பிசினஸ் வுமனாக ஜொலிக்கும் ரஜினி, கமல் இயக்குநரின் மகள்!



‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்’ என்று பாடினார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. அப்படி மாதவம் புரிந்து பிறந்துள்ள பெண்கள் பலரும் இன்றைய சமூகத்தில் பெரும் சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. ஆனாலும் தைரியத்தையும், நம்பிக்கையையும் ஆயுதமாகக் கொண்ட பெண்கள் வியக்க வைக்கும் வெற்றியை அடைந்துள்ளனர். 
அந்த வரிசையில் புதிய விருட்சமாக இணைந்துள்ளார் தலைநகரத்தின் சாதனை மங்கை பிரியா மீனா. எம்பிஏ பட்டதாரியான இவர் நண்பர்களுடன் சேர்ந்து ‘அன்ன விருக்ஷம்’ என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு பலமான பின்னணியும் உண்டு.  

இவருடைய அப்பா, ரஜினி, கமல் போன்ற சூப்பர் நடிகர்களை வைத்து பல ஹிட் கொடுத்த வெற்றிப் பட இயக்குநர். இளம் வயதிலேயே அப்பாவின் இழப்பு, திருமணம் என்று வாழ்க்கை திசை மாறினாலும் சாதிக்க வேண்டும் என்ற லட்சிய நெருப்பின் தீக் கங்குகளை மட்டும் அணையவிடாமல் பாதுகாத்து இன்று சென்னையில் ஐந்துக்கும் மேற்பட்ட உயர்தர சைவ உணவகத்தை தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து நிர்வகித்து வருகிறார்.  

இவருடைய அப்பா பெயர் ராஜசேகர். ரஜினி நடித்த ‘மாப்பிள்ளை’, ‘தர்மதுரை’ படங்களையும் கமல் நடித்த ‘விக்ரம்’ படத்தையும் இயக்கியவர். ‘‘அப்பாவுக்கு சொந்த ஊர் காரைக்குடி அருகில் உள்ள நாட்டரசன் கோட்டை. அப்பாவின் இயற்பெயர் சுப்பிரமணியன். அப்பாவுக்கு ராஜசேகர் என்று பெயர் வைத்தவர் ரஜினி சார்.

அப்பா, சிவாஜி சாரின் வெறித்தனமான ரசிகர். அது எந்தளவுக்கு என்றால் சிவாஜி சாருக்காக ரத்தம் சிந்துமளவுக்கு. ஒரு விழாவில் சிவாஜி சாரை சந்திக்க முயற்சித்து நெரிசலில் சிக்கி நெற்றியில் வெட்டுக் காயமே வீழ்ந்துள்ளது. எவ்வளவு முயற்சி எடுத்தும் அப்பாவால்  சிவாஜி சாரை நெருங்க முடியவில்லை...’’ என்ற பிரியா மீனாவுடைய அப்பாவுக்கு எட்டாக் கனியாக இருந்த சினிமா வாய்ப்பு தேடி வந்துள்ளது.

‘‘அப்பா பி.எஸ்ஸி பட்டதாரி. அரசு துறையில் கவுரவமான பொறுப்பில் இருந்தார். அந்த சமயத்தில் உடனிருந்தவர்களில் சிலர் அப்பாவுக்குள் ஒரு படைப்பாளி இருப்பதை அறிந்து கதை எழுதும்படி ஊக்குவித்துள்ளனர். அப்படி எழுதிய கதைதான் சிவாஜி, கமல் நடித்த ‘நாம் பிறந்த மண்’. இந்தப் படத்துக்காக அப்பாவுக்கு சிறந்த கதாசிரியருக்கான விருதும் கிடைத்தது. அதன் பிறகு தமிழ் சினிமாவின் இப்போதைய ஷங்கர் சார் மாதிரி பிரம்மாண்ட இயக்குநராக பெயர் எடுக்க ஆரம்பித்தார்.

