வட இந்தியப் பெண்களை வைத்து தமிழ்நாட்டில் இந்துத்துவா வளர்கிறதா..?



....இந்தத் தாக்குதலால் வலி தாங்கமுடியாமல் அந்தப் பெண் கதறி அழும் காணொலி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது...

சமீபத்தில் கோவையில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்துவந்த இளம்பெண் மீது நடந்த தாக்குதல் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அந்தப் பெண்ணுக்கு நாலாப்பக்க
மிருந்தும் ஆதரவுகள் குவிந்தன. சமூக வலைத்தளங்களில் இயங்கிவரும் செயற்பாட்டாளர்களும், தொழிற்சங்கங்களும் கண்டனத்தை தெரிவித்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் வயது 22. கோவையில் உள்ள சரவணம்பட்டி எனும் இடத்தில் அந்த நூற்பாலை அமைந்துள்ளது. இங்கே தமிழகம் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த ஐநூறுக்கும் மேலானவர்கள் வேலை செய்துவருகின்றனர்.

நவம்பர் மாதம் 27ம் தேதி அந்தப் பெண் வேலைக்கு வராமல் விடுதியிலேயே தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. அதனால் கோபமடைந்த நூற்பாலையின் மனிதவள மேம்பாட்டு மேலாளர் மற்றும் விடுதி காப்பாளர் ஆகிய இருவரும் அந்தப் பெண்ணைத் தகாத வார்த்தைகளில் திட்டி, நீளமான கம்பைக் கொண்டு தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதலால் வலி தாங்கமுடியாமல் அந்தப் பெண் கதறி அழும் காணொலி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இளம் பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட சுமங்கலி திட்டம் குறித்தும், வேலைக்காக வட மாநிலத்தவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுப்பதற்கான காரணங்கள் குறித்தும் சமூக செயற்பாட்டாளர் இனியவனிடம் பேசினோம்.

‘‘ஒரு காலத்தில் தமிழகத்தில் ‘சுமங்கலி திட்டம்’ நடைமுறையில் இருந்தது. திருமணம் ஆகாத மற்றும் கல்வியைத் தொடர முடியாத இளம் பெண்களைத் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் இது. 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தக் காலத்தின்போது மிகக் குறைவான சம்பளமே தரப்பட்டது. அத்துடன் 12 மணி நேரத்துக்கும் அதிகமாக உழைக்க வேண்டும். ஒப்பந்தக் காலம் முடியும்போது, அந்தப் பெண்களின் திருமணத்துக்குத் தேவையான பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும்.

மட்டுமல்ல; அந்தப் பெண்கள் குறித்து நிறுவனத்தில் எந்த ஒரு பதிவும் இருக்காது. கையெழுத்துப்போட்டு சம்பளம் வாங்கும் முறையும் கிடையாது. அரசாங்க கணக்கிற்கு அனுமதிக்கப்பட்ட ஊழியர்களைத் தாண்டி, நிறைய பேர் வேலைக்கு எடுக்கப்பட்டிருப்பார்கள். இப்படியான ஒரு திட்டம் அது. 1990, 1995 கால கட்டங்களில் சுமங்கலி திட்டம் குறித்து பிரச்னைகள் வெடித்தன.

சில அமைப்புகள் சண்டையிட்டு சுமங்கலி திட்டம் என்கிற பெயரை ஒழித்தார்கள். காலம் மாறியது. இங்கிருக்கும் பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றல் சதவீதமும் குறைந்தது. படித்த பெண்கள் அதற்கேற்ற வேலைகளைத் தேட ஆரம்பித்தனர். இப்போது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு இந்தத் திட்டம் மறைமுகமாகச் செயல்பட்டு வருகிறது...’’ என்று ஆரம்பித்தார் இனியவன்.

