நான் முதல்ல பொறியியல் கல்லூரில இணை பேராசிரியர்... அப்புறம் தன்னார்வலர்... பிறகு கரகாட்டக் கலைஞர்..!



‘‘2005ம் ஆண்டு, என் அம்மா லுகேமியானு சொல்லப்படுற ரத்தப் புற்றுநோயால் இறந்தாங்க. மறுநாள் காலையில் எனக்குத் திருமணம். ஆனா, அம்மா முந்தினநாள் இரவு இறந்ததால என் திருமணம் நின்னுடுச்சு. பிறகு ஆறு மாசம் கழிச்சு நடந்தது தனிக்கதை. ஆனா, அம்மா இறந்த அந்தச் சம்பவம் என்னை ரொம்ப பாதிச்சது. அதிலிருந்து மீளமுடியாமல் தவிச்சேன். அப்பதான் முதியோர்கள் மற்றும் அனாதைக் குழந்தைகளின் இல்லங்களுக்குப் போய் உதவ ஆரம்பிச்சேன்.

என்னை மாதிரியே என் மாணவர் கிஷோர்குமாரும் முதியோர், அனாதை இல்லங்களுக்குப் போய் உதவிகள் செய்திட்டு இருந்தார். எங்க ரெண்டு பேர் அலைவரிசையும் ஒண்ணா இருக்க, ‘படிக்கட்டுகள்’ என்கிற அமைப்பை உருவாக்கி இயலாதவர்களுக்கு உதவ ஆரம்பிச்சோம். அந்த விதை இப்ப விருட்சமா மாறியிருக்கு. நிறைய பணிகள் செய்திட்டு வர்றோம்...’’ நிகழ்வுகளை அடுக்கியபடி உற்சாகமாகப் பேசுகிறார் பேராசிரியர் மலைச்சாமி.

மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். மதுரை எஞ்சினியரிங் கல்லூரி ஒன்றில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவரின், ‘படிக்கட்டுகள்’ அமைப்பு கல்வி, மருத்துவம் என உதவிகள் வேண்டுவோருக்கு தொடர்ந்து உதவி வருகிறது. கொரோனா காலத்தில் இவர்கள் இல்லாதவர்களுக்கு உணவு வழங்கியும், இயலாதவர்களுக்கு மளிகைப் பொருட்கள் அளித்தும் செய்த பணி பலராலும் பாராட்டப்பட்டது. இதனால், ‘படிக்கட்டுகள்’ அமைப்பு மதுரை மக்களிடையே பெரும் கவனம் ஈர்த்தது.  

‘‘நான் அடிப்படையா ஒரு கரகாட்டக் கலைஞர். தவிர, ஒயிலாட்டம், மான் ஆட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு கலைகளும் தெரியும். என்னை தமிழக அரசின் கலை, பண்பாட்டுத் துறை பாராட்டி ‘கலைச்சுடர்மணி’ விருது கொடுத்தாங்க. இப்ப தனியா நிகழ்ச்சிகளுக்குப் போயிட்டு இருக்கேன். ஆனா, முதல்ல ஆசிரியர் பணி, அப்புறம் தன்னார்வலர், பிறகு நிகழ்ச்சிக்கு கூப்பிடறப்ப கலைப் பணினு இருக்கேன்...’’ எனச் சிரிக்கிறார் மலைச்சாமி.

‘‘விருதுநகர் மாவட்டத்துல உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பிஇ கருவியியல் மற்றும் கட்டுப்பாடு பொறியியல் படிச்சேன். அதுல எம்இ-யும் முடிச்சேன். இப்ப அண்ணா பல்கலைக்கழகத்துல பிஹெச்.டி முடிக்கிற தருவாயில் இருக்கேன். இதுக்கிடையில்தான் அம்மா தவறினாங்க.அப்ப தனிப்பட்ட முறையில் அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்குப் போய் உணவு கொடுக்குறது, அவங்களுக்கு உதவி செய்றதுனு இருந்தேன். இதெல்லாம் 2006ல் இருந்து 2012 வரை செய்தேன். மனசுக்கு ஒரு ஆறுதலா இருந்துச்சு.