‘மலையூர் மம்பட்டியான்’, ‘லட்சுமி வந்தாச்சு’, ‘கங்குவா’ (இந்தி), ‘தம்பிக்கு எந்த ஊர்’, ‘படிக்காதவன்’, ‘விக்ரம்’, ‘காக்கிச் சட்டை’, ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’, ‘கூலிக்காரன்’, ‘மாவீரன்’, ‘மாப்பிள்ளை’, ‘தர்மதுரை’ உட்பட 33 படங்களை குறுகிய காலத்தில் இயக்கினார். எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள். ரஜினியை வைத்து ஒன்பது படங்களை இயக்கியுள்ளார்.

‘‘அப்பாவுக்கு நடிப்பு மீதும் ஆர்வம் இருந்தது. ராம்கி, நிரோஷா நடித்த ஒரு படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ‘தர்மதுரை’ 100 வது நாள் அன்று காலையில் எதிர்
பாராதவிதமாக திடீர் உடல்நலக் குறைவால் அப்பாவின் உயிர் பிரிந்தது. அப்போது அப்பாவுக்கு வயது 43. எனக்கு 11 வயது, தம்பிக்கு ஒன்றரை வயது.

அப்பாவின் இறுதிச் சடங்கின்போது சிவாஜி சார் அருகிலேயே இருந்தார். ‘நான் இருக்கிறேன் மணி... நீ போயிட்டியே’ என்று சிவாஜி சார் கதறி அழுத அந்தக் காட்சி இன்னும் என் கண்ணைவிட்டு அகலவில்லை. சுமார் 6000 பேர் அப்பாவின் இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டனர். ‘தர்மதுரை’ வெற்றிக்குப் பிறகு அதே படத்தை இந்தியில் அமிதாப், தேவியை வைத்து ரீமேக் செய்ய கமிட்டாகி அட்வான்ஸும் வாங்கியிருந்தார். அந்தத் தொகையை வைத்து இறுதிச் சடங்கு செய்தோம்...’’ என்ற பிரியா மீனா, தன் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தைப் பற்றி தொடர்ந்தார்.

‘‘அப்பாவின் மறைவு எங்களை நிலைகுலையச் செய்திருந்த நிலையில் ரஜினி அங்கிளின் குடும்பம் எங்களுக்கு ஆதரவுக் கரங்களை நீட்டியது. இளம் வயதிலேயே எனக்கு திருமணமானது. என்னுடைய திருமணத்துக்கான கல்யாணப் பட்டுப் புடவை முதல் நளபாகம் வரை அனைத்து பொறுப்புகளையும் அப்பா ஸ்தானத்திலிருந்து ஜாம் ஜாம்னு  நடத்தி வைத்தது ரஜினி அங்கிள்.
ராகவேந்திரா திருமண மண்டபத்தில்தான் என்னுடைய திருமணம் நடந்தது. பத்திரிகையில் ‘பெஸ்ட் விஷஸ்’என்ற இடத்தில் ரஜினி & லதா ரஜினி என்றுதான் அச்சிடப்பட்டிருந்தது. அப்போது முதல் இன்று வரை எங்கள் இரண்டு குடும்பத்துக்குமான பந்தம் நீடித்து வருகிறது.

சினிமாவில் அப்பா இயக்கிய படத்தில் நடித்தவர்களும் சரி, அப்பா அறிமுகம் செய்து வைத்த ரம்யா கிருஷ்ணன், ரூபிணி வரை அனைவரும் நல்ல தொடர்பில் இருக்கிறார்கள். நடிகை சரண்யா பொன்வண்ணன் அம்மாவின் நெருங்கிய தோழி. எங்கள் வீட்டின் சுக துக்கங்களில் பங்கேற்காத திரை பிரபலங்களே இல்லை. எல்லோரும் உரிமையுடன் பழகுவார்கள்.

அதற்கு காரணம் அப்பாவின் நற்பெயர்...’’ என்றவருக்கு இல்லறம் போற்றும் கணவர், தோளுக்கு மேல் வளர்ந்த இரண்டு பிள்ளைகள், அம்மா, தம்பி என்ற மகிழ்ச்சியான குடும்பம் இருக்கிறது.

