‘கடுவா’வுக்கு கடுக்கா!



‘வாஞ்சிநாதன்’, ‘ஜனா’, ‘எல்லாம் அவன் செயல்’ என தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் மசாலாக்களை டைரக்ட் செய்தவர் மலையாள இயக்குநரான ஷாஜி கைலாஷ். இவரது சிக்னேச்சரே கமர்ஷியல் படங்கள்தான். கேரள ஸ்டார்களான மோகன்லால், மம்மூட்டி தொடங்கி இளம் நடிகர்கள் வரை அனைவரையும் மாஸ் நடிகர்களாக மாற்றிய பெருமை ஷாஜி கைலாஷுக்கு உண்டு.அப்படிப்பட்டவர் இப்போது பிருத்விராஜ் நடிப்பில் ‘கடுவா’ என்ற மலையாளப் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். பிருத்விராஜ் நாயகனாக நடித்த ‘ஆடம் ஜோன்’ படத்தை எழுதி இயக்கிய ஜினு வி.ஆப்ரகாம் இந்த ‘கடுவா’ படத்துக்கு கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார்.

இந்த ‘கடுவா’ ஒரு பீரியட் படம். 1990களில் கேரள உயர் போலீஸ் அதிகாரிக்கு எதிராகப் போராடிய ‘கடுவாகுன்னேல் குருவச்சன்’ என்பவரின் வாழ்க்கையை அடியொற்றி இப்படம் எழுதப்பட்டிருக்கிறது; உருவாக்கப்பட்டிருக்கிறது.ரிலீசுக்கு ‘கடுவா’ தயாராகி வரும் இந்த நேரத்தில் இப்படத்துக்கு எதிராக எர்ணாகுளம் இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஸ்டே வாங்கியிருக்கிறார் ஒருவர்.அவர் யார் தெரியுமா? யாருடைய வாழ்க்கையை ஒட்டி படம் எடுக்கப்பட்டிருக்கிறதோ அந்த கடுவாகுன்னேல் குருவச்சன்தான்!

அவர்  தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘எனது வாழ்க்கைக் கதையை படமாக்க ஏற்கனவே படக்குழுவினர் அனுமதி கேட்டனர். எனது கதாபாத்திரத்தில் மோகன்லால் அல்லது சுரேஷ் கோபி நடிக்க வேண்டும் என்றும், சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதாக என்னை சித்தரிக்கக் கூடாது என்றும் சில நிபந்தனைகளோடு அனுமதி அளித்தேன்.ஆனால், அதை ஏற்காமல், என் கதையில் பிருத்விராஜை நடிக்க வைத்திருக்கிறார்கள்.

இது கூட பரவாயில்லை. ஆனால், சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரெய்லர் எனது புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இருக்கிறது. படத்தில் என் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. எனவே ‘கடுவா’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும்...’’ என மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதியரசர், ‘கடுவா’ ரிலீசுக்கு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.  

ஜான்சி