இதே மா கத



ஒரு பயணத் திரைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது, ‘இதே மா கத’. ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது இந்த தெலுங்குப் படம்.  ஒரு விபத்தில் இறந்துபோன காதலியின் நினைவாகவே இருக்கும் பெரும் பணக்காரர், காதலனால் ஏமாற்றப்பட்ட ஓர் இளம் பெண், தந்தையிடம் பிரச்னை ஏற்பட்டு வீட்டைவிட்டு வெளியேறும் இளைஞன், தந்தையின் கனவை நிறைவேற்றுவதற்காக கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளைப் பிரிந்து கனவை நோக்கிச் செல்லும் குடும்பப்பெண்...

இந்த நான்கு பேரும் புல்லட்டில் லடாக்கை நோக்கிப் பயணிக்கின்றனர். வெவ்வெறு திசைகளிலிருந்து பயணித்த நால்வரும் ஓர் இடத்தில் சந்திக்கின்றனர். அவர்களுக்குள் நட்பு மலர்கிறது. நால்வரும் எதற்காக லடாக்கை நோக்கிச் செல்கின்றனர். அந்தப் பயணத்தின் மூலம் அவர்கள் கண்டடைந்தது என்ன... என்பதுதான் திரைக்கதை. இந்தியாவில் உள்ள அழகழகான இடங்களைக் காட்சிப்படுத்தியதுடன், வாழ்க்கையின் அழகான பக்கங்களையும் தரிசிக்க வைக்கிறது இந்தப் படம். பூமிகா, தன்யா ஹோப், மேகா காந்த் என எல்லோரும் தங்களின் பாத்திரங்களைக் கச்சிதமாகச் செய்திருக்கின்றனர். படத்தின் இயக்குநர் குரு பவன்.