அப்ப என்னுடைய மாணவர் கிஷோர்குமார் அனாதை இல்லங்களுக்குப் போய் பசங்களுக்கு டியூசன் எடுக்குறது, உதவிகள் செய்றதுனு இருந்தார். மாணவர் பத்திரிகையாளராவும் இருந்தவர் இப்ப சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்றார். அவர் 2012ல் பாஸ்அவுட் ஆனப்ப நாங்க ரெண்டு பேரும் பேசி நிறைய மாணவர்களை தன்னார்வலர்களா உள்ளிழுத்து இந்த விஷயங்களை பெரிசா முன்னெடுத்தா என்னனு நினைச்சோம். உடனே, ஒரு தன்னார்வ அமைப்பை உருவாக்கினோம். அப்பதான் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எல்லாம் வந்த நேரம்.

எங்க அமைப்புக்கு என்ன பெயர் வைக்கலாம்னு யோசிச்சப்ப என்னுடைய மாணவர் ஒருவர் ‘படிக்கட்டுகள்’னு வைங்க சார்னு பரிந்துரைச்சார். அப்படியா ‘படிக்கட்டுகள்’னு பெயர் வச்சு அதை முறைப்படி பதிவு செய்தோம். என் வீட்டுல ஓர் அறையை இந்த அலுவலகத்திற்காக ஒதுக்கினேன். முதல்ல தமிழகம் முழுவதும் தன்னார்வ பணியில் விருப்பமுள்ள எஞ்சினியரிங், ஆர்ட்ஸ், பாலிடெக்னிக் கல்லூரி மாணவ - மாணவியர்களை ஓர் இடத்துல ஒருங்கிணைச்சோம். அவங்க வழியாதான் எங்க பணிகளை முன்னெடுக்கிறோம். இப்ப 350 தன்னார்வலர்கள் எங்க அமைப்புல இருக்காங்க...’’ என மலைச்சாமி நிறுத்த கிஷோர்குமார் தொடர்ந்தார்.

‘‘முதல்ல நாங்க ஒவ்வொரு முதியோர், அனாதை இல்லங்களுக்கும் போய் அவங்களை மகிழ்விச்சோம். அப்புறம், இல்லாமையை இல்லாது ஆக்குவோம்னு நிறைய குழந்தைகளுக்கு டியூசன் எடுக்குறதும், அவங்களுக்கு தேவையான விஷயங்களை சொல்லித் தர்றதுமா இருந்தோம். அடுத்து பழைய துணிகள் எல்லாம் சேகரிச்சு அவங்களுக்குக் கொடுத்தோம்.

இப்படி இருக்கிறப்ப ஒரு ஹோம்ல இருந்த பையன், ‘நீங்க பழைய துணிகளை எல்லாம் கொடுக்கறீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா, நான் எப்ப புதுத் துணி உடுத்துறது’னு கேட்டான். எங்களுக்கு ரொம்ப வேதனையா இருந்தது. இந்த ஆண்டு தீபாவளிக்கு உங்களுக்கு புதுத்துணினு எடுத்துத் தர்றோம்னு சொல்லிட்டு வந்தோம். ஆனா, என்ன பண்றதுனு தெரியல. யோசிச்சோம்.

பிறகு, மதுரையில் இருக்கக்கூடிய பெரிய துணிக்கடைகள்ல பேசி அவங்க கடை வாசலில் ஒரு கிஃப்ட் பாக்ஸ் வச்சோம். அதுக்குப் பக்கத்துல ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெயர்ப் பட்டியலை ஒட்டினோம். நாங்க அந்த இடத்துல நின்னு வர்றவங்ககிட்ட எங்கள அறிமுகப்படுத்தி, ‘இந்த மாதிரி நிறைய குழந்தைங்க புதுத்துணி இல்லாமல், தீபாவளி கொண்டாடாமல் இருக்காங்க. அவங்களுக்கு கொடுக்கலாம்னு இருக்கோம்’னு சொன்னோம்.

