உலகை வியப்பில் ஆழ்த்திய 7 வயது புகைப்படக் கலைஞர்!



உலக அமைதி புகைப்பட விருது யாருக்கு கிடைத்திருக்கிறது தெரியுமா? 7 வயது பெங்களூரு சிறுமியான ஆத்யாவுக்கு!இதற்காக அவருக்கு 1,000 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.87 ஆயிரம்) காசோலையும், டிப்ளமோ, பதக்கம் ஆகியவையும் கிடைத்துள்ளன. பெங்களூரு மல்லேசுவரத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் சங்கர். கம்ப்யூட்டர் என்ஜினியர். அவரது மனைவி ரோஷினி. அவர்களது மகள் ஆத்யா, ஹெப்பால் பகுதியில் உள்ள வித்யாநிகேதன் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார்.

செல்போனில் புகைப்படம் எடுக்கும் ஆர்வம் ஆத்யாவுக்கு நான்கு வயதில் வந்தது. தாய் ரோஷினியின் செல்போனில் தன் வீடு, தாத்தா வீட்டை புகைப்படம் எடுக்கத் தொடங்கினார். தன் மனம் கவர்ந்த இடம், பொருட்கள்... என அனைத்தையும் புகைப்படமாக எடுத்து மகிழ்ந்தார். தன் மகள் எடுத்த போட்டோக்களைப் பார்த்த அரவிந்த் சங்கருக்கு ஆச்சர்யம்; பிரமிப்பு. ஆத்யாவிடம் மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர் இருப்பதை உணர்ந்த அரவிந்த் சங்கர், தன் மகளை ஊக்குவித்து ஆதரிக்க வேண்டிய பொறுப்பு தனக்கிருப்பதை உணர்ந்தார்.

விளைவு, ஆத்யா எடுத்த புகைப்படங்களை இந்தியா மட்டுமின்றி உலக அளவில் எங்கெல்லாம் புகைப்படப் போட்டிகள் நடக்கிறதோ அங்கெல்லாம் அனுப்பி வைத்தார்.  ஒரு நாள் ரோஷினி கோடிசிக்கனஹள்ளியில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்கு ஆத்யாவை அழைத்துக் கொண்டு சென்றார். உணவு முடித்த பின் தன் தாயின் மடியில் ரிலாக்சாக ரோஷினி படுத்தார்.

இதைக் கண்ட ஆத்யா, உடனே தன் அம்மாவின் செல்போனை எடுத்தார். பாட்டியின் மடியில் அம்மா உறங்கும் அக்காட்சி ஆத்யாவை மின்னலென தாக்கியது. உடனடியாக அக்காட்சியை கறுப்பு - வெள்ளையில் புகைப்படமாக எடுத்தார்.

இந்தப் புகைப்படத்தைக் கண்ட அரவிந்த் சங்கருக்கு யுனெஸ்கோ - ஆஸ்திரிய நாடாளுமன்றம் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் ‘உலக அமைதி புகைப்பட விருது’ போட்டி நினைவுக்கு வந்தது.உடனே ‘மடியில் அமைதி’ என தலைப்பிட்டு அப்போட்டியின் குழந்தைகளுக்கான பிரிவுக்கு அனுப்பி வைத்தார். தேர்வுக் குழுவினர் ஏகமனதாக ஆத்யா எடுத்த இப்படத்தை தேர்வு
செய்துள்ளனர்.

‘‘பாட்டி மடில அம்மா அமைதியா படுத்திருந்த காட்சி எனக்கு அவ்வளவு பிடிச்சது. உடனே அதை போட்டோவா எடுத்தேன். அதுக்கு பரிசு கிடைக்கும்னு எல்லாம் நான் நினைக்கலை...’’ கண்கள் விரிய சொல்கிறார் ஆத்யா. இத்தகைய அமைதி விருதை இந்தியாவில் இருந்து வேறு எந்த குழந்தையும் இதுவரை பெற்றதில்லை! ஆத்யாதான் முதல்!

சுடர்க்கொடி