தழும்பு தெரியாம தையல் போடமுடியுமா டாக்டர்..?



தலைப்பிலுள்ள இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாத டாக்டர்களே இல்லை. அழகான முகமும், வாகான உடலுமே இங்கு அனைவருக்குமான தேவையாக இருக்க, உடலில் ஏற்படும் காயங்களைப்போல, தழும்புகள் மட்டும் ஏன் நம் உடலைவிட்டு நீங்காமல் நிரந்தர அடையாளங்களாய் மாறுகின்றன?

உடலுறுப்புகளைப் பாதுகாப்பது... நிறத்தைத் தீர்மானிப்பது... காலநிலைக்கு ஏற்ப உடலை சமன்படுத்துவது... உணர்வுகளை வெளிப்படுத்துவது... வெளித் தீண்டல்களை உணர வைப்பதென தோலுக்கு பல வேலைகள் இருந்தாலும், இத்தனை வேலைகளையும் சரியாகச் செய்யும் நம் மெல்லிய தோல்கள் மூன்று அடுக்கால் ஆனவை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், இதுதான் உண்மையும்.

கர்ப்ப காலத்தில் பெண்களின் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள், அம்மை நோய், முகப் பரு, மருக்கள்... என இவற்றால் ஏற்படும் வடுக்கள் தழும்புகளாக நிரந்தரமாகி நம்மைத் தொடர்ந்து கலவரப்படுத்து கின்றன. தழும்புகள் கேவலமல்ல என விளம்பரப்படுத்தப்படும் அதேவேளையில்தான், தழும்புகளை மக்கள் விரும்பவில்லை என்பதற்கு ஆதாரமாக தீக்காயங்கள், கீலாய்ட் (keloid) போன்று வெளியே தெரியும் மிகப் பெரிய தழும்புகளுக்கான கொலாஜன்(collagen) ஊசிகளின் வியாபாரமும், தழும்பை மறைக்கும் கொலாஜன் க்ரீம்களின் விற்பனையும் உலகச்சந்தைகளில் மில்லியன் டாலர்களில் கொடிகட்டிப் பறக்கிறது.

தழும்புகளை அருவருப்பது பதினான்காயிரம் ஆண்டுகள் பழமையானது என்கிறது வரலாறு. அறுவை சிகிச்சையின் தந்தையான நமது சுஷ்ருதாவில் தொடங்கி, கிரேக்க மருத்துவரான ஹிப்போக்ரெட்டிஸ், கேலன், லிஸ்டர் என ஒவ்வொருவரும் தழும்புகளை மெலிதாக்கும் தையல் ஊசிகளையும், நூலிழைகளையும் கண்டுபிடிக்கவே முயன்றுள்ளனர்.
தோலுக்கு மெல்லிய தையல்களைத் தொடர்ந்து, இன்று தோல் பசைகளும், ஸ்டேப்ளர்களும் தழும்புகள் தெரிவதை பெரும்பாலும் தவிர்க்கும் முயற்சிகளாகவே உள்ளன.
சமூக ஊடகங்கள் வாயிலாக சமீபத்தில் தையல் இடுப்பின் இடப்புறமா வலப்புறமா என்பது பிரச்னையாகப் பேசப்பட்டபோது, சிசேரியனுக்கு போடும் தையல் குறித்த வரலாறையும் நாம் தெரிந்துகொள்வது இங்கே அவசியமாகிறது.

17ம் நூற்றாண்டு வரை இறக்கும் தருவாயிலிருந்த தாயிடமிருந்து குழந்தையைக் காப்பாற்ற மட்டுமே சிசேரியன்கள் மேற்கொள்ளப்பட்டன. பிற்பாடு அதுவே முன்னேறி தாய் - சேய் இருவரையும் காக்கும் சிகிச்சையானது. வெர்டிகல் (கிளாசிக்கல்) சிசேரியன், அதாவது தாய் வயிற்றின் மேலிருந்து கீழாக வெட்டி தையல் போடும் முறை அறிமுகமானது. இந்த முறையால், பிரசவத்திற்குப் பிறகு தழும்புகள் வெளியே தெரிவது குறித்து தாய்மார்கள் அதிகம் கவலைப்படுவதைப் பார்த்த மன்ரோ கெர் என்கிற ஆங்கிலேய மருத்துவர், 1926ல் முதன்முதலாக bikini line c-section என்ற குறுக்குவெட்டு (LSCS) சிகிச்சையை அறிமுகப்படுத்தினார்.

கருப்பை காயங்கள் கூடுவதற்கும், தழும்புகள் வெளியே தெரியாமல் இருக்கவும், அன்று அவர் தந்த முக்கியத்துவமே இன்று பல பெண்களின் பிரசவத் தழும்புகள் வெளித் தெரியாமல் உள்ளாடைக்குள் மறைந்து நிற்கின்றன. மேலும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை, நோட்ஸ் எனப்படும் உடல் துவார அறுவைசிகிச்சை, லேசர் சிகிச்சை என அனைத்துமே பிரபலமடைவது தழும்புகளைத் தவிர்க்கத்தானே தவிர வேறென்ன?  

ஒரு மருத்துவரின் பணி என்பது ஒரு நோயினை உடல்ரீதியாக குணப்படுத்துவது மட்டுமல்ல. தன்னிடம் நோயாளியாக வருபவர் மனரீதியாக பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வதும்தான்.
அதனால்தான் மருத்துவர்கள் அறுவைசிகிச்சைக்கு முன்பே தழும்புகளைப் பற்றியும் சிந்திக்கிறார்கள். சில காயங்கள் மறுக்க முடியாதென்றாலும், அவை உண்டாக்கும் தழும்புகளை மறைக்க முடியுமென்றால் அதைச் செய்வதுதானே நியாயம்?

யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு தழும்புக்கும் பின்னே வலிமையானதொரு போராட்டம் இருந்திருக்கலாம். அந்தப் போராட்டத்திற்கு முன்பு இந்த வடுக்கள் ஒரு பொருட்டே இல்லை எனப் பிறர் கூறினாலும், தழும்புகளால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் அவ்வாறு எடுத்துக் கொள்வதில்லை என்றே புள்ளிவிவரங்கள்  நமக்குச் சொல்கின்றன.  

ஆம்... வெளித்தெரியும் ஒவ்வொரு தழும்பும் மற்றவர்களிடையே வெறுப்பையோ பரிதாபப்பார்வையையோ ஏற்படுத்துவதால், அது தன்னம்பிக்கை, மகிழ்ச்சியைக் குறைத்து, தங்கள் சுயமரியாதையும் அதனால் பாதிக்கப்படுகிறது எனக் கருதுபவர்கள் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வில், 45 சதவிகிதத்தினரிடம் மன அழுத்தம், பதற்றநிலை, PTSD வகையான மனநோய்களை தழும்புகள் ஏற்படுத்தி இருக்கின்றன என்கிறது ஆய்வு.

இது எதையும் உணராத சமுதாயம், திரைப்படங்களில் ஹீரோக்களை மாசு மருவற்ற முகமாக அழகாகக் காட்டுவதோடு, வில்லன்களை தழும்புகளோடு காட்டி கலக்கமடையச் செய்கிறது.

“தழும்புகளை இயல்பாக ஏற்காத சமூகம், தழும்புகளோடு இயல்பாக வாழ அனுமதிக்காத சமூகம் இருக்கும்வரை, தழும்புகள் உண்மையில் சாபம்தான்...’’  என்கிறார் பிரபல முகச்சீரமைப்பு நிபுணரான ரீகன் தாமஸ். அதுதான் உண்மையும்கூட!

தழும்புகள் - சில தகவல்கள்

மூன்றடுக்கால் ஆன நமது தோலில், எபிடெர்மிஸ் எனப்படும் முதல் அடுக்கு உடலைப் பாதுகாப்பதோடு மெலனி சுரப்பியின் மூலம் நிறத்தையும் தீர்மானிக்கிறது.
இரண்டாவது அடுக்கு டெர்மிஸில். இது வியர்வை நாளங்கள், எண்ணெய் சுரப்பிகள், முடியின் வேர்க்கால்கள், இரத்த நாளங்கள் மற்றும் தொடு உணர்வு நரம்புகளோடு இணைக்கும் கொலாஜன் புரதம் நிறைந்தது. மூன்றாவது ஹைப்போ - டெர்மிஸின். இது உடலின் தட்பவெப்பத்தை சமன்படுத்தும்.

நம் உடல் உறுப்பை தோல் மூடிப் பாதுகாக்க பெரும் துணையாக இருப்பது கொலாஜன் புரதமே. இது தோலின் அடியிலும், பிற உறுப்புகளிலும் வலைபோல் பரவி தோலை நெகிழ்வுத் தன்மை மற்றும் உறுதியோடு வைத்திருக்கும். கொலாஜனுக்கு நேர் எதிராக வேலை செய்வது ஈலாஸ்டின். இது தோல் தனது பாதிப்பில் இருந்து மீண்டுவர உதவுகிறது. எதிர்ரெதிர் திசையில் சுரக்கும் கொலாஜனும் ஈலாஸ்டினும் காயங்கள் உருவாகும்போது ஒரே திசையில் சுரக்க ஆரம்பிக்கும். இதனால் கட்டடத்தின் மீது விழுந்த விரிசலை சிமெண்ட் கொண்டு நிரவுவது போல், காயம் மூலம் உருவாகும் பிளவை சரிசெய்ய தழும்புகளை உடல் உருவாக்கும்.

காயம் ஏற்பட்ட நிமிடத்தில், தோலோடு ரத்தநாளங்களும் சேர்ந்தே பாதிப்படையும். ரத்தம் வெளியேறுதல் நின்றதும், உடலானது காயத்தை மூடி பாதுகாப்பதை மட்டுமே செய்து தோலின் அழகை மறந்தேவிடும். அப்போது தோலின் அடுக்குகள், திசுக்கள், சுரப்பிகள் என எதுகுறித்தும் அது கவலைப்படாமல், கொலாஜன் மற்றும் ஈலாஸ்டின்களை எக்கச்சக்கமாக சுரக்க வைத்து காயத்தை மூட முயற்சிக்கும். இதுவே காயம்பட்ட இடம் கடினமான தழும்பாய் மாறக் காரணம். இது சாலையில் இருக்கும் ஓட்டையை ஜல்லி கொட்டி மூடும் செயல்தான் என்றாலும் பாதிப்பைக் குறைக்கும் பாதுகாப்பு நடவடிக்கையாகவும் கொள்ளலாம்.

பழம், மீன், முட்டை சாப்பிடுங்க

தழும்புகளை மறைக்க உதவும் கொலாஜன் க்ரீம்களில் இயற்கை எண்ணெய்கள், ஆலுவேரா ஜெல், விட்டமின் - ஈ போன்றவை இருப்பதால், நமது தோலின் மென்மையையும் மினுமினுப்பையும் கூட்டி தழும்புகள் மறைய உதவுகின்றன என்றாலும், அடிக்கடி நீர் அருந்துவது, பழம், காய்கறிகள், மீன், முட்டைகளை உணவில் தொடர்ந்து சேர்ப்பதே கொலாஜன் சுரப்பை அதிகப்படுத்தும்.

சசித்ரா தாமோதரன்