சிலர் நாலு வயசு குழந்தைக்கு பாதிப்பானு கேட்டாங்க. நாங்க அவங்க அப்பா அம்மாவுக்குப் பாதிப்பு. இதனால, அவன் அனாதையா இருக்கான்னு சொன்னோம். உடனே, அவங்க கடையில் புதுத்துணி வாங்கித் தந்தாங்க. இப்படியா, 350 குழந்தைகளுக்குப் புதுத்துணி சேகரிச்சு கொடுத்தோம். இதை ஆறாண்டுகளா தொடர்ந்து செய்துட்டு வர்றோம். கடந்த ஆண்டு கொரோனாவால் செய்ய முடியல. இந்த ஆண்டு 76 குழந்தைகளுக்கு புதுத்துணி எடுத்துக் கொடுத்திருக்கோம்.  

அடுத்து, சிலர் கல்வி சம்பந்தமான உதவிகள் கேட்டாங்க. அதுக்காக உதவ ஆரம்பிச்சோம். நாங்க இதுல என்ன பண்றோம்னா உதவிகள் கேட்டு வர்ற விண்ணப்பத்தை முதல்ல சரிபார்ப்போம். இதுக்காக நாங்க சில அளவுகோல்கள் வச்சிருக்கோம். அதன்படி முன்னுரிமை உள்ள விண்ணப்பங்களைத் தேர்ந்தெடுப்போம். அப்புறம், எங்க தன்னார்வலர் மூலம் அந்த விண்ணப்பதாரரை விசாரிப்போம். அது உண்மையா இருக்கிறபட்சத்துல எங்க ஃபேஸ்புக் தளத்துலயும், வாட்ஸ்அப் குரூப்லயும் அவர் பற்றி போடுவோம். அதைப் பார்த்துட்டு நன்கொடையாளர்கள் பணம் தந்து உதவுவாங்க.

நாங்க அதை சம்பந்தப்பட்ட மாணவனின் கையில் கொடுக்காமல் நேரடியா கல்லூரியில் போய் கட்டிடுவோம். இப்படியா, நிறைய பேருக்கு கல்வி உதவிகள் செய்திருக்கோம். செய்திட்டும் வர்றோம். அடுத்து மருத்துவ உதவிகள் கேட்டும் நிறைய விண்ணப்பங்கள் வந்தது. சமீபத்துல மதுரையில் 45 வயது பெண் ஒருவர் காலை இழந்திட்டார். அவருக்கு காலிபர் செய்யச் சொல்லி வாங்கித் தந்தோம்.

அப்புறம், சமீபத்துல திருப்பூர்ல ஒரு அம்மாவின் கணவர் விபத்துல இறந்திட்டார். அவங்களுக்கு ஆதரவற்ற விதவைனு திருப்பூர் மாநகராட்சியில் ஒரு வீடு ஒதுக்கி இருக்காங்க. ஆனா, அந்த வீடு வாங்க அரசுக்கு 82 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தணும். இவங்க கட்ட பணமில்லனு எங்ககிட்ட கோரிக்கை வச்சாங்க.

இதைப் பார்த்து நாங்க விசாரிச்சோம். உண்மைனு தெரிஞ்சது. உடனே, ஃபேஸ்புக்ல போட்டு 82 ஆயிரம் ரூபாய் சேகரிச்சு அதை டிடி எடுத்து கொரியர்ல அனுப்பினோம். இப்ப அந்த அம்மாவுக்கு வீடு கிடைச்சிருக்கு. இப்படியான உதவிகளையும் செய்றோம். இதையெல்லாம் சமூக ஊடகங்கள் வழியாவே பண்றோம்.

