மதுரை பூ மார்கெட்டில் மூட்டை இயக்கியவர் படம் ஆஸ்கருக்கு செல்கிறது!



‘‘வாய்க்கால்ல குளிச்சிட்டு இருந்தேன். அப்ப போன் வந்தது. எடுத்தா விக்கி சார்... ‘படம் ஆஸ்கார் என்ட்ரி ஆகியிருக்கு’னு அவர் சொன்னப்ப ஜிவ்வுனு இருந்தது...’’ மதுரை மண் மணம் வீச வெள்ளந்தியாக பேசுகிறார் பி.எஸ்.வினோத்ராஜ்.
நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘கூழாங்கல்’. இந்தப் படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. உயரிய விருதான ‘டைகர்’ உட்பட சர்வதேச அளவில் ஏகப்பட்ட விருதுகளைக் குவித்துள்ள ‘கூழாங்கல்’ இப்போது அதிகாரபூர்வமாக இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

‘‘கனவு மாதிரி இருக்கு. 16 முதல் 20 நிமிஷம் இருந்த அந்த வீடியோவை பார்த்து விக்னேஷ் சிவன் சாருக்கும், நயன்தாரா மேடமுக்கும் எப்படி நம்பிக்கை வந்துச்சுன்னு இப்பவரை யோசிச்சு பாத்துட்டு இருக்கேன்...’’ நெகிழ்கிறார் வினோத்ராஜ். ‘‘சொந்த ஊரு மதுரை ஊமச்சிகுளம் பக்கத்துல இருக்கற பண்ணை குடி. படிப்பறிவு கிடையாது. சின்ன வயசுலயே அப்பா காலமாகிட்டாரு. அதனால படிப்பு பாதிலயே நின்னுடுச்சு.

மதுரை பூ மார்க்கெட்ல மூட்டை தூக்கி பிழைப்பு நடத்திட்டு இருந்தேன். அங்க நிறைய சினிமா ஷூட்டிங் நடக்கும். அதைப் பார்க்கப் பார்க்க எனக்கும் சினிமா ஆசை வந்துச்சு. ஆனா, சேரக்கூடாத ஆட்கள் கூட சேர்ந்து செய்யக்கூடாத தவறெல்லாம் செய்து திசைமாறி சுத்திட்டு இருந்தேன். திருப்பூர் பனியன் கம்பெனில குழந்தைத் தொழிலாளியா ரொம்ப வருஷங்கள் இருந்தேன். என் குழந்தைப் பருவம் முழுக்க அங்கதான் கழிஞ்சது. இப்படியே இருந்தா வாழ்க்கை வீணாகிடும்னு புரிஞ்சுது. அதுக்கு ஏத்த மாதிரி என் கண் முன்னால நிறைய இளைஞர்கள், குழந்தைகளோட வாழ்க்கை வீணாகறதைப் பார்த்தேன்.

ஒவ்வொரு ஞாயிறும் எங்களுக்கு வரம். அந்த நாளுக்காக திருப்பூர்ல ஏங்கிட்டு இருப்போம். இந்த நேரத்துல ஏதோ ஒரு நம்பிக்கைல டுடோரியல் காலேஜ் போய் பத்தாவதும் பனிரண்டாவதும் படிச்சேன்...’’ என்னும் வினோத்ராஜ், சினிமா ஆசை உந்தித் தள்ள சென்னைக்கு வந்திருக்கிறார்.‘‘வந்துட்டேனே தவிர ஒரு வழியும் தெரியலை. சரி, சினிமாவுக்கு நெருக்கமான இடத்துல வேலை செய்வோம்னு சிடி கடைல சேர்ந்தேன். அங்கதான் சினிமா நண்பர்களுடன் நட்பு ஏற்பட்டுச்சு.

அப்படித்தான் ‘களவாணி’, ‘வாகைசூடவா’ சற்குணம் சாரை சந்திச்சேன். அவர் கூடவே தொடர்புல இருந்தேன். அடுத்து ஒரு பிரபல சேனல்ல குறும்பட நிகழ்ச்சில இயக்குநர் கிஷோருக்கு அசிஸ்டண்ட் டைரக்டரா வேலை செய்தேன்.

எனக்கு ஒளிப்பதிவுலதான் ஆர்வம். ஆனா, அசிஸ்டண்ட் டைரக்டரா இருந்தப்ப எல்லா வேலையையும் சேர்ந்து செய்யக்கூடிய வாய்ப்பு கிடைச்சது. இப்படி நான் இழுத்துப் போட்டு வேலை செய்யறதைப் பார்த்த எல்லாரும் ‘உனக்கு டைரக்‌ஷன் துறை நல்லா வரும்... அதுல அப்டேட் செய்துக்க’னு சொன்னாங்க...’’ என்னும் வினோத்ராஜ் தமிழ் சினிமா என்ட்ரி குறித்து குறிப்பிட்டார்.

‘‘சற்குணம் சார் நட்பு என்னை ராகவன் அண்ணன் கூட ‘மஞ்சப்பை’ல வேலை செய்ய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது. ‘மஞ்சப்பை’ல அசிஸ்டண்ட் டைரக்டரா வேலை செய்தப்ப என் தேடல் அதிகமாச்சு. இலக்கிய வட்டத்துல பயணிக்க ஆரம்பிச்சு எழுத்தாளர் கோணங்கிக்கு நெருக்கமானேன். அப்படியே நாடகத் தொடர்புகள் விரிவடைந்தது. ஒரு கட்டத்துல நாம ஏன் குறும்படம் பண்ணக் கூடாதுனு தோணிச்சு.

