் இல்லாம சினிமாவுக்குள் வந்தவன். கல்லூரி நாட்களில்தான் சினிமா மேல ஆர்வம் வந்துச்சு. அதிலும் சினிமாட்டோகிராஃபின்னுதான் முடிவு செய்திருந்தேன். ஒருசில படங்கள்ல அசிஸ்டெண்டா வேலையும் செய்தேன்.

ஸ்கூல் ஆஃப் ஆடியோ இன்ஜினியரிங்கில் சினிமாட்டோகிராஃபி படிக்கும்போது காயத்ரி - புஷ்கர் அறிமுகம் ஆனாங்க. அவங்க மூலமா ஒருசில விளம்பரங்களில் வேலை செய்கிற வாய்ப்பு கிடைச்சது. அதேநேரம் தியாகராஜன் குமாரராஜா சார் தனக்கு ஒரு அசிஸ்டெண்ட் தேடிட்டு இருந்தார். நானும் பல இடங்கள்ல ஒளிப்பதிவுக்கு அசிஸ்டெண்ட் ஆக வேண்டி தேடிட்டு இருந்தேன். அப்பதான் ஏன் இயக்குனரிடம் அசிஸ்டெண்டாக சேரக்கூடாதுன்னு முடிவெடுத்து அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டேன்.

முதல் பட வாய்ப்பு எப்படி அமைந்தது?  

குமாரராஜா சார் கூட ‘ஆரண்ய காண்டம்’ முடிச்ச உடனேயே 2011ல் ஒரு படம் கமிட் ஆச்சு. ஒருசில காரணங்களால் அது நடக்காமல் போயிடுச்சு. அடுத்து 2012ல் சுதா கொங்கரா ‘இறுதிச் சுற்று’ படம் ஆரம்பிச்சாங்க. அந்தப் படத்துக்கு நட்பு ரீதியா என்னையே டயலாக் செய்யறியானு கேட்க நானும் ஓகே சொல்லி அந்தப் படத்துக்கு வசனம் எழுதினேன். அதை முடித்த கையோடு ‘ராக்கி’ படத்தின் கதை எழுதினேன். எங்கு போனாலும் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம்தான் கோபமாகவும் திரைக்கதையாகவும் உருவாச்சு.

‘ராக்கி’ உருவானது எப்படி..?

நிறைய ஹீரோக்கள்கிட்ட கதை சொன்னேன். கடைசியாக அமைஞ்சது வசந்த் ரவி. வசந்த் கிட்ட கதை சொல்ல, அவர் மூலமாகவே சி.ஆர். மனோஜ்குமார் தயாரிப்பாளராக அமைஞ்சார். அப்ப இந்தப் படத்துக்கு வச்சிருந்த பேரு ‘ஜானி’. இன்னமும் படத்திற்கு ஒரு ரஃப் தோற்றம் கொடுக்கணும்னு நினைச்சேன். அதனால்தான் ‘ராக்கி’ ஆச்சு. 2018ல் படம் முடிஞ்சிடுச்சு. தொடர்ந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் எல்லாம் செய்துட்டு இருந்தோம். பட வெளியீடு நெருங்கினப்ப கொரோனாவும் ஊரடங்கு பிரச்னைகளும் ஆரம்பிச்சது.

‘ரவுடி பிக்சர்ஸ்’ எப்படி உள்ளே வந்தாங்க?

நானும் விக்னேஷ் சிவனும் ‘பச்சை மனிதன்’ படத்தில் அசிஸ்டெண்ட் இயக்குநர்களா சேர்ந்து வேலை செய்திருக்கோம். அசிஸ்டெண்ட் டைரக்டர்களா சுத்திக்கிட்டு இருந்தவங்கதான்.
ஆக்ச்சுவலா ‘ராக்கி’யை ஹீரோயினுக்கான கதையா எழுதி நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். சில பல காரணங்களால் அது நடக்காமல் போயிடுச்சு.
இந்தப் படத்தைப் பார்த்துட்டு நானே வெளியிடறேன்னு விக்கி முன்வந்தார். அப்படி அமைந்ததுதான் ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ட்ரி.

