காலம் களமாகும் படங்கள்... ஒரு பார்வை!



‘மாநாடு’ திரைப்படம் ஹிட் அடித்திருக்கும் சூழலில் சமூக வலைத்தளங்களில் டைம் லூப்தான் வைரல் டாபிக். டைம் லூப் என்றால் என்ன எனும் சீரியஸ் விளக்கக் கட்டுரைகளில் தொடங்கி, மீம்ஸ்கள் வரை வெரைட்டியாக விரவிக் கிடக்கிறது டைம் லூப் பேச்சுக்கள். சரி, இப்படி டைம் லூப் போல காலத்தை அடிப்படையாக வைத்து வேறு என்னென்ன சினிமா தியரிகள், கலைக் கோட்பாடுகள் இருக்கின்றன என்று தேடினோம்.

*காலம் எனும் கோட்பாடு

நம்முடைய காலம் பற்றிய விஞ்ஞானபூர்வமான நவீன கோட்பாடு கடந்த நூற்றாண்டில்தான் உருவானது. இதனை கால - வெளி தொடர்மம் (Time and Space Continuum) என்பார்கள்.
இந்தக் கோட்பாடு உருவாகி வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே காலம் பற்றிய கருதுகோள் எல்லா பண்பாடுகளிலும் இருந்து வந்தாலும் காலத்தை விஞ்ஞான பூர்வமாகத் துல்லியமாக, அது இடம் சார்ந்தது என நாம் புரிந்துகொண்டது போன நூற்றாண்டில்தான்.

குறிப்பாக, ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளுக்கு இதில் மிகப் பெரிய பங்குள்ளது. காலத்தையும் வெளியையும் பிரிக்க முடியாது என்பது உட்பட காலம் சார்ந்த பலவிதமான முக்கியமான அவதானங்களுக்கு நாம் சமீபத்தில்தான் வந்தடைந்தோம். நம்முடைய ஆரியபட்டர், பாஸ்கரர் போன்ற மேதைகளில் தொடங்கி பிளேட்டோ, அரிஸ்டாட்டில் வரை அந்நாட்களிலேயே காலத்தைப் பற்றிச் சிந்தித்திருக்கிறார்கள். காண்ட் போன்ற நவீன தத்துவவாதிகள் இதனை பதினெட்டாம் நூற்றாண்டிலேயே விவாதித்திருக்கிறார்கள். லெய்ப்னிஸ், நியூட்டன் இருவரும் காலம் எனும் கருத்தாக்கத்துக்கான நவீன சிந்தனைகளை வழங்கினார்கள். பின்னர் ஐன்ஸ்டீன் வந்தார்.

இப்படி காலம் பற்றி சுவாரஸ்யமான உரையாடல்கள் தத்துவ, விஞ்ஞானத் துறைகளில் நிகழ நிகழ இந்த கான்செப்ட்டுகளின் அடிப்படையில் இலக்கியம் படைப்பதும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. அது நம்முடைய சம காலத்தில் காலம் சார்ந்த சினிமாவாக வளர்ந்து நிற்கிறது.விஞ்ஞானபூர்வமான கோட்பாடுகளைக்கொண்டவை... கற்பனை அடிப்படையிலானவை என காலம் சார்ந்த இலக்கியப் படைப்புகளையும் சினிமாக்களையும் நாம் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

காலம் பற்றிய நமது கோட்பாட்டுச் சிந்தனைகள் மெல்ல மெல்ல வளர்ந்துகொண்டே இருந்ததால் சில காலம் சார்ந்த கலைக் கோட்பாடுகள் தவறானவை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டன. ஆனாலும் கற்பனை படிக்கவும் பார்க்கவும் சுவாரஸ்யமாக இருக்கிறதுதானே என்று நம்முடைய கதாசிரியர்களும் சினிமாக்காரர்களும் இப்போதும் கயிறு திரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

