பிபின் ராவத்: மறைவும் மாற்றமும்



குன்னூர் அருகே நிகழ்ந்த இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து இந்தியர்களை எதிர்பாராத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. களத்தில் மரணத்தை எதிர்கொள்வது என்பது வேறு. இதுபோன்ற விபத்துகள் மிகவும் துரதிர்ஷ்டமானவை. இந்தியா தனது மூத்த ராணுவ அதிகாரிகளில் ஒருவரான பிபின் ராவத்தை இழந்துள்ளது. அவரைத் தவிர உடன் சென்ற பல்வேறு அதிகாரிகளும், அவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் பொருட்டு சென்ற வீரர்களும் வீரமரணமடைந்துள்ளனர். கேரளா, ஆந்திரா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் என்று இந்தியாவின் அனைத்து மூலைகளில் இருந்தும் புறப்பட்டு வந்த வீரர்கள் அவர்கள்.

தனிப்பட்ட முறையில் எனக்கு இது சற்று கூடுதலாகவே வருத்தமளித்த நிகழ்வு . சிறுவயதில் எனக்கு  முதன் முதலாக ஹெலிகாப்டரை பக்கத்தில் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது சூலூர் ஏர் ஃபோர்ஸ் ஸ்டேஷனில்தான். வருடத்தில் ஒருமுறை பொதுமக்கள் பார்வையிட அனுமதிப்பார்கள்.
அதன் பிரமாண்டமும், இரும்பும் பெயிண்டும் கலந்த வாசனையும் உருவாக்கிய பிரமிப்பு இன்றும் நினைவில் உள்ளது. அதன்பின் நான் பணிக்குச் சென்றபிறகும் கணிப்பொறிகளை நிறுவும் பொருட்டு அங்கு மீண்டும் சிலமுறை செல்லும் வாய்ப்பு கிட்டியது. சிவிலியன் அணுகுமுறைக்கு பழகிவிட்ட எனக்கு ராணுவ அதிகாரிகளிடம் பேசுவதும் பழகுவதும் புது விதமான அனுபவமாக இருந்தது.

முதல் சிக்கலே நேரம் தவறாமை. குறித்த நேரத்திற்கு ஒரு சந்திப்புக்கு செல்வது என்பதன் முக்கியத்துவத்தை முதன் முதலில் உணர்ந்தது இங்குதான். அதே போல உறுதியான அதிகார அடுக்கு, அதுசார்ந்த கெடுபிடிகள், தெளிவாக வரையறுக்கப்பட்ட அதிகாரம், நேர்பட பேசுதல் என்று இவை அனைத்தும் இணைந்ததே ராணுவ ஒழுங்கு. ஒவ்வொரு முறையும் என் பணி முடிந்து திரும்பும்போது எனக்கே கொஞ்சம் அந்த விறைப்பும் பெருமிதமும் ஒட்டிக்கொள்ளுவதாகத் தோன்றும்.உலகெங்கிலும் ராணுவம் என்பதை ஏன் தனித்த பண்புடைய ஒரு குழுவாக, நிறுவனமாக்கி வைத்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள இவ்வனுபவங்கள உதவின.

ஒருபுறம் ராணுவம் இந்த விபத்து குறித்து தீர விசாரிக்க முப்படை விசாரணை ஒன்றை முடுக்கிவிட்டிருக்கிறது. இன்னொரு புறம் இந்திய அரசின் பாதுகாப்பு குறித்த காபினெட் கமிட்டி அடுத்த கட்ட நிகழ்வுகளைக் குறித்து கலந்தாலோசித்துக் கொண்டிருக்கிறது. பிபின் ராவத் இடத்தை யார் நிரப்புவார்கள் என்பதும் தெளிவில்லாமல் இருக்கிறது. பிபின் ராவத் வகித்த பதவி அவ்வளவு  எளிதானதல்ல என்பதும் இதற்கு ஒரு காரணம்.

இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகள் குறித்து அனைவருக்குமே தெரிந்திருக்கும் - தரைப்படை, விமானப்படை, கப்பல் படை. இந்தப் படைகளுக்கு தனித்தனியே தளபதிகள் இருப்பார்கள். அவர்களைக் கூட்டாக முப்படைத் தளபதிகள் என்போம். இவர்கள் அனைவருமே இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் மூலம் அரசின் ஆணையை ஏற்பவர்கள். இப்படித்தான் 2019 இறுதி வரை இருந்தது. இந்த வகை அமைப்பு ராணுவத்தின் மூன்று பிரிவுகளுக்கு சுயாதீனமாக தத்தமது பிரிவுகளை நிர்வகிக்கும் சூழலை அளித்தது. அதே போல இவ்வாறு தனித்தனி பிரிவாக இருப்பது ஒட்டுமொத்த ராணுவமும் ஒரு அதிகாரியின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வராமல் பார்த்துக்கொண்டது.

