2015ம் ஆண்டு 20 அப்பாவித் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தூசுதட்டுகிறதா புஷ்பா



கடந்த 2015ம் வருடம் செம்மரக்  கட்டைகளைத் திருட வந்தார்கள் என ஆந்திர காவல்துறையினரால் குற்றம் சுமத்தப்பட்டு, 20 அப்பாவித் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தவிர, 2012ம் வருடம் முதல் செம்மரக் கடத்தல் தொடர்பாக தமிழர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறின. அந்த வருடங்களில் வாரத்துக்கு ஒரு முறையாவது செம்மரக் கடத்தல் தொடர்பான செய்திகள் நாளிதழில் வெளியாகும். ஆனால், சமீபத்திய வருடங்களில் செம்மரக் கடத்தல் குறித்த செய்திகளையே எங்கும் காணவில்லை.

செம்மரக் கடத்தல், அது தொடர்பாக நடந்த என்கவுண்டர்களைப் பலரும் மறந்திருப்பார்கள். இந்நிலையில் தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகியிருக்கும் ‘புஷ்பா’ எனும் திரைப்படம் செம்மரக் கடத்தலை மீண்டும் ஒரு பேசுபொருளாக்கியிருக்கிறது. இது தொடர்பாக ஆந்திரா, கர்நாடகாவில் கூலித்தொழிலாளர்களுக்காக பல வழக்குகளில் ஆஜரான வழக்குரைஞர் பார்த்திபனைச் சந்தித்தோம்.  

‘‘செம்மரக்கட்டை என்பது தவறானது. செஞ்சந்தனக்கட்டை என்பதுதான் சரி. வீரப்பன் காட்டில் மஞ்சள் சந்தனக்கட்டை என்றால் ஆந்திராவில் விளைவது செஞ்சந்தனம்.
மரத்தின் உட்பகுதி முழுவதும் சிவப்பாக இருக்கும். இந்தியாவில் இந்தக் கட்டைகளுக்கு என்ன பயன் என்று யாருக்குமே தெரியாது. ஆனால், வெளிநாடுகளில் இதற்கு ஏகப்பட்ட மவுசு. சீனா, ஜப்பான், ஹாங்காங், கொரியா, மலேசியா, பர்மா போன்ற நாடுகளில் செஞ்சந்தனத்துக்கு செம டிமாண்ட்...’’ என்று ஆரம்பித்தார் பார்த்திபன்.

‘‘செஞ்சந்தனம் கடத்தல் தொடர்பாக 2012ம் வருடம் முதலே செய்திகள் வரத் தொடங்கின. 2013ல்தான் அதிகமாக பேசப்பட்டது. காரணம், அந்த வருடம்தான் ஒரே சமயத்தில் இரண்டு வன அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் காளாஸ்திரி என்பவரோடு 349 பேர் சேர்க்கப்பட்டு, 350 பேர் மீது அந்தக் கொலைகளுக்கான குற்றப்பத்திரிகை சுமத்தப்பட்டது.
தென் இந்தியாவில் கொலைக்காக இவ்வளவு பேர் கைது செய்யப்பட்டது வரலாற்றில் இதுவே முதல் முறை. அதன்பிறகு 2015ல் 20 அப்பாவித் தமிழர்களை ஆந்திர அதிரடி போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்த செம்மரக் காட்டுப்பகுதிகளில் வேலை செய்துவரும் கூலித்தொழிலாளிகள் மரங்களை வெட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

