அப்பாவும் ஆஸ்கர் வென்ற மகனும்!



மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்ற இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்!

அவருக்குப் பத்து வயதாக இருந்தபோது அவரது தந்தை அர்னால்டு ஸ்பீல்பெர்க், ‘west side story’ மியூசிக்கல் ரெக்கார்டை வாங்கித் தந்தார். அதைக் கேட்ட சிறுவன் ஸ்டீவனுக்கு பாடல்கள் எல்லாமே பிடித்துப்போனது. அந்தப் பாடல் வரிகளின் அர்த்தம் தெரியாமலே அதை முணுமுணுக்க ஆரம்பித்தான்.
அடுத்த சில வருடங்களில் ‘west side story (1961)’ படமாக்கப்பட்டு பத்து ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. படத்தையும் தந்தையுடன் கண்டு களித்தான். ஸ்டீவனைவிட அவனது அப்பாவுக்கு அந்தப் படத்தின் மீது பெருங்காதலே மலர்ந்தது. ஸ்டீவனுக்குப் பிடித்த பத்து படங்களில் ஒன்றானது ‘West side story’. இயக்குநர் ஆவதற்கு முன்பே இப்படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் துளிர் விட்டுவிட்டது.

ஸ்டீவன் வளர்ந்து ‘ஜுராசிக் பார்க்’ போன்ற வசூலைக் குவித்த படங்களை இயக்கி மாபெரும் இயக்குநரானார்.ஸ்டீவன் இயக்குநர் அவதாரம் எடுத்ததிலிருந்து அவரது ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் தந்தை அர்னால்டு ஆஜராகிவிடுவார். மகன் படம் எடுப்பதை அருகிலிருந்து பார்ப்பதில் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. உலகின் எந்த மூலையில் ஷூட்டிங் நடந்தாலும் அங்கே போய்விடுவார்.

ஸ்டீவன் ‘West side story’ எடுக்கும்போது அர்னால்டுக்கு வயது 102. அப்போதும் செட்டில்தான் இருந்திருக்கிறார் தந்தை. ஆனால், படம் பாதி நிறைவடையும்போது இறந்துவிட்டார். அப்போது அவரது வயது 103. ஸ்டீவனின் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை மட்டும்தான் அவர் முழுமையாக பார்க்கவில்லை. அதனால் படத்தை தன் தந்தைக்கு அர்ப்பணித்திருக்கிறார் ஸ்டீவன்.

த.சக்திவேல்