இந்த ராணுவ பிரிவுகள் பல்வேறு கட்டளையகங்களாக (Commands ) பிரிக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. ஏழு தரைப்படை, ஏழு விமானப்படை, மூன்று கப்பல் படை என்று மொத்தம் 17 மரபான கட்டளையகங்கள் செயல்படுகின்றன. இது போக மேலும் இரண்டு முப்படை கட்டளையகங்களும் உண்டு. ஒன்று அந்தமான் தீவுகளில் அமைந்தது; மற்றொன்று நம் அணு ஆயுத தளவாடங்களைக் கையாளும் பொறுப்பில் உள்ளது. 2020ல் உருவாக்கப்பட்ட Chief of defence Staff (CDS ) என்ற பதவி இந்தக் கட்டளையக அமைப்பை மாற்றி அமைப்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டது.

அந்தப் புதிய பொறுப்பில் முதல் முதலாக அமர்த்தப்பட்டவர்தான் பிபின் ராவத். இந்த பதவி இரண்டு முக்கிய பொறுப்புகளை உள்ளடக்கியது (Double Hatted Role). முதலாவது, முப்படைத் தளபதிகள் அடங்கிய ஒருங்கிணைந்த கவுன்சிலில் நிரந்தர சேர்மனாக இருப்பது. கூட்டாக முடிவுகளைக் கலந்து எடுப்பது. மற்றொன்று, மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தில் ராணுவ நடவடிக்கைகள் துறையின் தலைவராக இருப்பது. இந்தத் துறை போன வருடம்தான் உருவாக்கப்பட்டது.

இது ஒரு காபினெட் செக்ரட்டரி பதவிக்கு நிகரானது. இதை உருவாக்குவதன் மூலம் அரசு இரண்டு விஷயங்களைச் சாதித்திருக்கிறது. ஒன்று, முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை ஓர் அதிகாரி மூலம் நிகழ்த்த முடிவது; இன்னொன்று, ராணுவ அதிகாரிகளை ராணுவ அமைச்சகப் பொறுப்பில் நேரடியாகப் பங்கேற்க வைப்பது. இதன் சாதக அம்சம், அரசுக்கு ராணுவத்தின் மீதான கட்டுப்பாடு சற்றே இறுகும். அதேபோல ராணுவத்துக்கும் சிவில் அரசு செயல்பாட்டுக்கும் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும்.

இதன் பாதக அம்சம், சிவில் அரசின் கொள்கை உருவாக்கம் - கொள்கை முடிவுகளில் ராணுவம் மேலும் செல்வாக்கை செலுத்த முடியும். கொள்கை ரீதியாக அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே உருவாக்கப்பட்ட air gap மெல்லியதாகும்.ஆசிய நாடுகளில், குறிப்பாக தெற்காசிய நாடுகளில் இந்தியாவுக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு - அரசு செயல்பாட்டில் தலையிடாத ராணுவத்தைக் கொண்ட நாடு என்று. கொஞ்சம் நம்மைச் சுற்றிப் பார்த்தாலே தெரியும் - பாகிஸ்தான், இலங்கை, பர்மா, பங்களாதேஷ் என்று அனைத்து நாடுகளிலுமே நம்மைவிட ராணுவத்தின் தலையீடு அதிகமானது என்பது புலப்படும்.

பிபின் ராவத்துக்கு அளிக்கப்பட்ட முக்கிய பொறுப்பு தற்போது இருக்கும் கட்டளையகங்களை ஒருங்கிணைந்த கட்டளையகங்களாக (theatre commands) மாற்றி அமைப்பதே.
அதாவது தரை, விமானம், கடற்படை என்று தனித்தனியே இல்லாமல் மூன்றும் ஒற்றை தளபதியின் கீழ் வரும்படி ஒருங்கிணைந்த கட்டளையகங்களாக அந்தந்த பகுதியில் அமைத்தல்.

