COFFEE TABLE



2021ல் சாத்தியப்பட்டது 21 வருட மிஸ் யுனிவர்ஸ் கனவு!

கடந்த வாரம் இஸ்ரேலின் எய்லட்டில் மிஸ் யுனிவர்ஸுக்கான போட்டிகள் கோலாகலமாக நடந்தன. இதில் பஞ்சாப்பைச்சேர்ந்த 21 வயதான ஹர்னாஸ் கவுர் சாந்து, ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டத்தைக் கைப்பற்றி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.சுமார் 80 பேர் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தைத் தட்டியிருக்கிறார் ஹர்னாஸ். தகவல் தொடர்பு கல்வியில் பட்டம் பெற்றவரான இவர், ‘மிஸ் சண்டிகரா’க கடந்த 2017ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர். தவிர, பல அழகுப் பட்டங்களையும் இந்தியாவில் வென்றுள்ளார்.

ஏற்கெனவே, இந்தியாவின் லாரா தத்தா கடந்த 2000ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருக்கிறார். அதன்பிறகு அந்தப் பட்டம் இந்தியாவின் வசப்படவே இல்லை. தற்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு இந்தியப் பெண் இப்பட்டத்தை வென்று சாதித்திருக்கிறார். கடந்தமுறை மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற மெக்சிகோவைச் சேர்ந்த ஆண்ட்ரியா மெர்சியாவிடமிருந்து இப்பட்டத்தைப்பெற்றிருக்கிறார் ஹர்னாஸ்.

டைகர் 3

சல்மான்கானின் இரண்டு டைகர் படங்களும் சக்கைப்போடு போட்டது அனைவரும் அறிந்த விஷயம். இதோ மூன்றாவது படத்துக்கும் தயாராகிவிட்டார் சட்டைபோடாத நடிகர்.
‘டைகர் 3’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் கதை கொஞ்சம் சர்ச்சையானது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற இராணுவ உளவாளியான ரவீந்தர் கெளசிக் என்பவரைப் பற்றியது.

ரவீந்தர் இராஜஸ்தானில் பிறந்த ஒரு பஞ்சாபி. இளமையில் நாடக நடிகராக இருந்தவர். 1975 வாக்கில் ‘ரா’வில் இணைகிறார். பிறகு, ‘ரா’வின் கட்டளைக்கு ஏற்ப ஒரு முஸ்லிமாகவே அடையாளத்தை மாற்றிக்கொள்கிறார். பாகிஸ்தானின் கராச்சியில் சட்டம் படித்து பாகிஸ்தான் இராணுவத்தில் மேஜர் வரை பதவிகளைப் பெறும் ரவீந்தர், அங்கு நபி அகமத் ஷாகிர் எனும் பெயரில் உலா வருகிறார்.

இந்திரா காந்தியால் ப்ளாக் டைகர் என்றுகூட புகழப்பட்டவர். ரவீந்தரின் பணி பாகிஸ்தான் இராணுவ ரகசியங்களை இந்தியாவுக்கு சொல்வது. இந்தப் பணியை 1979 முதல் 83 வரை செய்கிறார். இந்த விஷயம் பாகிஸ்தானுக்குத் தெரியவந்து 1985ம் ஆண்டு அவருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்படுகிறது. பின்பு இது ஆயுள்தண்டனையாக குறைக்கப்படுகிறது.
ஆனால், சிறையில் ஆஸ்துமா, டிபி வந்து 2001ல் இறக்கிறார் ரவீந்தர். ‘டைகர் 3’ படத்தில் ஹாஸ்மி எனும் இந்தி நடிகர்தான் இந்த ப்ளாக் டைகராக வருகிறார். ‘ரா’ அதிகாரியாக இன்னொரு டைகர்தான் சல்மான் என்கிறது தகவல்கள்.

இணையத்தை அதிரவைத்த ஆர்ஆர்ஆர்

‘பாகுபலி’ புகழ் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின், ‘ஆர்ஆர்ஆர்’, பாகுபலி பாகங்களுக்குப் பிறகு அதிகம் எதிர்பார்க்கப்பட்டிருக்கும் படம். இப்படத்தின் ‘நாட்டுக் கூத்து...’ பாடலுக்கு ஜூனியர் என்டிஆரும், ராம் சரணும் ஜோடி போட்டு ஆடும் ஆட்டத்தால் இணையம் அதிர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 9ம் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்திருக்கிறது. பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டிரெய்லர் 3 நிமிட ரோலர் கோஸ்டர் சவாரி போல மாஸ், கிளாஸாக உள்ளது.

பல அதிரடி மற்றும் பிரம்மாண்டம் நிறைந்த இந்த டிரெய்லர் மீண்டும் ஒருமுறை உலகளாவிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டிற்கு தயாராகி உள்ளது.  இந்நிலையில், ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் டிரெய்லர் வெளியான ஒரே நாளில் சுமார் 2 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு இந்தியாவிலேயே குறுகிய நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட டிரெய்லராக முதலிடம் பிடித்திருக்கிறது.

ஆல் இன் ஒன் கியூப் கேட்ஜெட்

Wondercube கீ செயின்... உலகின் மிகச்சிறிய இந்த கேட்ஜெட் மிகவும் வித்தியாசமானது. ஒரு கீசெயினில் சின்ன பெட்டி போல இருக்கிறது Wondercube. இந்த சதுர வடிவ சாதனத்தை எந்தப்
பக்கம் பிரித்தாலும் ஒரு பயன்பாடு இருக்கிறது. கேபிள் இணைப்பு வசதி மூலம் லேப்டாப் போன்ற சாதனங்களுடன் இணைக்கலாம். டேட்டாக்களை பேக்அப் எடுக்கலாம்.
ஸ்மார்ட் போனில் வீடியோ பார்க்க விரும்பினால், இதை ஸ்டாண்டாகப் பயன்படுத்தலாம்.

யூஎஸ்பி. சாதனமாகவும் இயங்குகின்றது. மெமரி கார்டையும் இதில் பொருத்திக்கொள்ளலாம். இருளில் டார்ச் லைட்டாகவும் செயல்படும். இதேமுறையில் போனை சார்ஜும் செய்யலாம்.  வெளியூர்களுக்குச் செல்லும்போது சுவர்க் கடிகாரம், டிவி ரிமோட்டிற்கு பயன்படுத்தும் ஒன்பது வோல்ட் பேட்டரியை இதனுடன் இணைத்து அவசர கால சார்ஜராகவும் பயன்படுத்த முடியும்.

குங்குமம் டீம்