‘‘சாதிக்க நினைப்பவர்களுக்கு எதுவுமே தடையில்லை. எனக்கு நானே பொறுப்பாக இருந்துதான் உயர்கல்வி, கார்ப்பரேட் வேலை, பிசினஸ் என்று படிப்படியாக என்னை வளர்த்துக்கொண்டேன். பிள்ளைகள் பெரியவர்கள் ஆனபிறகு சொந்தமாக பிசினஸ் தொடங்கலாம் என்று தோன்றியது.

முதன் முதலாக ‘கரா’ என்ற டைலரிங் யூனிட்டை தொடங்கினேன். நான் டைலரிங் யூனிட் நடத்துவதை அறிந்து லதா ரஜினிகாந்த் ஆன்ட்டி தன்னுடைய பள்ளிச் சீருடை ஆர்டரை எனக்கு கொடுத்தார். அந்த ஆர்டருக்குப் பிறகு சென்னையில் உள்ள பிரபல பள்ளிகளுக்கான சீருடைகள் ஆர்டர் கிடைத்தது. அந்த பிசினஸ் வெற்றிக்குப் பிறகு சூப்பர் மார்க்கெட் திறக்கலாமா அல்லது வேறு எதாவது தொழில் தொடங்கலாமா என்று யோசித்தபோது வேஸ்ட்டேஜ் இல்லாத பிசினஸ் ‘ஜிம்’ என்று சில நண்பர்கள் சொன்னார்கள். அதன்படி ஜிம் தொடங்கலாம் என்று முடிவு செய்தேன்.

பிரபல பன்னாட்டுக் கம்பெனியில் உயர் அதிகாரியாக சில வருடங்கள் வேலை பார்த்தேன். அதில் எனக்கு கிடைத்த வைப்பு நிதி, சேமிப்பு எல்லாவற்றையும் சேர்த்து தி.நகரில் நடிகர் சங்கம் அருகில் நவீன உடற்பயிற்சிக் கூடம் திறந்தேன். அந்த பிசினஸில் நண்பர் குமார் பங்குதாரராகச் சேர்ந்தார். அந்த நிறுவனத்தை கடந்த 8 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருகிறோம்.

பிறகு வாட்டர் கம்பெனி துவங்கினோம்...’’ என்று தன்னுடைய பிசினஸ் வளர்ச்சியைப் பகிர்ந்த பிரியா மீனாவுக்கும் அவருடைய நண்பர்களுக்கும் வகை வகையான சாப்பாட்டை தேடிக் கண்டுபிடித்துச் சாப்பிடுவதில் அலாதி பிரியமாம். அந்த ஆர்வம்தான் ஹோட்டல் துவங்க காரணமாக அமைந்துள்ளது.

‘‘2019ல் ஹோட்டல் பிசினஸில் இறங்கலாம்  என்று முடிவு செய்தோம். அப்போது எங்களுடன் நண்பர் மனோஜ் பங்குதாரராகச் சேர்ந்தார். தேடித் தேடி உணவு சாப்பிட்டவர்கள் என்பதால் ஹோம்லியான தரமான உணவைக் கொடுக்க முடிவு செய்தோம்.

பணம் ஈட்டுவதற்கு பல தொழில்கள் இருக்கின்றன. ஆனால், எங்கள் நோக்கம் அதுவல்ல. தரமான சைவ சாப்பாட்டை குறைந்த விலையில் தர வேண்டும் என்பதே. அதன்படி 100 ரூபாய்க்கு  தரமான சாப்பாட்டை ஃபைவ் ஸ்டார் ஓட்டல் ஸ்டைலில் தருகிறோம்.  சைனீஸ் மற்றும் பாரம்பரிய உணவுகளையும் குறைந்த விலையில் அதிக தரத்துடன் வழங்குகிறோம். முதல் ஹோட்டலை பாரிமுனையில் திறந்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே  விருகம்பாக்கம், சாலிகிராமம் என்று அடுத்தடுத்து கிளைகளைத் திறந்தோம். விரைவில் ராஜா அண்ணாமலைபுரம், வட சென்னை ஆகிய இடங்களில் புதிய கிளைகளைத் திறக்கவுள்ளோம்...’’ என்றவருக்கு அப்பாவைப் போல் சினிமாவில் நாட்டம் இருந்ததில்லையாம்.

