நீரின்றி அமையாது உலகு...



இந்தியா முழுவதும் மாசுபட்டுவரும் நிலத்தடி நீர்!

விடாமல் பெய்த மழையால் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகிலுள்ள ஆயன்குளம் ஆற்றுப்படுகை நிரம்பி அதிலிருந்து உபரி நீர் வெளியேறியது.

இந்த நீர், ஆயன்குளத்தில் உள்ள ஒரு கிணற்றுக்குள் சென்றது. விநாடிக்கு 50 கனஅடி வீதம் தொடர்ச்சியாக பல நாட்கள் இந்தக் கிணற்றுக்குள் தண்ணீர் விழுந்தபோதும், இப்போது வரை அக்கிணறு நிரம்பவில்லை. இது, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர் எங்கே செல்கிறது என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. கிணறு தண்ணீரைக் குடித்து ஏப்பம் விட்டு வருகிறது. அதேநேரத்தில் இப்பகுதியைச் சுற்றி 20 கிமீ சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரவும், உப்புத் தண்ணீர் நல்ல தண்ணீராக மாறவும் இக்கிணறு பயன்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இக்கிணறு மூலம் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறுவதால், மேலும் கூடுதலாக தண்ணீரை இந்தக்கிணற்றுக்குள் திருப்பிவிட்டு, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வழிவகை செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கிணறு நிரம்பாத காரணம் என்ன என்பது குறித்து சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இப்படி ஒரு பக்கம் அதிசயக் கிணறு பற்றி ஆய்வுகள் நடைபெறும் வேளையில் நாம் எப்படி எல்லாம் நிலத்தடி நீரை பாழ் படுத்தி வருகிறோம் என்பதையும் பார்ப்போம்.
நிலத்தடி நீர் விவசாயத்திற்காகவும், நகர தேவைக்காகவும் தொழிற்சாலைகள் உபயோகத்திற்காகவும் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக்கிணறுகள் கட்டி அவற்றின் மூலம் எடுக்கப்படுகிறது.மண்ணின் ஈரம், நிலத்தடி உறைபனி மற்றும் மிகத் தாழ்வான நீர் ஊடுருவும் படுக்கைப் பாறையின் உள்ளே அசையாத அல்லது ஓடாத நீர் காணப்படுகிறது. ஏறத்தாழ புவியின் அனைத்து நிலத்தடி பரப்புகளிலும் நீர் இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன.

மாசுபடுத்தப்பட்ட நிலத்தடி நீரானது தெளிவாகத்தெரியாது. அதை சுத்தப்படுத்துவது மாசுபட்ட ஆறு மற்றும் ஏரிகளைச் சுத்தப்படுத்துவதை விட மிகக் கடினம். நிலத்தின் மீது எறியப்பட்ட கழிவுப் பொருட்கள். முக்கியமாக தொழிற்சாலைக்கழிவுகள், வீடுகளிலும் உபயோகப்படுத்தப்படும் வேதிப் பொருட்கள், குப்பைகளைக் கொண்டு நிரப்பப்பட்ட நிலப்பரப்புகள், அதிக அளவில் உபயோகப்படுத்தப்பட்ட செயற்கை உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் ஆகியவை நிலத்தடி நீர் மாசுபட காரணமாக உள்ளன.

நிலத்தடி நீர் தர கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் மண்டல அளவில் நிலத்தடி நீர் குறித்த விவரங்களை மத்திய நிலத்தடி நீர் வாரியம் உருவாக்குகிறது. இதன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிலத்தடி நீரில் ஃப்ளூரைடு, ஆர்சனிக், நைட்ரேட், இரும்பு மற்றும் கன உலோகங்களின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. சில பகுதிகளில் நைட்ரேட் கலப்பும் உள்ளது. இது உரங்கள் பயன்பாடு அதிகரிப்பதால் ஏற்படுகிறது.

நிலத்தடி நீர் மேலாண்மை மாநிலம் சம்பந்தப்பட்டது என்றாலும், நிலத்தடி நீர் மாசினைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மத்திய அரசின் நிலத்தடி நீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் உப்புநீர்  28 மாவட்டங்களில் ஊடுருவியுள்ளதும், பல மாவட்டங்களில்  நல்ல தண்ணீர் உப்புத் தண்ணீராக மாறி வருவதும் தெரிய வந்துள்ளது. ஃப்ளூரைடு 25 மாவட்டங்களிலும், நைட்ரேட் 29 மாவட்டங்களிலும், ஆர்சனிக் 9 மாவட்டங்களிலும், இரும்பு 2 மாவட்டங்களிலும், துத்தநாகம் 3 மாவட்டங்களிலும், கேட்மியம், குரோமியம்  தலா ஒரு மாவட்டத்திலும் நிலத்தடிநீரில் கலக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை சுட்டுகிறது.