ஆனால், அன்று பேருந்தில் சென்ற 20 தமிழ்க் கூலிகளை கீழே இறக்கி, சித்ரவதை செய்து அவர்களைக் கொலை செய்தது மனித உரிமை மீறலாகும். தேசிய மனித உரிமை ஆணையமே இந்தக் கருத்தைத்தான் சொன்னது...’’ என்றவர், வன அதிகாரிகள் கொலை செய்யப்பட்டபிறகு நடந்த முக்கியமான நிகழ்வுகளையும் பகிர்ந்தார். ‘‘2013ல் வன அதிகாரிகள் கொல்லப்பட்ட பிறகுதான் ஆந்திர அரசாங்கம் இந்தப் பகுதிகளில் இருக்கும் காவல்துறையினருக்குத் துப்பாக்கிகளைக் கொடுக்க ஆரம்பித்தது. அந்தக் கொலைச் சம்பவத்துக்குப் பிறகும் செஞ்சந்தனக் கடத்தல் ஜோராக நடந்ததால் இதற்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று அதிகார மட்டத்தில் இருந்தவர்கள் நினைத்தனர். இதன் விளைவாகத்தான் 2015ல் 20 அப்பாவித் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.

2015ல் நடந்த கொலைகளுக்குப் பிறகு 2013ம் வருட சம்பவத்தை விரைவாக முடிக்கும்படி ஆந்திர அரசாங்கத்துக்கு உச்ச நீதிமன்றம் நெருக்கடியைக் கொடுத்தது. இதனால்தான் 2013ம் வருட சம்பவத்துக்கு 2016ல் தீர்ப்பு வந்தது. கொலைக்கான சரியான சாட்சியம் இல்லாததால் 350 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆரம்பத்தில் அவர்களைப் பிணையில் விடக்கூட ஆந்திர நீதிமன்றம் தயங்கியது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பு கடத்தல் தொடர்பாக சுமார் 11 ஆயிரம் பேரைக் கைது செய்து பிணையில் விட்டிருந்ததாக போலீஸ் சொன்னது. பிணையில் வெளியே போனவர்களை மீண்டும் ஆஜர் படுத்த முடியவில்லை.

இந்தச் சம்பவத்தை ஒரு காரணமாக வைத்து அந்த 350 பேரை பிணையில் விடவில்லை...’’ என்கிற பார்த்திபன், 2015ல் நடந்த என்கவுண்டர் மற்றும் அதற்குப் பிறகு நடந்த கடத்தல் தொடர்பான மாறுதல்களையும் விவரித்தார். ‘‘2013ம் வருட சம்பவம் மற்றும் 2015ல் நடந்த என்கவுண்டர் எல்லாமே சந்திரபாபு முதல்வராக இருந்தபோது நடந்தவை. அப்போது ராஜசேகர் ரெட்டி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். ரெட்டியின் பலத்தை ஒடுக்க வேண்டும் என்பதற்காகவும், அவரது செஞ்சந்தனக் கடத்தல் குழுக்களை அடக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தக் கொலைகள் நடந்திருக்கலாம் என்றும் அப்போது பேசப்பட்டது.

இதற்கு சாட்சி போல மொரீஷியஸ் தீவில் கங்கி ரெட்டி எனும் செஞ்சந்தனக் கடத்தலின் பெரும்புள்ளி கைது செய்யப்பட்டார். பொதுவாக இந்த மரம் வெட்டும் தொழிலில் தமிழகத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் மட்டுமே ஈடுபடுவதாக ஒரு செய்தி ஊடகங்களில் வருகிறது. உண்மையைச் சொன்னால் இந்தத் தொழிலில் 60 சதவீத தமிழக மலைவாழ் மக்கள் மட்டுமே ஈடுபடுகின்றனர். மீதமுள்ள 40 சதவீதத்தினரில் அதிகமானோர் தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து வருபவர்கள்; வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

வன அதிகாரிகள் கொலையில் கைது செய்யப்பட்ட 350 பேரில் 180 பேர் தமிழர்கள். 100 பேர் ஆந்திரக்காரர்கள். சிறையில் அடைக்கப்பட்ட வெளியூர்க்காரர்களைப் பிணையில் எடுப்பது கடினம். உள்ளூராக இருந்தால் சூரிட்டி, சொத்து விவரம் கேட்பார்கள்.  இதனாலேயே பல தமிழ் தொழிலாளர்கள் சிறையிலிருந்து வெளி வரமுடியாமல் இருந்தனர். 350 பேருக்குப் பிணை கொடுக்கக்கூடாது என்பதற்காக 11 ஆயிரம் பேரை பிணையில் விட்ட சம்பவத்தை உதாரணமாகச் சொன்னார்கள்.