*டைம் ஸ்லிப்

கால நழுவல் அல்லது டைம் ஸ்லிப் என்பது நமக்கு ஓரளவு அறிமுகமான கான்செப்ட்தான். நாயகனோ அல்லது முக்கியமான கதாபாத்திரம் ஒன்றோ இன்னதென அறிய முடியாத காரணத்தால் அல்லது வழிமுறையால் ஒரு காலத்திலிருந்து இன்னொரு காலத்துக்குள் நுழைந்துவிடுவார். இப்போது திடீரென ஓர் நியாண்டர்தால் மனிதன் நம் ஊருக்குள் வந்துவிட்டால் எப்படி இருக்கும் என்று ஒருவர் யோசித்து அதனைக் கற்பனையாக விரித்தால் அதுதான் டைம் ஸ்லிப். இதில் ஒரு பழைய நூற்றாண்டு மனிதன் எப்படி சமகாலத்துக்குள் வருகிறான் அல்லது எதிர் காலத்துக்குள் நுழைகிறான் என்பதற்கெல்லாம் எந்தவிதமான லாஜிக்கும் சொல்ல வேண்டியதில்லை. அப்படித்தான் பல இலக்கியங்கள், படங்கள் இதன் அடிப்படையில் உருவாகியிருக்கின்றன.

அமெரிக்க நாவல் உலகின் பிதாமகன் எனப்படும் எட்கர் ஆலன் போ பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே விஞ்ஞானப்புனைவுகள் எழுதியவர், அவரின் படைப்புகளில் இந்தப் பண்பைக் காணலாம். இர்விங் வாஷிங்டனின் ‘ரிப்வேன் விங்கி’, மார்க் ட்வைனின் ‘A Connecticut Yankee in King Arthur’s Court’ போன்றவையும் இந்த வகைமைதான். 2011ம் ஆண்டு வெளியான ‘மிட்நைட் இன் பாரிஸு’ம் இந்த வகை திரைப்படம்தான். இது முழுக்க முழுக்க கற்பனை அடிப்படையிலான புனைவுதான். விஞ்ஞானக் கோட்பாடுகள் இதனை ஏற்பதில்லை.

*எதிர்காலத்திலிருந்து தொடர்புகொள்ளுதல்

காலத்தை முன்னும் பின்னுமாக வெளியின் அடிப்படையில் நகர்த்தும் படங்கள் இவை. பூமியிலிருந்து ஏதோ ஒரு காரணத்தால் தப்பிச் சென்ற மனிதர்கள் எதிர் காலத்துக்குள் சென்றுவிட்ட பின்பு, பூமியின் இறந்த காலத்துக்குள் திரும்பி வருவது இந்த வகைமையின் அடிப்படை. காலம் வளையும் தன்மையுடையது என்ற ஐன்ஸ்டீன், ஒளியைவிட வேகமாகச் செல்லும் விண்கலம் ஒன்று நம்மிடம் இருந்தால் நாம் வேறு ஓர் இடத்தில் வேறொரு காலக் கோட்பாட்டுக்குள் நுழைந்துவிட முடியும் என்றார்.

அந்தத் தியரியின் அடிப்படையில் எதிர்காலத்துக்குள் செல்லும் மனிதர்கள் பூமியைத் தொடர்புகொண்டால் எப்படி இருக்கும் என்ற கற்பனைதான் கதையின் அடிப்படை.
இது விஞ்ஞானபூர்வமான கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட புனைவு. கிரிஸ்டோபர் நோலனின் ‘இன்டர்ஸ்டெல்லர்’ இந்த வகைமை படம்தான். ஹெச்.ஜி.வெல்ஸ், ஜான் புச்சானன் போன்றவர்கள் இந்த வகைமையில் எழுதிய நாவலாசிரியர்களில் முக்கியமானவர்கள்.

*காலத்தை முன் உணர்தல்

எதிர்காலத்தில் நடக்கப் போகும் ஒன்றை தன்னுடைய அசாதாரணமான முன் உணர்வால் ஒருவர் முன்பே கணித்துவிடுவது இதன் அடிப்படை. இ.எஸ்.பி எனப்படும் கூடுதல் நுண்ணுணர்வு ஆற்றல் என்பதும் இதுதான். தமிழில் எண்பதுகளிலேயே ‘நூறாவது நாள்’ என்ற படம் இதன் அடிப்படையில் வந்தது. பிறகு மலையாளத்தில் ‘ஐயர் தி க்ரேட்’ என்ற மம்மூட்டியின் மலையாளப் படமும் வந்துள்ளது. காலத்தை சிலவகையான கனவுகள் மூலம் முன்கூட்டியே கண்டறிய முடியும் என ஜே.பி.பிரீஸ்ட்லி என்ற எழுத்தாளர் நம்பினார். இது சார்ந்த புனைவுகள், கட்டுரைகள் எனப் பலவற்றை எழுதியிருக்கிறார்.