படத்தின் மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் பற்றி சொல்லுங்க?

ஆக்‌ஷன் க்ரைம் டிராமாதான் ‘ராக்கி’. கோபம், துரோகம், ஆக்ரோஷம்... இப்படி எல்லாமே படத்தில் இருக்கும். முதலில் சொன்னது போல் படத்தில் ஹீரோயின் கிடையாது. பாரதிராஜா சார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நெகட்டிவ் ரோல் செய்திருக்கார். ரோகிணி மேடம் ஒரு முக்கியமான கேரக்டர் செய்திருக்காங்க.
இந்தக் கதைக்கு பாரதிராஜா சார்தான் இன்னொரு ஸ்பெஷல். அந்தக் கேரக்டருக்கு ஏகப்பட்ட நடிகர்களை சாய்ஸில் வச்சிருந்தோம். மிஸ்கின் சார் கூட முடிவானார். ஆனால், அவரும் ‘சைக்கோ’ படத்தில் பிசியானார். அப்பறம்தான் பாரதிராஜா சார் வந்தார்.

இந்தப் படத்தில் ஹீரோயின் இல்லை என்ற காரணத்தாலேயே நிறைய பேர் நடிக்க மறுத்தாங்க. ரவீனா ரவி ஒரு நல்ல கேரக்டர் செய்திருக்காங்க. ஒளிப்பதிவு, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா. ஏற்கனவே அவர் ‘ஜில் ஜங் ஜக்’, ‘அவள்’ படங்கள்ல கேமராமேனா இருந்தவர். செம திறமைசாலி. அவர் யார்கிட்டயும் அசிஸ்டெண்ட்டா வேலை செய்யவே இல்ல. அவரே கேமரா வாங்கி இணையத்தில் பார்த்துப் பார்த்து ஒளிப்பதிவைக் கற்றுக்கொண்டார்.

இசை, தர்புகா சிவா. படத்தில் மொத்தமா 40 நிமிடங்கள்தான் மியூசிக் வேலையே. மத்தபடி எல்லாமே பேக்ரவுண்ட் ஸ்கோர்தான். ரொம்ப சிறப்பா தர்புகா சிவா செய்திருக்கிறார்.
எடிட்டிங் ‘8 தோட்டாக்கள்’ செய்த நாகூரான். ஆர்ட் டைரக்‌ஷன் ராமு தங்கராஜன். இதுக்கு முன்னாடி இவர் ‘பரியேறும் பெருமாள்’ செய்திருக்கார். ஸ்டண்ட் தினேஷ் சுப்புராயன். ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் நான் அசிஸ்டெண்ட்டாக இருந்தப்ப திலிப் சுப்புராயன் மாஸ்டர்கிட்ட தினேஷ் சுப்புராயன் அசிஸ்டெண்ட்டாக இருந்தார். அந்த நட்பு ‘ராக்கி’ல தொடருது.  

‘ராக்கி’, ஆடியன்ஸுக்கு என்ன கொடுக்கும்?

இது 100% வன்முறை ஆக்‌ஷன் படம்னு வெளிப்படையா சொல்வதற்காகத்தான் டிரெய்லரை அப்படி உருவாக்கினோம். டார்கெட் ஆடியன்ஸ் யார்னு தெளிவா முடிவெடுத்து புரமோஷன்களிலும் அதையே முதன்மையா வச்சிருக்கோம். நீங்க ஒரு ஆக்‌ஷன் பட ரசிகரா இருந்தா நிச்சயம் இந்தப் படம் உங்களுக்கு நல்ல விருந்தாக அமையும்.

உங்களுடைய அடுத்த படம் பற்றி சொல்லுங்க..?

இயக்குநர் செல்வராகவன் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நான் இயக்கும் ‘சாணி காயிதம்’ படமும் முடிஞ்சிடுச்சு. விரைவில் இந்தப் படமும் ரிலீஸ் ஆகும். அதுக்கு அப்புறம்தான் அடுத்த படத்தைப்பத்தி பேசணும்.

ஷாலினி நியூட்டன்