‘‘2000க்குப் பிறகு பீகார், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் வேலை வாய்ப்புகள் பெரிதாக இல்லை. அப்படியே வேலை இருந்தாலும் சமூக வேலைகள்தான் கிடைக்கும். அதாவது சாதிக்கேற்ற வேலை. அப்படியே சாதிக்கேற்ற வேலை செய்தாலும் ஊதியம் கிடைக்காது. அந்த வேலையை கிராமப்பணியாகக் கருதி, சம்பளத்துக்குப் பதிலாக கோதுமை அல்லது காய்கறியைக் கொடுத்து சரிக்கட்டிவிடுவார்கள். இப்படியான சூழலில்தான் அம்மாநில மக்கள் வேலைக்காக தமிழகத்தை நோக்கிப் படையெடுத்தனர். இங்கே வேலை தேடி வந்தவர்கள் மூன்று வேளை உணவு கிடைப்பதையே பெரிய விஷயமாக நினைத்தனர். அத்துடன் இங்கிருப்பவர்களைவிட குறைவான ஊதியம் கொடுத்தாலே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.

இது நிறுவனத்துக்கு அதிக லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்தது. அதனால் நிறுவனங்களும் சரியான கூலியைக் கேட்ட தமிழ்நாட்டுத் தொழிலாளர்களை ஒதுக்கி வைத்தனர்; மிகக் குறைவான கூலிக்கு வேலை செய்யத் தயாராக இருந்த வட மாநிலத்தவர்களை அதிகமாக வேலைக்குச் சேர்த்தனர்.

மட்டுமல்ல; பெரும்பாலான வட மாநில தொழிலாளர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. இங்கு என்ன கூலி கொடுக்கிறார்கள் என்ற விஷயமும், தமிழும் தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை சொந்த ஊரில் சம்பளமே கிடையாது. இங்கு குறைந்த அளவிலாவது சம்பளம் கிடைக்கிறதே என்ற திருப்தியில் தமிழகத்தை நோக்கி அதிகமாக வந்தனர்...’’ என்றவர் சிறிது இடைவெளிவிட்டு தொடர்ந்தார். ‘‘நமக்கு எது நியாயமான கூலியோ, அது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உயர்ந்த பட்ச கூலியாகத் தெரிகிறது. தமிழகத்தில் கொத்தடிமை முறை இல்லை என்ற தோற்றத்தை அவர்களின் வருகை உருவாக்கியிருக்கிறது. அத்துடன் அவர்கள் குடும்பமாகத்தான் இங்கே வருகின்றனர்.

இன்றைய சூழலில் ஈரோடு, கரூர், திருப்பூர், கோவையில் உள்ள பின்னலாடை நிறுவனங்களாகட்டும்; பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பகுதிகளில் இருக்கக்கூடிய தென்னை நார் தொழிற்சாலைகளாகட்டும்; நீலகிரி, வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டங்களாகட்டும்; நாமக்கல், கரூர், வெள்ளக் கோயில் பக்கம் இருக்கிற கோழிப் பண்ணைகளாகட்டும்; செங்கல் சூளைகள் செயல்படுகிற இடங்கள்; மரம் அறுக்கும் தொழிற்சாலைகள்... என அனைத்து வேலையிடங்களும் மிகக் கடினமான உழைப்பைக் கோருபவை.

இந்த வேலைகள் அனைத்திலும் வட இந்தியத் தொழிலாளர்கள்தான் அதிகமாகப் பணியாற்றுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பெட்ரோல் பங்க், உணவகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் வட இந்தியப் பெண்கள்தான் பணிபுரிகிறார்கள். தமிழக தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் கூலியில் நான்கில் ஒரு பங்குதான் அவர்கள் பெறுகிறார்கள்...’’ என்றவர் இதுகுறித்து மேலும் விவரித்தார்.

