சிறுகதை - சோழ விதை வில்லரசன்



இளஞ்சுடர் வீசும் விடியல் பொழுது.சோழ நாட்டில் பாய்ந்தோடும் காவிரி நதியின் கரையில் என்றும் இல்லாத அளவு அன்று சலசலப்புச் சத்தம் நிரம்பி வழிந்தது.
கரையோரம் உள்ள மரங்களில் வாழும் பறவைகள் கீச்சிட்டன. விலங்குகள் சத்தமிட்டன. நீர்வாழ் உயிரினங்கள் பயந்து கரைப் பகுதியிலிருந்து வேகவேகமாக ஆற்றுக்குள் பாய்ந்தன.
காவிரிக் கரையை கபளீகரம் செய்த வண்ணம் எழுந்த அந்தச் சத்தம் இரு வீரர்களின் வாள்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்படுத்தும் சத்தம்.

இருவரும் எளிமையானவர்களாகத் தெரியவில்லை. அணிந்திருக்கும் ஆடையும், அலங்காரமும் இருவரையும் சிறப்பித்துக் காட்டின. ஒருவன் மிக மிக இளையவன். அரும்பு மீசைக்குரியவன். பலமான உடம்பில் ஆங்காங்கே தழும்புகளைத் தாங்கிய வண்ணம் சமரிட்டுக் கொண்டிருந்தான்.அவனை எதிர்த்துப் போரிடுபவன் இவனைவிட வயது மூத்தவன். அடர்ந்த பிடரியும், மீசையும் நிறைந்த முகத்தில் முத்துப்பல் வரிசையும் கூரிய விழிகளையும் கொண்டிருந்தான். கருங்கல் போன்ற பலத்த மேனியில் அவன் கல்வெட்டுகளைப் போன்ற பல தழும்புகளைக் கொண்டிருந்தான்.

இருவரது உடம்பிலும் பாயும் புலியின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. இளைய வீரன் கையில் வரைந்திருந்தான்; அவனை எதிர்த்துப் போரிடும் வீரன் நெஞ்சில் இதயத்திற்கு அருகே வரைந்திருந்தான்.வெகு நேரம் தொடர்ந்த சமர் நின்றது. இருவரில் இளைய வீரனின் மூச்சு வேகம் எடுத்தது. அவன் நெஞ்சு மேலும் கீழும் ஏறி இறங்கியது. ஆனால், எதிரிலிருக்கும் வீரனோ எவ்வித சஞ்சலமுமின்றி முகத்தில் முறுவலுடன் அவனை நோக்கினான்.‘‘என்ன கரிகாலா! இவ்வளவுதானா உன் வீரம்?’’ கேட்டான் சோழப் பேரரசன் இளஞ்சேட்சென்னி.

தந்தை கேட்ட கேள்வி மகன் கரிகாலனுக்கு சுருக்கென்றது. பல் கடித்து மீண்டும் அவனது தந்தையும் சோழ அரசனுமான சென்னியை நோக்கி வாள் வீசினான்.

இளவரசன் கரிகாலன் ஓங்கிய வாளிடமிருந்து விலகிய சோழ அரசன் சென்னி, மின்னல் வேகத்தில் தன் வாளைச் சுழற்றத் தொடங்கினான்.அவன் எதிரே போரிடுவது தந்தை சோழ மன்னன் இளஞ்சேட் சென்னி என்று அவன் கருதவில்லை. எதிரியாகவே நினைத்து சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அதைக் கற்றுத் தந்தவனே அவனுடன் போரிடும் தந்தை சென்னிதான்.
‘‘உன்னுடன் போரிடுவது யாராக இருந்தாலும் சரி... மிக மூர்க்கமாகப் போரிட வேண்டும்! கருணையை நெஞ்சில் அறுத்து வீரம் என்பதை மனதில் விதைத்திட வேண்டும்...’’ என்கிற வார்த்தைகளை எண்ணிலடங்கா முறை கரிகாலன் கேட்டுப் பழகியிருந்ததால் யானை பலம் கொண்ட தந்தையை கோழி பலம் கொண்டவன் இடைவிடாமல் கொத்தித் தீர்த்தான்.