இ.எஸ்.பி போலவே தேஜாவூ என்ற கோட்பாடும் புனைவிலக்கியத்தில் பிற்பாடு இந்த காலத்தை முன் உணர்தல் என்ற கோட்பாட்டோடு இணைந்து கொண்டது.
தேஜாவூ என்றால் நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் ஏற்கெனவே நடந்ததுதான் என்பதைப் போல் தீர்க்கமாக உணர்தல். இது ஒரு தற்காலிக நிலை. விஞ்ஞானபூர்வமான சாத்தியம் மிகக் குறைந்த, அரிதாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்த விஷயங்கள்தான் இதன் அடிப்படை.

*டைம் லூப்

ஒரு குறிப்பிட்ட காலம் நாயகனுக்கு அல்லது முக்கிய கதாபாத்திரத்துக்கு திரும்பத் திரும்ப நடந்துகொண்டே இருப்பதுதான் இதன் அடிப்படை. இப்படி திரும்பத் திரும்ப நிகழும் இந்த டைம் லூப் மரணத்தினாலோ அல்லது கடிகாரம் ஒரு குறிப்பிட்ட மணியை அடையும்போதே அங்கே இருந்து மீண்டும் ஒரு குறித்த நாளில் அல்லது நேரத்தில் தொடங்கும்.
காலம் வளையும் தன்மை கொண்டது என்ற விஞ்ஞானக் கருத்தை பிழையாகப் புரிந்துகொண்ட விஞ்ஞானப் புனைவு வகைமை இது. சிலர் கேஷுவல் லூப் எனப்படும் வகைமையோடு இதனைக் குழப்பிக் கொள்வார்கள். கேஷுவல் லூப் என்பது வேறு.

*கேஷுவல் லூப்

காலம் தொடர்பான படங்களில் ஒரு முக்கியமான விதி இது. ஒரே விஷயம் திரும்பத் திரும்ப நிகழ்வதுதான் இதுவும். ஆனால், டைம் லூப்பில் ஒருமுறை நிகழ்ந்த விஷயத்தை இரண்டாவது முறையாக நிகழும்போது மாற்றி அமைக்க முடியும். அதாவது, சிறிது மாற்றி விளைவுகளை மாற்ற முடியும் அல்லவா? இந்த கேஷுவல் லூப்பில் இது சாத்தியமில்லை. உதாரணமாக, பில்லியர்ட்ஸ் போர்டில் இருக்கும் ஒரு பந்து டைம் ட்ராவல் செய்து வேகமாகச் சென்று இறந்த காலத்தில் நுழைந்து, அதே இடத்தில் உள்ள தன் மீதே, தான் மோதுவதாக ஒரு கற்பனை செய்வோம். இந்த சுழல் மாற்றவே முடியாதது. இந்த லூப் நிகழ்ந்துகொண்டே இருக்கும். இது ஒரு முடிவிலி.

இதுவும் காலம் தொடர்பான நவீன கோட்பாட்டின் அடிப்படையிலானதுதான்.மேலே சொன்னதைத் தவிர காலத்தைத் தலைகீழாக உணர்தல், மாற்று வரலாறு எனப்படும் ஆல்ட்டர்நேட்டிவ் ஹிஸ்டரி, நிகர் பிரபஞ்சம் எனப்படும் பேரலல் யுனிவர்ஸ், தந்தையைக் கொல்லுதல் எனும் கால முரண்,  பட்டர்ஃப்ளை எஃபெக்ட், டைம் டூரிஸம், டைம் வார் என பலவிதமான விஞ்ஞானப்புனைவுகள்
உள்ளன.

உண்மையில் இது முழுமையான பட்டியலும் அல்ல. காலம் எனும் தத்துவத்தை சரியாகப் புரிந்துகொள்ளும் தர்க்க மனமும் கற்பனைச் சிறகுகள் விரிக்கும் கலை மனமும் இருந்தால் இன்னும் பல டைம் தியரிகள் உருவாகிக்கொண்டே இருக்கும். காலத்தைப் போலவே அதுவும் முடிவிலிதான்.

இளங்கோ கிருஷ்ணன்