கணக்கெடுக்கப்பட்டுள்ள 31 மாநிலங்களில் குறைந்தபட்சமாக 249 மாவட்டங்களிலும், அதிகபட்சமாக 473 மாவட்டங்களிலும் நீரானது பல்வேறு காரணங்களால் பல்வேறு தனிமங்களின் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு இந்தாண்டு வெளியிட்டுள்ள ஆய்வுக் குறிப்பு தெரிவிக்கிறது. தமிழ்நாடு, ராஜஸ்தான், சத்தீஸ்கர், கர்நாடகா, குஜராத், உத்தரப்பிரதேசம், அரியானா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப் மாநிலங்களின் நிலத்தடி நீரில் மாசுபாடு அதிகரித்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து இந்தியாவின் மொத்தமுள்ள 748 மாவட்டங்களில் சுமார் 50 சதவீத மாவட்டங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதை அறியலாம். இந்த நிலத்தடி நீர் மாசுபாட்டை களைவது மிகப்பெரிய சவால். பெரும்பாலும் நன்னீர் உப்பு நீராக மாறுவதுதான் பெரிய பிரச்னையாக உள்ளது. உப்பு நீர் நன்னீரை விட 40 மடங்கு அடர்த்தியானது. உப்பு நீரை ஓர் அடி கீழே தள்ளுவதற்குக் கூட, நன்னீர் 40 அடி உயர வேண்டும். அதாவது உப்புநீரை பின்னுக்குத் தள்ளுவது மிகவும் கடினம் என்று நீரியல் நிபுணர்கள்  கூறுகின்றனர்.

இதனால் கடலோரப் பகுதிகளில் கிடைக்கும் நிலத்தடி நீர் அளவு மற்றும் தன்மை நன்றாக இருப்பதில்லை. இந்தப் பகுதிகளில் மழை நீர் சேகரிப்புத் திட்டம் பரவலாக அமலாக்கப்பட வேண்டும். ‘குடியிருப்புகளில் மட்டும் மழை நீர் சேகரிப்புத் திட்டம் அமல்படுத்துவது போதாது. சாலையோரங்கள், கோயில் குளங்கள், நீர் நிலைகள் என கடலோரப் பகுதிகளின் பல்வேறு இடங்களில் பரவலாக இது நடைமுறைப்படுத்தப்படவேண்டும்...’ என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த வடகிழக்குப் பருவகாலத்தில் பெய்த பெருமழை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில்  நிலத்தடி நீர் மட்டம் மாநிலம் முழுவதும் உயர்ந்துள்ளதா என்ற கேள்வி  எழுகிறது. தமிழ்நாட்டின் சராசரி பருவமழையை விட இந்த ஆண்டு சுமார் 56 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. இந்தாண்டு பெய்து வரும் மழையின் காரணமாக தமிழ்நாட்டில் எவ்வளவு தூரம் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது என்பது குறித்த ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.  

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 4 ஆயிரத்து 563  டிஎம்சி நீர் கிடைக்கிறது. ஒரு டி எம் சி என்பது இரண்டாயிரத்து எண்ணூற்றி முப்பது கோடி லிட்டர். இதில் மழையின் பங்கு  4,314 டிஎம்சி நீரும், பக்கத்து மாநிலங்களில் இருந்து நதிநீர்ப் பங்கீட்டின் மூலம் கிடைக்கும் 249 டிஎம்சியும் சேரும். இதில் 3055 டிஎம்சி தண்ணீர் கடலுக்குச் செல்கிறது. மீதம் உள்ள 885 டி எம் சி நீர்நிலை
களிலும், 625 டிஎம்சி நீர் நிலத்திலும் சேருகிறது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் சேகரிக்கப்பட்ட 625 டிஎம்சி நிலத்தடி நீரில், சுமார் 41 சதவீதம் மழையாலும்; 59% நீர்நிலைகளாலும் சேகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல்லாண்டு காலமாக கிணறுகள் மூலம் நிலத்தடி நீரை நிரப்பி வந்தாலும், பசுமைப் புரட்சி ஒரு பக்கம், ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் தொழில்நுட்பம் மறுபக்கம் என்று நிலத்தடி நீர் வேகமாக உறிஞ்சப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 118 டிஎம்சி நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 92 சதவீதம் விவசாயத்திற்கும் சுமார் 7 சத
வீதம் வீட்டுத் தேவைகளுக்காகவும், ஒரு சதவீதம் தொழில் துறைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர் பயன்பாடு என்பது கூடுதலாக உள்ளது. நிலத்தடி நீரை சேமிக்கும் திட்டங்களான தடுப்பணைகள், குளங்கள், பண்ணைக்குட்டைகள், ஆழ்துளைக் கிணறுகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டு வருவது எதிர்காலத்தில் தண்ணீரை சேமிக்க உதவும். நிலத்தடி நீரை பல ஆண்டுகளுக்குப் பின்னர் கூட பயன்படுத்த முடியும். நீரைத் தேக்கி வைக்கும் கொள்ளளவு நிலத்தடியில் அதிகமாக இருக்கும் என்பதை ஏற்கனவே கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தோம்.
 
காலநிலை மாற்றத்தால் மழை பொழிவதும் மாறி வருகிறது. ஒரே நாளில் ஒரு மாதத்திற்கான மழையைக் கொட்டித் தீர்த்துவிடுகிறது. சில இடங்களில் கனமழை தொடர்ச்சியாகப் பெய்து வருகிறது. இம்மாதிரியான சூழலில் இந்தத் தண்ணீரை சேமித்து வைப்பதும் அதனை மாசுபாடு இல்லாமல் பாதுகாப்பதும் இப்போது அவசியமாகிறது.

(தொடரும்)

பா.ஸ்ரீகுமார்