சோழப் பேரரசன் இளஞ்சேட்சென்னி தனது மகன் கரிகாலனுக்கு பயிற்சி கொடுப்பதற்காக, தனது ஒட்டுமொத்த மூர்க்கத்தனத்தையும் வெளிக்காட்டவில்லை என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.மகனின் வாள் வீச்சு சரியாக இருக்கிறதா? பார்வை, கால் அசைவுகள், அவனது வாள் தன் வாள் மீது மோதும்போது ஏற்படும் ஓசை போன்ற அனைத்தையும் சோதித்த வண்ணம் சண்டையிட்டான் அரசன் சென்னி.

மகனை மேலும் சோதிக்க நினைத்தவன், தன்னிடமிருக்கும் வித்தைகள் அனைத்தையும் வெளிக்காட்டத் தொடங்கினான்.இதுவரை தந்தைக்குச் சமமாக போரிடுவதாக நினைத்துக்கொண்டிருந்த கரிகாலனுக்கு சென்னியின் வாள் மின்னலாகவும், அசைவுகள் புயலாகவும் தெரிந்தன. அந்தச் சிறுவனால் அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சட்டென்று கரிகாலனின் வாள் பறந்து சென்று காவிரி ஆற்றங்கரை மணலில் சொருகி நின்றது.

வாளைத் தவறவிட்ட கரிகாலன் செய்வதறியாது நின்றான்.‘‘இன்றும் தோற்றுவிட்டாய் மகனே!’’ என முறுவலித்த சோழ அரசன் சென்னி, உடைவாளை உறையில் செலுத்திவிட்டு பறந்து சென்று விழுந்த கரிகாலனின் வாளை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தான்.குனிந்த தலை நிமிராமல் கரிகாலன் அதைப் பெற்று உறையில் செலுத்தினான்.

‘‘ஏன் தலை குனிந்துவிட்
டாய்?’’ கேட்டான் சென்னி.
‘‘நான்தான் தோற்றுவிட்டேனே!’’

சென்னி அவனைக் கண்டு சிரித்துவிட்டு ‘‘உனக்கொன்று தெரியுமா கரிகாலா? என் தந்தையிடமும் இவ்வாறு நான் பலமுறை தோற்றுள்ளேன்! இதுபோல்தான் அவரும் என்னை சமரில் தோற்கடிப்பார். அவரை நான் வென்றதே கிடையாது!’’தலைநிமிர்ந்த கரிகாலன் ‘‘அப்படியா தந்தையே?’’ எனக் கேட்டான்‘‘ஆம் கரிகாலா! தோற்றதை எண்ணி என்றும் கலங்கி நிற்காதே! இன்றைய தோல்வி நாளைய வெற்றி...’’ என அவனது தலையைத் தடவிக் கொடுத்து விட்டு ‘‘புரவிகளை இங்கு அழைத்து வா...’’ என்றவன் பொன்னி நதியை நோக்கி நடந்தான்.

கரிகாலன் சற்று தொலைவில் மேய்ந்து கொண்டிருக்கும் இரு புரவிகளையும் அங்கு அழைத்து வந்து நின்றான். அப்பொழுது அவன் ஓர் காட்சியைக் கண்டான்.
அது வழக்கமான காட்சிதான். பலமுறை பார்த்திருந்தாலும் இன்றுவரை அது அவனுக்கு கேள்விக்குறியாகவே மனதில் உறுத்தியது. தினமும் தன்னைப் பயிற்சி கொடுக்க அழைத்துவரும் சோழநாட்டின் பேரரசர் தனது தந்தை இளஞ்சேட்சென்னி பயிற்சி முடிந்ததும் பொன்னி ஆற்றை சிரம் தாழ்த்தி வணங்கிவிட்டு பிறகு அந்த காவேரிக்கரை மண்ணை மரியாதையுடன் தொட்டு வணங்குவது வழக்கம்தன் தந்தை நண்பனைப் போல் பழகினாலும் அதைப் பற்றி கேட்பதற்கு ஏனோ கரிகாலன் தயங்கினான்.

இன்று கேட்டு விட வேண்டும் என அவனுக்குள் எண்ணம் கிளர்ந்தெழுந்தது. தன்னிடம் வந்து நின்று புரவியின் முகத்தைத் தடவிக் கொடுக்கும் சென்னியை நோக்கி ‘‘தந்தையே!’’ என்று அழைத்தான் கரிகாலன்.