தற்போது 17 கட்டளையகஙகள் இருக்கும் இடத்தில் அதற்கு பதில் 5 ஒருங்கிணைந்த கட்டளையகங்களை அமைப்பது.

இவ்வகை ஒருங்கிணைந்த கட்டளையகங்களை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. இது இந்திய ராணுத்தின் செயல்பாட்டையே அடிப்படையாக மாற்றுவது. பெரிதும் செலவு பிடிக்கும் வேலையும் கூட. இந்தத் திட்டம் குறித்து ராணுவத்திற்குள்ளேயே விமர்சனங்களும் மாற்றுக்கருத்தும் எழுந்திருக்கிறது.இதுபோன்ற ஒருங்கிணைந்த கட்டளைகளைக் கொண்டவை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்று ராணுவத்தில் பெரும் முதலீடுகளைச் செய்திருக்கும் நாடுகளே.

இவை மூன்றுமே வலிந்து வெளிநாடுகளில் ராணுவ செயல்பாட்டில் (expeditionary) தலையிடுபவை. இந்தியாவின் ராணுவ அபிலாஷைகள் அவ்வாறானவை அல்ல. எனவே நமக்கு இது அவசியமில்லை என சில மூத்த ராணுவ ஆலோசகர்கள் கருதுகின்றனர். நமது முக்கிய எதிரியான பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்த வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவாதங்கள் ஒருபுறம் இருக்க, இந்த ஒருங்கிணைந்த கட்டளையகங்களில் இரண்டிற்கான வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. ஒன்று, தென்னிந்திய கப்பல் படைகளை மையமாக்கி ஆந்திராவில் அமையவிருக்கும் Indian ocean maritime command.

மற்றொன்று, விமானப்படையை மையப்படுத்தி உருவாக்கப்படவிருக்கும் ADC.மீதம் உள்ள மூன்றையும் உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. அது நாட்டில் கிழக்கு, மேற்கு  மற்றும் வடக்கு எல்லைகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டவை. இந்த சவாலை இனி யார் பொறுப்பேற்று முன்னெடுப்பார்கள், எவ்விதம் செய்து முடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதன்முறையாக CDS உருவாக்கப்பட்டபோது முப்படைத் தளபதிகளில் யார் பணியில் மூத்தவரோ அவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால், எந்த  அடிப்படையில் CDS தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதிகள் எதுவும் நடைமுறையில் இல்லை.

பணி மூப்பு என்ற அளவில் பார்த்தால் தற்போதைய தரைப்படைத் தளபதி நவரானேதான் அடுத்த CDS ஆக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், அவர் வரும் ஏப்ரல் மாதம் பணிஓய்வு பெறவிருக்கிறார். பணிஅடுக்கில் (rank) அவருக்கு அடுத்து இருக்கும் மூவருமே அவரை விட வயதில் மூத்தவர்கள்; தளபதி நவரானேவுக்கு முன்னரே ஓய்வு பெற்றுவிடுவார்கள்.

எனவே, பணிமூப்பில் நான்காவதாக இருக்கும் லெப். ஜெனரல் மனோஜ் பாண்டேதான் தளபதி நவரானேவுக்கு அடுத்தபடி CDSக்கு தகுதி பெறுவார்.

ஆனால், இவர் பிற படைத்தளபதிகளை விட பணிமூப்பில் இளையவராக இருப்பார். பணி அடுக்கு, பணி மூப்பு போன்றவற்றில் மிகவும் கறாராக அமைக்கப்பட்ட ராணுவம் போன்ற அமைப்புகளில் இது சிக்கலை ஏற்படுத்தலாம்..ராணுவம் என்பது பிற துறைகளைப் போல மீட்டிங்குகளும், பைல்களும், கையெழுத்துக்களும் கொண்டு நடக்கும் துறையல்ல.

என்றோ நடக்கவிருக்கும் மோதலுக்காக ஒவ்வொரு நாளும் தன்னைப் பயிற்றுவித்து, எப்போதும் தன்னை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய துறை. அதில் மாற்றங்கள் அவசியம் என்றாலும் கூட அவை துரித கதியில் நிகழ முடியாதவை. அப்படி என்ன மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அவை ராணுவத்தின் மன உறுதியைக் குலைப்பதாக அமையக்கூடாது.கவனமில்லாத மாற்றம் தடுமாற்றமாக மாறலாம். அடுத்து வரவிருக்கும் CDSக்கு சவாலான பணி காத்திருக்கிறது.

கார்த்திக்வேலு