‘‘புலம்பெயர் தொழிலாளர்களைக் கண்காணிப்பதற்காக பெரிதாக எந்த அமைப்பும் தமிழ்நாட்டில் இல்லை. கொரோனாவிற்குப் பிறகுதான்  ஒன்றிய அரசே ‘e-SHRAM’ எனும் அமைப்பைத் தொழிலாளர்களுக்காக ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர் நலத்துறையும், சமூக நலத்துறையும்தான் புலம் பெயர் தொழிலாளர்களைக் கண்காணிக்க வேண்டும். ஆனால், அந்தத் துறையினர் முன் அறிவிப்பு கொடுத்துவிட்டுத்தான் நிறுவனங்களில் ஆய்வே மேற்கொள்கிறார்கள். நிறுவனங்களும் அதற்கு ஏற்றாற்போல் ஆவணங்கள் எல்லாம் தயார் செய்து சமர்ப்பிக்கின்றன...” என்கிற இனியவனிடம், ‘வட இந்தியத் தொழிலாளர்களின் வருகையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன..?’ என்றோம்.

“நேரடியாகப் பார்த்தால் இங்கிருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகிறது. நுணுக்கமாகப் பார்த்தால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் கிடைப்பதில்லை. இங்கிருக்கும் தொழிலாளர்களைக் கணக்கில் வைத்தால் அவர்களுக்குக்கொடுக்க வேண்டிய நியாயமான கூலியினைக் கணக்கில் காட்டியாக வேண்டும். வட இந்தியத் தொழிலாளர்களுக்கு என்ன சம்பளம் கொடுக்கிறார்கள் என்பது கணக்கிலேயே கிடையாது. நிறுவனத்தினர் காட்டுவதுதான் கணக்கு. அவர்களை அழைத்து வரும் இடைத் தரகர்கள், முகவர்கள் அந்தத் தொழிலாளர்களுக்கு வங்கிக்கணக்கு ஓப்பன் செய்து, ஏடிஎம் கார்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு கடன் கொடுக்கிறார்கள்.

தவிர, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சரியாக வேலை செய்வதில்லை என்கிற விமர்சனத்தை வைக்கிறார்கள். ஆனால், நிலைமை அப்படியில்லை. தமிழ்நாட்டில் இருப்பவர்கள் நியாயமான கூலிக்கு வேலை செய்யத் தயாராக இருக்கிறார்கள். புலம் பெயர்பவர்கள்தான் அடிமட்ட கூலிக்கு வருகிறார்கள். இங்கிருந்து போகிறவர்கள் படித்த ஒரு வர்க்கமாக, நியாயமான கூலிக்குச் செல்கிறார்கள்...’’ என்றவர், இந்நிலையை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதையும் பரிந்துரைத்தார்.

‘‘இங்கு ஒழுங்குபடுத்துதல் என்பது இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. எத்தனை பேர் உள்ளே வருகிறார்கள், எத்தனை பேர் வெளியே போகிறார்கள் என்பது தெரிவதில்லை. பல குற்றச்செயல்களில் அவர்கள் ஈடுபடுவதாக ஆவணங்கள் மூலமாகவும் பதிவு செய்கிறார்கள். இதைவிட முக்கியமான ஒன்று, தமிழ்ச்சமூகம் எல்லா விஷயங்களிலும் முற்போக்குச் சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறது. அங்கிருந்து வருபவர்கள் அங்கிருக்கும் சமூகக் கட்டமைப்பையே இங்கேயும் பிரதிபலிப்பார்கள்.

சமூக நீதி பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். அந்த வார்த்தையே அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் கலாசாரப்படி காலில் விழுவது, முதலாளியைக் கண்டால் கீழே உட்காருவது… இதை ஏதும் நம்ம தொழிலாளி செய்ய மாட்டார். அந்தளவிற்கு சுயமரியாதை பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. அதனாலேயே வட இந்தியத் தொழிலாளிகளை முதலாளிகளும் விரும்புகிறார்கள். பழையபடி அடிமைத்தனமாக வேலை வாங்கும் சூழல் ஒரு பக்கம் அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது.

அவர்கள் இருக்கும் பகுதிகளில் இந்துத்துவத்தை வலியுறுத்தக்கூடிய கட்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கணக்கு வந்திருக்கிறது. எனவே, பொருளாதாரம், அரசியல், சமூகம் என அத்தனையும் உள்ளடக்கிய ஒரு விஷயமாகத்தான் இதை ஆராய வேண்டியுள்ளது...” என்று முடித்தார் இனியவன்.

அன்னம் அரசு