‘‘சொல் கரிகாலா!’’
‘‘எனக்கு ஒரு சந்தேகம்...’’
‘‘என்ன அது?’’

‘‘தாங்கள் எப்பேர்ப்பட்ட மாவீரர்! நாவலந்தீவில் பெரும் போரில் பலபேரை வீழ்த்தியவர். தங்கள் தேரைக் கண்டாலே எதிரிகள் அஞ்சி நடுங்கி ஓடுவார்கள். அரசவைக்குள் நுழையும் தங்களுக்கு பணியாத சிரம் கிடையாது. இருப்பினும் தினமும் தாங்கள் ஏன் நம் பொன்னி நதியையும் இதன் ஆற்றங்கரை மணலையும் வணங்குகிறீர்கள்? நம் நாட்டிற்குள் பாயும் வெறும் நதிதானே இது?’’
அதைக்கேட்ட சோழ அரசன் இளஞ்சேட்சென்னி சிரித்துவிட்டு கரிகாலனை அழைத்துக்கொண்டு பொன்னி நதியிடம் வந்து நின்றான்.
‘‘கரிகாலா! இந்தப் பொன்னி நதியைப் பற்றி நீ அறிந்திருப்பாய்... சரிதானே?’’

‘‘அறிவேன் தந்தையே! நம் சோழ நாட்டின் மிக முக்கியமான நதி இது...’’
‘‘முக்கியமான நதி மட்டுமல்ல கரிகாலா... இந்தப் பொன்னி சோழர்களின் தாய். இவள் இருக்கும் வரை சோழர் குடி என்றும் நிலைத்திருக்கும். ஒருவேளை இவள் நம் நிலத்தில் துள்ளி விளையாடவில்லை என்றால் நமது வாழ்வாதாரமே நிலைகுலைந்து போகும்.ஏன் இந்த மண்ணையும் வணங்குகிறீர்கள் என்றுதானே கேட்டாய்? நன்றாகக் கேள்... இந்தப் பொன்னி நதி பிறக்கும் இடத்திலிருந்து கடலில் பாயும் நம் பூம்பட்டினம் வரை நன்மையைச் செய்கிறாள். பிறந்து குமரியாகி வளர்ந்து வரும் வரையில் ஆங்காங்கே இருக்கும் மூலிகைகளையும் இலை தழைகளையும் மற்றும் மண்ணுக்குத் தேவையான அனைத்து வளத்தையும் கொண்டு வந்து சேர்க்கிறாள். இவள் பாலூட்டுவதால்தான் நம் சோழ மண் பலமும் வளமும் நலமும் பெற்றதாகத் திகழ்கிறது.

நம் பிரதான தொழிலான விவசாயத்திற்கு இவ்விரண்டும்தான் மூலதனம். இதை வணங்காமல் இருக்க முடியுமா மகனே? இனி இவ்விரண்டின் மீது உன் மதிப்பும் திரும்பியிருக்கும் என எண்ணுகிறேன்...’’கரிகாலன் வியப்புடன் பொன்னி நதியையும் அதன் மணலையும் நோட்டமிட்ட வண்ணம் இருந்தான்.‘‘எனக்கு ஓர் மிகப்பெரிய ஆசை உள்ளது மகனே! இதோ மிக வளம் பொருந்திய நதியான இந்தப் பொன்னி நதியைச் சோழர்களாகிய நாம் இன்னும் சரிவர உபயோகிக்கவில்லையோ என்று தோன்றுகிறது. இவளை நாம் சரியாகக் கையாண்டால் நமது விவசாயம் செழித்தோங்கும். விவசாயம் செழித்தால் வாணிபம் செழிக்கும். வாணிபம் செழித்தால் நாடு வளம் பெற்று விளங்கும்...’’ என்றவன், முறுவலுடன் பொன்னி நதியைப் பார்த்து பெருமூச்சு விட்டான்.