பொதுவா, நாங்க நன்கொடையாளர்களுக்கும் அதைப் பெறுகிறவர்களுக்கும் ஒரு பாலமா இருந்து செயல்படுறோம். அவ்வளவுதான். இதுல நன்கொடையாளர்கள்கிட்ட பேசும் பணியை நான் கவனிக்கிறேன். இந்த விஷயங்களை ஃபேஸ்புக்ல போடுவதை மாரிக்குமார் என்பவர் பார்த்துக்கிறார். ஸ்பாட்டிற்கு போய் விசாரிக்கிற பணியை செல்வா வெற்றி என்பவர் செய்றார். எல்லோருமே தன்னார்வலர்கள்...’’ என கிஷோர்குமார் முடிக்க மலைச்சாமி தொடர்ந்தார்.   

‘‘நாங்க வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்கள்லயும் நிறைய பணிகள் செய்திருக்கோம். இப்ப கொரோனா நேரத்துல பஸ் இல்லாமல் ஊருக்கு போக முடியாமல் தவிச்சவங்க, துப்பரவுப் பணியாளர்கள், சாலையோரத்துல வசிக்கிறவங்களுக்கு உணவுகள் வழங்கினோம். ஒருநாளைக்கு 150 சாப்பாடுகள் கொடுத்தோம். ஓர் இடத்துல போய் சாப்பாட்டையும் வாட்டர் பாட்டிலயும் வச்சு, ‘இங்கே சாப்பாடு இருக்கிறது. இலவசம். எடுத்துக் கொள்ளுங்கள்’னு பேனர் எழுதி வச்சிட்டோம். நிறைய பேர் வந்து எடுத்து சாப்பிட்டாங்க. இதில் மீதமுள்ளதை தன்னார்வலர்கள் மூலம் மதுரை முழுவதும் கொண்டு சேர்த்தோம். தொடர்ந்து நூறு நாட்கள் உணவு வழங்கினோம்.

இந்தாண்டு மதுரைக்கு கிழக்கே சக்கிமங்கலம்னு ஒரு பகுதி. அங்க பூம் பூம் மாட்டுக்காரங்க, சாட்டை அடிக்கிறவங்க, குடுகுடுப்பைக்காரங்க, வேஷம் கட்டுறவங்க கொரோனாவால கடந்த பதினைஞ்சு மாசமா முறையான வருமானம் இல்லாமல் தவிச்சாங்க. வளர்த்து வரும் மாடுகளுக்கும் தீவனம் இல்ல. ஏன்னா, இவங்களுக்கு ஊர்த் திருவிழா, கோவில் விழாக்கள், கல்யாணம், கச்சேரினு நடந்தால்தான் பிழைப்பே. கடந்த ஓராண்டு எதுவும் சரிவர நடக்கல.

அங்க 365 குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்களும், மாடுகளுக்குத் தீவனமும் வாங்கித் தந்தோம். இந்த விஷயங்களை எல்லாம் மதுரை மட்டுமில்லாமல் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதுமே செய்றோம். ஆனா, கோரிக்கை வச்சவுடனே பண்ணணும்னா எங்களால முடியாது. ஏன்னா, சம்பந்தப்பட்டவரின் உண்மை விவரம் சேகரிக்கணும். அப்புறம், நன்கொடையாளர்களிடம் பேசி வைக்கணும். டைம் எடுக்கும். அதனால நேரம் எடுத்து செய்றோம். தாமதமா செய்தாலும் சிறப்பாவே செய்ய ஆசைப்படுறோம். எங்கள் நோக்கமே, இயலாதவர்களுக்கு உதவணும். அதை தொடர்ந்து செய்வோம்...’’ என்கிறார் மலைச்சாமி.

பேராச்சி கண்ணன்