மூலிகை வீடு



கேரளாவைச் சேர்ந்த சிற்பி ஷிலா சந்தோஷ். மூலிகைகளின் மீது தீராத காதல் கொண்டவர். கடந்த ஆறு வருடங்களாக மூலிகைகளைப் பயன்படுத்தி என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறார். மருத்துவத்தைத் தாண்டி மூலிகைகளைப் பலவற்றுக்கும் பயன்படுத்த வேண்டும் என்பது அவரது எண்ணம்.
இந்த ஆராய்ச்சியில் மூலிகைகளை வைத்து ஒரு வீடு கட்டலாம் என்ற திட்டம் தோன்றியது. உடனே அடூரில் இருக்கும் நண்பர் ஒருவரிடம் தனது திட்டத்தைச் சொல்லியிருக்கிறார் ஷிலா. தனது விவசாய நிலத்தை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ள நண்பரும் அனுமதி வழங்கியிருக்கிறார்.

உற்சாகமடைந்த ஷிலா சேற்றையும், 65 விதமான மூலிகைச் செடிகளையும் இணைத்து ஒரு வீட்டைக் கட்டிவிட்டார். கடந்த வாரம்தான் இந்த மூலிகை வீட்டுக்கு புதுமனை புகுவிழா கொண்டாட்டம் நடந்தது. 200 சதுர அடி பரப்பளவுள்ள இந்த வீட்டை நெருங்கினாலே மூலிகை வாசம் வீசும். எப்போதும் குளுமையாக இருக்கும் இந்த வீட்டுக்கு மின்சாரக் காற்றாடி தேவையில்லை. மூலிகை வீட்டைப் பற்றி கேள்விப்பட்டவர்கள் அடூரை நோக்கி விசிட் அடிக்கின்றனர்.

த.சக்திவேல்