மௌரியப் படையை தென்னகத்தில் நுழைய விடாமல் துரத்தி அடித்த மாவீரன் இளஞ்சேட் சென்னியின் பெருமூச்சு அவனது மகன் கரிகால் சோழனுக்கு கேட்காமல் இல்லை.
கரிகாலன், தான் நின்றிருக்கும் காவிரி ஆற்றங்கரை மணலை கைகளில் அள்ளி எடுத்து முத்தமிட்டான். முத்தமிடும் அவன் அன்று இளவரசன். இப்பொழுது பேரரசன். தந்தையைப் போன்ற மேனியைக் கொண்டவன். அவனைவிட அதிகமான விழுப்புண்களைப் பெற்று தென்னகத்தின்... இல்லை இல்லை, ஒட்டுமொத்த நாவலந்தீவின் மாவீரனாக அந்த காவிரி ஆற்றங்கரையில் நின்றிருந்தான்.

அவன் பின்னே அவனது மாமனும், சோழன் இளஞ்சேட்சென்னியின் நெருங்கிய படைத்தலைவருமான இரும்பிடர்த்தலையார் நின்றிருந்தார். நரைத்த பிடரியைக் கொண்ட அவர் தன் முன்னே காவேரி ஆற்றங்கரையை முத்தமிடும் கரிகாலனைக் கண்டு புன்னகைத்தார். பிறகு அவரது பார்வை கரிகாலன் மீதிருந்து  தொலை தூரத்தில் நீண்டது.

அங்கு காவிரியின் நடுவே ஓர் பெரும் அணை கட்டப்பட்டிருந்தது. அந்த அணையைத் திறந்து வைக்கும் திறப்பு விழாவிற்கு பல்லாயிரக்கணக்கான மக்களும் புரவிகளும் யானைகளும் இன்னிசையும் எழுப்பிய சத்தம் எட்டுத்திக்கும் ஒலித்துக் கொண்டிருந்தது.‘வரலாற்றில் நிரந்தர இடம் பிடிக்கக் கூடிய அளவிற்கு ஓர் அணையைக் கட்டிய பிறகு  விழாவில் கலந்துகொள்ளாமல் இங்கு நின்று மண்ணை முத்தமிட்டுக் கொண்டு இருக்கிறானே இமயத்தில் புலிக்கொடி நாட்டிவிட்டு வந்திருக்கும், தான் தூக்கி வளர்த்த குழந்தை கரிகாலச் சோழப் பேரரசன்’ என இரும்பிடர்த்தலையாரின் மனம் பூரித்தது.

‘‘அரசே! அங்கு அணை திறப்பு விழாவிற்கு அனைவரும் தங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்களே?’’

பெருமூச்சு விட்ட கரிகாலன் இளமுறுவலுடன் பொன்னியம்பதியை ஏறிட்டபடி பேசத் தொடங்கினான்‘‘மாமா! வடக்கே படையெடுத்துச் சென்று ஆரிய மன்னர்களைத் தோற்கடித்து நம் வீர புலிக்கொடியை இமயத்தில் நாட்டிய பொழுது கூட எனக்கு இவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட வில்லை! இன்று மனம் நிறைவாக உள்ளது. இந்தக் கல்லணை கட்டப்பட வேண்டும் என என்னுள் விதைத்தவர் உங்கள் ஆருயிர் நண்பரும் என் தந்தையும் மறைந்த மாவீரருமான இளஞ்சேட்சென்னி.

அவர் அன்று என் மனதில் விதைத்த விதைதான் இன்று  இமயத்தில் புலிக்கொடியாகவும் இங்கு பொன்னியின் நடுவே அணையாகவும் நிற்கின்றன...’’ என்றவன், பொன்னி நதியையும் அதன் மணலையும் மண்டியிட்டு சிரம் தாழ்த்தி வணங்கினான்.தன் மன்னனின் சிரமும் உடலும் பணிவதைக் கண்டவுடன் வயது முதிர்ந்த இரும்பிடர்த்
தலையரும் மண்டியிட்டு கைகூப்பி வணங்கினார்.

கல்லணையைச் சுற்றி மக்கள் அனைவரும் ‘‘சோழம் வாழ்க! மாவீரர் கரிகாலர் வாழ்க! இமயத்தில் புலிக்கொடி பதித்த மாவீரர் வாழ்க! வாழ்க! வாழ்க!’’ என முழக்கமிட்டார்கள்.