ஏகப்பட்ட கதைகள் மனசுக்குள்ள பொங்கி வழிஞ்சது. ஆனா, என் சொந்த வாழ்க்கைல நடந்த ஒரு கசப்பான சம்பவத்தை செய்யலாம்னு முடிவு செய்தேன்.
ஆரம்பத்தில் கதை எழுதினப்ப அது சுய புலம்பலா இருந்தது. ஆனா, கதையோட போக்கு நகர நகர... அதுவும் சம்பந்தப்பட்ட மண்ணுல ஷூட்டிங் நடத்தினப்ப எல்லா சம்பவங்களுக்கும் நம்மைச் சுற்றி இருக்கற சூழலுக்கும் இருக்கிற தொடர்பு புரிஞ்சுது.

படத்துல மூன்று முக்கியமான கேரக்டகள். இதுகூடவே லேண்ட்ஸ்கேப்பையும் ஒரு கேரக்டரா மாத்தினேன். இப்படி நண்பர்களோடு சேர்ந்து ஒரு பதினைந்து - இருபது நிமிட வீடியோவா உருவாக்கினோம். சாய் தேவணன் அண்ணன்தான் தயாரிப்பு செலவுகளை செய்தாரு. அவர் மூலமா ஆதவன் சார் உள்ள வர அதைத் தொடர்ந்து படம் இயக்குநர் ராம் சார் கிட்ட போச்சு.

ராம் சார் கூட சந்திப்பு நடந்த பிறகு நிறைய மேஜிக் நடக்க ஆரம்பிச்சது. தொடர்ந்து ரவுடி பிக்சர்ஸ் உள்ள வந்தாங்க. நயன்தாரா மேடம் படத்தைப் பார்த்தாங்க. என்ன நினைச்சாங்களோ தெரியல; ‘ஆத்மா இருக்கு... கண்டிப்பா இதை நாம பண்ணலாம்’னு சொல்லிட்டாங்க.

இதுக்குப் பிறகு நடந்தது எல்லாமே ரவுடி பிக்சர்ஸ் மெனக்கெடல்தான். இப்ப படம் எழுபத்தி அஞ்சு நிமிஷங்கள் வளர்ந்திருக்கு. அப்ப முதல் இப்ப வரை ஆதவன் சாரும், விக்கி சாரும் நடக்கற அத்தனை திரைப்பட விழாக்களிலும் என்னை கலந்துக்க வச்சு ஏதேதோ டாக்கு மெண்ட்ஸ் எல்லாம் அனுப்பி வச்சாங்க. சர்வதேச அளவுல உயரிய விருதான ‘டைகர்’ தொடங்கி இப்ப ஆஸ்கர் என்ட்ரி வரை எல்லாமே அவங்க மெனக்கெடல்தான்.  சொன்னால் நம்ப மாட்டீங்க... மதுரைல வீட்டுகிட்ட இருக்கற வாய்க்கால்ல  குளிச்சிட்டு இருந்தேன். அப்பதான் ஆதவன் சார் போன் செய்து ‘டவர் கிடைக்கற இடத்துல இருடா... ரொம்ப முக்கியமான விஷயம் சொல்லணும்’னு சொன்னார்.

அடுத்து விக்கி சார் கூப்பிட்டு ‘பிரதர், நம்ம படம் ஆஸ்கர் வரை போயிருக்கு...’னு எமோஷனலா கால் பண்ணி சொன்னார். ஒரு சின்ன படம்... எதுவுமே நடக்கலைனா ஊர் ஊரா போய் ஸ்கிரீன் கட்டி மக்கள்கிட்ட காண்பிக்கலாம்னுதான் நண்பர்கள் சேர்ந்து இந்தப் படத்தை உருவாக்கினோம். இப்ப ஆஸ்கர் வரை என்ட்ரி கொடுத்திருக்கறது ஆச்சரியமாவும் கனவு மாதிரியும் இருக்கு...’’ நெகிழும் வினோத்ராஜுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

‘‘நிறைய பேர் வாழ்த்துக்கள் சொன்னாங்க; சொல்றாங்க. இதுக்கு விதை போட்ட சற்குணம் சார், ராம் அண்ணன் தொடங்கி வெற்றிமாறன் சார், மணிரத்னம் சார், கார்த்திக் சுப்புராஜ் சார், சிவகார்த்திகேயன் அண்ணா, சேது அண்ணானு நிறைய பேர் வாழ்த்தினாங்க. இப்ப அடுத்த கதை எழுத ஆரம்பிச்சிருக்கேன். அத்தனை பேரும் எனக்கு சொன்ன ஒரே அட்வைஸ் ‘உனக்கு என்ன தோணுதோ அதைச் செய்’னுதான். சில தயாரிப்பு வட்டங்கள்ல இருந்தும் கேட்டிருக்காங்க. பொறுமையாதான் அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கணும்.

அடுத்த வருட ஆஸ்கர் பட்டியல்ல இந்தப் படம் இடம்பெறப் போறதால இந்த வருஷமே ‘கூழாங்கல்’லை விக்கி சாரும் நயன்தாரா மேடமும் ரிலீஸ் செய்துடுவாங்க... விதை என்னுடையதா இருக்கலாம்... ஆனா, அதை தண்ணீர் ஊத்தி வளர்த்தது பலர்... அவங்க எல்லாருக்கும் எப்படி நன்றி சொல்லப் போறேன்னு தெரியலை...’’ கண்கலங்குகிறார் வினோத்ராஜ்.

ஷாலினி நியூட்டன்