‘‘அப்பா புகழின் உச்சியில் இருந்ததால் எனக்கு சினிமா வாய்ப்பு எளிதாகக் கிடைத்திருக்கலாம். ஆனால், சினிமாவில் நடிக்குமளவுக்கு அப்போது எனக்கு வயதும் பக்குவமும் இல்லாததால் சினிமாவில் கவனம் செலுத்தவில்லை...’’ என்று புன்னகைத்தவர் அருகில் இருந்த தன் நண்பர்கள் மனோஜ், குமார் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.முதலில் மனோஜ் பேச ஆரம்பித்தார். ‘‘உணவு மீது இருந்த ஆர்வம்தான் என்னை இந்தத் தொழிலில் ஈடுபட வைத்தது. 20 வருடங்கள் அரபு நாட்டில் லாஜிஸ்டிக் துறையில் வேலை பார்த்தேன். நியூசிலாந்தில் நண்பர்களுடன் சேர்ந்து காபி ஷாப் நடத்திய அனுபவம் இருந்தது.

இந்தியா வந்ததும் ஹோட்டல் பிசினஸ் பண்ணலாம் என்று தோன்றியது. அப்போதுதான் குமார், பிரியாவின் நட்பு கிடைத்தது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 45000 கோடிக்கு பிரியாணி வர்த்தகம் நடக்கிறது. ஆனால், சைவ ஓட்டல்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதை மனதில் வைத்துதான் சைவ ஹோட்டல் துவங்கினோம். எங்களின் இந்த வெற்றி ஊழியர்களையும் உள்ளடக்கியது. அவர்களில் சிலர் புதியவர்களாக இருந்தாலும் அவர்களை அனுபவசாலிகள் போல் நடக்குமளவுக்கு பயிற்சி கொடுத்து நடத்துகிறோம்.

ஹோட்டல் ஆரம்பித்த  சில மாதங்களில் கொரோனா வந்தது. அந்த சமயத்தில் நஷ்டத்தை தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் அந்தக் காலத்தை கற்றலுக்கான நேரமாகவும் சவாலாகவும் எடுத்துக்கொண்டோம். அந்தப் பயிற்சி இப்போது கைகொடுத்துள்ளது. குவாலிட்டிதான் எங்கள் தாரக மந்திரம். ஒரு வாடிக்கையாளர் எப்படி திருப்தியடையமுடியுமோ அந்த மனநிலையில்தான் ஹோட்டல் நடத்துகிறோம்...’’ என்றதும் பிரியாவின் இன்னொரு நண்பர் குமார் பேச ஆரம்பித்தார்..

‘‘டெலிகாம் துறையில் 18 வருடம் இருந்துள்ளேன். பிசினஸ் பண்ணலாம் என்று தோன்றியபோது பிரியாவின் அறிமுகம் கிடைத்தது. உடற்பயிற்சிக் கூடம், வாட்டர் கம்பெனி, ஹோட்டல் என்று எங்கள் பிசினஸ் கூட்டணி வளர ஆரம்பித்துள்ளது.பிசினஸ் வெற்றி ரகசியம் என்பது தொழிலாளர்களுக்கான ஊதியம், சப்ளையர்களுக்கான பில் தொகையை சரியான தேதியில் கொடுப்பது, பிசினஸில் ஈட்டும் வருமானத்தை பிசினஸில் போடுவது மட்டுமே. பிசினஸ் என்பது ரொட்டேஷன். அதை சரியாகப் பண்ணினால் வெற்றிகரமாக பிசினஸில் ஜெயிக்கலாம்...’’ என்று முடித்தார்.

‘‘அடுத்த ஆண்டு இந்த நேரத்துக்கு வரும்போது 20 ஹோட்டல்கள் திறந்திருப்போம். அந்தளவுக்கு உழைப்பின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ராஜசேகரின் மகள் என்பதைவிட பிரியாவின் அப்பா ராஜசேகர் எனுமளவுக்கு அப்பாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும்...’’ என்று முத்தாய்ப்பாக சொல்லி முடித்தார் பிரியா மீனா.

செய்திகள்: எஸ்.ராஜா

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்