ஆனால், உண்மையில் 2012 முதல் 2015  வரை ஆந்திர சிறையில் இருந்தவர்களின் எண்ணிக்கையே சுமார் 2000 தான். சூரிட்டி இல்லாததால் 2 வருடம் வரை அவர்கள் சிறையில் வாட வேண்டிய நிலை. 20 பேர் என்கவுண்டர் தொடர்பாக டி.ஜி.பி காந்தாராவ் போன்ற அதிகாரிகளுக்கு பதவி உயர்வில் பிரச்னை ஏற்பட்டது. தவிர, இது சம்பந்தமாக ஏற்படுத்தப்பட்ட விசாரணை ஆணையங்களில் விசாரணை மற்றும் புலனாய்வில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. அத்துடன் அப்போது தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக அரசு நிவாரணம் எனும் பெயரில் இந்த விஷயத்தை உணர்ச்சிக் கொந்தளிப்பில் தள்ளியது.

செஞ்சந்தனத் தொழிலில் பணம் கிடைக்காவிட்டாலும், இறந்துவிட்டால் நிவாரணம் கிடைக்கும் என்று தமிழகத்தின் வட மாவட்டங்களிலிருந்து பலரும் இந்தத் தொழிலுக்கு வந்தனர். ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும் இந்தக் கைதுகள் குறைந்திருக்கின்றன. இது  கடத்தல் குறைந்ததால் ஏற்பட்டதா இல்லை அரசு அதைக் கண்டுகொள்ளவில்லையா என்பது யாருக்கும் தெரியாது...’’ என்று பார்த்திபன் முடிக்க, 20 பேர் கொலை தொடர்பாக வழக்காடிய வழக்குரைஞர் கே.பாலு ஆரம்பித்தார்.

‘‘20 பேர் கொலை வழக்கை ‘174 பிரிவி’ன் கீழ் சந்தேகத்துக்கு இடமான இறப்பு என்றுதான் பதிந்திருந்தார்கள். ஆனால், நாங்கள் ‘302’ எனும் பிரிவின் கீழ் இதை கொலை வழக்காக மாற்றும்படி கோரியிருந்தோம்.  நாங்கள் கோரியது நடந்தது. தமிழக அரசுகூட இதுதொடர்பாக ஒரு சிறப்பு நீதிபதியை நியமித்தது. ஆந்திர அரசும் கொலை வழக்காக எடுத்து விசாரணை, துப்பு துலக்குதல் என முன்னேறியது. ஆனாலும் தீர்ப்பு ஒரு மர்மமாகவே நீடிக்கிறது.

மரம் வெட்டச் செல்லும் தமிழக கூலித்தொழிலாளிகளுக்கு, தாம் செய்யும் வேலை யாருக்கானது, அந்தப் பொருள் எவ்வளவுக்கு விற்பனையாகிறது என்ற விவரம் எல்லாம் தெரியாது. ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதம் வேலை செய்தால் கையில் கொஞ்சம் காசு கிடைக்கும். ஊருக்குத் திரும்பி குடும்பத்தை ஓரளவு நடத்திச் செல்லலாம் எனும் நப்பாசையாலேயே இந்தத் தொழிலாளர்கள் செம்மரக் காடுகளுக்குச் செல்கிறார்கள். ஆனால், இதற்குப் பின்னணியில் இருக்கும் அரசியல்வாதிகள் மீது இந்த வழக்குகள் வலைவீசினால்  செம்மரக் கடத்தலையும், அது தொடர்பாக நிகழும் கூலித்தொழிலாளர்களின் கொலைகளையும் தவிர்க்கலாம்...’’ என்று முடித்தார் பாலு.
 

டி.ரஞ்சித்